Friday, February 19, 2010

நவராத்திரி கவிதைகள் (14)

1.குமரித் தெய்வம்

சின்னஞ் சிறுமியிவள்- நம்
செல்வக் குமரியிவள்
என்னில் நிறைந்திருக்கும்-ஓர்
இன்பக் கவிதையிவள்
தன்னந் தனிமையிவள்-உயர்
தாய்மைக் கனிவு இவள்
பொன்னில் எழுதிவைத்த -ஒரு
புன்னகை ஜோதியிவள்

வாலைக்குமரியிவள்- நம்
வாழ்வின் பெருமையிவள்
மூலக் கனலாகி- நிற்கும்
மந்திர ரூபம் இவள்
நீலக் கடலருகே-வாழும்
நித்திய கன்னியிவள்
காலம் உணராத -பெரும்
காதல் கனவு இவள்

மூன்று கடல்கள் தொழும்-ஒரு
மோனத் தவமும் இவள்
நான்கு மறைகளுக்கும்-நல்ல
நாயகத் தெய்வம் இவள்
தோன்றும் புலனைந்தும் -நின்று
தோயும் சிவமும் இவள்
ஈன்ற உலகுதனைக் -காக்கும்
எங்களின் அன்னை இவள்

செஞ்சுடர் வண்ணமிவள்-அருள்
செங்கயல் கண்ணியிவள்
அஞ்சு கனல் நடுவே-தவம்
ஆற்றிடும் தேவியிவள்
பஞ்செனும் பாதம் வைத்து-மனப்
பீடத்தில் ஏறுபவள்
நெஞ்சினில் கள்ளம் கொண்டால்-கண
நேரத்தில் மாறுபவள்

கங்கைச் சடை இறைவன் -நெஞ்சில்
கொஞ்சிடும் தாகம் இவள்
மங்கல ரூபம் இவள்-அட
மாபெரும் மோகம் இவள்
தங்கத் திருவுடலில்-கனல்
தாங்கிடும் யாகம் இவள்
கங்குல் இருளகற்றும்-இளங்
காலை உதயமிவள்

ஆலம் விழுங்கியவன் -கண்டம்
ஆள்கிற நீலியிவள்
கோலம் அழகெனினும்-கொள்ளும்
கோபத்தில் காளியிவள்
சேலெனக் கண்சிரிக்கும்-இளம்
சிற்றாடைச் செல்வியிவள்
ஓலமிடும் கடலில் -வரும்
ஓங்கார நாதமிவள்

2.ஆசையுடன் சொல்லுந்தமிழ் கேட்பாள்

சக்திக்குக் கவிதைமொழி சங்கேத பாஷை
சந்நிதியின் கிளிகளுக்கும் சுரம்பாடஆசை
பக்தியுடன் இசைப்பதெல்லாம் சங்கீதமாம்-இந்தப்
பேதைசொல்லும் உளறலெல்லாம் புதுவேதமாம்!

எத்தனையோ நியமங்கள் மறைசொல்லிக் காட்டும்
பித்துமனம் அன்னைக்குப் பிடிமண்ணை ஊட்டும்
தத்துவங்கள் மண்டைக்குத் தகராறுதான் -அந்தத்
தாய்நினைத்தால் என்வாழ்வு வரலாறுதான்

அரக்கரினம் அழிக்கத்தான் அவள்சீறி எழுவாள்
இரக்கமுடன் சிறுவன்முன் பாலாகப் பொழிவாள்
விரதமெல்லாம் என்னுள்ளம் அறியாதது-அவள்
விழிபட்டு வினையெல்லாம் பொடியானது

அல்லுக்குள் இருளாக அவள்நின்று முறைப்பாள்
சொல்லுக்குள் ஒளியாக சுடர்வீசிஜொலிப்பாள்
கல்லைவிட என்னுள்ளம் கரும்பாறைதான்-அவள்
கடைக்கண்ணால் இன்றதுவும் கனிச்சோலைதான்

