Monday, February 28, 2011

பூமியில் உலவிய புல்லாங்குழல்

(2011 பிப்ரவரி 16&25 தேதிகளில் கும்பகோணத்திலும் தஞ்சையிலும்
நடைபெற்ற மீலாது நபி விழாவில் ஆற்றிய உரைகளின் சில பகுதிகள்)

நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும், அவர் வழியே
இறைவாசகங்கள் அருளப்பட்டன என்றும் இசுலாம் சொல்கிறது. கோடிக்கணக்கானவர்கள்  பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் மறைநூலை
வெளிப்படுத்தியவர் எழுதப்படிக்க அறியாதவர் என்பதில் முக்கியமான ஓர்
அம்சம் இருக்கிறது. புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக்
காரணமே அதிலுள்ள வெற்றிடம்தான். தன்னுள் இருக்கும் அந்த வெளியினால்தான் உள்நுழையும் வளியை புல்லாங்குழல் இசையாக்குகிறது. "வண்டு துளைத்த மூங்கிலாக வாழ்க்கை வேண்டிப் பிரார்த்தனை!வந்து புகுந்து போகும் காற்று வானில் கலக்கும் கீர்த்தனை"என்று நான் முன்பொரு முறை எழுதிய பாடல் நினைவுக்கு வருகிறது.

ஓஷோவின் புத்தகங்களில் ஒன்று,மூங்கில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும். Dedicated to the bamboos for their inneremptiness  என்ற குறிப்புடன் வந்த அந்தப் புத்தகத்தின் தலைப்பு இப்போது எனக்கு நினைவிலில்லை.தன்னை இறைவனிடம் ஒரு புல்லாங்குழலாக நபிகள்
ஒப்படைத்ததாலேயே அவர் வழியாக இறைவசனம் இறங்கியிருக்க வேண்டும்.

"எனதுரை தனதுரையாக் கொண்டு" என்று திருஞானசம்பந்தர்
பாடியதும்,"நானுரைக்கும் வார்த்தையெலாம் நாயகன்தன் வார்த்தை"
என்று வள்ளலார் பாடியதும் இங்கே ஒப்புநோக்கத்தக்கவை.

நபிகள் நாயகம் இறைத்தூதராகவும் ஆட்சியாளராகவும்
இருந்திருக்கிறார்.தூதருக்கான இலக்கணம் தமிழிலக்கியப் பரப்பில்
வரையறுக்கப்பட்டிருக்கிறது. தூதர் என்பவர் கிளிபோல் இருக்க
வேண்டும்.சொல்லப்பட்டதைச் சொல்ல வேண்டுமே தவிர தன் கருத்தை அதில் ஏற்றக்கூடாது என்பதே இதன் பொருள் இது அரசியல் தூதர்களுக்கு மட்டுமின்றி ஆன்மீகத் தூதர்களுக்கும் பொருந்தும்.

தனக்கு முருகன் தந்த அனுபவத்தை,அருணகிரிநாதர், "கந்தரனுபூதி" என்ற நூலாகப் பாடினார்.அப்போது அவர் கிளிரூபத்தில் இருந்தார் என்று சொல்வார்கள். இறைவன் தனக்கு சொன்னதை அப்படியே வெளிப்படுத்தினார் என்பதுதான் இதன் பொருள்.

இறைவன் நபிகள் வழியே சொன்னதை ஓரெழுத்தும் மாற்றாமல் திருக்குரான் என்று இசுலாம் பதிவு செய்து கொண்டது. நபிகளின் வாசகங்கள் ஹதீஸ் என்ற பெயரில் பதிவாகியிருக்கின்றன.





அடுத்து நம்மை வியப்பிலாழ்த்துவது நபிகள் ஏற்படுத்திய தாக்கம்.அவர்
வாழ்ந்த காலத்திலும்,அதைவிடக்கூடுதலாக அவர் காலத்துக்குப் பிறகும் மிகப்பெரிய தாக்கத்தை நபிகள் மனித சமூகத்தில் தன்வாழ்க்கைமுறையால் ஏற்படுத்தியிருக்கிறார்.அவர் நடையுடை பாவனைகள் பற்றி, இயல்புகள் பற்றி, அவருக்கிருந்த நரைமுடிகளின் தோராயமான எண்ணிக்கை பற்றிக் கூட விவரணைகள் கிடைக்கின்றன.

உஹைது போரில் நபிகளுக்கு பல் உடைந்ததாக ஒருவர் அறிகிறார்.எந்தப்பல்
உடைந்ததென்று தெரியவில்லை.உடனே தன்னுடைய எல்லாப் பற்களையும் உடைத்துக் கொள்கிறார். இந்தச் செய்தி கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை நினைவுபடுத்துகிறது.அன்பின் அடிப்படையில் செய்யப்படும் இந்தத் தியாகத்தைத்தான் பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்று சொன்னார்கள் போலும்!!

