அன்னையின் திருமுகம் நிலவு
தாயவள் கருணையின்பாய்படுத் துறங்கிட
துன்பமும் இன்பமும் கனவு
பாய்மரக் கப்பலில் போகிற பிள்ளைக்கு
பயமில்லை சமுத்திர விரிவு
தேய்வதும் வளர்வதும் தன்னியல் பெனும்மனம்
தானாய் உணர்ந்தது தெளிவு
சாமரம் வீசிடும் அரம்பையர் நடுவினில்
சாகசச் சிரிப்புடன் தெரிவாள்
காமனின் அம்பினைக் கைப்பற்றும் கன்னிகை
குமரியில் நெடுந்தவம் புரிவாள்
ஊமையின் மனதிலும் ஊற்றெழும் பாட்டுக்கு
ஊர்த்துவ தாண்டவம் இடுவாள்
தீமைகள் சூழ்கையில் தாவி எடுத்துதன்
தாளெனும் தொட்டிலில் இடுவாள்
எல்லாம் சலிக்கையில் எதிரில் வருபவள்
எல்லா பதில்களும் தருவாள்
சொல்லால் தீண்டிட வருகிற்ச் பிள்ளையின்
சொற்களில் நிறைந்து வழிவாள்
கல்லாய் செம்பாய் பொன்னாய் அமர்ந்தும்
கண்ணெதிரே அவள் அசைவாள்
பொல்லா வினைகளின் நில்லாக் குறும்புகள்
பார்வையில் எரித்து விடுவாள்
ஆலயம் அவளது அரசவையாகும்
அன்பர்கள் மனமே வீடு
காலங்கள் அவளது கால்கொலுசாகும்
கானங்கள் அதற்கெனப் பாடு
வேலெனும் விழிகள் வினைகளைச் சாடும்
விரைந்தவள் பதங்களைத் தேடு
வாலை சிரித்துன் வாழ்வுக்குள் நுழைந்ததும்
வாசலை இழுத்து மூடு
1 comment:
தீமைகள் சூழ்கையில் தாவி எடுத்துதன்
தாளெனும் தொட்டிலில் இடுவாள்
பதமலர் பணியும் அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்!
Post a Comment