வேள்வியிலே விழுந்தாலும் வந்துவிட மாட்டாள்
வேகமுடன் வந்தவளே என்பாடல் கேட்டாள்
கேள்விக்குள் அவள்கருணை அடங்காதுதான்-என்
கேவலொலி அவளுள்ளம் தாங்காதுதான்

ஆதிசக்தி யாயிருந்தும் அவளெனக்கு அன்னை
நாதியில்லாப் பிள்ளையென்று நாடிநிற்பாள் என்னை
பாதகங்கள் ஒருபோதும் தாளாதவள்-என்
பாவங்கள் ஒருபொருட்டாய்ப் பாராதவள்

பிரபஞ்சங்கள் கருப்பையில் பெற்றெடுத்து வளர்ப்பாள்
பிரியத்தில் ஒருமகனைப் பெற்றவள்போல் இருப்பாள்
நரகத்தில் நான்வீழத் தாங்காதவள்-இங்கு
நான்பிறந்த காரணத்தால் தூங்காதவள்

ஊரெல்லாம் கோயிலுண்டு உள்ளமவள் வீடு
தேரெல்லாம் காத்திருக்க ஏறுவதென் ஏடு
காரெல்லாம் வான்வெளியில் விதைத்தாள் -நான்
கவளமுண்ண தானியங்கள் கொடுத்தாள்

பூசனைக்கு வேதமெல்லாம் போட்டியிட்டு முந்தும்
ஈசனவன் திருவிழிகள் இளங்காதல் சிந்தும்
பாசமுடன் அன்னையென்னைப் பார்ப்பாள் - நான்
ஆசையுடன் சொல்லுந்தமிழ் கேட்பாள்

3.எங்கும் அவள் கோலம்

பொன்னில் குளித்தொரு மின்னலெழுந்தது பொன்னி நதியோரம்-அதன்
கண்கள் இரண்டினில் வெய்யில் பிறந்தது வானம் ஒளிரூபம்
சின்னஞ் சிறுபதம் மெல்ல அசைந்ததில் தென்றல் தடுமாறும்-எங்கள்
அன்னை இவளென விண்ணும் குதித்திட எங்கும் அவள்கோலம்

பண்டொரு நாளவள் பர்வத ராஜனின் பாசச் சிறுபிள்ளை-தனைக்
கொண்டவன் ஆடிடும் கோரச் சுடலையில் கொஞ்சும் கொடிமுல்லை
அண்டம் முழுவதும் தந்தவள் ஆயினும் அன்புக் கவளெல்லை- நீல
கண்டத்தில் கைவைத்த காருண்ய தேவியின் காதலுக்கீடில்லை

தங்க முகத்தினில் குங்குமம் மின்னிடக் கோயிலில் நிற்கிறவள்-ஒரு
பங்கம் எதுவுமென் பாதை வராமலே பார்த்து மகிழ்கிறவள்
சிங்கத்தில் ஏறியே சீறி அசுரர்மேல் சூலம் எறிகிறவள்-அதில்
பொங்குங் குருதியை செஞ்சுடர் வண்ணமாய் வானில் வரைகிறவள்

கும்மிகள்கொட்டியே கும்பிடும்பக்தர்முன் கோலாட்டம் ஆடிடுவாள்-தனை
நம்பிய பிள்ளைகள் நெஞ்சக் கவலையை வேலாட்டம் சாடிடுவாள்
வெம்பிய பட்டரின் வேதனை தீர்த்திட வெண்ணிலவாகி வந்தாள்-எங்கள்
சம்பு தவம் செய்யும் இன்ப வனத்தினில் சங்கமம் காண வந்தாள்

காலை விடியலைக் காட்டும் அவளொளி காண அரியதடா-கடும்
பாலை வழியினில் பாலைத் தருமருள் பாட அரியதடா
வாலை வடிவினள் கோலக் கருணையோ வானில் பெரியதடா-அவள்
காலைப் பிடித்தவர் வாழ்வை ஜெயித்தவர் காலம் உணர்த்துமடா