நபிகள் வாழும் காலத்தில் நடந்த சில சம்பவங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.நபிகள் மதீனாவில் வாழ்ந்த போது ஒரு குதிரையை வாங்க முற்படுகிறார். விலை பேசி முடிவாகிறது.கையில்பணமில்லை.தன்னுடன்  வீட்டுக்கு வருமாறும் உரிய தொகையைத் தந்துவிடுவதாகவும் நபிகள் சொல்கிறார். வரும் வழியிலேயே வேறொருவர் கூடுதல் பணம் தருவதாகச் சொல்ல அந்தக் குதிரைக்காரன் விற்பதற்கு இசைகிறான். வாய்மொழி ஒப்பந்தத்தை மீறுவது முறையில்லை என்று நபிகள் வாதாடுகிறபோது அவருடைய நண்பர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்."ஒப்பந்தம் நடந்தபோது யாரும் சாட்சிகள் இருந்தனரா?"என்று கேட்கிறார்கள்.இல்லையென்றதும் நபிகள் சார்பாக யாரும் வாதாடவில்லை.

அப்போது நபிகளின் மற்றுமொரு தோழர் அந்த இடத்திற்கு வந்து
சேர்கிறார்.விஷயம் தெரிந்ததுமே,"நீ ஒப்பந்தத்தை முறிப்பது தவறு" என்று
குதிரைக்காரனிடம் வாதிட்டார்."சாட்சிகள் யாருமேயில்லாத உரையாடலில் என்னை நீ எப்படி நம்புகிறாய்?' என்று நபிகள் கேட்டார்."நபியே ! இறைவன் இருக்கிறார் என்று நீங்கள் சொன்னீர்கள்.நம்பினோம்.இறைவசனங்கள் என்று நீங்கள் சொன்னவற்றை இறைவசனங்கள் என்று நம்பினோம்.அதேபோல
இப்போது நீங்கள் சொல்வதை முழுமனதோடு நாங்கள் நம்ப வேண்டும்" என்றார்.ஒரு தலைவர் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய அழுத்தமான நம்பிக்கைக்கு இது ஓர் அடையாளம்.

நபிகள் அற்புதங்கள் சாராமல் வாழ்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்க
அம்சம்.அவர் காய்ச்சலில் துன்புற்ற போது,இந்த சிரமத்தை நீங்கள்
தாங்கிக் கொள்வதால் என்ன பயன் என்றொருவர் கேட்டார். துன்பத்தை நான் முழுமனதுடன் சகித்துக் கொள்கிறபோது "மரங்களில் இருந்து இலைகள் உதிர்வதுபோல என் பாவங்களை இறைவன் உதிர்ந்துவிடச் செய்கிறான்"
என்றார்.


அண்டை வீட்டுக்காரர்களுடன் உறவு பெரும்பாலும் அற்றுப்போன நிலையிலேயே பெருநகரங்களில் பலரும் வாழ்கிறார்கள். பக்கத்து வீட்டுக்காரருக்குசொல்வதுபோல ஒரு கவிதையை பல்லாண்டுகளுக்கு
முன்னர்எழுதியிருந்தேன்..

"விரிந்த கரம்போல் நகரம்-கரத்தில்
பிரிந்த விரல்களாய் வீதிகள்-விரலில்
ஒதுங்கிய நகம்போல் வீடுகள்-அப்புறம்
நகங்களில் அழுக்காய் நீயும் நானும்"

இறைவனுக்குப் பிரியமானவனாக ஒருவன் இருக்க வேண்டுமென்றால்
அண்டைவீட்டுக்காரனிடம் அன்பாக இருக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் கொள்கை பெரும் ஆசுவாசம் தருவதாக இருக்கிறது.

அன்னையின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்கிறது இஸ்லாம்.
நபிகளிடம் ஒருவர் கேட்டார்,"என் அன்னை என்னை இருபது வயது வரை கண்ணும் கருத்துமாக வளர்த்தாள்.அவளுடைய முதுமைக்காலத்தில் நானும் இருபது அதேபோல கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டேன். இரண்டுக்கும்  சரியாகி விட்டதல்லவா?" நபிகள் தந்த பதில் அழகானது.அவர் சொன்னார்,"ஒருபோதும் அது இணையாகாது. அன்னை உன்னை வளர்க்கிறபோது,நீ வளர்ந்து வாலிபனாகி வாழ வேண்டும் என்ற
கண்ணோட்டத்திலேயே வளர்க்கிறாள்.ஆனால் நீயோ அவளை கடைசிவரை நன்றாகப் பார்த்துக் கொள்ளும் எண்ணத்தில் பார்த்துக் கொள்கிறாய்.அவள் காத்திருந்தது உன் வாழ்வுக்காக.நீ காத்திருந்தது அவள் சாவுக்காக.இரண்டும் எப்படி நிகராகும்?"என்றாராம்
நபிகள்.

எல்லாவற்றையும் விட அறிவுக்கு நபிகள் தந்த முக்கியத்துவம்
நம்மைக் கவர்கிறது."நூறு வணக்கவாளிகளை விட ஓர் அறிவாளி மேலானவன்.ஓர் அறிவாளிக்காக மலக்குகள் எனப்படும் தேவதைகள் தம் சிறகுகளை விரிக்கின்றன.ஓர் அறிவாளிக்காக வானம், பூமி, தண்ணீர், அனைத்துமே பாவமன்னிப்பு கேட்கின்றன " என்றார் நபிகள்.மனிதகுலத்தின் மீது மகத்தான  தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகளில் அவர் முக்கியமானவர். தானோர் ஆளுமை என்ற எண்ணமே இல்லாத ஆளுமை
என்பது அவரது பெருமைகளைப் பெருக்குகிறது.

