நுண்மான் நுழைபுலம் என்ற சொற்றொடருக்கு சத்திய சாட்சியாக விளங்குபவர் பெரும்புலவர் பா.நமசிவாயம் அவர்கள். மதுரை அருகிலுள்ள திருப்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.மற்றவர்களை வேண்டுமானால் வசித்து வருகிறார் என்று சொல்லலாம்.இவரை வாழ்ந்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விநாடிக்கு விநாடி,வாழ்வை ரசித்து வாழ்பவர் அவர்.பெரும்புலவர்.பா.நமசிவாயம் அவர்களை நடுவராகக்
கொண்டு,பேராசிரியர் சாலமன் பாப்பையா,பேராசிரியர் சோ.சத்தியசீலன் போன்றோர் அணித்தலைவர்களாகப் பேசி வளர்ந்தார்கள்.
பெரும்புலவரின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று,நுட்பமான நகைச்சுவை.எப்போதும் சிரித்த முகமும் கூப்பிய கைகளுமாய் வரவேற்பார்.பேராசிரியர் அன்பழகனின் ஜாடை இருக்கும். அவருடைய நேரடி மாணவரும் கூட.இவர் வாழ்ந்து வரும் திருப்புத்தூரில்,தொன்மையான சிவன்கோயில் ஒன்றுண்டு. தளிக்கோயில் எனும் வகைமையைச் சேர்ந்தது. இந்த ஊரை ஆண்ட மன்னன் ஒருவனின் தமிழறிவை விளக்கும் விதமாக உ.வே.சா. ஒரு சம்பவத்தை எழுதியிருக்கிறார்.
பக்கத்தூருக்கு சில புலவர்கள் வந்திருந்தனராம்.அவர்களை திருப்புத்தூருக்கு அழைக்கும் விதமாக தங்களூர் சிவன் பற்றிய வெண்பா ஒன்றை எழுதி,
தன் பணியாளன் ஒருவனிடம் தந்தனுப்பினான் அந்த அரசன்.அந்த வெண்பா இதுதான்:
"பிறந்த பிறப்பால் பெரும்பேறு பெற்றேம்
மறந்தும் இனிப்பிறக்க வாரேம்-சிறந்தமதி
சேர்த்தானை,புத்தூர் தளியானை,இப்புவனம்
காத்தானை,கூத்தாடக் கண்டு."
இந்தப் பாடலைக் கொண்டு போன பணியாளன், சரியான மண்ணாந்தை. பாட்டின் பொருளோ அழகோ புரியாத ஆள். பக்கத்தூர் கோயிலில் தரிசனம் செய்து கொண்டிருந்த புலவர்களிடம் அந்தப் பாடலைத் தந்தான்.அவர்கள் பாடலைப் படித்துவிட்டு,"தமிழ் தெரியாத அரசர்களின் அவைக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சொல்"என சொல்லியனுப்பினார்கள். திரும்பி வந்த மண்ணாந்தை, தகவலைச் சொன்னான். சிரித்துக் கொண்ட மன்னன்,
"நாளையும் அதே ஊரில்தான் புலவர்கள் இருப்பார்கள். கோயிலுக்கு வருவார்கள்.நீ அங்கே போ.தீபாராதனை ஆகும்போது, புலவர்களுக்குத் துணையாக வந்த தீவட்டித் தடியன், தீவட்டியை கீழே வைத்திருப்பான். அந்தத் தீவட்டியை மூன்றுமுறை சுழற்றிக் காண்பி.அதன்பிறகு நடப்பதை என்னிடம் வந்து சொல்"என்றான். (தீவட்டித் தடியை ஏந்துபவனுக்கு
தீவட்டித் தடியன் என்று பெயர்).
அடுத்த நாள் போன மண்ணாந்தை அப்படியே செய்தான். அந்ப் புலவர்கள், "நாங்கள் நேற்று சொன்னது தவறு. உங்கள் அரசனிடம் மன்னிப்பு கேட்டதாகச் சொல். நாளையே வருகிறோம் என்றும் சொல்"என்றார்கள். அரசனிடம் வந்த
மண்ணாந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. விளக்கம் கேட்டான். அரசன் எழுதிய வெண்பாவில் "சிறந்தமதி சேர்த்தானை" என்றொரு சொற்றொடர். சிவபெருமான் தலையில் உள்ளது கு றைமதி.அதை சிறந்தமதி என்றெழுதிய அரசன் தமிழறியாதவன் என்பது புலவர்கள் அபிப்பிராயம். சும்மா இருக்கிற தீவட்டியை சுழற்றுகிற போது ஒளிவட்டம் உண்டாகிறது. அதுபோல் சிவபெருமான் குதித்துக் குதித்து கூத்தாடும்போது,தலையில் இருக்கும் குறைமதி,நிறைமதியாக-சிறந்தமதியாகத் தோன்றுகிறது என்கிற நயத்தைத்தான் அரசன் அப்படி விளக்கியிருந்தான்.
