தோடுடைய செவியள்

 நிசப்தம் நிறைந்த அரங்கத்தில் தம்பூரின் மீட்டலாய்த் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது அந்தக் குழந்தையின் அழுகை.தாங்கொணா அமைதிக்கொரு மாற்றாய்,மெல்லிய இசையின் கீற்றாய் ஒலித்த அந்தக் குரலுக்குரிய குழந்தைக்கு மூன்று வயதிருக்கும்.எத்தகைய சதஸில்
தாம் இடம்பெற்றிருக்கிறோம் என்பதை அறியாப் பருவமென்று தமக்குள்
சிரித்துக் கொண்டனர் அவையோர்.மன்னிக்க.சபையோர்.

இராம சரித்திரம் எத்தனை மொழிகளில் எழுதப்பட்டாலும் அத்தனை மொழிகளிலும் படித்து,கரைத்துக் குடித்து,ஒரு படலம் கூட பாக்கி வைக்காமல் செரித்து,விருந்துக்குப் பின்னர் புசிக்கும் பலமூல வகைகள் போல் உபநிஷதங்களையும்,அதன்பின் பருகும் பால் போல்
தோத்திர நாமாவளிகளையும்,தரிக்கும் தாம்பூலம் போல் சில தமிழ்ப்பாடல்களையும் உட்கொண்டு,அவற்றின் சங்கமத்தை ஏப்பமாய்
வெளிப்படுத்தும் ஏழிசையாசி,சண்டப் பிரசண்ட பிரசங்க சக்ரவர்த்தினி,
அருளானந்த மேதா சரஸ்வதியின் உபந்யாசக் கூடம் அது.
எந்த விநாடியும் அம்மையார் அரங்கினுள் பிரவேசிக்கக்கூடும் ஆகையால்,தங்கள் ஹிருதயப் படபடப்பொலியே பெரிதாகக் கேட்கப்பெற்ற
சபையோர்,அதன் தாளத்திற்குத் தம்பூராய் ஒலிக்கும் குழந்தையின்
அழுகையைப் பொருட்படுத்தவில்லை.

குளிர்சாதன வசதிகொண்ட அவ்வரங்கில் வழிந்தது ரசிகப்ரவாஹம்.
இத்தனைக்கும் அம்மையார்,தனது நாவின் நுனியில் வாடகை வாங்காது
குடியமர்த்தியிருக்கும் வான்மீகி ராமாயணத்தையோ சவுந்தர்ய லஹரியையோ
அன்று பேசுவதாக அறிவிக்கப்படவில்லை.வழக்கமில்லா வழக்கமாய்,
திருஞானசம்பந்தர் தேவாரம் பற்றி பேச அழைக்கப்பட்டிருந்தார்.
நம்பியாண்டார் நம்பிக்குப் பின் நம்பிராட்டிதான் திருமுறைகளை மீள்மீட்சி
செய்கிறார் என்பதான பாவனை,நகர் முழுக்க முன்னதாகவே ஏற்படுத்தப்பட்டிருந்தது.

விழா அமைப்பாளர்களின் திடீர் பரபரப்பு, 'பராக் பராக்' சொன்னது.
பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில் வாயிற்காப்போனாக வாழ்ந்து
கண்ணகிக்குக் கதவு திறந்துவிட்டவனின் கால்வழித் தோன்றலாய்
வழிவழி வந்த வாயிலோன்,தானாய் மூடுந் திருக்கதவைத் திறந்து
பிடித்தபடி நடுக்குற்று நிற்க,சபையோர் சிலிர்த்தெழுந்து கூப்பிய கரமும்
கசிந்த கண்களும் திறந்த வாய்களுமாய்க் காத்திருக்க, போதார் குழலாட,
மூப்பால் உடலாட,வைரத் தோடாட,வெண்முல்லைச் சரமாட,பட்டுத் துகிலாட,தோள்பை உடனாடப் பிரவேசித்தார் அருளானந்த மேதாசரஸ்வதி.
அவர் முகத்தில் எப்போதும் குடி கொண்டிருக்கும் மந்தஹாசப் புன்னகையையும் மீறி,ஒரு பதட்டம் குடி கொண்டிருந்தது.இடக்கரத்தில்
பக்கம் பக்கமாய் குறிப்புகள்.மேடை நோக்கி மெல்ல நகர்ந்த அவர்தம்
கடைக்கண் வீச்சின் குறிப்புணர்ந்து முடுக்கப்பட்ட இயந்திரம்போல்
முன்வந்து நின்றார்,அவர்தம் பிராணநாயகர்.

