Sunday, August 28, 2011

நன்மை பயக்கும் எனின்.....

"பிள்ளையார் பெப்ஸி குடிக்கிறார் தெரியுமா? அங்கே நிக்கறேன்" செல்ஃபோன் இல்லாத காலத்தில் தங்கள் அலுவலர்கள் இடையில் உரையாடலுக்காகத் தரப்பட்டிருந்த வாக்கி டாக்கியைக் கையில் வைத்துக் கொண்டுபேசிக்கொண்டிருந்தார் தினமலர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐயப்பன்.


கோவையில் கல்கி நூற்றாண்டு விழாவிற்கு வந்த அனைவருமே அந்த சிலையை ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமேல்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் கலையரங்கம். தரைதளத்தில்,அலங்காரப் பந்தலின் கீழ் சாய்விருக்கையில் சாய்ந்தபடி, படு தீவிரமாக "கல்கி" வாசித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார்.

அவர் எதிரே இருந்த டீப்பாயில் பிரித்து வைக்கப்பட்டிருந்தது மைசூர்பா பெட்டி.திறந்து வைக்கப்பட்டிருந்தது ஒரு பாட்டில் பெப்ஸி. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்திய கல்கி நூற்றாண்டு விழாவில்தான் இந்த அமர்க்களம்.

விழாவிற்கு தலைமை தாங்கியவர் கிருஷ்ணராஜ் வாணவராயர். அன்றும் இன்றும் இளைஞர்களின் ஆதர்சம்சிறப்புப் பேச்சாளர்கள் வரிசையிலோ ஒரு விசித்திரமான கூட்டணி. பாலகுமாரன், சோ, கலை விமர்சகர் சுப்புடு.

விழாவில் இறைவணக்கம் பாட வேண்டியவர் எதனாலோ வரவில்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.கிருஷ்ணன் தன் வழக்கமான பாணியில் சுப்புடுவை கலாய்த்துக் கொண்டிருந்தார். "சார்! நீங்க மேடையிலே இருக்கீங்கன்னதும் இறைவணக்கம் பாடக்கூட ஆளைக் காணோம்".

கொஞ்ச நேரத்தில் ஏதோ வேலையாக வெளியே வந்த என்னை தயங்கித் தயங்கி அணுகினார் அந்தப் பெரியவர்."சார்! வணக்கம்." ஏறிட்டுப் பார்த்தேன். பரிச்சயமான முகம்தான். வயது எழுபது இருக்கும். பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்."வணக்கம்! சொல்லுங்க சார்" என்றேன். கூடுதல் தயக்கத்துடன் கேட்டார்... "இல்லை ! நான் நல்லா பாடுவேன் சார். இந்த விழாவிலே இறைவணக்கம் பாட சான்ஸ் கிடைக்குமா?"

இறை வணக்கம் பாட வேண்டியவர் வராமல் போன விஷயம் இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அகஸ்மாத்தாக அகப்பட்டார். ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் "கிருஷ்ணன் சாரைக் கேட்டு சொல்றேன்" என்று நகர்ந்தேன். தமிழ்த்தாய் வாழ்த்து கேசட் போட்டுவிடலாம் என்ற முடிவை மாற்றிக் கொண்டு அவரைப் பாடச் சொல்வதென்று
 முடிவெடுத்தோம்.

"கிருஷ்ணா ஸ்வீட்ஸ்" கிருஷ்ணன்
 சுமாரான குரல். பாட அழைக்கப்பட்ட போதும், பாடி முடித்த பிறகும் "ரொம்ப நன்றி சார்!" என்று வெவ்வேறு பாவங்களில் சொன்னார். சுப்புடு கையாலேயே அவருக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசும் கொடுத்ததில் புளகாங்கிதம் அடைந்தார் மனிதர். மேடையின் ஓரத்தில் இருந்த என்னிடம் "ரொம்ப சந்தோஷம் சார்! ரொம்ப நன்றி சார்" என்று பலமுறை
சொன்னது கூச்சமாகவே இருந்தது.

விழா முடிந்து கீழே நின்று கொண்டிருந்த என்னை நெருங்கினார் அந்தப் பெரியவர். கைகளில் பொன்னாடையும் நினைவுப்பரிசும். நான்காவது நன்றியை வாங்க நான் தயாரான போது பத்தடி தொலைவில் நின்று கொண்டு தோரணையாகக் கைச்சாடை போட்டு அழைத்தார். அருகே போனதும் அவர் கேட்ட கேள்வி,"என்னப்பா! கார் ரெடியா இருக்கா?"

