Monday, January 23, 2012

உயிரினில் நிறைபவன்


 எத்தனை சாலைகள் இருந்தாலென்ன
எல்லாம் ஒருவழிப் பாதை
பித்தனும் சித்தனும் முக்தனும் சொல்லும்
வார்த்தைகள் எல்லாம் கீதை
கணபதி அவனே கர்த்தனும் அவனே
ககனத்தின் மூலம் அவனே
உருவம் இல்லாத் திருவும் அவனே
உயிரினில் நிறைபவன் சிவனே

ஏற்றிய சுமைகள் எத்தனை வினைகள்
எல்லாம் சுமந்திட வேண்டும்
மாற்றிட நினைத்து மண்ணுக்கு வந்தால்
வழியினில் சுமைபெறத் தூண்டும்
காற்றினை இழுத்து கடுஞ்சுமை குறைத்து
கனம்விழ குருவருள் வேண்டும்
தேற்றவும் ஆற்றவும் தெளிவுள்ள குருவின்
துணைபெறத் திருவருள் வேண்டும்



இதுவுந்தன் பாதை இதுவுந்தன் பயணம்
என்பதை வகுப்பவன் இறைவன்
எதிர்வரும் பகைமை எல்லாம் விலக்கி
இதுவழி என்கிற தலைவன்
புதியதோர் ஒளியில் புரிதலின் தெளிவில்
பொலிந்திட அவனே வருவான்
விதியினை வகுத்து விலக்குகள் கொடுத்து
விந்தைகள் பலவும் புரிவான்

திரைகடல் அலைகள் தினம் இடித்தாலும்
துறைமுகம் திடமாய் இருக்கும்
வரையறை கடந்து கடலெழும்போது
கரையையும் அள்ளிக் குடிக்கும்
வரைகளின் மேலே உறங்கிடும் முகில்கள்
வாரிதி வாரிக் குடிக்கும்
ஒருநொடி அவனின் திருவிழி பதிந்தால்
ஒளிச்சுடர் வினைகளை எரிக்கும்