Tuesday, February 22, 2011

ஒண்ணேகால் இருக்கை

ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்ஸின் ஏசி கோச்சில் பெரும்பாலும் எனக்கு ஜன்னலோர இருக்கை அமைந்துவிடும்.அதுமட்டுமா.பெரும்பாலும் எனக்குப் பக்கத்து இருக்கை காலியாகத்தான் இருக்கும்.மாதம் இருமுறையாவதுஅதில் பயணம் செய்து வருபவன் என்பதால் அதிலுள்ள பணியாளர்கள் பலரும் எனக்குப் பழக்கமானவர்கள் கோவையிலிருந்து  மயிலாடுதுறை போகும் அந்த ரயிலில் கரூர்,திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம்,மயிலாடுதுறை என்று அதன் சகல நிறுத்தங்களிலும் எனக்கு வேலையிருக்கும்.

காலையில் அந்தரயிலில் ஏறி கரூரிலோ திருச்சியிலோ கல்லூரிக்கூட்டங்களில் பேசிவிட்டு,மாலை அதே ரயிலில் திரும்புவதும் உண்டு.காதில் வயர்ஃப்ரீ எம்பீத்ரீயை மாட்டிக் கொண்டு கண்மூடி சாய்ந்தால் மகராஜபுரம் சந்தானம் "கபீஷ்ட வரத" என்று தொடங்குவார்.கண்ணயர்ந்து மீண்டும் விழிப்பு வருகிற போது, சுவர்ணலதா உளுந்து விதைத்துக் கொண்டிருப்பார். வகைதொகையில்லாத என் விருப்பத்தேர்வுகளில் கர்நாடக
சங்கீதமும் குத்துப்பாட்டும் அகரவரிசைப்படி மாறி மாறி வரும்.

சமீபத்தில் தஞ்சாவூரிலிருந்து வந்து கொண்டிருந்த போது திருச்சியில்
நின்றது ரயில்.பக்கத்து இருக்கையில் ஒருவர் தன் பையை வைத்துவிட்டு என்னையே முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.ஓங்குதாங்கான முரட்டு வடிவம். ரயில்வே ஊழியர் என்பதற்கான அடையாள அட்டை சட்டை பாக்கெட்டில் துருத்திக் கொண்டிருந்தது."இதில யாரும் வர்றாங்களா"
என்ற அவரின் கேள்விக்கு "தெரியலை" என்று மையமாக பதில் சொன்னேன்.வெளியே சென்று சார்ட்டைப் பார்த்துவிட்டு பையைக் கீழே வைத்துவிட்டு அந்த இருக்கையையும் என் இருக்கையின் கால் பகுதியையும் ஆக்ரமித்துக் கொண்டார்.

இரண்டு இருக்கைகளையும் பிரிக்கும் கைப்பிடியில் அவருடைய கை பிதுங்கி
நிறைந்திருந்தது.பாகப்பிரிவினை சண்டைக்கு தயாரில்லாத மனோநிலை
காரணமாகவும்,மேல்வகுப்பு பயணிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாகாது என்ற ரயில்வே விதிகளின்படியும் அமைதியாக  முக்கால் இருக்கையில் முதுகைச் சாய்த்தேன்.டிக்கெட் பரிசோதகர்
வந்தபோது,தன் ஆகிருதிக்குச் சம்பந்தமில்லாத பணிவுடன் ஒருகையைத் தூக்கி வணக்கம் வைத்தார் ஒண்ணேகால் இருக்கைக்காரர் . "மாநாட்டுக்கா" என்று அவரை விசாரித்தபடி கடந்து சென்றார் பரிசோதகர்.என்னையும் அறியாமல் நான் தொடங்கியிருந்த எல்லைப்போராட்டத்திற்கு சிறிது பலனிருந்தது ,கைப்பிடியில் கால்பகுதியை எனக்கு விட்டுக் கொடுத்திருந்தார். பதிலுக்கு என்னுடைய இருக்கையின் கால் பகுதியை  நான் விட்டுக் கொடுத்திருந்தேன்.

அதற்குள் "ஏடீ கள்ளச்சி என்னத் தெரியலையா"என்ற என் அபிமானப் பாடல் எம்
பித்ரீயில் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. கண்மூடி கேட்டுக் கொண்டிருந்தென். அந்த ரயில் பெட்டியே அமைதியில் ஆழ்ந்திருந்தது.

திடீரென்று "நண்பர்களே! இப்போது நீங்கள் கேட்கப் போவது புரட்சித்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை"என்ற அலறல் கேட்டு தூக்கிவாரிப்போட்டு கண்விழித்தேன். ரயில் பெட்டியில் பலரும் பதறிப்போய் எட்டிப் பார்த்தார்கள். என் பக்கத்து சீட்காரருடையசெல்பேசியின் ரிங்டோன் அது. அடுத்தடுத்த அழைப்புகளுக்கும் அதே அலறல். அப்போதுதான் கவனித்தேன்.அவருடைய வலதுகை மோதிரவிரலில் பெரிய சைஸ் எம் ஜி ஆர் படம்.அவர் பிரித்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த டைரியில் விதம்விதமான போஸ்களில் எம் ஜி ஆர். சிரித்துக் கொண்டிருந்தார்.கையிலும் அதிமுக கொடியைப் பச்சை குத்தியிருந்தார் மனிதர்.