எனக்குப் புரியவில்லை. சற்றே குரலை உயர்த்திச் சொன்னார். "அதான் தம்பி! உங்களுக்காக இறைவணக்கம் பாடியிருக்கேன்லே! வீட்டுக்குப் போக கார் கொடுங்க". விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கார் மட்டுமே இருந்தது. ஏதோ ஒரு வண்டியை எப்படியோ ஏற்பாடு செய்து அனுப்பினோம். அப்போது எரிச்சலாக இருந்தாலும் அவர் வீட்டுக்குப் போய் என்ன செய்திருப்பார் என்று யோசித்தேன்.

குறுகலான ஒரு வீதியைக் கடந்து அவர் வீட்டு வாசலில் கார் போய் நின்றிருக்கும்.மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் ஆச்சரியமாகப் பார்த்திருப்பார்கள். ஓட்டுநரிடம் "வரேன்ப்பா!
கிருஷ்ணன் கிட்டே சொல்லீடு" என்று சத்தமாகச் சொன்னபடியே வீட்டுக்குள் நுழைந்திருப்பார்."கல்கி நூற்றாண்டு விழாவுக்குப் போனேனா! சுப்புடு பார்த்துட்டார். நீங்க பாடியே ஆகணும்னு ஒரே பிடிவாதம். பாடினேன். அவங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நீங்க பஸ்லே போறதாவதுன்னு பிடிவாதமா கார் வைச்சு அனுப்பீட்டாங்க"என்று தோரணையாக சால்வையை
மருமகளிடம் நீட்டியிருப்பார்.

வீட்டில் சரிந்து கொண்டிருக்கும் செல்வாக்கை மீட்டுக்கொள்ள இந்தச் சின்ன நாடகம் அவருக்குப் பயன்பட்டிருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன் அதே ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் சந்தித்த ஒரு பெரியவரின் ஞாபகம் வந்தது. திரு.கிருஷ்ணனை "என்னப்பா! சொல்லுப்பா" என்று தயங்கித் தயங்கி ஒருமையில் அழைப்பார். அடிக்கடி வந்து உதவிகள் பெறுவார். போகும்போது இன்னும் தயக்கமாய் "ஏம்ப்பா ! வாங்கிக்கட்டுமா? மைசூர்பா?" என்பார்.

கிருஷ்ணன் கையொப்பமிட்டுத் தரும் காகிதத்தைக் கவுண்ட்டரில் காண்பித்து ஒருகிலோ மைசூர்பா இலவசமாய் வாங்கிக் கொண்டு மெல்ல நகர்வார். வீட்டுக்குள் நுழையும்போது இவருடைய தோரணையும் மாறியிருக்கும்.

"இந்த கிருஷ்ணன் கூட ஒரே தொல்லையாப் போச்சு! வேணாம் வேணாம்னா கேக்கறதில்லை. ஒதுங்கிப் போனா கூட வம்பா கூப்பிட்டு கையில மைசூர்பாவைத் திணிச்சுடறது" என்ற செல்லச் சலிப்போடு மருமகள் கைகளில் கொடுத்திருப்பார்.

வீட்டுக்குள் சின்னச் சின்ன சலுகைகளைப் பெறவும் பெரிய மனிதர்களின் பரிந்துரைகள் தேவையாயிருக்கிறது பெரியவர்களுக்கு!!

எது குற்றம்? எது சட்டம்?

"தலைவர் மாறுவர் ! தர்பார் மாறும்! தத்துவம் மட்டும் அட்சய பாத்திரம்" என்றார் கவியரசு கண்ணதாசன். ஒரு கட்சியின் ஆட்சியில் தலைவர்களும் தர்பார்களும் மாறலாம். தத்துவம்
மாறலாமா? மாறலாம் என்கிறது காங்கிரஸ்.

இலங்கை மீதான போர்க்குற்றத்தை இலங்கையே பார்த்துக் கொள்ளும், விசாரித்துக் கொள்ளும் என்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா. அப்படியானால் அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸின் ஆட்சியில்சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை இலங்கைக்குப் போனது ஏன்? தன்னுடைய பிரச்சினையை இலங்கையே பார்த்துக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டை ஏன் அப்போது எடுக்கவில்லை?

