புரிதலின் பிராவாகம்

அது அங்கே இருக்கிறது என்று சொல்வதில் எந்தப் புகாராவது இருக்கிறதா என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதுவொரு சாதாரண வாக்கியம். அதன் அடியாழத்திலோ "அது அது அப்படித்தான்" என்கிற புரிதலின் பரிவு நீண்டு கிடக்கிறது.புரிதல், பக்குவத்தின் ஆரம்ப நிலை.புரிதலின் பரிவு,பக்குவத்தின் ஆனந்த நிலை.

அப்படியோர் ஆனந்த நிலையின் பிரவாகமாய்ப் பெருகுகிறது கல்யாண்ஜியின் "மணல் உள்ள ஆறு" கவிதைத் தொகுப்பு.


உச்சிப்படையில் உட்கார்ந்து விட்ட சிறுமியை,வீட்டுக்குக் கூட்டிப் போகிற வாழையிலை விற்கிற முதியவளும்,கலர்க்கோலப்பொடி அப்பளம் விற்கிற பெண்ணும் மட்டும் ஆச்சரியமில்லை. அந்தப் பெண்ணுக்காக உள்ளம் கரைகிற ஒரு ஜடப்பொருளும்தான் ஆச்சரியம்.

"வாசலில் ஆட்டோவை நிறுத்தி
வாழையிலை விற்கிற முதியவளும்
கலர்க்கோலப்பொடி அப்பளப்பூ
விற்கிற கடைப்பெண்ணும்
உச்சிப் படையில்
"உட்கார்ந்துவிட்ட " சிறுமியை
வீட்டுக்குக் கூட்டிப் போகிறார்கள்.


இதுவரை அது விற்றுக் கொண்டிருந்த செவக்காட்டுப் பனங்கிழங்குக் கட்டுப் பக்கம் உருகிக் கொண்டிருக்கிறது அப்போதுதான் வாங்கிய ஒரு சேமியா ஐஸ்".
இங்கு வாழையிலையும் கலர்க்கோலப் பொடியும் அப்பளப்பூவும் குறியீடுகளா, உள்ளுறையா இறைச்சியா என்றெல்லாமமந்த முதியவளுக்கும் பெண்ணுக்கும் சிறுமிக்கும் தெரியாது.

இந்த நுட்பமான பார்வைக்குத்தான் இருத்தலின் இருப்பு மட்டுமின்றி இன்மையின் இருப்பும் நன்கு பிடிபடுகிறது.

"என்னைத் தவிர
யாரும் கிடையாது
இந்த வீட்டில்.
என்னைத் தவிர
யாரோ இருப்பதாகத்
தோன்றுவதால்தான்
இதைச்சொல்ல வேண்டியதாகிறது"
என்பதில் இருக்கும் அதே புரிதல்தான்
"இல்லாத ஒரு நான்காவது நாயுடன்
விளையாடுவது போல
புரண்டு கொண்டிருக்கின்றன
காலை வேம்பின் கசப்பு நிழலில்
மூன்று நாய்கள்"
என்ற கவிதையில் புரிதலின் பரிவாக நீட்சி கொள்கிறது..

அந்த நான்காவது நாய், இல்லாததா இல்லாமல் போனதா என்ற கேள்வியை இந்தக் கவிதை உருவாக்குகிறது. முந்தைய நாள்வரை ஒன்றாய்த் திரிந்து, நாய்பிடியாளர்களின் சுருக்குக் கயிற்றுக்கோ பேருந்தின் சக்கரங்களுக்கோ தன்னைத் தந்திருக்கலாம். அந்தப் பிரிவின் கசப்பே காலை வேம்பின் கசப்பு நிழலாகவும் இருக்கலாம்.

"எல்லோரும் காதலியைப் பற்றிக்
கவிதையெழுதிவிட்டு
காதல் பற்றி எழுதியதாகச்
சொல்கிறார்கள்.
இறந்தவரைப் பற்றி
எழுதிவிட்டு
மரணம் பற்றி என்கிறார்கள்.
ஒரு பறவையைப் பற்றி எழுதுவது
பறத்தல் பற்றி அல்ல..
சோப்பைப் பற்றி எழுதுவது
அழுக்கைப் பற்றியது ஆகாது"
என்று நீள்கிற கவிதை,
"எதைப்பற்றியும் எழுதப்படுவது அல்ல
இதைப்பற்றி எழுதுவது என்பது"
 என்னும் "கல்யாண முத்திரை"யுடன் முற்றுப் பெறுகிறது.

