Saturday, January 23, 2010

இப்படித்தான் ஆரம்பம்-3

ரொட்டிக்கடை வீதி கலகலத்துக் கொண்டிருந்தது.அன்று கண்ணதாசன் விழா. ரொட்டிக்கடை வீதி தெருமுனையிலேயே மாலைநிகழ்ச்சி. தெருவெங்கும் டியூப்லைட் கட்டி,சீரியல் பல்ப் போட்டு காலையிலிருந்தே ஏற்பாடுகள் களைகட்டிக் கொண்டிருந்தன.
காலை பத்து மணிக்கு முதல் நிகழ்ச்சியாக மைக்செட்காரருடன் தகராறு.ஒலிபெருக்கிகளைக் கட்டியதுமே,ஒலிப்பரிசோதனைக்காக முதல் கேசட்டைப்போட்டார்."தொட்டால் பூ மலரும்' என்று பாடல் ஒலித்ததும்,வீதியின் வெவ்வேறு இடங்களில் தோரனம் கட்டிக்கொண்டிருந்த பேரவை நண்பர்கள் சொல்லி வைத்தாற்போல மைக்செட்காரரிடம் ஓடினோம்."யோவ்! யோவ்! அது கண்ணதாசன் பாட்டு இல்லேய்யா"என்று நாங்கல் கத்த,"டெஸ்டிங்குக்காக தாங்க போட்டேன்"
என்று சமாதானம் சொல்ல முயன்றார் அவர்.
"இன்னைக்கு வேற யார் பாட்டையும் போடக்கூடாது"என்று நாங்கள் போட்ட சத்தத்தில் ஆடிப்போனார் அவர்.விழா முடிந்தபோது ஜன கண மண கூடப் போடவில்லை பாவம்.அந்த
வீதியோரக்கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி கவியரங்கம்.ஏற்பாடு நாந்தான்.
கவிஞர் கோமகன் கவியரங்கத் தலைவர். .

கவியரசு கண்ணதாசன் என்கிற பொதுத்தலைப்பில்
மண்ணுலகில்,பெண்ணுலகில்.பண்ணுலகில்,விண்ணுலகில் என்று நான்கு தலைப்புகள் தந்திருந்தோம்.கடைசித் தலைப்பு எனக்கு.பங்கேற்கும் கவிஞர்களின் பெயர்கள்
தனியாக அமைக்கப்பட்டிருந்தன.

இறையன்பு சின்னக்கண்ணதாசன்
முத்தையா அரசு பரமேசுவரன்
என்று, பட்டிமண்டபத்தில் போடுவதுபோல் போட்டிருந்தார்கள்.நான்கு மணிக்கே நான் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன்.பட்டு ஜிப்பா குர்தா என்று சூழலுக்குப் பொருந்தாத கெட்டப்பில் வீதியெங்கும் நான் அலைந்து திரிந்ததைப் பார்க்க "சாளரம் தோறும் தாமரை பூத்தன".அப்படியொரு வேடிக்கைக்காட்சியை அந்த வீதி அதுவரை கண்டிருக்கவில்லை போலும்.

கவியரங்கத்தலைவர் கோமகன் என்று ஞாபகம் இருக்கிறது.விழாத்தலைவர் வேறு யாரோ. அவர் வராத காரணத்தால் அருகில் குடியிருந்த தமிழாசிரியர் ஒருவரை அழைத்து வந்தோம்.அவர் அருகில் குடியிருப்பவர் மட்டுமல்ல.சாயங்காலமானால் கோப்பையிலே குடியிருப்பவர்.முழுபோதையில் மேடைக்கு வந்தார்.கண்ணதாசனைப்பற்றி பத்து நிமிடங்கள்
பேசிவிட்டு அழைப்பிதழைப் பார்த்து அறிவித்தார்."இன்று நடைபெறவுள்ள கவியரங்கில்
இறையன்பு என்பவர்,சின்னக்கண்ணதாசன் என்ற தலைப்பிலும்,முத்தையா என்பவர்,அரசு பரமேசுவரன் என்ற தலைப்பிலும் கவிதை வாசிப்பார்கள்' .
கோமகனின் ஆவேசமான கவிதைகளில் அவர் சார்ந்திருக்கும் கம்யூனிசக் கொள்கையின் அனல் வீசியது.
"சாகக் கிடக்கையிலும்-இந்த
சாண்டில்யக் கிழவனுக்கு
மோகத்தைப் பற்றித்தான்
நாவல் வருகிறதாம்
அவன் வீட்டில்
மூன்று வேளையும்
முருங்கைக்காய் சாம்பாரோ"
என்ற அவரின் வரிகள் நினைவிலிருக்கின்றன.

