பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-1(மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)


"மொரீஷியஸில் இருந்து ஒரு பெண்மணி வந்துள்ளார். ஆர்ய வைத்திய சாலையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அவருடைய ஆங்கிலக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமாம்.உங்களால் அவரை சந்திக்க முடியுமா?"டாக்டர் லஷ்மி தொலைபேசியில் அழைத்துச் சொன்னபோதே "ஒத்துக்கொள்"என்று பட்சி சொல்லியது."இன்று மாலை ஆறு மணிக்குப் பார்க்கலாம்"என்றேன்.

கோவையில் எங்கள் வீட்டிலிருந்து நடந்து போய்விடுகிற தொலைவில்தான் ஆர்ய வைத்திய சாலை அமைந்துள்ளது.அங்கேதான் பிரசித்தி பெற்ற தன்வந்த்ரி கோவில் அமைந்துள்ளது.நான் பள்ளி மாணவனாக இருந்த போது  மாலை நேர பூஜையின் அடையாளமாக பம்பை செண்டை மற்றும் கொட்டு வாத்தியங்கள் கேட்கும்.எதிர்வீட்டுப் பையன் "சஜ்ஜி'யும் நானும் கோவிலுக்கு ஓடுவோம்.ஐந்து நிமிட ஓட்டத்தில் கோவிலைப்போய் அடைந்தும் விடுவோம்.

 சஜ்ஜி எனும் ச்ஞ்சீவ் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன்.தன் பாட்டி ,பெரியம்மா,சித்தி என்னும் முக்கோணப் பராமரிப்பில் கோவையில் படித்துக் கொண்டிருந்தான்.பேய்க்கதைகள் சொல்வதில் கைதேர்ந்தவன். கையில் மண்டை ஓடு பொறித்த மோதிரம் அணிந்திருப்பான். ஆனால் பேய்க்கதைகளை அவன்தான் சொல்ல வேண்டும்.நாங்கள் சொன்னால் பயந்து கொள்வான்.தனக்கு மட்டும் கெட்டகனவுகள் வராது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.ஏனென்றால்  ஆலத்தூர் ஹனுமானிடம் கெட்ட கனவு வந்தால் வாலை ஆட்டி எழுப்புமாறு பிரார்த்திக்கும் சுலோகத்தை அவகுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்கள்.மூன்று பபிள்கம்கள் வாங்கிக் கொடுத்ததால் அவன் எனக்கும் அந்த சுலோகத்தைக் கற்றுக் கொடுத்திருந்தான்.

"ஆலத்தூர் ஹனுமானே! பேடிச் சொப்னம் காணரதே
  பேடிச் சொப்னம் கண்டாலே,வாலை ஆட்டி உணர்த்துதுதே "
என்பது போல என்னவோ வரும்.அப்போது கிரிக்கெட்டில் பிஷன்சிங் பேடி என்றொருவர் புகழுடன் இருந்தார்.மற்ற பையன்கள்,"பேடி சொப்னம் கண்டால் உங்களை ஏன் எழுப்பணும்?அனுமாரைக் குழப்பாதீங்கடா" என்று எங்கள் இருவரையும் கிண்டல் செய்வார்கள்.

இப்போதெல்லாம் கட்டிடங்களும் வாகன இரைச்சல்களும் பெருகிவிட்டன.பம்பை செண்டைகள் கோயிலில் ஒலிக்கின்றனவே தவிர எங்கள் வீட்டருகே கேட்பதில்லை.
சஜ்ஜி என்கிற சஞ்சீவ், ஓரிரு வருடங்கள் முன்புவரை சஞ்சீவ் பத்மன் என்ற பெயரில் சுயமுன்னேற்ற வகுப்புகள் நடத்தி வந்தான்.இப்போது அரபுநாட்டில் எங்கேயோ பணிபுரிவதாகக் கேள்வி.
சஞ்சீவ் பத்மன்

அந்தப் பழைய ஞாபகங்களுடன் தன்வந்த்ரி கோவில் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.பதினைந்து நிமிடங்கள் பிடித்தன.கால நடையில் ஓட்டம் நிதானப்பட்டு நடைக்கு வந்துள்ளது. ஆனால் ஆரிய வைத்திய சாலை நோக்கிய அந்த நடை,புதிய ஓட்டம் ஒன்றுக்கு வித்திடும் என்று பட்சி சொல்லியது.