4 உள்ளத்தில் அவள்நடந்த ரேகை

சொந்தமெல்லாம் அவள்போட்ட கணக்கு-அன்னை
சொக்கட்டான் ஆட்டத்தின் வழக்கு
அந்தமிலாப் பேரழகி அன்புநிறை சந்நிதியில்
ஆசையுடன் ஏற்றுகிற விளக்கு-இந்தப்
பாசமெல்லாம் அவள்கொடுத்த ஜொலிப்பு

எத்தனையோ ரூபமவள் எடுப்பாள்-வந்து
என்வினைகள் அத்தனையும் முடிப்பாள்
கத்தியழுதாலு மெங்கள் சக்தியறியாததென்ன
கேட்டவரம்பொழுதறிந்து கொடுப்பாள்- நம்
பசியறிந்து பாலமுதம் படைப்பாள்

தோழியென்றும் வரத்தெரிந்த தோகை-என்
தோளிரண்டில் அவள்கொடுத்த வாகை
ஊழியினை ஆட்டுவிக்கும் உத்தமியைக் கைதொழுதேன்
உள்ளத்தில் அவள்நடந்த ரேகை-இந்த
உலகமவள் படியளந்த ஈகை

யானெனது என்றுதுள்ளும் உள்ளம்-இவை
யாவையுமே அவள்கருணை வெள்ளம்
ஊனெடுக்கச் சொன்னவளே உள்நிலையில் ஆழ்ந்திருந்து
தேனெடுக்கச் சொன்னதென்ன கள்ளம்!-இந்தத்
தேகமந்த தேன்நிரம்பும் பள்ளம்!

ஒளிசுமந்த புன்னகையில் விழுந்தேன் - அவள்
ஒருபார்வை பார்த்தவுடன் மலர்ந்தேன்
கிளிசுமந்த தோளழகி கண்சிவந்த பேரழகி
கனகமலர்ப் பாதத்தில் கிடந்தேன் -என்
கலிமெலிந்து போனதென எழுந்தேன்

5.பொம்மைகள்

மனதுக்குள்ளே குவியலாக பொம்மைகள் -அதை
மகராசி அடுக்கிவைத்தால் அழகுதான்
கனவினிலே பார்த்தசில பொம்மைகள் - அதை
காளியன்னை வாங்கித்தந்தால் மகிழ்வுதான்
எனதுகையில் எத்தனையோ பொம்மைகள்-அவை
எட்டி எட்டிப் போகும் போது அழுகைதான்
தனிமையிலே மிரட்டுதம்மா பொம்மைகள்- நான்
தணல்நடுவே மாட்டிக் கொண்ட மெழுகுதான்

தொட்டில்கண்ட காலம்முதல் பொம்மைகள்-எனைத்
தொடர்ந்துவந்து விரட்டுவதைக் கூறவா?
பட்டமரம் தன்னில்செய்த பொம்மைகள்-அவை
பூத்துத்தந்த பூக்களைநான் காட்டவா?
விட்டபின்னும் ஒட்டிக்கொண்ட பொம்மைகள்-அதன்
விளையாட்டில் வலியவந்து மாட்டவா?
கெட்டபின்னும் கையில்தொட்ட பொம்மைகள்-அதன்
காயங்களைக் கவிதைகொண்டு ஆற்றவா?

வலுவில்லாமல் வீசிவிட்ட பொம்மைகள்-அவை
வழியினிலே கிடக்குமென்று தேடினேன்
சலித்துக்கொண்டே வாங்கிவந்த பொம்மைகள்-அவை
செய்திருக்கும் உதவிகண்டு ஆடினேன்
நிலவுக்குள்ளே கண்டெடுத்த பொம்மைகள்- அவை
நேரில்வந்து கொஞ்சும்போது பாடினேன்
கொலுவினிலே நாமும்கூட பொம்மைகள்-அன்னை
கொண்டுவந்து வைக்கும்போது வாழுவேன்

தேடித்தேடி வாங்கிவந்த பொம்மைகள்-அவை
தோள்களிலே பாரமாகும் விந்தையே
வாடிவாடி ஏங்குகின்ற மாந்தர்கள்-இந்த
வையகமே பொம்மைவிற்கும் சந்தையே
ஓடிஓடி ஆடுமிந்த பொம்மைகள்-அவள்
உந்துவிசை தந்ததனால் மட்டுமே
ஆடியாடி ஓய்ந்துவிழும் பொம்மைகள்-இது
ஆதிசக்தி போட்டுவைத்த சட்டமே!