ரிங்டோன் ஒலிக்கும் போதெல்லாம் நான் ஆர்வமாக கவனிப்பதைப்
பார்த்துவிட்டு,"தலைவரோட பேச்சுதான் நம்ம ரிங்டோனுங்க"என்றார் அந்த
மனிதர்.அவருடன் பேசத் தொடங்கிவிட்டேன் என்பது எனக்குப் புரியும் முன் எம் ஜி ஆருக்காக ஜேசுதாஸ் பாடிய" அழகின் ஒவியம் இங்கே"பாடல்
எம்பீத்ரீயில் ஒலித்தது. அவர் பாட்டுதான் கேட்டுகிட்டிருக்கேன். இன்னைக்கும் உயிர்ப்பா இருக்கு" என்று நான் சொல்லி முடிக்கும் முன் கைக்குட்டையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கிவிட்டார், "தலைவரைப் பத்தி பேசினா நான் அழுதுடுவேனுங்க"என்றதும் அதிர்ந்தேன்.

ஈரோட்டில்  டிக்கெட்பரிசோதகர்களின் ஓய்வு மாளிகைக்குப் பொறுப்பாளர்
அவர். பெயர் சுந்தரம்."கராத்தே சுந்தரம்னு சொன்னா எல்லாருக்கும் தெரியுமுங்க" என்றவர் எம்.ஜி ஆர் பற்றி பேச்சு வந்த போதெல்லாம் அழத்தொடங்கினார்.

பொதுவாழ்வுக்கே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவதால் மாத சம்பளத்தை முழுத்தொகையாய் வாங்கியே இராத வரலாற்றுப் பெருமை இவருக்குண்டு.

சின்ன வயதில் வீட்டிலேயே அரிசி திருடி விற்று எம் ஜி ஆர் படம் பார்த்து வளர்ந்தவர் சுந்தரம்.அப்பா கிராமத்துக்காரர். அம்மாவுக்கு ஈரோடு. கிராமத்து வழி உறவினர்களை அவருடைய அம்மா மதிப்பதில்லையோ என்கிற
எண்ணம் அவருடைய தாய்வழிப் பாட்டிக்கு உண்டு."நீயி அப்படி இருக்கக்கூடாது சாமி!ஒன்னத் தேடி ஆரு வந்தாலும்,வாய்நெறய பேச்சு குடுக்கோணும்,வயிறு நெறய சோறு குடுக்கோணும்"என்று அந்தப் பாமரப் பாட்டி சொன்னதையே தன் வாழ்வின் வேத வாக்காகக் கொண்டு விட்டார் சுந்தரம்.

அரசியல் வாழ்வில் பாதுகாப்புக்காக எம் ஜி ஆர் கத்தி வைத்துக் கொள்ளச்
சொன்ன போது,கராத்தே, சிலம்பமெல்லாம் கற்றுக் கொண்ட சுந்தரம்,அந்தக்
கலைகலை ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறார்.

டிக்கெட் பரிசோதகர்கள் ஓய்வு மாளிகை எதிரிலுள்ள பழைய கட்டிடத்தில்
பிச்சைக்காரர்கள் வந்து தங்கியிருப்பார்கள்.அவர்கள் சோகக்கதைகளெல்லாம் சுந்தரத்துக்குத் தெரியும்.இரவு யாரெல்லாம் சாப்பிடவில்லை என்று கேட்டு அவர்களை மட்டும் தனியாக அழைப்பார் சுந்தரம்."சித்தெ இருங்க"என்று அமரவைத்துவிட்டு காலைச்சிற்றுண்டி வாங்கித் தருவார். "இதெல்லாம் தலைவரு கத்துக் கொடுத்ததுங்க" என்று மறுபடியும் அழ ஆரம்பித்தார் சுந்தரம்.

முன்னாள் அமைச்சர் ஈரோடு முத்துச்சாமி அவர்களைத் தனது அரசியல் ஆசானாக வரித்திருக்கிறார் சுந்தரம்.'அவர எப்பவும் "அமைச்சரு அமைச்சரு" ன்னு வாய் நெறயக் கூப்பிடுவேனுங்க. அவரு டியெம்கே க்கு போனதத் தாங்கவே முடியலீங்க.அந்த அதிர்ச்சியிலேயே ஆஸ்பத்திரியில அட்மிட்
ஆயீட்டேனுங்க 'என்றவர், எம் ஜி ஆர் படம் போட்ட டைரியைத் திறந்து மருத்துவமனை ரசீதுகளைக் காட்டினார்.

