அந்தச் சிறுமி

அங்கே நிற்கிறாள் அந்தச் சிறுமி
அடமாய் அடம்பிடித்து
"இங்கே வாயேன்"என்றே திசைகள்
எல்லாம் குரல்கொடுத்து
எங்கே என்ன நடக்கிற தென்றே
எல்லாம் அறிந்தவளாம்
பொங்கும் குறும்பை மறைத்தபடி ஒரு
மூலையில் ஒளிந்தவளாம்


பத்துக் கைகள் போதாதாம் அவள்
"பரபர" சேட்டைக்கு
சித்திர வேலைப் பாடுகளாம் அந்த
சிறுமியின் கோட்டைக்கு
தத்துவப் பாம்பின் தலையின்மேல் அவள்
தாண்டவக் கூத்துக்கு
சித்தர்கள் கைகளைத் தட்டினர் நந்தியின்
மத்தளப் பாட்டுக்கு


ஒளிரும் தீபங்கள் எல்லாம் அவளிடம்
ஒவ்வொரு கதைகூறும்
புலரும் விடியலின் பூக்கள் அவளிடம்
புன்னகை கடன்வாங்கும்
நிலவின் பூரணம் நிகழ்கையில் வருவாள்
நயமாய் அசைந்தாடி
வலமோ இடமோ தெரியா லஹரியில்
விழுபவர் பலகோடி


உருட்டிய புளியும் தேங்காய் பாகும்
உண்ணத் தருவாளாம்
திரட்டிய வினைகள் மிரட்டிய நொடியில்
துணையாய் வருவாளாம்
மருட்டிய துயரை விரட்டும் சூலினி
முன்னே தெரிவாளாம்
வெருட்டும் வாழ்வின் கசப்புகள் தீர
வேப்பிலை கொடுப்பாளாம்

கயலே போன்ற விழிகள் மூன்றிலும்
கனலே ஏந்துகிறாள்
வெயிலை வீசி மழையாய்ப் பேசி
வித்தைகள் காட்டுகிறாள்
உயிருன் இருளில் ஒருதுளி சுடரை
உத்தமி ஏற்றுகிறாள்
பைரவி என்னும் பேர்கொண்ட சிறுமி
 பவவினை மாற்றுகிறாள்