தன்வந்தரி  கோவிலில் கிரமப்படி பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.கேரள பாணி கோவில்களுக்கே உரிய மயக்கும் அதிர்வுகள்.ஆலயத்தை ஒட்டிய அமைதியான சூழலில் சிகிச்சை மையமும் அமைந்திருந்தது.
தரிசனம் முடிந்து,நெற்றியில் சந்தனக் கீற்றும்,கைகளில் பிரசாதமுமாக வெளியே வந்தபோது எதிரே டாக்டர் லஷ்மி வேகவேகமாக வந்து கொண்டிருந்தார்.அவர் மருத்துவரல்ல.ஆனால் மருத்துவ உலகில் ஓர் அதிசயம் நிகழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் கனவோடும் களத்தில் நிற்பவர்.
முனைவர் லஷ்மி
சில ஆண் குழந்தைகளைத் தாக்கும் தசைச்சிதைவு எனும் கொடுமையான நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிகப்படவிலை.நோய்க்கான அறிகுறிகள் பிஞ்சு வயதில் தெரியத் தொடங்கி,குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கி பதின் வயதுகளில் உயிரிழக்கிறார்கள்.அத்தகைய குழந்தைகளின் சிரமம் குறைக்கும் ஆதரவு மையம் நடத்துவதோடு,தம்பதிகளுக்குப் பரிசோதனை நடத்தி வருமுன் காக்கும் பணியில் ஊக்கமுடன் இறங்கி செயலாற்றுபவர் லஷ்மி.

சிகிச்சை மையத்தில் ஆறாம் எண் அறைக்கதவைத் தட்டினோம்.கதவைத் திறந்த அம்மையாருக்கு எழுபது வயதிருக்கும்.சிவந்த பருமனான உருவம்.கழுத்தில் தங்கத்தில் கட்டிய ருத்ராட்ச மாலையில் ஓஷோவின் உருவம் பொறித்த டாலர் மின்னியது.கதவைத் திறந்தவர்,"கம் கம் லஷ்மி!"என்றவர் பரஸ்பர அறிமுகங்களுக்குப் பிறகு கேட்ட முதல் கேள்வி,"லஷ்மி! ஃபில்டர் காஃபி எவ்விட?"

"ஆஹா!இவரும் நம் கட்சிதான்!" என்று பட்சி சொல்லியது.இசைக்கவி ரமணன் அடிக்கடி சொல்வார், "முத்தையாவும் நானும் இரண்டு காபிக்கு நடுவில் ஒரு காவி சாப்பிடுவோம்" என்று.
திருமதி சகுந்தலா ஹோவால்தார்,மொரீஷியஸில் பெரும் கல்வி நிறுவனம் ஒன்றில் இணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர்.இப்போது அந்த நிறுவனம் திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகிவிட்டது.அவருக்குப் பூர்வீகம் கேரளா.ஒரு வாசகம் என்னை நோக்கிச் சொல்லப்பட்டால், "அல்லே மோனே" என்றும்,லஷ்மியை நோக்கிச் சொல்லப்பட்டால் "அல்லே மோளே" என்றும்,பொதுவாகச் சொல்லப்பட்டால் "அல்லேம்மா" என்றும் முடிப்பார்.

Roses are Ashes,Ashes are Roses என்ற அவரின் நூலை மொழிபெயர்க்க ஒப்புக் கொண்டேன்.பெரும்பாலும் தன்னுணர்வுக் கவிதைகள்.தன் தந்தையின் ஞாபகங்களையும் தாயின் ஞாபகங்களையும் கவித்துவமாகப் பேசுகிற பதிவுகள்.சின்ன வயதிலேயே கணவனை இழந்த ஓர் இளம்பெண்ணுக்கு எழுதிய கவிதைகள்,யுத்தம் பற்றிய கவிதைகள்.
அடுத்த சந்திப்பிலேயே   சில கவிதைகளை மொழிபெயர்த்து முடித்தோம். முன்னதாக அவருடைய செறிவான முன்னுரையை மொழிபெயர்த்தேன்.