அவர் சொன்ன எல்லாவற்றிலும் ஒரேயொரு வரியைத்தான் என்னால் நம்ப
முடியவில்லை."ஒடம்பு அப்போ எளச்சதுதானுங்க". இளைத்த உடம்பே இப்படியா என்றிருந்தது."இந்தத் தேர்தலிலே சீட் கேக்கப் போறெனுங்க!நல்ல வார்த்த சொல்லி அனுப்புங்க"என்று ஈரோடு சந்திப்பில் இறங்கிக் கொண்டார் அவர்.நான் கீழே இறங்கி இரவு உணவு வாங்கிக் கொண்டு கொஞ்சம் பராக்கு பார்த்துவிட்டு மறுபடியும் ரயிலில் ஏறினால் பெட்டிக்குள் என்னைத் தேடிக் கொண்டிருந்தார் சுந்தரம். "வாங்க வாங்க! சீட்ல ஒக்காருங்க!"
என்றவர்,"பேச்சு சுவாரஸ்யத்தில  ஒங்களுக்கு ஒண்ணுமே வாங்கித் தரலீங்க. அதான் காபி வாங்கீட்டு ஒடியாந்தனுங்க"என்றவர் நகர ஆரம்பித்த ரயிலில் இருந்து வேகவேகமாய் இறங்கிக் கொண்டார்.

சூடான சர்பத் போல் இருந்த அந்தக் காப்பியை முழுவதும் குடிக்க சர்க்கரை
நோய் இடம் தரவில்லை.ஆனாலும் எந்த நேரமும் எம் ஜிஆர் குரல் ரிங் டோனாகக் கேட்கும் சாத்தியக் கூறுகளுடன் கராத்தே சுந்தரத்தின் கனிந்த அதிர்வுகளால் நிரம்பியிருந்தது,காலியாகக் கிடந்த அந்த ஒண்ணேகால் இருக்கை.

Friday, February 11, 2011

கர்ணன்-6

 பாஞ்ச சன்னியம் முழங்க முழங்க
பாரத யுத்தம் தொடங்கியது
பாண்டவர் கௌரவர் சேனைகள் மோதிட
குருஷேத்திரமே கலங்கியது
 
அர்ச்சுனன் தேரை கண்ணன் இயக்கிட
சல்லியன் கர்ணனின் சாரதியாம்
கர்ணனை இகழும் சல்லியனாலே
இருவருக்கிடையே மோதல்களாம்
 
யுத்த களத்தினில் கர்ணனை விட்டு
இறங்கி நடந்தான் சல்லியனே
வித்தகன் கண்ணன் சொன்ன படியே
கணைகள் தொடுத்தான் அர்ச்சுனனே
 
கொடுத்துச் சிவந்த கர்ணனின் கைகள்
குருதி துடைத்துச் சிவக்கிறதே
அடித்த அம்பினில் உயிர்பிரியாமல்
தர்ம தேவதை தடுக்கிறதே
 
 
எய்த அம்புடன் கிடந்த கர்ணன்முன்
வேதியர் வடிவில் கண்ணன்வந்தான்
செய்புண்ணியங்கள் தானமாய் கேட்டான்
சிரித்தபடியே கர்ணன் தந்தான்
 
விசுவரூபம் காட்டிய கண்ணன்
வரமென்ன வேண்டும் என்றானே
இல்லை என்னாத இதயம் வேண்டும்
என்றே கர்ணன் சொன்னானே
 
கொடையுளம் வாழ்த்திக் கிளம்பிய கண்ணன்
கணைவிடு பார்த்தா என்றானே
விடும்கணை தைத்து வீழ்ந்தான் கர்ணன்
வானவர் வாழ்த்த மாண்டானே
 
மகனே என்று அலறிய குந்தி
மடிமேல் இட்டு அழுதிருந்தாள்
அவனே அண்ணன் என்பதை அறிந்து
பாண்டவர் பதறிக் கலங்கிநின்றார்
 
தம்பியர் என்றே தெரிந்தும் கர்ணன்
தோழனின் பக்கம் நின்றானே
நம்பிய நண்பனின் நட்புக்காக
இன்னுயிர் அவனும் தந்தானே
 
நன்றிக்கும் கொடைக்கும் நல்லுயிர் தந்தான்
நாயகன் கர்ணன் பெயர்வாழ்க
என்றைக்கும் மாந்தர் இதயத்தில் வாழ்வான்
எங்கள் கர்ணன் புகழ்வாழ்க!!
 

Wednesday, February 9, 2011

கர்ணன்-5

 
 
பாரத யுத்தம் நெருங்கிடும் நேரம்
பாண்டவர் தூதன் பரந்தாமன்
மாபெரும் கலகம் செய்திட வந்தான்
மாதவன் கேசவன் யதுபாலன்
 
குந்தியின் அரண்மனை சென்றவன் அவளது
கடந்த காலத்தைத் தோண்டிவிட்டான்
அன்றவள் நதியில் வீசிய மகன்தான்
கர்ணன் என்பதைக் கூறிவிட்டான்
கதறிய குந்தியை அமைதிப் படுத்தி
காரியக் காரன் தூண்டிவிட்டான்
எதிர்வரும் போரில் இரண்டு வரங்களை
கேட்டிடச் சொல்லிப் போகவிட்டான்
 
மைந்தனின் அரண்மனை வாசலில் வந்து
மாதவள் நின்றாள் அழுதபடி
வந்தவள் தாயென உணர்ந்ததும் கர்ணன்
விழுந்தே அழுதான் தொழுதபடி
பேசாக் கதைகள் பேசிய பின்னர்
பாசத்தில் அன்னை வரம்கேட்டாள்
ஆசை மகனும் என்ன வரங்களை
அவள்கேட்பாளென முகம்பார்த்தான்
 

"பாரதப் போரினில் பார்த்திபன் தவிர
பாண்டவர் பிறருடன் மோதாதே !

