மாநிலந் தழுவிய இயக்கமொன்று கண்ணதாசன் பெயரில் உருவாக வேண்டுமென்று கனவு கண்டவர்களில் முக்கியமானவர்,மதுரையைச் சேர்ந்த திரு.இரா.சொக்கலிங்கம்."மனிதத் தேனீ'"என்பது இவருக்குத் தரப்பட்ட பட்டப்பெயர்.மிகவும் சுறுசுறுப்பானவர்.மதுரை கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர்.1994 என்று ஞாபகம்.திரு.தமிழருவி மணியனின் "கம்பன் காட்டும் இந்திரசித்தன்" நூல் வெளியீட்டு விழா முடிந்து இரவு பத்து மணியளவில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.பீளமேடு பேரவை நண்பர்கள் வந்திருந்தார்கள்.
கண்ணதாசனை மையமாகக் கொண்டு தொடங்கப்படுவது,நிச்சயம் இலக்கிய அமைப்பாகத்தான் இருக்க முடியும்.சமூக மாற்றங்களை முன்னெடுக்கும் அமைப்பாகவோ,அரசியல் அமைப்பாகவோ உருவாக வாய்ப்பில்லை.கம்பன் கழகம் போல் இந்த அமைப்பு செயல்படும்.இதற்கு மாநிலந்தழுவிய நிரல் எதுவுமில்லை என்று தோன்றியது.எனவே இந்த ஆலோசனையில் நான் அதிக ஆர்வம் காட்டவில்லை.இரவு 12 மணியளவில் இந்தக் கூட்டம் முடிவடைந்தது.
கண்ணதாசனுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள அபரிமிதமான செல்வாக்கையே களமாக்கிக் கொண்டால் போதும்.ஓரிரு ஆண்டுகளுக்கு முன் கோலலலம்பூரில் கண்ணதாசன் அறவாரியத்தின் செயலாளர் கரு.கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்,"இங்கனக்குள்ள கண்ணதாசன் விழா நடக்குதுன்னு ஒரு தட்டி எழுதி வைச்சாக்கூட போதும்ணே!சாயங்காலம் ஒரு ஐந்நூறு பேரு வந்திடுவாஹ"என்று.உண்மைதான்.
கண்ணதாசனைக் கொண்டாடுவது மிக இயல்பான எளிதான விஷயம்.பீளமேடு கண்ணதசன் பேரவை நண்பர்கள் விழா தொடங்கும்போது "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே"என்ற பாடலைப் பாடுவார்கள்.
தங்களுக்குப் பாடத் தெரியாதே என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.பாடலின் இறுதியில் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே !எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்" என்று முடிக்க வேண்டும்.அதுதான் அவர்களுக்கு முக்கியம்.அப்போதெல்லாம் திரைப்பாடல்களைப் பட்டிமண்டபங்களில் பாடுபவர்கள் மிகக் குறைவு.பேரா.சரசுவதி ராமநாதன்,புலவர்.கோ.சாரங்கபாணி.திருமதி.சி.எஸ்.விசாலாட்சி,என்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.அவர்களும் நான்கு வரிகளைப் பாடிவிட்டு விஷயத்திற்கு வந்து விடுவார்கள்.
அந்தத் தாக்கத்தில் நான்கூட கண்ணதாசன் பட்டிமன்றம் ஒன்றில் நான்கு வரிகள் பாடிக் காண்பித்தேன்.அடுத்து கோவையைச் சேர்ந்த கவிஞர் உமாமகேஸ்வரி பேச வந்தார்.எடுத்த எடுப்பிலேயே மிக அமைதியாக ஆரம்பித்தார்.அப்போதே எனக்கு சந்தேகம்."நான் பல மேடைகளில் மரபின்மைந்தன் பேசிக் கேட்டிருக்கிறேன்.இன்றுதான் பாடிக் கேட்கிறேன்." சில விநாடிகள் அமைதி காத்துவிட்டு அடுத்த வரியைச் சொன்னார்.."இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்'. இப்படி ஆளுக்காள் அநியாயத்திற்கு உண்மை சொல்லத் தொடங்கிய பிறகு நான் மேடைகளில் பாடிக்காட்டும் முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் பற்றியும் நான் மேடைகளில் சொல்வதுண்டு.பட்டுப்போன மூங்கில்தான் புல்லாங்குழல் ஆகும்.புல்லாங்குழல்தான் புருஷோத்தமனைப் பாடும்.ஆனால் கவிஞரோ 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்'என்று எழுதுகிறார்.ஒவ்வொரு மூங்கிலுக்கும் புல்லாங்குழல் ஆக வேண்டும்,பரந்தாமன் கைகளில் தவழ வேண்டும் என்ற கனவு இருக்கும்.மூங்கில்,இந்த இடத்தில் மனிதனுக்கான குறியீடு.பட்டுப்போன மூங்கில் புல்லாங்குழலாவது போல உலக ஆசைகள் பட்டுப்போன மனிதன் பரம்பொருளைச் சேர்கிறான்.எனவே மூங்கில்கள் புருஷோத்தமனைப்பாடி தாங்களும் புல்லாங்குழல்களாவதற்குத் தவம் செய்ய வேண்டும்.