"கண்ணதாசனைப்போல் தண்ணியடித்தால்
கவிதைவரும் என்றார்கள்!
நானும் அடித்தேன்!
வந்தது...
கவிதையல்ல வாந்தி"
என்று இறையன்பு பாடியதாக ஞாபகம்.

விண்ணுலகில் கண்ணதாசன் என்று நான் பாடிய கவிதை ,என்னை உட்பட யாருக்குமே
புரியவில்லை.கண்ணதாசன் விண்ணுலகில் எப்படியிருப்பார் என்று கற்பனையில் சொன்ன சந்தக்கவிதை அது.

விழாவுக்குப்பிறகு புதிதாக உறுப்பினர்கள் சேர்ந்தார்கள்.பேரவை நண்பர்கள் வந்து உட்கார்ந்திருப்பது ஓவிய வேலைகளுக்கு இடைஞ்சல் என்று யார் நினைத்தார்களோ இல்லையோ,ரவியின் பங்குதாரரும் சுமாரான ஒவியருமான இந்திரஜித்துக்கு அந்த எண்ணம் இருந்தது.

பேரவைக்காரர்களிடம் அவசரப்பட்டு சண்டை போட்டுவிடுவார் இந்திரஜித்.ஆனால் பேரவை நண்பர்களால் அவருக்குக் காரியம் ஆக வேண்டியும் இருந்தது.ரவியின் ஒவியக் கூடத்தில்பெரிய பெரிய போர்டுகளை எழுதுவார்கள்.அந்த போர்டுகளை ஸ்கூட்டரில் வைத்து எடுத்து வரும்போது பின்னால் அமர்ந்து பிடித்துக்கொள்ள பேரவை ஆட்களின் தயவு அவருக்குத் தேவையாயிருந்தது.

"ஹலோ! போயிட்டு வந்துடலாம் வாங்க!'என்று கெஞ்சலும் மிரட்டலும் கலந்த தொனியில் அழைப்பார் இந்திரஜித்.இதற்காகவே சண்டை போட்டவர்களிடம் வலிய சென்று சமாதானம் பேசுவார் .அதற்கு அவர் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு வந்த சமாதான வசனம்,கேட்பவரை குலைநடுங்கச் செய்யும்."சரி விடுங்க பாஸ்! இப்பொ சங்கடமாயிடுச்சு!
நாளைக்கு நீங்க டெத் ஆயிட்டா நான் வந்து அழுவேன்!நான் டெத் ஆயிட்டா நீங்க வந்து அழுவிங்க!"
இதற்கு பயந்து கொண்டே இந்திரஜித் சமாதானம் பேசும்முன்னால் தாமாகவே வலியப்போய் பேசிவிடுவார்கள் பேரவை நண்பர்கள். (சில வருடங்கள் கழித்து இந்திரஜித் சாலை விபத்தில் இறந்தார் என்று பின்னால் எங்கேயோ கேள்விப்பட்டேன்.)

பிறந்தநாள் விழாவுக்குப்பின்னர் அதற்குப்பின்னால் அக்டோபரில் கண்ணதாசன் நினைவுவிழா.250 ரூபாய் வசூலாகியிருந்தது.கவியரங்கம் வேண்டாம் என்ற தீர்மானத்தை நானே முன்மொழிந்தேன்.கருத்தரங்கமும் பட்டிமண்டபமும் நடத்த முடிவானது.
கருத்தரங்கத் தலைவருக்கு பத்து ரூபாய் தர பட்ஜெட்டில் இடமிருந்தது.யாரை அழைக்கலாம் என்று எங்கள் பள்ளித் தமிழாசிரியரும்,கம்பன் கழகச் செயலாளருமான புலவர்,க.மீ.வெங்கடேசன் அவர்களிடம் கேட்டபோது அவருக்குத் தெரிந்த தமிழாசிரியர் ஒருவர் பெயரைச் சொன்னார்."நீங்க பத்து ரூபாய் கொடுங்க! அதை உங்க மன்ற வளர்ச்சி நிதிக்காக
தந்துடச் சொல்றேன்.அவரையே தலைவராப் போடுங்க"
.
ஆசிரியர் சொன்ன யோசனையில் அகமகிழந்து,"அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே'
என்று அவரையே தலைவராகப் போட்டோம்.விழாநாளில்,பள்ளியில் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் மகனுடன் வந்துவிட்டார் விழாத்தலைவர்.
மன்றப்பொருளாளருக்கு ஒரு யோசனை.பணம்கொடுத்தால் திருப்பித் தரப்போகிறார்.நாகரீகத்திற்காவது நாம் மறுக்க வேண்டும்.அவர் வேண்டாமென்பார்.மீண்டும் வற்புறுத்த வேண்டும்.எதற்கிந்த தர்மசங்கடம்..பணத்தையே கொடுக்காமல் பெரிய கும்பிடாகப்போட்டு வழியனுப்பினோம்.

