"எட்டாம் வகுப்புவரை எட்டத்தான் என்பெற்றோர்
விட்டார் பின்னென்னை ஏழ்மையிலே விட்டார்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஆனாலும் இலக்கண அறிவில் அவர் யாருக்கும் சளைத்தவரில்லை. வெண்பா தவிர மற்ற வடிவங்களில் எல்லாம் விளையாடியிருக்கிறார். குறிப்பாக அறுசீர் விருத்தத்தில் மன்னன். சினிமாவிலும் இலக்கண அதிசயங்களை வலிக்காமல் புகுத்தி யவர் அவர். அதற்கோர் உதாரணம், அந்தாதி....ஒரு வாசகத்தின் கடைசி ச்சொல் அடுத்த வாசகத்தின் ஆரம்பமாக இருப்பதே அந்தாதி.... இலக்கியத்தில் பொன்வண் ணத்தந்தாதி, கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, அபிராமி அந்தாதி என்று பலவகைகள் உண்டு
மூன்று முடிச்சு படத்தில் முக் கோணக் காதலில் மூன்று பேரும் பா டும் விதமாக அவர் எழுதிய அந்தாதிப் பாடல் வெகு பிரபலம்.
"வசந்தகால நதிகளிலே வைரமணி நீ ரலைகள்" என்கிற பாடல் நம்மில் பலரும் நன்கறிந்ததுதான்.இருவருக்கு வசந்தகால நதியாகத் தோன்றுவது ஒருவருக்கு வெந்நீர் நதியாகத் தோன்றுகிறது.நாயகன் நீரில் விழுந்ததும் வில்லனுக்கு அது வசந்தகால நதியாகத் தோன்றுகிறது.நீர்வழிப்படூஉம் புணை என்பது வாழ்வின் நிலையாமை குறித்த சங்க காலச்சிந்தனையின் வெளிப்பாடு.
அதே நதியின் மடியில் காதலும் மரணமும் மாறி மாறிப் பாய்விரிக்கும் அற்புதத்தைக் கவிஞர் நிகழ்த்துகிறார்.நாயகனின் நண்பனே வில்லன்.வில்லன் படகோட்ட நாயகனும் நாயகியும் காதல் கீதமிசைக்கிறார்கள்நாயகன் தண்ணீரில் தவறிவிழ கதாநாயகி மன்றாடியும் காக்கவில்லை வில்லன்.அவனுடைய மனநிலையை
இரண்டே வரிகளில் கவிஞர் படம்பிடிக்க, அந்தாதி முற்றுப்பெறுகிறது.
வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டி ன் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்
மலர்க்கணைகள் பாய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்..
இதுவரை நாயகனும் நாயகியும் பாடுகிறார்கள்.நாயகன் தண்ணீரில் விழ நண்பனாய் நடித்த வில்லன் சுய ரூபத்தைக் காட்டுகிறான்.
மணவினைகள் யாருடனோ மாயனவன் விதிவலைகள்
விதிவகையை முடிவுசெய்யும் வசந்தகால நதியலைகள்...
காதலனைக் கைப்பிடிக்கும் கனவோடு படகில் ஏறினாள் பாவை. காதலன் நதியில் விழுந்ததும் தானே மணவாளன் என்று தப்புக் கணக்கு போட்டான் வில்லன். இருவர் கணக்கும் பொய்யாகிற போது அந்த வைரமணி நதியலைதான் விதிவகையை முடிவு செய்கிறது என்பதை ரசிகன் புரிந்து கொள்ளும் விதமாகப் பாடல் போகிறது. கதைச்சூழலைத் தாண்டிய தத்துவ வரிகள் காட்சிக்கும் கதை க்கும் கனம் சேர்க்கின்றன. இதுபோ ன்ற பங்களிப்புகள்தான் கண்ணதாசனை தமிழ்சினிமா கையெடுத்துக் கும் பிடக் காரணம். இதே படத்தில் அந்தாதி நடையில் இன்னொரு பாடல் உண்டு. உண்மையில் அது அந்தாதியல்ல. காதலைக் கடந்து காமம் முகிழ்க்கும் நுட்பமான மனநிலையை வெளிப் படுத்தும் பாடல் அது.
"ஆடி வெள்ளி தேடியுன்னை நானடைந் த நேரம்
கோடியின்பம் தேடிவந்தேன் காவிரி யின் ஓரம்
(எண்சீர் விருத்தத்தில் இது ஒரு வரி. அடுத்த வரி..)
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்
ஓசையின்றிக் கேட்குமது ஆசையென்னும் வேதம்
வேதம் சொல்லி மேளமிட்டு மேடைகண் டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தைபல நாடும்
"பொய்யும் வழுவும் தோன்றிய காலை, ஐயர் யாத்தனர் கரணம்" என்பது இலக்கணச்சூத்திரம். காமத்தையும் வேதம்என்று சொல்லி, அது திருமணத்தின் மூலம் முறைப்படுத்தப்படுகிறது என்பதைக் காட்டவும் "வேதம்" என்ற சொல்லை வெகு நுட்பமாகக் கையாள்கிறார் கவிஞர். மனதில் காமம் மலர்ந்தாலும் அந்தப்பெண் அதை வெளிப்படப் பேசவில்லை. மௌனம் காக்கிறாள். ராகங்களைத் தனக்குள்ளேயே
மூடிவைத்திருக்கும் வீணை போல் இருக்கிறாளாம் அவள்.