இந்த வரிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.பகவத்கீதையில்,கண்ணன்,பசுக்களில் காமதேனுவாயிருக்கிறேன்,யானைகளில் ஐராவதமாயிருக்கிறேன்,என்றெல்லாம் சொல்வான்.அப்படியானால்,மற்ற பசுக்களிலும் யானைகளிலும் கண்ணன் இல்லையா என்றொரு சீடர் கேட்ட கேள்விக்கு ஓஷோ ஒரு விளக்கம் தருவார். பசு என்ற படைப்பின் உச்சம்,காமதேனு.
யானை என்கிற படைப்பின் உச்சம்,.ஐராவதம்.உண்மையில் ஒவ்வொரு பசுவும் காமதேனுவாகிற சாத்தியத்துடன் படைக்கப்பட்டதுதான்.ஒவ்வொரு யானையும் ஐராவதமாகும் சாத்தியமும் சக்தியும் கொண்டதுதான்.தன் படைப்பின் உச்சத்தை உனர்பவர் யாரோ அவருக்குள் இறைத்தன்மை அல்லது விழிப்பு நிகழ்கிறது.தன்னை உணர்ந்த ஒவ்வோர் உயிரிலும் இறைவன் உண்டு என்பார் ஒஷோ.மூங்கிலின் உச்சம்,புல்லாங்குழலாவது.அதற்கு வழி புருஷோத்தமனைப் பாடுவது.
அடுத்த வரியில் "வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே !எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்"என்கிறார் கவிஞர்.மலர்களில் இருக்கும் மது தேடி வண்டுகள் வருகின்றன.நந்தவனம்,இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.மலரில் உள்ள மது,உலக இன்பங்களுக்கும் வண்டுகள் மனிதர்களுக்குமான குறியீடு.
உலக வாழ்வின் இன்பங்களை நுகர்வதை விட்டு விட்டு,மதுசூதனன் என்கிற தெய்வீகத் தேன்துளியைத் தேடச் சொல்கிறார் கவிஞர்.கண்ணனின் திருவுருவை,"கார்மேனி'என்று வர்ணிப்பது வைணவ இலக்கியங்களில் நிறைய உண்டு.
அந்த மேகங்கள்,கண்ணனின் திருவுருவ அழகுக்கு ஈடுதர முடியாமல்,அதில் ஈடுபட்டு புகழ்ந்துபாட வேண்டுமாம்."பன்னீர் மலர்சொரியும் மேகங்களே!எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்" என்கிறார் கவிஞர்.
திருவரங்கத்தில்.பெருமாள் தெற்குநோக்கி,வடதிசைக்கு முதுகுகாட்டிப் பள்ளிகொண்டிருக்கிறார்.தெற்குத்திசை,ஆழ்வார்களின் ஈரப்பசுந்தமிழ் படிந்தமையால் தென்திசையைப் பார்த்துப் பள்ளி கொண்டிருக்கிறான் பரந்தாமன் என்று வைணவ உரையாசிரியர்கள் குறிப்பிடுவார்கள். தென்திசைக்கு அப்படியொரு பெருமை.பாடலின்
நான்காவது வரியில்.'தென்கோடித் தென்றல்தரும் ராகங்களே!எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்' என்கிறார் கவிஞர்.
இந்தப் பாடலில்தான் பெருமாளின் நின்ற கோலம்,இருந்த கோலம்,கிடந்த கோலம் ஆகியவற்றுடன் நில்லாமல் தவழ்ந்த கோலத்தையும் பாடுகின்றார்.
"குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் -ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் -அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்.
பாரதக்கதையின் நான்குவரிச் சுருக்கமும் இந்தப் பாட்டில் உண்டு.
பாஞ்சாலி புகழ்காக்கத் தன்-கை கொடுத்தான் -அன்று
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் -நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்.
ஸ்ரீ கிருஷ்ண கானத்தின் ஒவ்வொரு பாட்டும் இப்படி நயங்களின் சுரங்கம்தான்!!
(தொடரும்)
2 comments:
"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ' என்ற வரியையே சற்று மாற்றி "இந்த காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்" என்று ஒரு கவிஞர் புது கவிதை எழுதினார். இது போன்ற சாத்தியங்கள் கண்ண தாசனில் அதிகம்.
nice one
Post a Comment