கர்ணன்-1

நாட்டியப்பள்ளி ஒன்றில் கர்ணன் குறித்த நாட்டிய நாடகம் கேட்டார்கள்.  கூடுமானவரை ஒரே சந்தத்தில் இருந்தால் நல்லதென்று சொன்னார்கள். ஆறு அத்தியாயங்களாய் எழுதிக் கொடுத்தேன். வலைபூவில் சுலபத் தவணை முறையில் இடுவதாகத்திட்டம்..

                             விநாயகர் வணக்கம்

            ஆனைமுகன்! எங்கள் ஆனைமுகன்!-எங்கும்
            ஆனந்தம் நிலவிட அருள்வானே
            ஞானமுனி அந்த வியாசன் சொல்ல
             பாரதம் மலைமேல் புனைந்தானே
            தானெனும் எண்ணம் துளியும் இலாமல்
             தந்தம் ஒடித்து வரைந்தானே
            தானத்திலே உயர் கர்ணனின் கதைசொல்ல
              துணையாய் அவனே வருவானே

அத்தியாயம் - 1

            சந்திர சூரியர் உளநாள் மட்டும்
             சரித்திரம் ஆன மகராசன்
            குந்தி போஜனின் அரண்மனை தனிலே
              திருவடி பதித்தான் துர்வாசன்
            வந்தனம் கூறி இருப்பிடம் தந்து
              வண்ணத் திருவடி தொழுதிருந்தான்
            குந்தி தேவியாம் புதல்வியை அரசன்
               பணிவிடை செய்யப் பணித்திருந்தான்

            சின்னஞ் சிறுமியின் பணிவிடை கண்டு
              முனிவன் மிகவும் மகிழ்ந்துவிட்டான்
            எண்ணும் தேவர் எதிர்வந்து குழந்தை
               வரம்தரும் மந்திரம் அருளிவிட்டான்
             ஒன்றும் அறியாச் சிறுமிநம் குந்தி
                சூரியன் முன் அதைச் சொன்னாளே
             பொன்னொளி பொங்கப் பகலவன் வந்தான்
                பிள்ளையைக் கைகளில் தந்தானே              
காதினில் குண்டலம் மார்பினில் கவசம்
                  குழந்தை சிரித்தது அழகாக
               மாதிவள் இதயம் தாய்மையின் பரிவில்
                  கரைந்தே போனது மெழுகாக

            பிஞ்சுக் கைகளில் பிள்ளையை சுமந்தாள்
                  பாவம் குந்தி பதறிவிட்டாள்
            நெஞ்சம் கலங்கி நிலைகுலைந்தாள் அவள்
                  நினைத்துப் பார்த்தொரு முடிவெடுத்தாள்
             பேழை ஒன்றினில் பிள்ளையை வைத்துப்
                   போகும் நதியினில் விட்டாளே
              வாழிய மகனிவன் வாழிய என்றே
                   வாழ்த்திக் கண்ணீர் விட்டாளே

            புனலில் மிதந்த பேழையும் அஸ்தின
                   புரத்தின் வழியே போகிறது
            நதிநீரா டிய தேரோட் டிக்கு
                   குழந்தையின் அழுகுரல் கேட்கிறது
          தனிவழி போகிற பேழையை அவனும்
                  திறந்து பார்த்ததில் அதிர்ந்துவிட்டான்
          கனியிதழ் விசும்பும் குழந்தையைக் கண்டதும்
                  கடவுளின்  பரிசென்று மகிழ்ந்துவிட்டான்

         கண்களில் மின்னல் கொஞ்சும் பிள்ளை
                 காணக் காணப் பேரழகு
         விண்ணில் ஒளிரும் சூரியன் போலே
                 வெளிச்சம் பொங்கும் சீரழகு
         கர்ணன் எனும்பேர் வைத்து வளர்த்தான்
               கூறுங்கள் இவன்போல் யாரழகு?
         மண்ணவர் மகிழ வில்லும் வாளும்
               பயின்று வளர்ந்தது தோளழகு

         வருகிற நதியில் கிடைத்தவன் இன்று
              வாலிபனாக வளர்ந்தானே
          இருப்பதைக் கொடுக்கும் இதயம் படைத்து
               எவரும் போற்ற உயர்ந்தானே

தொடரும்.....