ராகந்தன்னை மூடிவைத்த வீணையவள் சின்னம்
இந்த வீணையின் மௌனம் எப்போது கலையும் என்கிற தவிப்பு அவனுக்கு.வாய்விட்டுக் கேட்கிறான்.அவளும் பதில் சொல்கிறாள்.
சின்னம்மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலைக்கோலம்
என்னையவள் பின்னிக்கொள்ள என்றுவரும் காலம்
காலமிது காலமிது காதல்தெய்வம் பாடும்
கங்கைநதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்
"ஆடிவெள்ளி" என்று தொடங்கிய பாடல் "கூடும்" என்று முடிவதாலேயே இது அந்தாதியில்லை என்று சொல்லிவிட முடியும்தான். ஆனால் இதை அந்தாதி என்று ஒப்புக்கொள்ளவும் ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. அந்தாதி முறையை நமக்கு அறிமுகம் செய்யும் மிகப்பழைய இலக்கியம்,பதிற்றுப்பத்து. இதில் நான்காம் பத்து மட்டும் அந்தாதி முறையின்படி முடியவில்லை. எனினும் அந்தாதி என்கிற இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பதிற்றுப்பத்து பேசப்படுகிறது. அந்த விதிவிலக்கைக் கொண்டு பார்த்தால் இதுவும் அந்தாதிதான்!!எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கிறது கவிஞரின் பாடல்.
கதைச்சூழலோடு பின்னிப் பிணைந்து வரும் கவிஞரின் பாடல்கள் ஒருவிதம் என்றால், கதை என்னவென்ற கேள்வியே எழாமல், அந்தரத்தில் நாட்டியமிடும் மின் னல்கள்போல் வெடிக்கும் பொதுவான வாசகங்கள் சிலவும் கவிஞரின் பா டல்களில் பொங்கிப் பிரகாசிக்கு ம்.
கதைச்சூழலோடு பின்னிப் பிணைந்து வரும் கவிஞரின் பாடல்கள் ஒருவிதம் என்றால், கதை என்னவென்ற கேள்வியே எழாமல், அந்தரத்தில் நாட்டியமிடும் மின்
ஏதோவொன்றை எண்ணிக் கலங்கி, தயங்கி நிற்கும் போது யா ரோ எங்கோ பேசிச்செல்லும் வார்த்தை நமக்கு வாசல் திறந்துவிட்டுப் போகும். எதிர்பாராத நிலையில் எவரோ ஒருவரின் வருகை நம் குழப்பத்திற்கான தீர்வாகிப் போகும்.இத்தகைய நேரங்களில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிற பாடல் ஒன்றுண்டு.
"எங்கிருந்தோ ஒரு குரல்வந்தது-அது
எந்த தேவதையின் குரலோ
எங்கள் தீபங்களில் ஒளிவந்தது-அது
எந்தக் கைகள் தந்த ஒளியோ"
இது அந்தப்பாடலின் பல்லவி.இடையிடையே இதேபோல இன்னும் சில வரிகள்.
"மாளிகையில் ஒரு மதிவந்தது-அது
எந்த வானத்து மதியோ
மாயமாக ஒரு ஒலி வந்தது-அது
எந்த ஆலயத்து மணியோ"
இரண்டாம் சரணம், நாயகியின் காதலுள்ளத்தைக் காட்டும் புதிய பரிமாணத்தை எடுக்கிறது. அதில்கூட ,ஆண்டாளின் வாரணமாயிரம்
பாசுரங்களின் சாரத்தையும் அதற்கடுத்த படிநிலையையும் இரண்டே வரிகளில் முடிக்கிறார் கவிஞர்.
"கதிரிள தீபம் கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்
கண்கள் தூங்காத இரவு"
கோபுரம்போல் உயர்ந்து நிற்கும் இந்தப் பாடலுக்குக் கலசம் வைக்க வேண்டாமா! முத்தாய்ப்பு வைக்கிறார் பாருங்கள் கவிஞர்....
"கங்கையிலே புதுப்புனல் வந்தது-அது
எந்த மேகம்தந்த புனலோ
மங்கையிடம் ஒரு அனல் வந்தது-அது
எந்த மன்னன் தந்த அனலோ"
இப்படி ஆகாயத்தின் அடுக்குகளில் அவர் விட்டுச்சென்ற அபூர்வ ராகங்கள்......ஆயிரம் ஆயிரமாய் !!!
(தொடரும்..)
2 comments:
piramatham
M.Gunasekaran
nantraga irukkirathu
N.Deivasigamani
Post a Comment