6.நாளும் பொழுதுமே தேவிமுகம்

காலைக் கருக்கலில் கன்னிமுகம்-உச்சி
காயும் கதிரினில் காளிமுகம்
நீல இரவினில் நீலிமுகம்-இங்கு
நாளும் பொழுதுமே தேவிமுகம்

நீளும் மலர்களில் அன்னைவிரல்-முகில்
நீந்திடும் வானெங்கள் அன்னை உடல்
கோள்கள் அவளது தாயத் திரள்-அந்தக்
கோயில் மணிச்சத்தம் அன்னை குரல்

வண்டு முரல்வதே மந்திரமாம்-மெல்ல
வீசிடும் தென்றலே சந்தனமாம்
தண்டுவடமே கொடிமரமாம்-இந்தத்
தேகமே அன்னையின் ஆலயமாம்

வேதங்கள் அன்னையின் பாதங்களாம்-அதில்
வண்ணக் குழம்புகள் நாதங்களாம்
போதங்கள் கோயிலின் தீபங்களாம்-அவள்
பார்வையில் பூப்பதே ஞானங்களாம்

அம்புலி சூரியன் சக்கரமாம்-எங்கள்
அன்னைக்கு வான்வெளி வாகனமாம்
அம்பிகை சந்நிதி அண்டமெல்லாம்-அங்கு
அர்ச்சனைப் பூக்களே நம்முயிராம்




7.கரூர் வடிவுடை நாயகி

அப்பிபாளையத்திலே அன்னைக்குப் பிள்ளையாய்
அம்பிகை பிறந்ததென்ன
அப்பனை ஈசனைக் கைப்பிடித் திடுகின்ற
ஆவேசம் வளர்ந்ததென்ன
கற்பனை என்றிதைக் கருதிடா வண்ணமே
காட்சிகள் நிகழ்ந்ததென்ன
பொற்புடை ஈசனும் ஆநிலைக் கருவூரில்
பூவையை மணந்ததென்ன

விடிவுடை வானத்தின் வெளிச்சமாய் வருகின்ற
வற்றாத கருணை ஒளியே
கொடியிடை படர்ந்திடும் கொம்பென ஈசனைக்
கருதிகை பற்றும் எழிலே
அடிமுடி அறிந்திடா அப்பனை மணந்திட
ஆநிலை வந்த அழகே
வடிவுடை அன்னையே!புதிரென்னும் வாழ்வினில்
விடைகளைத் தந்து அருளே!

சந்நிதியின் முன்பாக சொல்லியழ வந்தாலோ
சஞ்சலம் மறக்கின்றதே
அன்னையுன் பொன்முகம் அற்புதச் சுடர்விட
அவதிகள் இறக்கின்றதே
என்னைநான் தொலைத்ததை எண்ணிடும் கவலையும்
இல்லாமல் தொலைகின்றதே
தன்னையே ஈசனும் தந்தவுன் சரிதையால்
திசைகளும் சிலிர்க்கின்றதே

கல்யாண பசுபதி என்கின்ற பேரினைக்
கருவூரில் நாதன் கொண்டான்
சொல்லென்றும் பொருளென்றும் தேவியர் இருவரை
சுந்தரன் தூதன் கொண்டான்
அல்லென்றும் பகலென்றும் பொழுதுகள் சுழல்கையில்
அந்தியாய் வந்துநின்றான்
கல்லென்று சொல்பவர் கருத்தையும் கனிவிக்க
கைத்தலம் பற்றி நின்றான்

