ஒண்ணேகால் இருக்கை

ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்ஸின் ஏசி கோச்சில் பெரும்பாலும் எனக்கு ஜன்னலோர இருக்கை அமைந்துவிடும்.அதுமட்டுமா.பெரும்பாலும் எனக்குப் பக்கத்து இருக்கை காலியாகத்தான் இருக்கும்.மாதம் இருமுறையாவதுஅதில் பயணம் செய்து வருபவன் என்பதால் அதிலுள்ள பணியாளர்கள் பலரும் எனக்குப் பழக்கமானவர்கள் கோவையிலிருந்து  மயிலாடுதுறை போகும் அந்த ரயிலில் கரூர்,திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம்,மயிலாடுதுறை என்று அதன் சகல நிறுத்தங்களிலும் எனக்கு வேலையிருக்கும்.

காலையில் அந்தரயிலில் ஏறி கரூரிலோ திருச்சியிலோ கல்லூரிக்கூட்டங்களில் பேசிவிட்டு,மாலை அதே ரயிலில் திரும்புவதும் உண்டு.காதில் வயர்ஃப்ரீ எம்பீத்ரீயை மாட்டிக் கொண்டு கண்மூடி சாய்ந்தால் மகராஜபுரம் சந்தானம் "கபீஷ்ட வரத" என்று தொடங்குவார்.கண்ணயர்ந்து மீண்டும் விழிப்பு வருகிற போது, சுவர்ணலதா உளுந்து விதைத்துக் கொண்டிருப்பார். வகைதொகையில்லாத என் விருப்பத்தேர்வுகளில் கர்நாடக
சங்கீதமும் குத்துப்பாட்டும் அகரவரிசைப்படி மாறி மாறி வரும்.

சமீபத்தில் தஞ்சாவூரிலிருந்து வந்து கொண்டிருந்த போது திருச்சியில்
நின்றது ரயில்.பக்கத்து இருக்கையில் ஒருவர் தன் பையை வைத்துவிட்டு என்னையே முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார்.ஓங்குதாங்கான முரட்டு வடிவம். ரயில்வே ஊழியர் என்பதற்கான அடையாள அட்டை சட்டை பாக்கெட்டில் துருத்திக் கொண்டிருந்தது."இதில யாரும் வர்றாங்களா"
என்ற அவரின் கேள்விக்கு "தெரியலை" என்று மையமாக பதில் சொன்னேன்.வெளியே சென்று சார்ட்டைப் பார்த்துவிட்டு பையைக் கீழே வைத்துவிட்டு அந்த இருக்கையையும் என் இருக்கையின் கால் பகுதியையும் ஆக்ரமித்துக் கொண்டார்.

இரண்டு இருக்கைகளையும் பிரிக்கும் கைப்பிடியில் அவருடைய கை பிதுங்கி
நிறைந்திருந்தது.பாகப்பிரிவினை சண்டைக்கு தயாரில்லாத மனோநிலை
காரணமாகவும்,மேல்வகுப்பு பயணிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாகாது என்ற ரயில்வே விதிகளின்படியும் அமைதியாக  முக்கால் இருக்கையில் முதுகைச் சாய்த்தேன்.டிக்கெட் பரிசோதகர்
வந்தபோது,தன் ஆகிருதிக்குச் சம்பந்தமில்லாத பணிவுடன் ஒருகையைத் தூக்கி வணக்கம் வைத்தார் ஒண்ணேகால் இருக்கைக்காரர் . "மாநாட்டுக்கா" என்று அவரை விசாரித்தபடி கடந்து சென்றார் பரிசோதகர்.என்னையும் அறியாமல் நான் தொடங்கியிருந்த எல்லைப்போராட்டத்திற்கு சிறிது பலனிருந்தது ,கைப்பிடியில் கால்பகுதியை எனக்கு விட்டுக் கொடுத்திருந்தார். பதிலுக்கு என்னுடைய இருக்கையின் கால் பகுதியை  நான் விட்டுக் கொடுத்திருந்தேன்.