"வார்த்தைகளுக்கும் மௌனத்திற்கும் நடுவே பெரும்பனித்திரளாய் வியாபித்திருக்கும் மௌனத்தை,வாசிக்கும் உங்களுக்கு உணர்த்திட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
எட்ட முடியாததும்,விளக்க முடியாததுமான பேருண்மைகள் பின்புலத்திலிருக்க,எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் இருக்கும் உயரங்களை-ஆழங்களை-உன்னதங்களை-அடர்த்திகளை சுட்டும் கைகாட்டி மரங்களாய் வார்த்தைகள்
எதார்த்தம்,தன் இருப்பினை வார்த்தைகளால் உறுமிக் காட்டுகிறது.சீரற்ற மிருகச் சூழலில்,மனிதராய் இருப்பது கூட முரணானதுதான். என்றாலும்,மனித விழிப்புணர்வின் ஒரு பகுதியாகத் திகழும் அடர்த்தியான மௌனத்தின் தெய்வீகத் தந்திகளை மீட்டிட,வார்த்தைகள் முயலத்தான் செய்கின்றன.
இந்தக் கவிதைகள்,வார்த்தைகளையும் மௌனத்தையும் பற்றியவை."

ஒவ்வொரு முறை சந்திக்கச் செல்லும்போதும் சக நோயாளிகள் யாரேனும் ஒருவரின் அறையிலிருந்து வெளியே வருவார் அம்மையார்.அல்லது அடுத்த அறையிலிருக்கும் ஜெர்மானியருக்கு தேநீர் தயாரித்துக் கொண்டிருப்பார்.மொழிபெயர்ப்பு பணி முடிந்ததும் மொரீஷியஸில் வெளியீட்டு விழா வைத்துக் கொள்ளலாம் என்பது அவருடைய திட்டம்.அடுத்தாற்போல் அவர் சொன்ன வார்த்தைகள்தான் அவர் எவ்வளவு வெள்ளந்தியானவர் என்பதை உணர்த்திற்று.

"மொரீஷியசுக்கு நீங்க டிக்கெட் எடுத்தா மதி. பின்னே என்ட கெஸ்டாயிட்டு ஸ்டே செய்யலாம்.அல்லே மோனே!"!எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. "அம்மணி !  நான் எந்த நாட்டையும் சொந்தச் செலவில் பார்ப்பதில்லைஅம்மணி' என்று மனதுக்குள்ளேயே வில்லத்தனமாய் சொல்லிக் கொண்டேன். முதன்முதலாய் போன குவைத்திலிருந்து ,அபுதாபி,அமெரிக்கா,பாரீஸ்,சுவிட்சர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர்,என்று பல நாடுகளுக்கும்,
விழா அமைப்பாளர்களின் அழைப்பிலும்,அன்பிலும்,செலவிலும்தானே போய்வந்து கொண்டிருக்கிறேன்.

"சகுந்தலா அம்மா கிடக்கிறார்! மொரீஷியசுக்கும் நீ அப்படித்தான் போகப்போகிறாய்"என்று பட்சி சொல்லியது. அவர் ஊருக்குக் கிளம்பும்போது என் நூல்கள் சிலவற்றைப் பரிசளித்தேன்.ஊருக்குப் போய் ஓரிரு முறை பேசினார். பதிப்பு விபரங்கள் முடிவாகட்டும் என்று கொஞ்ச காலம் அவருடைய கவிதைகளை மொழிபெயர்க்கும் பணியை நிறுத்தி வைத்திருந்தேன்.