மானிடப் பெண்ணாக மண்ணிடை வந்தவள்
மாசக்தி ஆகிநின்றாள்
ஊனுடன் உயிரினை உத்தமன் பாதத்தில்
உறுபொருள் ஆகத் தந்தாள்
வானிடம் பெறுவதே வாழ்கிற உயிர்பெறும்
வாழ்வென்று காட்டி நின்றாள்
தானெனும் ஒன்றினைத் துறந்தவள் பிரபஞ்சமே
தானென்று ஆகிநின்றாள்


8.என்ன செய்வேன்

இல்லாத வல்லமை உள்ளதாய் எண்ணிடும்
இதயத்தை என்ன செய்வேன்
சொல்லாத புகழ்மொழி சொன்னதாய் நம்பிடும்
சிந்தையை என்ன செய்வேன்
கல்லாத நெஞ்சினைக் கல்வியின் மலையென்னும்
கர்வத்தை என்ன செய்வேன்
பொல்லாத மாயையின் நில்லாத லீலைமுன்
பிள்ளைநான் என்ன செய்வேன்

மாற்றங்கள் ஏதொன்றும் ஏற்காமல் தூற்றிடும்
மாயையை என்ன செய்வேன்
நேற்றைக்கோர் நீதியும் நாளைக்கு வேறுமாய்
நினைப்பதை என்ன செய்வேன்
காற்றிலாப் பாலையில் காற்றாடி விடுகின்ற
கோலத்தை எங்கு சொல்வேன்
ஊற்றாகும் வினைகளின் சேற்றிலே மூழ்கிடும்
உயிரைநான் என்ன செய்வேன்

எத்தனை பாடுகள் எத்தனை கேள்விகள்
இவைநீயும் அறியாததா
அத்தனை இருளையும் அகற்றிடும் கடைவிழி
அதுஇன்னும் திறவாததா
பித்தனைப் பித்தாக்கும் பிச்சியே உன்செவி
புலம்பல்மொழி கேளாததா
நித்தமும் புதியதாய் நேர்ப்படும் வானமே
நிலைநீயும் உணராததா

ராகங்கள் பிறக்கின்ற ரஞ்சிதத் தேன்குரல்
ராவினில் ஒலிக்கட்டுமே
யாகங்கள் துதிக்கின்ற யாமளை பாதங்கள்
என்வினை மிதிக்கட்டுமே
பாகமுனைக் கொண்டவன் வேகங்கொண்டாடிடும்
பாட்டினொலி கேட்கட்டுமே
தேகமிதன் உள்ளிலே தேன்மிதக்கும் கள்ளிலே
தாகங்கள் தணியட்டுமே


9.கானமிசைத்தாள் அன்னை


வீணை நரம்புகள் அதிர்ந்தன வாணியின்
விரல்தொடும் முன்னாலே-கானம்
பிறந்திடும் முன்னாலே
ஆணை அவள்தர அரும்பிய கலைகளும்
நடந்தன முன்னாலே-அவள்
பதங்களின் பின்னாலே

நான்முகன் கைத்தலம் நாயகி பற்றிட
நிகழ்ந்தது படைப்பெல்லாம்-இங்கே
பிறந்தது பிறப்பெல்லாம்
தேன்குரல் ஒலித்திட திசைகளும் சிலிர்த்திட
விளைந்தது மொழியெல்லாம் - நம்
செழுந்தமிழ் அழகெல்லாம்

வெண்ணிறத் தாமரை பண்ணிய புண்ணியம்
வீற்றிருந் தாள் அன்னை-தவம்
நோற்றிருந்தாள் அன்னை
கண்கள் திறந்ததும் பண்கள் பிறந்ததும்
கானமிசைத்தாள் அன்னை-முக்
காலமசைத்தாள் அன்னை