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது என்பது ஒத்து வருகிற அம்சங்களுக்கும் ஒத்தூதுகிற அம்சங்களுக்கும் மட்டுமே என்கிற ஒருதலைப்பட்ச முடிவை எடுப்பது சந்தர்ப்பவாதம்.




கட்சியின் தேசியத் தலைவர் தன் கணவரைக் கொன்றவர்களை மன்னிக்கச் சொல்லி மனுப்போடுகிறார். மாநிலத்தலைவர் தூக்கில் போடச்சொல்லி தூபம் போடுகிறார். தூக்கு வேண்டாம் என்பது நீதிமன்ற அவமதிப்பு என்கிறார் தங்கபாலு. அப்படியானால் இவருடைய முரண்பட்ட அறிக்கை கட்சித் தலைமை அவமதிப்பல்லவா!!

எது குற்றம்?எது சட்டம்? என்ற கேள்வியை  ஆய்வு செய்கிற யாரும் மரண தண்டனையை மறுதலிக்கவே செய்வார்கள். இந்த உலகில் ஓர் உயிர் எத்தனை காலம் வசிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையை கையிலெடுக்கக் கூடாது என்றுதான் கைது செய்கிறது சட்டம். அதே உரிமையை சட்டத்தின் பெயராலும் கையிலெடுக்கக் கூடாது என்பதுதான் மரணதண்டனைக்கெதிராக வைக்கப்படுகிற வாதம்.

மனித உயிர்களையும் மனித உரிமைகலையும் முன்வைக்கும் ஜனநாயக மாண்பிற்கு முற்றிலும் முரணானது மரணதண்டனை என்பதை இந்தியா முழுமைக்கும் தமிழகம் உணர்த்தும் என்பதே நமது நம்பிக்கை.

வேலூர் கோட்டையின் விபரீதத்தை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தடுத்து நிறுத்த வேண்டும்,

Thursday, August 25, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 15

எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறை சார்ந்த நல்ல புத்தகங்கள் கையில் கிடைப்பதும் ஒருவகை கொடுப்பினைதான். அப்படியொரு கொடுப்பினையின் பேரில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள் ஓ&எம் என்று அழைக்கப்படும் விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான டேவிட் ஒகில்வியின் இரு புத்தகங்கள். ஓகில்வி ஆன் அட்வர்டைசிங் மற்றும் தி அன்பப்ளிஷ்ட் டேவிட் ஒகில்வி. இவை கல்லூரிப் பருவத்தில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள். நல்ல வேளையாக பாடமாக இல்லை.

டேவிட் ஒகில்வி (David Ogilvy)
இவை சமைத்துப் பாருங்கள் வகையறா புத்தகங்கள் அல்ல. விளம்பர நிபுணர் ஒருவரின் மனநிலை, வாழ்க்கைமுறை போன்ற அம்சங்களை உணர்வு ரீதியாய் உள்வாங்க உதவுகிற புத்தகங்கள் . ஒகில்வி அலுவலக சகாக்களிடம் நடந்து கொள்கிற முறை, அவர்  அனுப்பிய அலுவலகக் குறிப்புகள் ஆகியவை இரண்டாவது புத்தகத்தில் இருப்பவை. எனக்கு ஒகில்வியின் எழுத்துக்கள் அகஸ்மாத்தாக அறிமுகமாயின.

ஒரு விளம்பரத்துக்கு அங்கீகாரம் தர க்ளையண்ட் முரண்டு பிடித்தால் அவரை எப்படி சமாளிப்பது என்பதற்கு விளையாட்டாக ஒரு கவிதையை ஒகில்வி எழுதியிருப்பார். பெரும்பாலும் விளம்பரத்தின் தரம் படைப்பாக்கத்தின் துல்லியம் போன்றவற்றை மதிக்கத் தெரியாத வாடிக்கையாளர்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள் கொண்டவை அவை.

வாடிக்கையாளர் ரொம்ப சிணுங்கினால்
அவர் நிறுவன லோகோவை இருமடங்கு பெரிதாகப் போடு
இன்னும் அவர் சமாதானமாகவில்லையா?
அவருடைய தொழிற்சாலையின் படத்தைப் போடு
மனிதர் இன்னும் முரண்டு பிடிக்கிறாரா?
வேறு வழியே இல்லையா?
சரி சரி! அவர் புகைப்படத்தைப் போட்டுத் தொலை!!