நாகாஸ்திரத்தை ஒருமுறையன்றி
இன்னொரு தடவை ஏவாதே!"
 

கேட்டதும் கர்ணன் சிரித்துக்கொண்டான் அவள்
கேட்ட வரங்கள் கொடுத்துவிட்டான்
போய்வருவேன் என் குந்தி கிளம்பிட

தாயே நில்லென்று தடுத்துவிட்டான்
 
என்றோ தொலைத்த பிள்ளையைப் பார்த்திட
இன்றைக்கு வந்தாய் வரங்கள் கொண்டாய்
என்ன வேண்டும் மகனே எனநீ
என்னைக் கேட்க மறந்துவிட்டாய்
 
போர்முடியும் வரை நானுந்தன் மகனென
யாரிடமும் நீ சொல்லாதே
போரினில் நானுயிர் விட்டதும் எனைஉன்
மடியினில் கிடத்திட மறவாதே
அதன்பின்னர் உலகம் அறியட்டும் உண்மை
அன்புமகனின் மொழிகேட்டு
இதயம் வலிக்க அழுத குந்தியும்
மெதுவாய் நடந்தாள் வழிபார்த்து
 
 
தொடரும்....
 

Monday, February 7, 2011

கர்ணன்-4


கிழக்கில் கதிரவன் உதிக்கையில் மகனாம்
கர்ணன் துதிப்பான் உவகையிலே
நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும்
கண்ணதாசன் கவிதையிலே

(ஆயிரம் கைகள் நீட்டி-பாடல்)

சூரிய வணக்கம் செய்கிற வேளையில்
குரலொன்று கேட்டது வாசலிலே
காரியம் ஒன்று நடத்திட இந்திரன்
வந்தான் யாசகன் வடிவினிலே
வந்தவன் பகைவன் என்பதைத் தந்தை
வகையாய்ச் சொன்னான் மகனுக்கு
எந்தப் பொருளையும் இல்லை என்கிற
எண்ணம் இல்லையே இவனுக்கு

ஒட்டிப் பிறந்த கவச குண்டலம்
தானம் கேட்டான் இந்திரனே
வெட்டி எடுத்து அடுத்த நொடியே
வழங்கி விட்டான் மன்னவனே
கொற்றவன் கர்ணன் கொடைக்குணம் பார்த்து
பூக்களைப் பொழிந்தது ஆகாயம்
குற்ற உணர்வுடன் கூனிக் குறுகி
இந்திரன் சென்றான் மேலோகம்
தொடரும்.......

Sunday, February 6, 2011

கர்ணன்-3

பக்தியும் பணிவும் பொங்கிடும் மனதுடன்
பணிந்தே கர்ணன் நிற்கின்றான்
சக்தியின் களஞ்சியம் பரசுராமனின்
குருகுலம் தனிலே கற்கின்றான்
தந்தையை கொன்றவன் ஷத்ரியன் என்பதில்
தாங்க முடியாக் கோபத்திலே
அந்தணருக்கே வில்வித்தை போதனை
பரசுராமனின் கூடத்திலே
 
தானெந்த குலமென்று தெரியாத தனால்
மாணவன் ஆனான் கர்ணனுமே
ஆனந்த மாக போதனை வழங்கி
ஆதரித்தான் பரசு ராமனுமே
மாணவன் மடியில் தலைவைத்துக் கிடந்தான்
முனிவன் ஒருநாள் மதியத்திலே
ஆணவ இந்திரன் சதிசெய்ய வந்தான்
அங்கொரு வண்டின் வடிவத்திலே
 


கர்ணனின் தொடையினை வண்டு துளைத்திட
கடும்வலி பொறுத்தே அமர்ந்திருந்தான்
வருகிற இரத்தம் முகத்தில் பட்டதும்
பரசுராமன் விழித்தெழுந்தான்
ஷத்ரியன் தானே வலிபொறுப்பான் எனும்
சிந்தனை எழுந்தது முனினுக்கு
கற்ற வித்தை கைவிடும் என்றே
கொடுத்தான் சாபம் கர்ணனுக்கு
 
தந்தையை அறியான் தாய்முகம் அறியான்
குருவும் பகையா கர்ணனுக்கு?
எந்தத் திசையிலும் எதிர்கொள்ளும் வேதனை
இரக்க குணம்மிக்க மனிதனுக்கு
நடப்பதை எல்லாம் பொறுப்பதைத் தவிர
நல்லவன் இதயம் என்னசெய்யும்
இருப்பதை எல்லாம் கொடுப்பதில் தானே
கர்ணனின் இதயம் அமைதி கொள்ளும்