சதங்கையின் மணியினை எழுதுகோல் முனையினை
சந்நிதியாய்க் கொண்டாள்-கண்ணில்
செஞ்சுடர் ஒளி கொண்டாள்
விதந்தரும் உளியினை தூரிகை முனையினை
வீடென அவள்கொண்டாள்-கையில்
ஏடொன்றும் அவள் கொண்டாள்

மலைமகள் அலைமகள் மகிமைகள் சொல்லவும்
கலைமகள் அருள் வேண்டும்-சொல்லுங்
கவிதையில் அவள் வேண்டும்
நிலையுயர் வீரமும் நலந்தரும் செல்வமும்
நிறைந்திட மதி வேண்டும்-எங்கள்
நிர்மலை துணை வேண்டும்

நாமகள் அவளது நாட்டியம் நிகழ்கையில்
நாவே பதமென்றார்-அவள்
பாதம் சதமென்றார்
மாமது ரக்குரல் மயங்கிடச் செய்கிற
மந்திரம் இதமென்றார்-அவள்
மாயங்கள் நிஜமென்றார்

சாமரம் வீசிட சந்திர சூரியர்
சந்நிதி சேர்கின்றார்- அவள்
சாநித்யம் காண்கின்றார்
பாமரன் நாவிலும் பாமழை பொழிகிற
பேரருள் உணர்கின்றார்-அந்தப்
பெருமையில் ஒளிர்கின்றார்


10.ஆசனங் கொண்டாள்

அலைநடுவே பிறந்துவந்தாள் அழகுருவாக-அங்கே
அமுதம்கூடப் பிறந்ததுண்டு அவள்நகலாக
விலையறியா வளம் பெருகும் அவளருளாக-உள்ள
வறுமையெல்லாம் விலகிவிடும் ஒருவழியாக

மாலவனின் மார்பினிலே ஆசனங் கொண்டாள்-தன்
மணாளனுக்கு சீதனமாய்ப் பாற்கடல் தந்தாள்
பாலையிலே தவிக்கும்போது பால்மழை பெய்வாள்-ஒரு
பார்வையிலே குடிசைகளை கோபுரம் செய்வாள்

கண்ணன்வாயில் விழுந்த அவல் கரைந்திடும் முன்னே-அவள்
கண்ணசைவில் குசேலர்வீட்டில் நிறைந்தது பொன்னே
மண்ணைத் தின்னும் சிறுவனுக்குக் கவலைகள் என்னே-அந்த
மலர்மகளே மணமகளாய் அமைந்ததன் பின்னே

11.சீக்கிரம் வந்தே அமராயோ

சட்டைப் பைக்குள் கைவிட்டால்
சரஸ்வதி ஆயுதம் தட்டுப்படும்
கட்டி வாசியைக் காணுங்கால்
கயிலைக்காரியின் மூச்சுபடும்
பெட்டி திறந்து வைக்கின்றேன்
பர்ஸிலும் இடங்கள் கொடுக்கின்றேன்
சுட்டிப் பெண்ணே மஹாலஷ்மி
சீக்கிரம் வந்தே அமராயோ

கால்துகள் உனதொன்று பட்டாலும்
காசோலைகள் குவியாதோ
வால்தனம் பார்த்துப் புன்னகைத்தால்
வரைவோலைகள் நிறையாதோ
பாலகன் என்னைப் பார்த்திட்டால்
பணவிடை வந்து சேராதோ
காலத்தில் கூட்டங்கள் அமைந்திட்டால்
கவர்கள் கையில் கிட்டாதோ

அஷ்ட லட்சுமி நீயென்று
ஆராதனைகள் செய்கின்றோம்
இஷ்ட லட்சுமி இவளென்று
எழுதவும் கூடச் செய்கிறோம்
துஷ்டர்கள் சிலபேர் தூண்டிவிட்டு
தாயே உன்போல் வேடமிட்டு
கஷ்ட லட்சுமி அனுப்பிவைத்தார்
கடுகி அவளை விரட்டாயோ

