சொல்லும் நன்றி போதாது


பிறந்ததினம் என்பதொரு நினைவூட்டல்தான்
பிறந்தபயன் என்னவென்று தேடச் சொல்லும்
பிறந்ததினம் என்பதுமே உணர்வூட்டல்தான்
பிரியமுள்ள இதயங்கள் வாழ்த்துச் சொல்லும்
திறந்தமனம் கொண்டவர்கள் நல்கும் வாழ்த்து
தினம்புதிதாய் கனவுகளை வளர்க்கச் செய்யும்
சிறந்தபல இலக்குகளை வகுக்கச் செய்யும்
சிலிர்ப்போடு வேலைகளைத் தொடரச் செய்யும்

வான்பிறந்த தேதியினை அறிந்தாரில்லை
விரிகடலும் வந்ததினம் உணர்ந்தாரில்லை
கான்பிறந்த நாளெதுவோ?அறிந்தாரில்லை
காலத்தின் பேரேடோ கொஞ்சமில்லை
நான்பிறந்த சேதியொரு துகளின் தூசு
நேசமுள்ளோர் வாழ்த்துவதோ அன்பின் ஊட்டம்
ஏன்பிறந்தோம் எனும்நோக்கம் தேடிச் செல்ல
இந்ததினம் கைகொடுக்கும் உந்தித் தள்ளும்

உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நல்ல
உவகையுடன் வாழ்த்தியவர் தமக்கு நன்றி
உள்பெட்டி தனில்வந்து வாழ்த்துச் சொன்ன
உலகத்து நட்புகளே உமக்கு நன்றி
தள்ளிநின்று பார்த்தவரும் கேள்விப்பட்டு
தாமாக வாழ்த்தவந்தார் அவர்க்கும் நன்றி
கள்ளமிலா உறவுகளைப் பெற்றேன் என்ற
களிப்புதனைப் பரிசளித்தீர் மிக்க நன்றி