சில வாரங்கள் சென்றிருக்கும். மொரீஷியஸில் இருந்தோர் அழைப்பு வந்தது."நான் ஜீவன் பேசறேன்.ஒங்க புத்தகங்கள் பார்த்தேன். படிக்கவும் ஆரம்பிச்சுட்டேன்.ஒங்க பயோ டேட்டா அனுப்ப முடியுமா?"என்று கேட்டார். "இவர்தான்!இவர்தான்!" என்று பட்சி சொல்லியது.பட்சி சொல்லும் முன்பே இவரைப்பற்றி சகுந்தலா அம்மையார் சொல்லியிருக்கிறார். "அவிட ஜீவன் உண்டு. தமிழ் அசோசியேஷன்ட சேர்மன். வளர நல்ல பையன்" என்றார். அவருக்கு எழுபது வயதென்பதால் அறுபத்தொன்பதரை வயதுவரை எல்லோருமே பையன்தான்.எனவே அவரை இளைஞர் என்றெல்லாம் நான் கற்பனை செய்யவில்லை. குரலைக் கேட்டபோது என் வயதுக்காரர் என்று யூகிக்க முடிந்தது."அடேடே! இளைஞர்தான் போலிருக்கிறது" என்ற முடிவுக்கு நீங்களும் இப்போது வந்திருப்பீர்கள்.

பயோடேட்டா அனுப்பிவைத்தேன்.அவரிடமிருந்தொரு மின்னஞ்சல் அடுத்த சில நாட்களிலேயே வந்தது.அரசின் அரவணைப்புடன் இயங்கி வரும் மகாத்மா காந்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்க்கல்வித் துறை தலைவராகவும்,இணைப்பேராசிரியராகவும் விளங்குபவர் முனைவர் ஜீவேந்திரன் சீமான்.இவர் மொரீஷியஸ் தமிழ் அமைப்புகளில் முக்கியப் பங்கு வகிப்பதோடு "தமிழ் பேசுவோர் ஒன்றியம்" என்னும் அமைப்பின் தலைவராகவும் விளங்குகிறார்.மிக விரைவிலேயே மகாத்மா காந்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் திருவள்ளுவர் திருநாள் உரை நிகழ்த்த முறையான அழைப்பும் மின்னஞ்சல் வழி வந்தது. கூடவே இன்னும் சில நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தார். 

அவர் பல வகைகளில் என்னைப்போலத்தான் என்பது புரிந்தது. நான் நெருங்கிய நண்பர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பதென்றால் தேதியை சொல்லிவிட்டு மேலதிக விபரங்களை மெதுவாகச் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டு விடுவேன். குறிப்பாக அதிகம் பாதிக்கப்படுபவர் இசைக்கவி ரமணன்தான்."தேதியை முதல்ல சொல்லீடுவீங்க. என்ன பண்ணனும்னு கேட்டா ,பழைய தமிழ் சினிமா வில்லன் மாதிரி 'பல்லாவரம் பாலத்துக்குக் கிழே வந்து ஃபோன் பண்ணு'ன்னுதானே சொல்வீங்க" என்பார்.
பொங்கலுக்கு மறுநாள் அதிகாலை மும்பையிலிருந்து விமானம். பொங்கலன்று மும்பை சென்று சேர்ந்த பிறகு மொரீஷியசுக்கான பயணச்சீட்டு மின்னஞ்சலில் சுடச்சுட-அல்ல- கொதிக்கக் கொதிக்க வந்து சேர்ந்தது.மாட்டுப் பொங்கலன்று பிரம்ம முகூர்த்தத்தில் மும்பை சர்வதேச விமான முனையத்தில் சென்று இறங்கினேன்.நான்கு நாட்களுக்கு முன்னர்தான் பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தாராம்."இதையாவது திறந்தாரே"என்று உள்ளே நுழைந்தால் அதிகாலை மூன்று மணிக்கே பங்கு வர்த்தக நிறுவனம்போல் பரபரப்பாக இருந்தது.போதிய அளவு விசாலமாக இல்லாததால் பயணப்பதிவுக்கான பயணிகள் வரிசை ஆதியும் அந்தமும் இல்லாமல் நீண்டு கிடந்ததுடன் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தும் கிடந்தன.