செந்தாமரையில் அமர்ந்தாயே
சுற்றிலும் பொய்கை நாறாதோ
சுந்தரன் நெஞ்சில் அமர்ந்தாயே
சுற்றுலா கிளம்பக் கூடாதோ
சொந்த மனைகள் வாங்காதே
விலைகள் நிலவரம் தெரியாதோ
இந்தப் பிள்ளை இதயத்தை
இடமாய்க் கொண்டால் ஆகாதோ

தனங்கள் தான்யம் கேட்டாலோ
தேர்தலில் கூடத் தருகின்றார்
கனமாய்ப் பதவிகள் கேட்டாலோ
கவர்னர் பதவியே தருகின்றார்
தனியாய் வேறென்ன கேட்டாலும்
தலைவர்கள் இதெல்லாம் தருகின்றார்
மனமாம் சந்தையில் நிம்மதியை
மகிழ்ந்து தருவாய் மஹாலஷ்மி

12.வெண்பாவின் மாலை வடிவாமோ

வெண்கமலம் வீற்றிருப்பாள் வாணி-விருப்புடனே
செங்கமலம் வீற்றிருப்பாள் ஸ்ரீதேவி-கண்குளிர
சிங்கமுது கேறிச் சிரித்திருப்பாள் மாசக்தி
இங்கினிமேல் உண்டோ இடர்.

ஒன்பது ராத்திரிகள் உள்முகமாய்ப் பார்த்திருந்தால்
பொன்பொழியும் கல்வியெனும் பூமலரும்-வன்மையெலாம்
வந்து நிறைந்திருக்கும் வானம் இறங்கிவரும்
முந்திவரும் மேன்மை முகிழ்த்து

காலை இளங்காற்றே கார்முகிலே கண்ணெதிரே
வாலை வடிவாகும் வானகமே -கோலங்கொள்
முப்பெருந் தேவியர் முன்வைத்தே ஆடிடும்
பொற்பதங்கள் எங்கே புகல்.

கண்பாவை பூச்சொரிய காட்சிதரும் தேவியர்க்கு
வெண்பாவின் மாலை வடிவாமோ-பெண்பாவை
கன்னந் தனில்மழலை காதலுடன் தீற்றுகிற
சின்னவிரல் மையென்றே சாற்று.

அல்லி நிறமென்றும் அல்லின் நிறமென்றும்
சொல்லி வழிபாடு செய்யுங்கால்-வல்லியர்
எந்த விதமும் எதிர்ப்படுவர் ஆகையினால்
வந்துநிற்கும் யாவரையும் வாழ்த்து.

பந்தங் கொடுப்பதுவும் பாரமெனக் காட்டுவதும்
சொந்தம் பகையாய்ச் சொடுக்குவதும்-சந்ததமும்
தம்மை நினைத்துத் தமிழ்பாட வேண்டுமென்றே
அம்மையர் செய்யும் அருள்.

உற்ற வினைகள் உயிர்நிரம்பி யேததும்ப
உற்பத்தி செய்வினைகள் ஓங்கிவரும்-கற்றவையோ
உச்சந் தலைகனக்கும்! உத்தமியர் கண்பார்த்தால்
துச்சந்தான் இந்தத் துயர்.

பூங்கமல மாதர் புடைசூழ மாசக்தி
ஓங்கார ரூபமென ஓங்கிடுவாள்-ஆங்கே
அகர உகர மகரமாய் மூன்று
சிகரமாய் நிற்குஞ் சிறப்பு .

வேதங்கள் மீதேறி வஞ்சியிவர் ஆடுகையில்
பாதங்கள் நோகும் பொழுதறிந்து-நாதத்தின்
ஏழு ஸ்வரங்களும் ஏந்தவரும் அக்கணத்தில்
வாழும் இசையின் வளம்.

வையகமே மூவர் விளையாட்டு மைதானம்
பொய்யகலும் நெஞ்சமே பூப்பந்து-கையெடுத்து
வீசிவிரைந் தேந்தி விளையாடுங்கால் வினைகள்
கூசிவிரைந் தோடுங் குதித்து.