Saturday, February 5, 2011

கர்ணன்-2

பாண்டவர் கௌரவர் எல்லோருக்கும்
போதனை வழங்கும் ராஜகுரு
ஆண்டிடும் அரசர் தொழுதிடும் துரோணர்
வில்வித்தை தனிலே வீரகுரு
பாண்டவ இளவல் பார்த்திபன் அர்ச்சுனன
பயின்ற வில்வித்தை அரங்கேற்றம்
நீண்டது வரிசை நிறைந்தனர் அரசர்
எங்கும் வீரர்கள் நடமாட்டம்
 
வித்தை காட்டினான் விஜயன் அங்கே
வந்தவர் எல்லாம் வியந்தனராம்
இத்தகு வீரனை எதிர்ப்பவர் உண்டோ
எனும்குரல் கேட்டு பயந்தனராம்
மொத்த சபையும் மவுனம் காக்க
முழங்கி எழுந்தான் கர்ணனுமே
பித்தா நீஎன்ன அரசனா என்றதும்
தலைகவிழ்ந்தானே வீரனுமே
 
சிங்கம் போன்றவன் சிறுமைப்பட்டதில்
சிலிர்த்தே துரியோதனனெழுந்தான்
அங்க நாட்டின் அரசனாய் கர்ணனை
ஆக்குவேன் என்றே முரசறைந்தான்
எங்கும் பழிச்சொல் ஏற்றவன் கர்ணன்
இந்த உதவியில் நெகிழ்ந்தானே
பொங்கும் நன்றியில் துரியோதனனின்
பாச நண்பனாய் இணைந்தானே
 
அன்று தொடங்கிய அன்பின் உறவு
அமர காவியம் ஆகியதே
நன்றி உணர்வும் நட்பின் பலமும்
நாளும் நாளும் கூடியதே
 
துரியோ தனனின் அந்தப் புரத்தில்
சொக்கட்டான் விளையாட்டு
கர்ணனும் பானுமதியும் ஆடிட
கணவன் வருகிற ஒலிகேட்டு
பானுமதியும் பணிவாய் எழுந்தாள்
பின்னால் கர்ணன் பார்க்கவில்லை
ஏனென்று கைகளை நீட்டிட மேகலை
அறுந்தது... இதையெதிர் பார்க்கவில்லை
 
மண்ணில்சிதறிய முத்துக்கள் உருண்டு
மன்னனின் கால்களில் மோதியதே
கண்ணெதிர் நண்பன் நின்றிடக் கண்டதும்
கர்ணனின் உள்ளம் பதறியதே
களங்கமில்லாமல் துரியன் கேட்டான்
கைகளில் முத்துக்கள் எடுத்திடவோ
மனங்கவர் நண்பா நீமகிழும்படி
முத்துக்கள் நூலில் கோர்த்திடவோ
 
உள்ளங்கள் கலந்து பழகிய பின்னே
ஒருதுளி ஐயம் வருவதில்லை
வெள்ளம் போன்ற அன்பின் வழியில்
வருத்தம் ஏதும் விளைவதில்லை
 
தொடரும்....

Thursday, February 3, 2011

கர்ணன்-1

நாட்டியப்பள்ளி ஒன்றில் கர்ணன் குறித்த நாட்டிய நாடகம் கேட்டார்கள்.  கூடுமானவரை ஒரே சந்தத்தில் இருந்தால் நல்லதென்று சொன்னார்கள். ஆறு அத்தியாயங்களாய் எழுதிக் கொடுத்தேன். வலைபூவில் சுலபத் தவணை முறையில் இடுவதாகத்திட்டம்..

                             விநாயகர் வணக்கம்

            ஆனைமுகன்! எங்கள் ஆனைமுகன்!-எங்கும்
            ஆனந்தம் நிலவிட அருள்வானே
            ஞானமுனி அந்த வியாசன் சொல்ல
             பாரதம் மலைமேல் புனைந்தானே
            தானெனும் எண்ணம் துளியும் இலாமல்
             தந்தம் ஒடித்து வரைந்தானே
            தானத்திலே உயர் கர்ணனின் கதைசொல்ல
              துணையாய் அவனே வருவானே

அத்தியாயம் - 1

            சந்திர சூரியர் உளநாள் மட்டும்
             சரித்திரம் ஆன மகராசன்
            குந்தி போஜனின் அரண்மனை தனிலே
              திருவடி பதித்தான் துர்வாசன்
            வந்தனம் கூறி இருப்பிடம் தந்து
              வண்ணத் திருவடி தொழுதிருந்தான்
            குந்தி தேவியாம் புதல்வியை அரசன்
               பணிவிடை செய்யப் பணித்திருந்தான்

            சின்னஞ் சிறுமியின் பணிவிடை கண்டு
              முனிவன் மிகவும் மகிழ்ந்துவிட்டான்
            எண்ணும் தேவர் எதிர்வந்து குழந்தை
               வரம்தரும் மந்திரம் அருளிவிட்டான்
             ஒன்றும் அறியாச் சிறுமிநம் குந்தி
                சூரியன் முன் அதைச் சொன்னாளே
             பொன்னொளி பொங்கப் பகலவன் வந்தான்
                பிள்ளையைக் கைகளில் தந்தானே



              
காதினில் குண்டலம் மார்பினில் கவசம்
                  குழந்தை சிரித்தது அழகாக
               மாதிவள் இதயம் தாய்மையின் பரிவில்
                  கரைந்தே போனது மெழுகாக

