(பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் நலம்பெற வேண்டி...)
வேதபுரப் பறவைகளும் வந்ததிலே கூடுகட்டும்
நல்லால மரமொன்று நெடுநாளாய் இருக்கிறது
சொல்லாத வேதமெல்லாம் சொன்னபடி நிற்கிறது
கல்லால மரநிழலில் கால்மடித்த உபதேசி
நில்லாமல் தொடங்கிவைத்த நெடுமரபின் நீட்சியது;
வேதபுரப் பறவைகளும் வந்ததிலே கூடுகட்டும்
சாதகப் பட்சிகளும் சங்கீதப் பாட்டிசைக்கும்
ஆதாரம் வேரென்றே அறிந்துகொண்ட விழுதுகளும்
பாதார விந்தம்தொழ பூமியினைத் தொட்டிருக்கும்
தென்றலை வடிகட்டும்; தெளிநிலவின் பாலருந்தும்;
மன்றங்கள், சபைகளுக்கு மரநிழலே மடிவிரிக்கும்
என்ன வயதானாலும் இந்தமரம் இறைவன்வரம்
நின்றொளிர வேண்டுமென நிலமிதனை வேண்டிநிற்கும்
வேர்சிறிதே அசைந்தாலும் வலிகொஞ்சம் தெரிந்தாலும்
தேர்போல நிற்பதுவே திசைகளுக்குப் பரவசமாம்;
ஊரொதுங்க ஒருநிழலாய், உயர்ஞான சாகைகளின்
சீர்விளங்க ஊன்றிநிற்கும் ஶ்ரீபாதம் கைதொழுவோம்