நாம் நம் இழிவுகளிலிருந்தே உயர்வுகள் நோக்கித் தாவுகிறோம். நம் பள்ளங்களிலிருந்தே மேடுகள் நோக்கித் தவ்வுகிறோம். தாவவும் தவ்வவும் மாறவும் சிறு விருப்பம் இருந்தாலும் வாழ்க்கை நம்மை உரிய இடத்தில் கொண்டு சேர்க்கிறது.

"அந்த ஆற்றை அடைவதில்
ஒன்ரும் சிரமமில்லை.
ஒரு சாக்கடைப் பெருச்சாளியை
சாக்கடை வழியாகவே துரத்தினேன்.
எந்த அவசரமுமின்றி
என் கால்களையும்
கழுவிக் கொள்ள முடிந்தது
ஆற்றிலேயே"
என்ற கவிதை நம்மைக் கொண்டு சேர்ப்பதும் பெருக்கெடுத்தோடும் இந்தப் புரிதலில்தான்.

கல்யாண்ஜி கவிதைத் தொகுப்புகளில் இருக்கும் சிரமமே, "ஆகச்சிறந்த
கவிதை" என்று தனியாக ஒன்றைச் சுட்ட முடியாமைதான்.ஒவ்வொன்றும் அதன் போக்கில் ஆகச் சிறந்ததாகவே இருக்கும்.

ஒரு குடும்பத்தின் நான்கு உறுப்பினர்கள் மற்றொரு வீட்டின்  வரவேற்பறையில் விருந்தினர்களாக அமர்ந்திருக்கும் தருணமொன்றைச் சுட்டும் கவிதை "வேண்டாம் என்பவர்". வேறொன்றுமில்லை. நான்கு குவளைகளில்  கொண்டுவரப்பட்ட  குளிர்பானங்களை வேண்டாம் என்கிறார் அப்பா  விருந்தினர்.  தனக்குதான்  முதலில்  என்று தாவி எடுக்கிறான்  மகன். அவனுடைய  சகோதரியின்  குவளை குடிக்கக் குடிக்க நிறைவதாய்த் தோன்றுகிறது.அம்மா விருந்தினரோ மிச்சம் வைக்கும் நாகரீகத்துடன் மிச்சம் வைக்கிறார்.

"வேண்டாம் என்றவர்க்கொரு உளவியல் பிரச்சினை.
குடித்துவிடலாம் என இப்போது நினைக்கிறார்.
எழுந்திருந்துபோய் அதை எடுப்பதன் முன்னர்
எடுத்துப் போய்விடுகிறார்கள் அத்தனை குவளையும்.
வாயைத் துடை எனக் கோபப் படுகிற
அப்பாவைப் பார்த்து
மிரள்கிறான் பையன் காரணம் புரியாமல்".

அவரவர் கோப்பையை அவரவர் பருக அவரவர் வாழ்க்கையில் அவரவர் நிறைய பருகாமலும் நிறையாமலும் பரிதவிக்கிறவர்களின் இயலாமையில் எழுகிற ஆத்திரங்களவிந்தப் பிரபஞ்சத்தின் இசைப்பிசகுகளுக்குக் காரணம்..
"ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும்
இடைப்பட்ட உப்புத் தூரம்
வாழ்விற்கும் மரணத்திற்கும்
இடைப்பட்டது என
இறுதியாகப் பொன்மொழிந்து
வலைக்குள் கடலைக்
கடைசியாகப் பார்த்த கண்களுடன்
ஒரு மீனுக்கும் இன்னொரு மீனுக்கும்
இடைப்பட்ட மீன்"

வலிமீன்களின் கண்களைப் புரிந்து கொள்வதும் கடலைப் புரிந்து கொள்வதும் ஒன்றுதான்.அதன் காரணமாகவே கல்யாண்ஜியின் புரிதல் எல்லைக்குள் பிடிபடுகிறது பிரபஞ்சம்.

மணல் உள்ள ஆறு
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
விலை : ரூ.75/    
 புத்தகத்தை ஆன்லைனில் பெற... http://www.vyazashoppe.com/intest-s.php?c=41&p=99