கைப்பை,கண்ணாடிக்கூடு,குறிப்புகள் அனைத்தையும்,கணவரின் கைகளில்
திணித்த கையோடு அவருடைய கால்களில் விழுந்தெழுந்தார்.
அதைக்கண்டு சபையோர் எழுப்பிய "உச் உச்" உச்சாடனமே ஒரு மந்திர
கோஷம்போல் ஒலித்தது.தன் நாயகரை விழுந்து  வணங்கியதும் மேடையேறி மேடையில் காட்சி தந்து கொண்டிருந்த
சக்தி நாயகனாம் நடனசபாபதியின் கால்களிலும் விழுந்து வணங்கினார்
அம்மையார்.

மானும் மழுவும் ஏந்திய கைகளில் கைப்பையையும் குறிப்புகளையும்
ஒப்படைக்க முடியாதென்பதால் அவற்றைக் கீழே வைத்துவிட்டே
வணங்கினார்.அதன்பின்,நடுநாயகமாய் போடப்பட்டிருந்த பீடத்தின்மேல்
எழுந்தருளிய அருளானந்த மேதாசரஸ்வதிக்கு முன்னால்,
பட்டுத் துணியால்  சுற்றப்பட்டிருந்த கணக்குப்பிள்ளை மேசையொன்று
வைக்கப்பட்டிருந்தது.

தேர்வெழுதத் தயாராகும் சின்னஞ்சிறுமியின் பாவத்தோடும்,
மாணாக்கரைப் பார்வையிடும் தலைமையாசிரியையின் கோலத்தோடும்,
ஒருசேரக் காட்சியளித்த அம்மையார்,தனது கணீரென்ற குரலில்
ஸ்தோத்திர மாலைகளைத் தொடங்கினார்.அதேநேரம்,தம்பூர் ஒலிப்பதுபோல் தனித்தொலித்த அந்த குழந்தையின் குரல்,பின்பாட்டுப்போல் ஓங்கியொலிக்கத் தொடங்கியது.

இப்போது குழந்தை இருந்த திசைநோக்கி "உச் உச்' உச்சாடனத்தை சபையோர் மேற்கொண்டனர்.இந்த உச்சாடனத்தில் பக்திப்பெருக்கமோ
தாய்மை உருக்கமோ இல்லை.கண்டனம் மட்டுமே இருந்தது.அதற்குள்
உபந்நியாசம் ஆரம்பமாகியிருந்தது.முகமன்,உபசார வார்த்தைகள்
ஆகியவற்றுக்குப்பின் சம்பந்தர் பாடல் ஒன்றைத் தட்டுத் தடுமாறி
இசைத்தார் அம்மையார்.அதற்குள் அவருக்கு முத்து முத்தாக வியர்த்திருந்தது.பண்முறை ஒத்துக் கொள்ளவில்லையோ,பனி ஒத்துக்
கொள்ளவில்லையோ,அவரது கானாம்ருதக் குரல்,கமகங்களுக்கு பதில்
கமறல்களை வெளிப்படுத்தத் தொடங்கிற்று.

முதல் வரிசையில் அமர்ந்திருந்த உதவியாளர், மேடைக்கு ஓடோடிச்
சென்று,அரைவிநாடிக்குள் தொண்டையை சீர்செய்து தருவதாய்
விளம்பரங்களில் காட்டப்படும் இருமல் குளிகை ஒன்றை பவ்யமாய்
நீட்டினார்.அம்மையாரின் கனிவுக்கு ஆளாகி தன்யளாகத் தயாராகி
தயங்கித் தயங்கித் தளிரடி வைத்துத் திரும்பும்போது "பிரிச்சுக் கொடுத்திருக்கக் கூடாதோடீம்மா"என்ற சலிப்புக் குரல் அவரைச் சாய்த்தது.

