பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-4 (மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)


மொரீஷியஸ் பற்றி எழுதுகிற போது தலைப்பிலேயே பட்சியைக் கொண்டு வந்ததும் ஒருவகையில் பொருத்தமாகத்தான் இருக்கிறது.மொரீஷியஸின் சின்னமே டோடோ என்கிற பட்சிதான்.இந்த டோடோ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாகமொரீஷியஸின் பின்புலம் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.

மொரீஷியஸ் தீவு எரிமலையின் எச்சம்.அரிய வகை தாவரங்களும் பறவைகளும் மொரீஷியஸில் தோன்றின. அவற்றில் ஒன்றுதான் பழுப்புநிற டோடோ.வெவ்வேறு நாடுகளிலிருந்து அடிமைகளும் புலம் பெயர்ந்தோரும் மொரீஷியஸில் குடியேறினர்.

பதினாறாம் நூற்றாண்டில் டச்சு தேசத்தின் கிழக்கிந்திய கம்பெனி மொரீஷியஸில் காலூன்றியது.தொடர்ந்துகாலனிகளால் கைமாற்றப்பட்ட நாடு மொரீஷியஸ்.மொரீஷியஸின் வசீகர அழகு பற்றி வர்ணனைகளை வாரியிறைத்தும் கூட,டச்சு நாட்டுக்காரர்கள் தங்கள் ஆளுகையிலிருந்த மொரீஷியஸின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் அதிகம் கவனம் செலுத்தவில்லை.

டச்சு நாட்டுக்காரர்களின் வளர்ப்பு மிருகங்களால் பெரும் தொந்தரவுகள் ஏற்பட்டன. நாய்களும் பன்றிகளும் அதுவரை மொரீஷியஸில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த கால்நடைகளையும் மான்களையும் துன்புறுத்தின.
டச்சு நாட்டுக்காரர்களின் ஆக்கிரமிப்பு படிப்படியாக சுற்றுxச்சூழல் அழிவுக்குக் காரணமானது.அவர்கள் டோடோ பறவை பற்றி கிண்டலும் கேலியுமான குறிப்புகளையும் சித்திரங்களையும் பதிவு செய்திருந்தார்கள்.உடல் கனமும் குறைவான சிறகுகளும் கொண்டு மிக மெதுவாக நகர்கிற அசட்டுப் பறவை" என்பது அவர்களின் பதிவு.

டோடோ புறா இனத்தைச் சேர்ந்த பறவை .இலட்சக்கணகான ஆண்டுகளுக்கு முன்னர் மொரீஷியஸுக்கு வந்ததென்றும் அதனால் தன் அலகுகளில் பாறைகளையே சுமக்க வல்லதென்றும் சொல்லப்படுகிறது.
ஒரு பறவை பறப்பதற்கான அவசியம் அதற்கான அச்சுறுத்தல்களின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.அந்த வகையில் பாதுகாப்பான சூழலில் பறக்கவே தேவையில்லாமல் டோடோக்கள் வளர்ந்தன. சாஸ்திரத்துக்காக,குறைந்தபட்ச சிறகுகளோடும் கூடுதல் எடையோடும் வளர்ந்து வந்த பறவை டோடோ.இந்தப் பெயரே டச்சுக்காரர்களால் சூட்டப்பட்டதென்றும்  போர்ச்சுகீசிய மொழியில் அதற்கு "அசடு" என்று பொருளென்றும் சொல்லப்படுக்கிறது.


புற்களாலும் பனையோலைகளாலும் கூடுகட்டும் டோடோ, உணவு ஏராளமாகக் கிடைக்கும்  காலமான மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும்."ஒண்ணே ஒண்ணு,கண்ணே கண்ணு "என ஒரேயொரு முட்டை வைக்கும். முட்டைக்கருகே ஒரு வெள்ளைக் கல்லையும் வைக்குமாம். (கல்லுமுட்டை என்ற சொல் இப்படித்தான் வந்திருக்குமோ)இதற்குக் காரணம் பறவைகள் வாஸ்து சாஸ்திரமோ பட்சிகள் ராசிக்கல் ஜோசியமோ அல்ல.