If your client groans and cries
make his logo twice the size;
If he is still refractory
put a picture of his factory;
Only in the gravest cases
should you show the client`s faces;

தன்னுடைய நிறுவனத்தில் புதிதாக சேர்பவர்களுக்கெல்லாம் ரஷ்ய பொம்மை ஒன்றைப் பரிசளிப்பார் ஒகில்வி. அந்த பொம்மையின் கழுத்தைத் திருகித் திறந்தால் அதேபோல அதனினும் சிறிய பொம்மை ஒன்று இருக்கும்.அதற்குள் அதனினும் சிறிய பொம்மை. அதற்குள் அதனினும் சிறிதாய் மற்றொரு பொம்மை. அதற்குள் ஒரு சீட்டு வைத்திருப்பார் ஓகில்வி.

"தம்மைவிட சிறியவர்களை வேலைக்கு எடுத்தால் ஒரு நிறுவனம் சித்திரக் குள்ளர்களின் கூடாரமாகிவிடும். தம்மை விடப் பெரிய திறமை வாய்ந்தவர்களை  வேலைக்கு எடுத்தால் அந்த நிறுவனம் அசுரத்தனமாக வளரும்.அந்த நம்பிக்கையில்தான் உங்களை வேலைக்கு எடுத்திருக்கிறோம்".

ஒகில்விக்கு அபாரமான நகைச்சுவையுணர்வும் உண்டு.கிறுக்குத் தனமாக யோசிப்பவர்களுக்கே புதுமையான சிந்தனைகள் தோன்றும் என்று நம்பினார். ஓ&எம் நிறுவனத்தின் ஜகார்தா கிளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கென் பிராடி என்ற இளைஞருக்கு 29 வயதான போது அவருக்கு ஒகில்வியிடமிருந்து வந்த வாழ்த்து வாசகங்கள் இவை:

"நீ அபாரமான இளைஞன். நம் நியூயார்க் அலுவலகத்துக்கு வா! நான் உன் கைகளைக் குலுக்க வேண்டும்". வந்தவருக்கு ஒகில்வி சொன்ன உபதேசம் என்ன தெரியுமா?"

"இங்கே பார்! கிறுக்குத்தனத்தை மட்டும் இளமையிலிருந்தே நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், பிற்காலத்தில் அது முதுமைக்கோளாறு என்று யாரும் தவறாகப் பேச மாட்டார்கள்".  

ஒகில்வியின் மதிப்பீடுகளில் இன்றும் செல்லுபடியாகக் கூடிய விஷயம் என்று நான் கருதுவது, தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் அச்சு விளம்பரங்களுக்கும் வேண்டிய அம்சங்கள்  என்று அவர் சொன்னவைதான். தொலைக்காட்சி விளம்பரத்தில் சுவாரசியம் தூக்கலாக இருக்க வேண்டும், அச்சு விளம்பரத்தில் சாமர்த்தியம் தூக்கலாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கான விளம்பரங்கள் மற்ற தொலைக்காட்சிகளிலும் இடம் பெற்றதைப் பார்த்திருப்பீர்கள். இது மிக முக்கியமான ஊடகப் புதுமை. போட்டியாளர்களின் கோட்டைக்குள் தங்கள் கொடியை அறிமுகம் செய்வது போலத்தான்.

அமெரிக்காவில் ஒருமுறை தொலைக்காட்சி செய்திகள் நடுவே ஒரு செய்தித்தாளின் விளம்பரம் ஒளிபரப்பானது. அந்த விளம்பரம் தொலைக்காட்சி செய்திகளையே நக்கலடித்ததுதான் சுவாரசியம்.

"இந்த செய்திகளை ஆற அமர விரிவாகப் படித்தால்தானே நல்லது. அவசரம் அவசரமாக வாசித்தால் பயனுண்டா? செய்தித்தாளில் படித்தால் அந்தப் பகுதியைக் கத்தரித்து வைத்துக் கொள்ளலாம். இன்னும் எவ்வளவோ பயன்கள். ஆனால் ஒரு விஷயம். செய்தித்தாள்களின் பயனை தொலைக்காட்சியின் சில விநாடிகளில் சொல்லிவிட முடியுமா என்ன?. இது சாமர்த்தியமா?சுவாரசியமா? இரண்டும்தான்.