உள்ளே நுழைந்ததிலிருந்து ஓர் இளைஞர் எல்லோரையும் பார்த்து வலிய புன்னகைத்துக் கொண்டும் கட்டை விரலை உயர்த்திக் காட்டிக் கொண்டும், தானாகப் போய் போய் பேசிக்கொண்டும் இருந்தார்.இமிக்ரேஷன் படிவத்தை ஓடிப்போய் வாங்கிவந்து என்னிடம் தந்தார்.
அதை நான் வாங்கிக் கொண்டதற்காக அவரே எனக்கு நன்றியும் சொன்னார்."ஃபர்ஸ்ட் டைம் டு மொரீஷியஸ்?வெரிகுட் ப்ளேஸ்"என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தார்."இது சரியில்லையே"என்று பட்சி சொன்னது.

விஷயம் வேறொன்றுமில்லை.அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக அவரிடம் பயணச்சுமைகள். என்னிடம் இருந்தவை குறைவு. பாதியை என் பெயரில் பதிவு செய்துவிட்டால் அவர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வராது.ஆனால் அயல்நாட்டுப் பயணங்களில் அந்நியர் பயண உடமைகளை நம் பெயரில் பதிவு செய்வது கொஞ்சம் அபாயகரமானது.அவர்கள் போதைப்பொருள் கடத்தும் குருவியாக இருந்தால் நம்மைக் கருவியாகப் பயன்படுத்துவார்கள்.

"வேண்டாம்"என்றது பட்சி.எனக்குப் பின்னால் ஏராளமான சுமைகளுடன் வந்து கொண்டிருந்த தம்பதிகளைக் காட்டி "நாங்கள் ஒரே குடும்பம்" என்று ஒரே போடாகப் போட்டேன்.அவர் கண்களில் மின்னிய அவநம்பிக்கையைத் துடைக்க அந்தத் தம்பதிகளிடம் சகஜமாகப் பேசுவது போல் பாவனை செய்ய,அவர்கள் என்னைப் பார்த்து மிரளத் தொடங்கினார்கள்.
பயணப்பதிவு முடிந்து,குடியேற்றம்(குடியிறக்கம்?) கடந்து பாதுகாப்பு சோதனை பகுதியும் ஒண்டுக் குடித்தனம் போல்தான் இருந்தது.ஆனால் பாதுகாப்பு சோதனையைத் தாண்டியதுமே கண்ணெதிரே பரந்து விரிந்து கிடந்தது பூலோக சொர்க்கம்.விசாலமான வசீகரமான வண்ணமயமான வணிகக்கூடங்களும் நட்சத்திர உணவகக்கூடங்களும் ஜொலித்தன. ஆனால் போதிய கழிப்பறைகள் இல்லை.அல்லது கண்ணில் படவில்லை. காத்திருப்பு இருக்கைகளும் குறைவு.


 பிரம்மாண்டமானதொரு வணிக வளாகத்தில் பெரிய மனது பண்ணி விமானங்களை நிறுத்திக் கொள்ள ஓரமாய் யாரோ இடம் கொடுத்திருக்கும் இலட்சணத்தில்தான் இருக்கிறது மும்பை சர்வதேச முனையம்.சமீபகாலமாக இந்தியாவின் சில முக்கியமான விமான நிலையங்களில்
உள்ளூர் முனையம் பிரமாதமாகவும் வெளிநாட்டு முனையம் பரிதாபமாகவும் இருப்பதன் மர்மம் புரியவில்லை.

மொரீஷியசுக்கும் இந்தியாவுக்கும் ஒன்றரை மணிநேரம் வித்தியாசம்.நமது நேரப்படி காலை ஆறரை மணிக்குக் கிளம்பி,மொரீஷியஸ் நேரப்படி முற்பகல் பதினொன்றரை மணிக்கு சென்று சேரும் என அறிவித்தார்கள்.
வயர்ஃப்ரீ எம்பி த்ரீயில் மஹராஜபுரம் சந்தானம் பாடத்தொடங்க,கேட்டபடியே கண்ணயர்ந்தேன்
(தொடர்வோம்)