முட்டைகளைக் காப்பாற்றுவதற்கான உத்தி.அடை காப்பதில் ஆண்டோடோவுக்கும் பெண் டோடோவுக்கும் சமத்துவம் உண்டு.இப்படி கூட்டி வாழ்விலும் நாட்டு வாழ்விலும் அமைதியை மட்டுமே அறிந்திருந்த டோடோ திடீரென்று வந்து சேர்ந்த மனிதர்களால் இரக்கமின்றி வேட்டையாடப்பட்டன. கடல் மாலுமிகள் டோடோ உப்புக் கண்டத்தை சப்புக் கொட்டி சாப்பிடத் தொடங்கினர். இதன் விளைவாக 17ஆம் நூற்றாண்டுக்குள் டோடோ பறவையினமே முற்றாக அழிந்து போனது.

ஆனால் 1601,1602 ஆண்டுகளில் வரையப்பட்ட ஓவியங்களில் டோடோ ஒல்லியாக,நீண்ட கால்கள் கொண்ட பறவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.இந்த ஓவியங்கள் 1991ல் கண்டெடுக்கப்பட்டன.டச்சு தேசத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு தேசமும் பின்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் மொரீஷியஸை கைப்பற்றியது சுவாரசியமான வரலாறு.பிரஞ்சின் பிடியிலிருந்த மொரீஷியஸை 1809 ஆம் ஆண்டிலிருந்தே பிரிட்டிஷார் திட்டம் போட்டு வட்டம் போடத் தொடங்கினர்.

1810 டிசம்பரில் பிரிட்டிஷ் ஊடுருவலைத் தடுக்க முயன்ற பிரெஞ்சுப் படை தோல்வியைத் தழுவியது.முன்னதாக நவம்பரிலேயே 15,000 தரைப்படையினர்,20 போர்க்கப்பல்களுடன் பிரிட்டிஷ் படை மொரீஷியஸுக்குள் நுழைந்தது.அடர்ந்த வனப்பகுதியில் முதல் ஐந்து மைல்களைக் கடந்து வந்தது பிரிட்டிஷ் படை .ஆங்காங்கே பிரெஞ்சுப் படைகளின் பலவீனமான எதிர்ப்புகள்.

டிசம்பர் 2ஆம் பிரெஞ்சுப் படை அனுப்பிய சமாதான உடன்படிக்கையைபிரிட்டிஷ் படை நிராகரித்தது.டிசம்பர் 3ஆம் தேதி தன் ஆளுகைக்குள் மொரீஷியஸைக் கொண்டு வந்ததன் மூலம் இந்தியப் பெருங்கடலின் 73,426,000 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கடல்பரப்பு பிரிட்டிஷ் ஆளுகைக்குள் வந்தது.

காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதந்திர வெளிச்சம் விழத் தொடங்கியது.ஆனால் மொரீஷியஸில் 1936 போராட்டம் இயக்கமாக வடிவம் பெற்று வலுப்பெற்றது.1942 ல் புதிய ஆளுநராகிய மெக்கன்ஸி கென்னடி, ஆட்சியாளர்கள் தேர்வுக்கான புதிய சட்டத்தை முன்வைத்தார்.32 பேர்களில் 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். எட்டு பேர் நியமிக்கப்பட்ட அதிகாரிகள். எட்டுப்பேர் சமூகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள். தேர்தலில் நிற்பவர்களுக்கு ரூ.200/ க்கு அதிகமான சொத்தும் ஆறாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழும் இருக்க வேண்டும்.இது பலத்த விவாதத்தை எழுப்பியது.

சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த தொழிலாளர் அமைப்பின் முன்னோடிகளான ஸீவோஸாகூர் ராம்கூலம்,தமிழராகிய ரங்கநாதன் ஸ்ரீநிவாசன் போன்றோர்குறிப்பிடத்தக்கவர்கள்.
மொரீஷியஸின் சுதந்திரத்திற்கு என் வயது. அதுவும் 1968 ல்தான் பிறந்தது.சுதந்திரம் பெற்ற மொரீஷியஸின் முதல் பிரதமராக ஸீவோஸாகூர் ராம்கூலம் பொறுப்பேற்றார். அடுத்து பிரதமரானவர்தான் கடந்த அத்தியாயத்தில் நாம் சந்தித்த இப்போதைய பிரதமர்.

( தொடர்வோம்)