அந்த சதுரங்கம் முடிந்துவிட்டது
அவர்களின் பக்கம் விடிந்துவிட்டது

வெட்டுப்பட்ட காய்கள்,வழியில்
தட்டுப்பட்டதால் இந்தத் தகவல் தெரிந்தது

குறுக்கும் மறுக்குமாய் குதிரைகள்திரிந்தன
மதங்கொண்ட யானைகள் மிதித்து எறிந்தன
கட்ட ஒழுங்குகள் காப்பாற்றப்படாததால்
சட்ட ஒழுங்கு சிதைந்து போனது

அந்த சதுரங்கம் முடிந்துவிட்டது
அவர்களின் பக்கம் விடிந்துவிட்டது

தளபதி ராஜா ராணிக் காய்களின்
தலைகளைப் பார்த்ததாய் தகவல் கிடைத்தது
பலகை முழுவதும் படர்ந்த குருதியை
உலக நாசிகள் முகர்ந்துபார்த்தன

முன்படை வெட்ட முனைப்புடன் சென்றவர்
தன்படை வெட்டால் தரையில் விழுந்தனர்
பின்படை ஒன்று பகடைகள் உருட்டி
நன்படை சாய்த்ததாய் நம்பகத் தகவல்
அந்த சதுரங்கம் முடிந்துவிட்டது
அவர்களின் பக்கம் விடிந்துவிட்டது