அதற்குள் "ஏடீ கள்ளச்சி என்னத் தெரியலையா"என்ற என் அபிமானப் பாடல் எம்
பித்ரீயில் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. கண்மூடி கேட்டுக் கொண்டிருந்தென். அந்த ரயில் பெட்டியே அமைதியில் ஆழ்ந்திருந்தது.

திடீரென்று "நண்பர்களே! இப்போது நீங்கள் கேட்கப் போவது புரட்சித்தலைவர் அவர்கள் ஆற்றிய உரை"என்ற அலறல் கேட்டு தூக்கிவாரிப்போட்டு கண்விழித்தேன். ரயில் பெட்டியில் பலரும் பதறிப்போய் எட்டிப் பார்த்தார்கள். என் பக்கத்து சீட்காரருடையசெல்பேசியின் ரிங்டோன் அது. அடுத்தடுத்த அழைப்புகளுக்கும் அதே அலறல். அப்போதுதான் கவனித்தேன்.அவருடைய வலதுகை மோதிரவிரலில் பெரிய சைஸ் எம் ஜி ஆர் படம்.அவர் பிரித்து வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த டைரியில் விதம்விதமான போஸ்களில் எம் ஜி ஆர். சிரித்துக் கொண்டிருந்தார்.கையிலும் அதிமுக கொடியைப் பச்சை குத்தியிருந்தார் மனிதர்.
ரிங்டோன் ஒலிக்கும் போதெல்லாம் நான் ஆர்வமாக கவனிப்பதைப்
பார்த்துவிட்டு,"தலைவரோட பேச்சுதான் நம்ம ரிங்டோனுங்க"என்றார் அந்த
மனிதர்.அவருடன் பேசத் தொடங்கிவிட்டேன் என்பது எனக்குப் புரியும் முன் எம் ஜி ஆருக்காக ஜேசுதாஸ் பாடிய" அழகின் ஒவியம் இங்கே"பாடல்
எம்பீத்ரீயில் ஒலித்தது. அவர் பாட்டுதான் கேட்டுகிட்டிருக்கேன். இன்னைக்கும் உயிர்ப்பா இருக்கு" என்று நான் சொல்லி முடிக்கும் முன் கைக்குட்டையை எடுத்து முகத்தை மூடிக்கொண்டு அழத்தொடங்கிவிட்டார், "தலைவரைப் பத்தி பேசினா நான் அழுதுடுவேனுங்க"என்றதும் அதிர்ந்தேன்.

ஈரோட்டில்  டிக்கெட்பரிசோதகர்களின் ஓய்வு மாளிகைக்குப் பொறுப்பாளர்
அவர். பெயர் சுந்தரம்."கராத்தே சுந்தரம்னு சொன்னா எல்லாருக்கும் தெரியுமுங்க" என்றவர் எம்.ஜி ஆர் பற்றி பேச்சு வந்த போதெல்லாம் அழத்தொடங்கினார்.

பொதுவாழ்வுக்கே பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவதால் மாத சம்பளத்தை முழுத்தொகையாய் வாங்கியே இராத வரலாற்றுப் பெருமை இவருக்குண்டு.

சின்ன வயதில் வீட்டிலேயே அரிசி திருடி விற்று எம் ஜி ஆர் படம் பார்த்து வளர்ந்தவர் சுந்தரம்.அப்பா கிராமத்துக்காரர். அம்மாவுக்கு ஈரோடு. கிராமத்து வழி உறவினர்களை அவருடைய அம்மா மதிப்பதில்லையோ என்கிற
எண்ணம் அவருடைய தாய்வழிப் பாட்டிக்கு உண்டு."நீயி அப்படி இருக்கக்கூடாது சாமி!ஒன்னத் தேடி ஆரு வந்தாலும்,வாய்நெறய பேச்சு குடுக்கோணும்,வயிறு நெறய சோறு குடுக்கோணும்"என்று அந்தப் பாமரப் பாட்டி சொன்னதையே தன் வாழ்வின் வேத வாக்காகக் கொண்டு விட்டார் சுந்தரம்.