விளம்பரங்களில் இடம்பெறும் சுவாரசியமும் சாமர்த்தியமும் ஒட்டுமொத்த ஜனத்தொகைக்கும் புரியவேண்டும் என்று அவசியமா? அவசியமில்லைதான். உங்கள் இலக்குக்குட்பட்ட வாடிக்கையாளர் யாரோ அவர்களுக்குப் புரிய வேண்டியது மிகவும் அவசியம்.அவர்கள் வாழ்க்கைத் தரத்தின் பாஷையில் அவர்களுக்கு சுவாரசியம் தருகிற விதமாக விளம்பரம் அமைந்தால் போதும்.

சமீபத்தில் ஒரு கார் விளம்பரம் பார்த்தேன்.ஒரு பெண் குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி ஓர் இளைஞனை அழைக்கிறாள்.

"தேடுவது?"

"அதான் நம்ம search engine இருக்கே என்று உற்சாகமாய்க் கிளம்புகிறான் இளைஞன். காரை சர்ச் என்ஜின் என்று சொல்வது இளைஞர் வட்டாரத்தில் கவனிக்கப்படும். பக்கத்து வீடு எங்கே
இருக்கிறது என்று பார்க்கவே சர்ச் என்ஜின்களை நம்பும் இந்தத் தலைமுறையின் இதயங்களில் இந்த விளம்பரம் இடம் பிடிக்கும்.

இந்த விளம்பரத்தில் சுவாரசியமும் இருக்கிறது. சாமர்த்தியமும் இருக்கிறது. சாமர்த்தியமும் சுவாரசியமும் மிக்க விளம்பரங்கள் சந்தையில் வெல்கின்றன. பல நேரங்களில் சந்தையையே வென்றெடுக்கின்றன.

(தொடரும்...)

Monday, August 22, 2011

கமலாம்பா

(17.08.2011.திருவாரூர் கமலாம்பிகை சந்நிதி .இரவு 9 மணி.தரிசனத்துக்கு வந்திருந்ததொரு தளிர்.இரண்டு கமலாம்பிகைகளின் இணைந்த தரிசனம்)

சந்நிதி முன்வந்த சின்னஞ் சிறுமியின்
கண்களில் கமலாம்பா
பொன்னிதழ் மின்னும் புன்னகைச் சுடரில்
பொலிந்தவள் கமலாம்பா
மின்னல்கள் விசிறும் தாடங்க அசைவில்
மிளிர்ந்தவள் கமலாம்பா
என்னெதிர் நின்றவள் என்னுள் புகுந்தவள்
இவள்தான் கமலாம்பா

சிற்றாடைக்குள் சித்த சொரூபமாய்
சிரித்தவள் கமலாம்பா
உற்றார் நடுவினில் உறவின் கனிவாய்
உதித்தவள் கமலாம்பா
கற்றார் கல்வி கனிந்தே உருகக்
கனிந்தவள் கமலாம்பா
பெற்றார் உடனே பிள்ளை உருவில்
புகுந்தாள் கமலாம்பா



பாதங்கள் அசைந்த நாத லயந்தனில்
பார்த்தேன் கமலாம்பா
ஏதும் மொழியா இதழ்களின் சுழிப்பில்
இருந்தாள் கமலாம்பா
வேதனை தீர்க்கும் வேத முதலென
வந்தாள் கமலாம்பா
ஜோதியின் நடுவிலும் சந்நிதி எதிரிலும்
சிரித்தாள் கமலாம்பா

வந்தவர் மனங்களில் வந்தவள் தானென்று
விதைத்தாள் கமலாம்பா
எந்தச் சலனமும் இல்லாச் சிறுமியாய்
எதிரே கமலாம்பா
தந்தை விரல்பற்றித் தளிர்நடை நடந்தாள்
தேவி கமலாம்பா
சுந்தரி பேரென்ன? நர்மதா என்றே
சொன்னாள் கமலாம்பா
 

Sunday, August 21, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 14

வாடிக்கையாளர்களின் உணர்வுகளும் அபிமானங்களும்
 விளம்பரங்களின் அடித்தளங்கள்.ஒரு மனிதனை அறிவு ரீதியாய்
அணுகுவதை விட உணர்வு ரீதியாய் நெருங்குவது மிகவும் எளிது. பார்த்த மாத்திரத்தில் புன்னகையை உருவாக்குவது வெற்றிகரமான விளம்பரத்தின் இலக்கணம்.

