Sunday, August 28, 2011

எது குற்றம்? எது சட்டம்?

"தலைவர் மாறுவர் ! தர்பார் மாறும்! தத்துவம் மட்டும் அட்சய பாத்திரம்" என்றார் கவியரசு கண்ணதாசன். ஒரு கட்சியின் ஆட்சியில் தலைவர்களும் தர்பார்களும் மாறலாம். தத்துவம்
மாறலாமா? மாறலாம் என்கிறது காங்கிரஸ்.

இலங்கை மீதான போர்க்குற்றத்தை இலங்கையே பார்த்துக் கொள்ளும், விசாரித்துக் கொள்ளும் என்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா. அப்படியானால் அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸின் ஆட்சியில்சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை இலங்கைக்குப் போனது ஏன்? தன்னுடைய பிரச்சினையை இலங்கையே பார்த்துக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டை ஏன் அப்போது எடுக்கவில்லை?

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது என்பது ஒத்து வருகிற அம்சங்களுக்கும் ஒத்தூதுகிற அம்சங்களுக்கும் மட்டுமே என்கிற ஒருதலைப்பட்ச முடிவை எடுப்பது சந்தர்ப்பவாதம்.




கட்சியின் தேசியத் தலைவர் தன் கணவரைக் கொன்றவர்களை மன்னிக்கச் சொல்லி மனுப்போடுகிறார். மாநிலத்தலைவர் தூக்கில் போடச்சொல்லி தூபம் போடுகிறார். தூக்கு வேண்டாம் என்பது நீதிமன்ற அவமதிப்பு என்கிறார் தங்கபாலு. அப்படியானால் இவருடைய முரண்பட்ட அறிக்கை கட்சித் தலைமை அவமதிப்பல்லவா!!

எது குற்றம்?எது சட்டம்? என்ற கேள்வியை  ஆய்வு செய்கிற யாரும் மரண தண்டனையை மறுதலிக்கவே செய்வார்கள். இந்த உலகில் ஓர் உயிர் எத்தனை காலம் வசிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையை கையிலெடுக்கக் கூடாது என்றுதான் கைது செய்கிறது சட்டம். அதே உரிமையை சட்டத்தின் பெயராலும் கையிலெடுக்கக் கூடாது என்பதுதான் மரணதண்டனைக்கெதிராக வைக்கப்படுகிற வாதம்.

மனித உயிர்களையும் மனித உரிமைகலையும் முன்வைக்கும் ஜனநாயக மாண்பிற்கு முற்றிலும் முரணானது மரணதண்டனை என்பதை இந்தியா முழுமைக்கும் தமிழகம் உணர்த்தும் என்பதே நமது நம்பிக்கை.

வேலூர் கோட்டையின் விபரீதத்தை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தடுத்து நிறுத்த வேண்டும்,

1 comment:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

குற்றம் வேறு..சட்டம் வேறு..
CRIME ல் MOTIVE இருந்தால், அதிக பட்ச தண்டனை அளிக்கப் படுகிறது
தண்டனை என்பது ஒருவன் தான் செய்த குற்றத்தை, அவனாகவே உணரச் செய்து, அவனும், இந்த சமுதாயத்தில் ஒரு மாசற்ற மனிதனாய் திருந்தி வாழ சந்தர்ப்பம் அளிக்கும் ஒரு PROCESS.ஒரு METHOD..
அவ்வளவே.. .
ஆனால், மரண தண்டனையில் இருப்பு என்பதே மறுதலிக்கப் படுகிறபோது, திருந்தி வாழும் சந்தர்ப்பம் என்பது எங்ஙனம் வாய்க்கும்?
நாம் என்ன ஹமுராபி காலத்திற்கா
போய் விட்டோம்??