சில நாட்களுக்குப் பிறகுதான் விஷயம் தெரிந்தது.நன்கொடையாகப் பத்து ரூபாயைத் தருகிற எங்கள் தமிழாசிரியரின் யோசனையைவிழாத்தலைவர்தள்ளுபடி செய்துவிட்டார்.பத்துரூபாயை எதிர்பார்த்தே வந்திருக்கிறார்.நாங்கள்பணம் தராததால் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரமுள்ள வீட்டிற்கு மகனுடன் நடந்தே போயிருக்கிறார் பாவம்!!

இதற்கிடையில் பேரவையில் சில புதிய முகங்கள் பொறுப்பேற்றன.கருத்தரங்கத் தலைவரை கால்நடையாய் அனுப்பிய சோகவரலாறுகள் தொடராமல் இருக்க வேண்டுமென்றால் மன்ற
வளர்ச்சிநிதிக்காக நாடகம் போடுவதென்று முடிவானது.பாப்பநாயக்கன்பாளையத்தில் வீதிக்கொரு நாடகக்கலைஞர் இருப்பார்.அதே பகுதியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் திரைத்துறையில்
ஜெயித்த பிறகு பாப்பநாயக்கன் பாளையத்தில்வீட்டுக்கொரு நாடகக் கலைஞர் தோன்றத் தொடங்கினார்.

ஆனால் உள்ளூர்க்காரர்களை மட்டும் வைத்து நாடகம் நடத்தாமல் சினிமா நட்சத்திரம் ஒருவரை
அழைப்பது என்று முடிவானது.அப்போது பேரவையின் தலைவராக இருந்தவர் சென்னையிலிருந்து கோவைக்கு வந்தவர்.ரஜினிகாந்த்துடன் ரம் சாப்பிட்டதாகத் தொடங்கி,ரகம் ரகமாய் அனுபவக்கதைகளை அள்ளிவிடுவார்.தன்பெயருக்குப்பின்னால் இரண்டு எம்,ஏ.பட்டங்களைப் போட்டிருந்தார்.அவரை பேரவை ஏகமனதாக நம்பியது.இரண்டு எம்.ஏ.பட்டங்களுக்கான நான்கெழுத்துக்கள் நடுவே புள்ளிவைக்கக் கூடாது என்பது எங்களுக்கு அப்போது புரியவில்லை.

ஜெய்சங்கர் ,விஜயகுமார் இருவரில் யாரையாவது ஒப்பந்தம் செய்வதாய்ச்சொல்லி,அவரும் இன்னொரு நண்பரும் சென்னைக்கு ரயிலேறினார்கள்.நான்கு நாட்களுக்குப்பின் திரும்பியவர்கள்,"கண்டேன் சீதையை" என்று சொல்ல வேண்டியதுதானே!

சென்னை பல்லவனின் டவுன்பஸ் சீட்டுக்களில் 52 சீட்டுக்களை அள்ளி "எவ்வளவு அலைஞ்சுட்டு வந்திருக்கோம் பாருங்க"என்று செயற்குழுவின் முன் போட்டார்கள்.அலைந்து திரிந்து ,அவர்கள் நாடகத்திற்காக ஒப்பந்தம் செய்து வந்திருந்த நடிகர்......லூஸ்மோகன்!!

-தொடரும்

2 comments:

Vaa.Manikandan said...

உங்களின் வலைத்தளத்தை வாசிக்க வந்தேன்.உங்களின் படம் ஒட்டுமொத்த மனநிலையையும் மாற்றிவிட்டது. எதற்காக இத்தனை பெரிய நிழற்படம்?

marabin maindan said...

நல்ல கேள்விதான்.சிறிய படம் என்று நினைத்து போஸ்ட் செய்தேன்.பெரிதாக
போஸ்ட் ஆகிவிட்டது.எனக்கே புரியவில்லை...ஏன் இவ்வளவு பெரிய புகைப்படம் :-)