மனிதனின் மென்னுணர்வுகள் நோக்கி வீசப்படும் எந்த மலரையும் யாரும் புறக்கணிப்பதில்லை. திருமணம், குழந்தை வளர்ப்பு கிரஹப்பிரவேசம் போன்ற சந்தோஷமான சூழல்களை மையப்படுத்தும் விளம்பரங்கள் வெற்றிபெற இதுதான் காரணம். தனியார் தொலைக்காட்சிகள் அதிகமுள்ள இந்தக் கால கட்டத்தில் இத்தகைய விளம்பரங்களை உருவாக்குவது எளிது மட்டுமல்ல. அவை வெகு விரைவில் நுகர்வோர் மனங்களில் இடம் பிடிக்கவும் செய்கின்றன.

ஆனால் அச்சு விளம்பரங்களே அதிகம் செய்யப்பட்ட காலங்களில் விளம்பரத்தின் தலைப்பு வாசகங்களை வைத்துத்தான் மென்னுணர்வின் வட்டத்திற்குள் முத்திரை பதிக்க முடியும்.

ஈரோடு பரணி சில்க்ஸ் நிறுவனத்தின் கல்யாணப்பட்டு ஜவுளிகளுக்கு பல்லாண்டுகள் முன்னர் எழுதிய தலைப்பு வாசகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

"பத்துப் பொருத்தமும் இருக்கு! பட்டுப் பொருத்தமும் இருக்கு!"




பெரும் பொருள்செலவில் வாங்கப்படும் சாதனங்களைத் தவிர வாழ்வுக்குத் தேவையான பிற அம்சங்களை மனிதர்கள் உணர்வு ரீதியாகத்தான் பார்க்கிறார்கள்.இன்று குடும்பம் என்பதுகூட குழந்தைகளை மையப்படுத்திய விஷயமாகத்தான் பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. பெற்றோர்களுக்கே அப்படியென்றால் குழந்தைகளுக்குக் கேட்கவும் வேண்டுமா? தங்கள் நலனைச் சுற்றியே தாயும் தந்தையும் இயங்குவதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

என் நண்பர் ஒருவர் தன் எட்டு வயது மகனுடன் கம்ப்யூட்டர் டேபிள் வாங்கப் போனார். "சின்ன டேபிளாக இருந்தால்தான் ஃபியூச்சரில் இடம் மாற்றிப் போட வசதியாக இருக்கும்"என்று தன் மனைவியிடம் அவர் சொலதைக்கேட்ட மகன் வியப்புடன் கேட்டான்.. "ஃபியூச்சரா?அப்ப நான்தானே இருப்பேன். நீங்க ரெண்டு பேரும் இருக்க மாட்டீங்க தானே!"

வாழ்க்கையை அனுபவிக்காமல் வேகவேகமாக ஓடும் நடுத்தர வயதினர் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்ளும் சமாதானம், "இதெல்லாம் யாருக்காக? நம்ம குழந்தைங்களுக்காகத்தானே!" இந்த சென்டிமெண்ட்டை குறிபார்த்துத் தாக்கும் விளம்பரங்களுக்குப் பஞ்சமேயில்லை.குழந்தைகள் கல்விக்கான சேமிப்பு, குழந்தைகள் ஆரோக்கியத்துக்கான பானம்,சோப், தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி என்று எல்லாமே...

அதேநேரம் தொழில்நுட்பத்தின் அதிரடி மாற்றங்களை மூத்த  தலைமுறையின் புரிதல் வளையத்துக்குள் கொண்டு சேர்க்கும் முயற்சிகளும் விளம்பரங்கள் வாயிலாகவே நடைபெறுகின்றன. இன்றைய தலைமுறையினர் சாஃப்ட்வேர் சாம்ராஜ்யத்தின் முடிசூடா அரசர்களாகவும் அரசிகளாகவுமே இருக்கிறார்கள்.

அவர்கள் வேலை, அவர்கள் சம்பளம் வீட்டுக்கு வந்தாலும் சதா சர்வநேரம் கம்ப்யூட்டர் முன்பாகவே இருக்கும் அவர்களின் தேடல் எதுவுமே பெரும்பாலான பெற்றோர்களுக்கு புரிவதில்லை. வரன் பார்க்கலாமா என்று கேட்டாலும் சண்டைதான் வருகிறது. மேட்ரிமோனி சேவைகள் பற்றிய அபிப்பிராயம் எதுவும் பெற்றோருக்குக் கிடையாது.