            பிஞ்சுக் கைகளில் பிள்ளையை சுமந்தாள்
                  பாவம் குந்தி பதறிவிட்டாள்
            நெஞ்சம் கலங்கி நிலைகுலைந்தாள் அவள்
                  நினைத்துப் பார்த்தொரு முடிவெடுத்தாள்
             பேழை ஒன்றினில் பிள்ளையை வைத்துப்
                   போகும் நதியினில் விட்டாளே
              வாழிய மகனிவன் வாழிய என்றே
                   வாழ்த்திக் கண்ணீர் விட்டாளே

            புனலில் மிதந்த பேழையும் அஸ்தின
                   புரத்தின் வழியே போகிறது
            நதிநீரா டிய தேரோட் டிக்கு
                   குழந்தையின் அழுகுரல் கேட்கிறது
          தனிவழி போகிற பேழையை அவனும்
                  திறந்து பார்த்ததில் அதிர்ந்துவிட்டான்
          கனியிதழ் விசும்பும் குழந்தையைக் கண்டதும்
                  கடவுளின்  பரிசென்று மகிழ்ந்துவிட்டான்

         கண்களில் மின்னல் கொஞ்சும் பிள்ளை
                 காணக் காணப் பேரழகு
         விண்ணில் ஒளிரும் சூரியன் போலே
                 வெளிச்சம் பொங்கும் சீரழகு
         கர்ணன் எனும்பேர் வைத்து வளர்த்தான்
               கூறுங்கள் இவன்போல் யாரழகு?
         மண்ணவர் மகிழ வில்லும் வாளும்
               பயின்று வளர்ந்தது தோளழகு

         வருகிற நதியில் கிடைத்தவன் இன்று
              வாலிபனாக வளர்ந்தானே
          இருப்பதைக் கொடுக்கும் இதயம் படைத்து
               எவரும் போற்ற உயர்ந்தானே

தொடரும்.....

அவள்தான்


 பாடிடச் சொன்னவள் அவள்தான் -இந்தப்
பாதையைத் தந்தவள் அவள்தான்
தேடிய வெளிச்சமும் அவள்தான்-உள்ளே
தெரிகிற ஜோதியும் அவள்தான்
 
 
வீணையை மீட்டிடும் விரலாய்-என்
விதியினை ஓட்டிடும் குரலாய்
காணென்று காட்டிடும் அருளாய்-என்
கண்முன்னே வருபவள் அவள்தான்
 
அண்டத்தைப் பிண்டத்தில் அமைத்தாள்-அதில்
ஆயிரம் அதிசயம் சமைத்தாள்
கண்டத்தில் நீலத்தைத் தடுத்தாள்-எனைக்
கண்டதும் களுக்கென்று சிரித்தாள்
 
பாய்கிற கடலலை அவளே-வரும்
பாய்மரக் கப்பலும் அவளே
தாயவள் எங்கணும் ஜொலிப்பாள்-அவள்
திருக்கடையூரினில் இருப்பாள்
 
தாடங்கம் தானந்த இந்து-பிற
கோள்களும் அவளின்கைப் பந்து
நாடகம் நடத்திட நினைத்தாள்-அவள்
நலமென்றும் வலியென்றும் வகுத்தாள் 
 
அதிர்வுகள் அடங்கிடும் தருணம்-நகை
அழுகையும் முடிந்திடும் தருணம்
உதிர்கிற மலரென வருவாள்-இந்த
உயிருக்கு ஒருகதி தருவாள்

Wednesday, February 2, 2011

பனைமரங்களின் கனவு

 
காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன
கற்பகமாய் மலர்வதுபோல் நினைவுகொண்டன
நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன
நனவாகும் நமதுகனா என்றிருந்தன
 
சாமமாகும் போதுகூட விழித்திருந்தன
சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன
தாமதமேன் என்றுசொல்லித் தவித்திருந்தன
தூயமகன் வரவையெண்ணி சிலிர்த்திருந்தன
 
உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான்
ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான்
பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான்
புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான்
 
தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன
தெய்வங்களும் இறங்கிவந்து தமிழ்படித்தன
கானம்பாடும் பறவைகளும் குரல்கொடுத்தன
கம்பநாடன் என்றுசொல்லி சிறகசைத்தன
 
ஓலைகளில் அமுதவாரி ஊற்றெழுந்தது
உலகமெங்கும் கவிதையின்பக் காற்றெழுந்தது
காலம்நின்று பார்த்துவிட்டுக் கால்நடந்தது
தேரெழுந்தூர்த் தச்சன்செய்த தேரசைந்தது
 
பனைமரங்கள் அவனிடத்தில் பக்தி கொண்டன
பாட்டரசன் தொட்டவையோ முக்தி கொண்டன
கனவு நனவானதெனக் கண்டு கொண்டன
கவியமுதை ஓலைகளில் மொண்டுதந்தன
 
கம்பநாடன் விழிமலர்கள் கருணைநல்கின
கவிதைகள்தான் பனையின்நுங்கில் சுவையும்நல்கின
அன்றுமுதல் பனைமரங்கள் உயரமாயின
விண்ணிலுள்ள கம்பனுக்கு விசிறியாயின