இப்பேர்ப்பட்ட திருப்புத்தூரில் இருக்கும் பெரும்புலவரின் சமயோசிதத்துக்குக் கேட்கவா வேண்டும்!! பட்டிமண்டபம் ஒன்றில்அவர் நடுவராக இருந்த போது, பேச்சாளர் ஒருவர்,"நடுவர் அவர்களே! கிளியோபாட்ராவை பார்க்கப் போகும் முன்னால்ஆண்டனி 17 முறை சவரம் செய்து கொண்டான்"என்றார். உடனே பெரும்புலவர் சொன்னார்,"அதாவது,கிளியோபாட்ராவுக்காக ஆண்டனி தன்னுடைய ரோம சாம்ராஜ்யத்தையே அழித்துக் கொண்டான்.அப்படித்தானே" !
பெரும்புலவரின் வீட்டுக்கு வந்திருந்த அவருடைய மாப்பிள்ளை,வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டார். மாத்திரைகள் தரப்பட்டன. மாலையில் பெரும்புலவர் நிகழ்ச்சிக்குக் கிளம்பும்போது, மாப்பிள்ளை மாடியிலிருந்து இறங்கி வந்தார். "மாப்பிள்ளை ! இப்போ எப்படி இருக்கு?" மாப்பிள்ளை சொன்னார், "பரவாயில்லை மாமா !அரஸ்ட் ஆயிடுச்சு!" அடுத்த விநாடி பெரும்புலவர் சொன்னது.."அரஸ்ட் ஆயிடுச்சா! நல்லது!ஜாமீன்லே எடுத்துடாதீய!சரியா?"
பட்டிமண்டபங்கள் ஊடகங்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பிறகு, நகைச்சுவையால் மட்டுமே புகழ் பெற்ற இளைஞர் ஒருவரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய விரும்பி பெரும்புலவரிடம் வந்தார்கள் சில அமைப்பாளர்கள்,
"அய்யா! அவரு கேட்கற மாதிரி 20,000 ரூபா கொடுத்துடறோம். ஏசி கார் அனுப்பிடறோம்.எப்படியாவது அவரு வந்து ஒரு மணிநேரம் எங்க அமைப்பில பேசணும்".பெரும்புலவர் கேட்டார், "எதைபத்திப் பேசணும்?".வந்தவர்கள்
சொன்னார்கள்,"தாயுமானவர் பாடல்கள் பற்றி பேசணும்".ஒரு பெருமூச்சுடன் அய்யா சொன்னார்,"தாயுமானவர் பத்தியா? அப்ப கேட்டுத்தான் சொல்லணும்" வந்தவர்கள் அவசரப்படுத்தினார்கள்,"ஆமாங்க! இப்பவே கேட்டு சொல்லுங்க". பெரும்புலவர் அமைதியாகச் சொன்னார், "நான் கேட்கணும்னு சொன்னது பேச்சாளரை இல்லே!தாயுமானவ சுவாமிகளை! இந்த நிகழ்ச்சியால பாதிப்பு அவருக்குத்தானே!!"
பெரும்புலவர் பா நமச்சிவாயம் அவர்கள் பெரிய புராணத்தில் பேரறிஞர்.அவர் கல்லூரியில் படித்தபோது, அவருக்கு மூத்த மாணாக்கராக ஒரு மண்ணாந்தை இருந்தார்.அவர் இன்னமும் இருக்கிறார். பெரியபுராணத்தில்
பா.நமச்சிவாயம் அவர்களை பெரிய அறிஞராகக் கொண்டாடுவதில் அந்த மண்ணாந்தைக்கு மனவருத்தம். ஒரு மேடையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். மண்ணாந்தை முதலில் பேசினார்."பெரிய புராணத்தில நாந்தான்
நமச்சிவாயத்தை விட பெரிய ஆளு.நான் சித்தாந்தச் சுடரொளின்னு பட்டம் வாங்கியிருக்கேன்.ஆனா அழைப்பிதழிலே நீங்க புலவர்னுதான் போட்டிருக்கீங்க". இப்படிப் போனது மண்ணாந்தையின் பேச்சு.
அடுத்துப் பேசினார் பெரும்புலவர்."அண்ணாச்சி சொன்னார் பாத்தீயளா! பெரிய புராணம்னா அவருதான்.நாங்கல்லாம் பெரிய புராணத்தை எழுத்தெண்ணிப் படிச்சோம்.அண்ணாச்சிதான் எழுத்துக்கூட்டி படிச்சாரு. அவரோட பட்டத்தை வேற நீங்க போடாம விட்டுட்டீங்க! அமைப்பாளர்களுக்கு சொல்கிறேன்....அடுத்த முறை நீங்கள் இவரை விழாவுக்கு அழைப்பதாக இருந்தாஆஆஆஆஆல்........."சித்தாந்தச் சுடரொளி"ன்னு போடுங்க!புலவர்னு போடலாமாய்யா இவருக்கு!!
பெரும்புலவர் தன்னைப் பாராட்டுவதாக நினைத்து,தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டிருந்தது மண்ணாந்தை!!
No comments:
Post a Comment