Monday, March 18, 2013

மருதாசலம்




திருநீறு தினம்பூசி தேவாரத் தமிழ்பாடி


வருவோரை சிவன்காக்கும் அருணாசலம்-அவன்

மடிமீது மகிழ்ந்தேறி ஓங்காரப் பொருள்கூறும்

மகன்வாழும் தலம்தானே மருதாசலம்

சிவன்வாழும் மலைதானே அருணாசலம்-அவன்

மகன்வாழும் தலம்தானே மருதாசலம்!



சிவநாமம் தினம்கூறி பனிபாயும் கொடியாகி

உமையாளும் தவம்செய்யும் இமயாசலம்-அவள்

அருளாலே உருவாகி பாம்பாட்டி சித்தர்முன்

மகன்தோன்றும் தலம்தானே மருதாசலம்


உமையாளும் தவம்செய்யும் இமயாசலம்-அவள்

மகன்தோன்றும் தலம்தானே மருதாசலம்



புவிவாழ மனம்கொண்டு அவதாரம் பலகொண்ட

திருமாலும் அரசாளும் வெங்கடாசலம்-அவன்

மருமானின் அருகாக இருமான்கள் துணையாகும்

அழகான தலம்தானே மருதாசலம்


திருமாலும் அரசாளும் வெங்கடாசலம்-அவன்

மருமானின் தலம்தானே மருதாசலம்



பக்தர்க்கு துணையாகும் கண்கண்ட தெய்வமாய்

ஸ்ரீராமன் அருள்செய்யும் பத்ராசலம்-தினம்

சித்தர்க்கும் முக்தர்க்கும் எளியோர்க்கும் துணையான

வடிவேலன் அரசாளும் மருதாசலம்


ஸ்ரீராமன் அருள்செய்யும் பத்ராசலம்-எங்கள்

வடிவேலன் அரசாளும் மருதாசலம்



குறுமுனிவன் வரக்கண்டு அகங்காரம் விழக்கண்டு

வடிவமும் சிறிதான விந்த்யாசலம்-அவன்

திருவடிகள் தொழக்கண்டு தமிழென்னும் அமுதத்தை

தரும்வேலன் தலம்தானே மருதாசலம்


குறுமுனியின் பதம்பணியும் விந்த்யாசலம்-அந்த

குறுமுனிவன் பணியுமிடம் மருதாசலம்



பரந்தாமன் திருவடிகள் பதிகின்ற தலம்தானே

பிலகிரி என்கின்ற ஸ்வேதாசலம்-எங்கள்

அருள்முருகன் அமர்கின்ற மயில்தோகை போலவே

அழகான திருத்தோற்றம் மருதாசலம்


வெண்மலையாய் ஒளிவீசும் ஸ்வேதாசலம்-எழில்

வண்ணமலை அதுஎங்கள் மருதாசலம்