அரசியல் வாழ்வில் பாதுகாப்புக்காக எம் ஜி ஆர் கத்தி வைத்துக் கொள்ளச்
சொன்ன போது,கராத்தே, சிலம்பமெல்லாம் கற்றுக் கொண்ட சுந்தரம்,அந்தக்
கலைகலை ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறார்.

டிக்கெட் பரிசோதகர்கள் ஓய்வு மாளிகை எதிரிலுள்ள பழைய கட்டிடத்தில்
பிச்சைக்காரர்கள் வந்து தங்கியிருப்பார்கள்.அவர்கள் சோகக்கதைகளெல்லாம் சுந்தரத்துக்குத் தெரியும்.இரவு யாரெல்லாம் சாப்பிடவில்லை என்று கேட்டு அவர்களை மட்டும் தனியாக அழைப்பார் சுந்தரம்."சித்தெ இருங்க"என்று அமரவைத்துவிட்டு காலைச்சிற்றுண்டி வாங்கித் தருவார். "இதெல்லாம் தலைவரு கத்துக் கொடுத்ததுங்க" என்று மறுபடியும் அழ ஆரம்பித்தார் சுந்தரம்.

முன்னாள் அமைச்சர் ஈரோடு முத்துச்சாமி அவர்களைத் தனது அரசியல் ஆசானாக வரித்திருக்கிறார் சுந்தரம்.'அவர எப்பவும் "அமைச்சரு அமைச்சரு" ன்னு வாய் நெறயக் கூப்பிடுவேனுங்க. அவரு டியெம்கே க்கு போனதத் தாங்கவே முடியலீங்க.அந்த அதிர்ச்சியிலேயே ஆஸ்பத்திரியில அட்மிட்
ஆயீட்டேனுங்க 'என்றவர், எம் ஜி ஆர் படம் போட்ட டைரியைத் திறந்து மருத்துவமனை ரசீதுகளைக் காட்டினார்.

அவர் சொன்ன எல்லாவற்றிலும் ஒரேயொரு வரியைத்தான் என்னால் நம்ப
முடியவில்லை."ஒடம்பு அப்போ எளச்சதுதானுங்க". இளைத்த உடம்பே இப்படியா என்றிருந்தது."இந்தத் தேர்தலிலே சீட் கேக்கப் போறெனுங்க!நல்ல வார்த்த சொல்லி அனுப்புங்க"என்று ஈரோடு சந்திப்பில் இறங்கிக் கொண்டார் அவர்.நான் கீழே இறங்கி இரவு உணவு வாங்கிக் கொண்டு கொஞ்சம் பராக்கு பார்த்துவிட்டு மறுபடியும் ரயிலில் ஏறினால் பெட்டிக்குள் என்னைத் தேடிக் கொண்டிருந்தார் சுந்தரம். "வாங்க வாங்க! சீட்ல ஒக்காருங்க!"
என்றவர்,"பேச்சு சுவாரஸ்யத்தில  ஒங்களுக்கு ஒண்ணுமே வாங்கித் தரலீங்க. அதான் காபி வாங்கீட்டு ஒடியாந்தனுங்க"என்றவர் நகர ஆரம்பித்த ரயிலில் இருந்து வேகவேகமாய் இறங்கிக் கொண்டார்.

சூடான சர்பத் போல் இருந்த அந்தக் காப்பியை முழுவதும் குடிக்க சர்க்கரை
நோய் இடம் தரவில்லை.ஆனாலும் எந்த நேரமும் எம் ஜிஆர் குரல் ரிங் டோனாகக் கேட்கும் சாத்தியக் கூறுகளுடன் கராத்தே சுந்தரத்தின் கனிந்த அதிர்வுகளால் நிரம்பியிருந்தது,காலியாகக் கிடந்த அந்த ஒண்ணேகால் இருக்கை.