தன் பெண்ணின் வாழ்க்கை முறைக்குப் பொருந்துகிற வரன் எங்கே கிடைக்கும் என்று கவலைப்படுகிற் பெற்றோருக்கு, அவர்கள் மகள் கட்டிக் கொண்டு அழுகிற கம்ப்பூட்டர் வழியாகவே வரன் அமையும் என்று தெரிந்தால் சந்தோஷம்தானே!!

மேட்ரிமோனி நிறுவனம் ஒன்றின் தொலைக்காட்சி விளம்பரத்திற்கு சில ஆண்டுகள் முன் ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்கினேன். கம்ப்யூட்டர் முன்பாகவே அமர்ந்திருக்கிற மகளை அம்மாவும் அப்பாவும் கவலையுடன் பார்த்து கண்களால் பேசிக்கொள்கிறார்கள். உதட்டசைவு ஏதுமின்றி பின்னணியில் பாடல் ஒலிக்கிறது.

"பரபரப்பான சாஃப்ட்வேர் பெண்ணுக்கு மணமகன் கிடைப்பானோ!"

காலிங்பெல் ஒலிக்க பெண் வேகமாகச் சென்று பீட்சாவை வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாய் கம்ப்யூட்டர் முன் மீண்டும் அமர்ந்து கொள்கிறாள்,பாடல் தொடர்கிறது..

"ஆர்டர் செய்தால் பீட்சா வரலாம் மாப்பிள்ளை வருவானோ!"
 
உண்மையில் மகள் கணினியில் பார்த்துக் கொண்டிருப்பது மேட்ரிமோனியல் தளத்தைத்தான். சரியான வரன் கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோரை அழைத்துக் காட்டுகிறாள். அவர்கள் முகங்களில் சோர்வு மாறி ஆனந்தம், பரவசம், எல்லாமே.. பாடல் தொடர்கிறது...

"இதுவொரு புதுவித சுயம்வரமே
கணினியில் வரன்கள் வரும்வருமே
விரல்களின் நுனியில் உறவொன்று மலரும்
புதுவித அதிசயமே" 
 

மேட்ரிமோனி தளத்தின் பெயரைப்போட்டு புதுவித சுயம்வரம் என்ற வரிகளுடன் ஃப்ரீஸ் செய்யும் விதமாக அந்த ஸ்டோரிபோர்டை உருவாக்கிக் கொடுத்தேன்.

அதேபோல ஒரு நிறுவனத்தின் பெயர் மாற்றம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். தகவல்களை மையப்படுத்தித்தான் அந்த விளம்பரத்தை உருவாக்க முடியும்.ஆனால் அது வறண்ட அறிவிப்பாய் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

ஈரோடு பரணி சில்க்சென்டர் பல வித்தியாசமான விளம்பரங்களுக்குப் பெயர் பெற்றது. அந்த நிறுவனத்தின் பெயர்  பரணிசில்க்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு விளம்பரம் வெளியிடுவதா வேண்டாமா என்று அவர்களுக்குள்ளாகவே விவாதித்து, விளம்பர வாசகம் சரியாக அமைந்தால் வெளியிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.

எழுதிக் கொடுத்த மறு விநாடியே மிகுந்த உற்சாகத்துடன் அனைவரும் ஏற்றுக்கொண்ட தலைப்பு வாசகம் இதுதான்..


 
"உங்களுக்குப் பிரியமான ஈரோடு பரணி சில்க் சென்டர்
  இனி செல்லமாய்................
  ஈரோடு பரணி சில்க்ஸ்!!"


விளம்பரம் வெளிவந்த அன்று கடைக்கு ஜவுளி எடுக்க வந்த பலரும் கேட்டது,"அப்படியே செல்லமா ஒரு டிஸ்கவுண்ட் போடுங்க பார்க்கலாம்!" அந்த வார்த்தை வாடிக்கையாளர்களிடம் புன்னகையை வரவழைத்ததுடன் மனதிலும் பதிந்தது. அதன் விளைவாக அந்த ஆண்டு பரணி சில்க்ஸுக்காக வானொலி தொலைக்காட்சி விளம்பரங்கள் உருவாக்கியபோது எழுதிக் கொடுத்த பாடல் இப்படித் தொடங்கியது..

  "கல்யாணப் பட்டெடுக்க செல்லமே செல்லம்
ஈரோடு பரணிசில்க்ஸ் செல்லமே செல்லம்


(தொடரும்)