கோலாலம்பூர் கம்பன் விழா மேடையில் இருந்த போது கிடைத்த செய்தி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மனைவியார் மரணமடைந்த செய்தி. விழாவில் முதல்நாள் பங்கேற்று அடுத்த சில மணிநேரங்களில் விமானம் ஏற இருந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை மேடையில் இருந்த வண்ணமே தொடர்பு கொண்டேன். அவருக்கு ஏற்கெனவே செய்தி தெரிந்திருந்தது. கவிஞர் சவுந்தரா கைலாசம் மறைந்த செய்தியையும் அவர் தெரிவித்தார். இருவருக்கும் கோலாலம்பூர் கம்பன் விழாத் திரள் அஞ்சலி செலுத்தியது.
சென்னை வந்த பிறகு திருவான்மியூர் வான்மீகி சாலையில் இருக்கும் கவிக்கோ இல்லத்துக்கு பர்வீன் சுல்தானாவும் நானும் சென்றோம். கவிஞர் வீட்டில் இல்லை. அவருடைய மகள் இருந்தார். அப்பாவின் உடலமைப்பும், அசைவுகளும் அச்சு அசலாய் அவரிடம்... அம்மாவை வருத்தி வந்த ஆஸ்துமா நோய் பற்றியும், தூசி ஒத்துக் கொள்ளாத நிலையிலும் வீட்டிலுள்ள புத்தகக் குவியலை அகற்ற அப்பா ஒத்துக் கொள்ளாததால், புத்தகங்களுக்கு மாடியில் தனியறை கட்டி முடித்த கதையையும் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரும் பர்வீனும் உருது மொழியில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு
உருது தெரியாது என்பது கவிஞர் மகளுக்குத் தெரிந்த பின் உரையாடல்
தமிழுக்குத் தாவியது. இசுலாமிய இல்லங்களுக்கே உரிய அருமையான தேனீர்
கொடுத்தார்கள்.
பர்வீன் உருது பேசுவதில் அளப்பரிய விருப்பம் கொண்டவர். கவிஞர் மகள்
தமிழில் பேசினாலும், தன்னை மறந்து அவ்வப்போது உருதுவுக்குத் தாவிக் கொண்டிருந்தார் பர்வீன். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்,சென்னை கம்பன் விழா பட்டி மண்டபத்தில் கூட உருது மொழிக் கவிதை ஒன்றை சொன்னாராம். எதிரணியில் இருந்த பேராசிரியர் இராமச்சந்திரன் "நான் ஒரு ஜப்பானியக் கவிதை சொல்கிறேன்"என்று,மூன்று நிமிஷங்கள்
மூக்கால் பேசினாராம்.
சிறிது நேரத்தில் கவிஞர் வந்தார். வக்பு வாரியத் தலைவர் ஆனதிலிருந்து
சுழல் விளக்கு கொண்ட கார் கொடுத்திருக்கிறார்கள். மனக்கவலை மறக்கவோ, கடமைகள் கருதியோ ஆலோசனைக் கூட்டங்கள், குழு அமர்வுகள்
என்று வரிசையாகக் கலந்து கொண்டு வருகிறார். அன்றுகூட மதியமே வீட்டை விட்டுப் புறப்பட்டவர் முன்னிரவில்தான் திரும்பினார். வீட்டு வாசலிலேயே உதவியாளரிடம் மறுநாள் நிகழ்ச்சி நிரலை சொல்லத் தொடங்கி விட்டார்.
கம்பீரமான நடையில் சிறு தளர்ச்சி. முகத்தில் சோர்வு. பேசத் தொடங்கிய சில விநாடிகளுக்குள்ளாகவே வந்து விழுந்த வார்த்தைகள் இவை; "நான் அடிக்கடி சொல்ற விஷயம்தான். பொது வாழ்க்கையிலே இருக்கறவங்க கல்யாணம் பண்ணிக்கறது பெரிய அயோக்கியத்தனம். ஒரு பொண்ணு வாழ்க்கையை அனாவசியமா கெடுக்கற வேலை ".அவர் சொல்லச் சொல்ல அவர்
பொதுவாழ்வில் கடந்து வந்திருக்கக் கூடிய நெடுந்தொலைவின்
வரைபடத்தை மனம் வரைந்து பார்க்கத் தொடங்கியது.
தன்னிடம் ஒருமுறை கூட சண்டை போடாத மனைவியை, தான்
இதுவரை அவருக்கு ஏதொன்றும் வாங்கித் தந்திராததை, நினைவுகூர்ந்த கவிஞர் சொன்னார்,"என் பெருமைகளை அவள் புரிந்து கொண்டாள் என்று நான்
கருதவில்லை.ஆனால் என்னை மிகச்சரியாகப் புரிந்து கொண்டவள்
அவள். அவளைப் பற்றி ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை கேட்டார்கள். அதில் கூட சொல்லியிருக்கிறேன் -பாலைவனத்துக்கென்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்ட ஒட்டகம் போல் என் வாழ்க்கைக்கென்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்டவள் அவள்".
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அப்பாற்பட்ட
நிலைநோக்கி அவர் செல்வதை உணர்ந்த மருத்துவர்கள், அதை
வெளிப்படையாகச் சொல்லவில்லை. வீட்டிலேயேஆக்ஸிஜன் சிலிண்டர் இருப்பதால் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார்களாம். மருத்துவமனையிலிருந்து வருகிற போது கண்திறந்து பார்த்த அம்மையார் கவிஞரிடம் எங்காவது வெளியூர் கூட்டங்களுக்குப் போக வேண்டியிருக்கிறதா
என்று கேட்க, கவிஞர் தன் நிகழ்ச்சிகளை சொல்லியிருக்கிறார். கண்மூடியபடி
சோர்வோடு அம்மையார் சொன்ன வார்த்தை, "உங்களுக்குப் பொறுப்பே கிடையாது".மணவாழ்வில் முதன்முதலாய் சலிப்பான வார்த்தை அவரிடமிருந்து வந்ததுமே கவிஞர் ஓரளவு விஷயத்தை யூகித்துக் கொண்டாராம்.
சிக்கல்களும் மோதல்களும் நிறைந்த இன்றைய மணவாழ்வு பற்றி
பேச்சு திரும்பியது. கவிக்கோ சொன்னார், "எல்லோருக்கும் அறிவு இருக்கு. சுய
சிந்தனை, உரிமை எல்லாம் இருக்கு. ஆனா கல்யாணம்ங்கிறது,உரிமைகளை
நிலைநாட்டறதுக்கில்லை. அவரவர் உரிமைகளை தியாகம் செய்யறதுக்கு". மனம் நிறைந்த மணவாழ்வின் செய்தியாகவே அந்த வார்த்தைகள் வந்து விழுந்தன.
விடைபெறும்போது கைகளைப் பற்றிய விநாடிகளில் அதுவரை சொல்லாத செய்திகளையும் கவிக்கோ சொன்னதாகவே எனக்குப் பட்டது. எங்களை வழியனுப்பிவிட்டு சோர்வுடன் நாற்காலியில் சாய்ந்தார். கதவை முழுவதுமாய் மூடாமல் சற்றே திறந்து வைத்து விட்டு வெளியேறினேன். வெளியே வீசிய காற்று அவருக்குத் தேவைப்பட்டிருக்கும்தானே.