குறிப்புத்தாளோடும்,குளிகைத்தாளோடும் ஒருசேரப் போராட முயன்ற
அம்மையாரின் அவஸ்தையை, அவர்தம் திருச்செவிகளை அலங்கரித்த
எட்டுக்கல் பேசரி டாலடித்து எட்டுத் திசைக்கும் அறிவித்தது.இதற்கிடையே,
சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தை வீறிட்டழத் தொடங்கியது.சபையோர்
தமக்கில்லாத நெற்றிக்கண்ணைத் திறந்து அந்தக் குழந்தையை நோக்க,
அதன் தாய் குழந்தையை அள்ளியெடுத்துக் கொண்டு, சபையிலிருந்து
வேகவேகமாய் வெளியேறினார்.

செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை அறியாதவரல்ல அருளானந்த
மேதா சரஸ்வதி.வான்மீக-வியாச-துளசிதாச-புரந்தரதாச சுலோகங்களும்
கீர்த்தனைகளும் நெருக்கியடித்து உட்கார்ந்திருந்த அவரது நாவில்
சம்பந்தருக்கு இடம்கிடைப்பது சிரமம்தானே.அடுத்தடுத்த நாட்களுக்கு 
திருநாவுக்கரசரும் சம்பந்தரும் வேறு காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர்.
அம்மையாரின் தேஜோமயமான புத்தியில் புதிய மின்னல் ஒன்று பளிச்சிட்டது.
தனது நாதாந்த வேதாந்த சரக்குகளை அனாயசமாக அவிழ்த்துவிட்டு,
இடையிடையே சம்பந்தர் தேவாரத்தைத் தொட்டுக் கொள்வது என்று
திருவுளம் கொண்டார்.சபையில் பெரும்பாலோர் சம்பந்தர் தேவாரத்துடன்
சம்பந்தமில்லாதவர்கள் என்பதால்,அவர்களின் மானசீக "ததாஸ்து" அவருக்குத் துணையிருந்தது.

கண்டிகையும்    நெற்றி நிறைய திருநீறும்  பூண்டு வந்திருந்த சைவ
சிரோன்மணிகள் சிலர் மட்டும் விழிபிதுங்க வீற்றிருந்தனர்.மதுரையில்
வைகையில் எதிர்நீச்சல் போட்ட சம்பந்தர் தேவாரம்,அம்மையாரின்
மணிப்பிரவாளத்தில் அடித்துக் கொண்டு போனது.

சிறிது நேரத்திலேயே  அம்மையாருக்கு குறிப்புத்தாள்கள் தேவைப்படாமல்
போயின.'இதையேதான் ஷங்கரர் ஷொல்றார்..இப்படித்தான் அன்னமாச்சார்யா
 ஷொன்னார்"என்று வெவ்வேறு விருட்சங்களில் தாவித்தாவி வித்தை
காட்டினார் அம்மையார்.

அதேநேரம் அரங்கிற்கு வெகுதொலைவில்,மழை ஓய்ந்தாலும் தூவானம்
விடாத மாதிரி அழுது ஓய்ந்திருந்த அந்தக் குழந்தை விசும்பிக் கொண்டிருந்தது.அதற்கு மிட்டாய் கொடுத்த கடைக்காரர்,கன்னத்தைத்
தடவி"தம்பி பேர் என்ன"என்றார்.முகத்தைத் திருப்பிக் கொண்ட குழந்தையைத் தோளில் சாய்த்துக் கொண்டு, கருத்த அந்தத் தாய் சொன்னார்.... "சம்பந்தன்....ஞானசம்பந்தன்".
(ரிஷபாரூடன் என்ற புனைபெயரில், 2010 செப்டம்பர் ரசனை இதழில்