13.பொழுது புலர்கிற வேளையிது

புன்னகை எழுதுக பூவிதழே- நல்ல
பொழுது புலர்கிற வேளையிது
மின்னலை எழுதும் கிரணங்களால்-வான்
மிளிர்ந்து மலரும் நேரமிது
தன்னிலை உணர்ந்தநல் ஞானியரும்-ஒளி
தனக்குள் தேடிடும் சாதகரும்
அன்னையின் தளிர்க்கரம் தீண்டியதில்-தம்
ஐம்பொறி அவிக்கும் காலமிது

வெண்ணிற முகில்கள் வான்பரப்பில்-ஒரு
விசித்திர லஹரியில் மிதந்திருக்கும்
பண்ணொலி மிழற்றும் பறவைகளும்-அன்னை
புகழினை எங்கும் ஒலிபரப்பும்
கண்களில் அமுதம் கசிந்திருக்க-தவம்
கனிந்த உயிர்கள் சிலிர்த்திருக்கும்
வண்ணங்கள் விசிறும் தூரிகையால்-கீழ்
வானத்தின் கன்னம் சிவந்திருக்கும்

ஆதவக் கீற்றுகள் அவள்கொடைதான் -அந்த
அருவியின் தாளங்கள் அவள்நடைதான்
மாதவம் புரிபவர் மனக்கதவம்-தொடும்
மலர்க்கரம் அன்னையின் அருளொளிதான்
பாதங்கள் பதித்தவள் பவனிவர-நீலப்
பட்டுக் கம்பளம் வான்வெளிதான்
நாதமிசைக்கிற கடலலைகள்- எங்கள்
நாயகி நகைத்ததன் எதிரொலிதான்

தத்துவம் அவளது கால்விரல்கள்-அன்னை
திருவடி இரண்டும் மறையொளியாம்
வித்தகர் அறிவே பட்டாடை-அவர்
விநயம் அன்னையின் அணிகலனாம்
சித்திரக்காரர்தம் தூரிகைகள்-இன்னும்
சிந்திக்காதது அவள்நிறமாம்
நித்தில நிலவொளி புன்னைகையாய்-மின்ன
நயனங்கள் தருவதே கதிரொளியாம்


14.மூவரின் வாஞ்சையும் பெருகும்

பிரபஞ்சம் என்கிற பல்லாங்குழியில்
பற்பல கோள்களும் காய்கள்
விரலகளில் குலுக்கி விளையாடத்தான்
வாய்த்தனர் மூன்று தாய்கள்

சூரிய அடுப்பினில் செந்தணல் மூட்டிச்
சமைத்துக் கொடுத்தனர் வானம்
காரியக் காரிகள் பாத்திரத் திரள்களைக்
கழுவிக் கவிழ்ப்பதே ஞானம்

அன்னையர் மூவர் அரட்டையில் பிறந்தவை
அறுபத்துநான்கு கலைகள்
மின்னை இடியை மழையை நெய்த
மகிமைக்கு ஏது விலைகள்

பூமிப் பள்ளியில் பிள்ளைகள் படித்திட
பாடம் வகுத்தனர் மூவர்
சாமிகள் எல்லாம் சேர்ந்து படிக்கவும்
செய்தனர் அந்தத் தாயர்

அன்னத்திலேறி ஒருத்தியின் கணவன்
அங்கும் இங்கும் அலைவான்
இன்னோர் அன்னையை இதயத்தில் வைத்தவன்
எல்லா நேரமும் துயில்வான்

மற்றவள் கணவன் மிகுவிடம் பருகி
மோன மயக்கத்தில் இருக்க
பெற்றநம் தாயரே பல்லுயி ரெல்லாம்
படைக்க-காக்க-அழிக்க

அண்டம் என்கிற ஒண்டுக் குடித்தனம்
அன்னையர் மூவரின் இருப்பு
அண்ட விடாமலே பகையை அழிப்பதில்
அடடா மூவரும் நெருப்பு

முத்தீ எனத்திகழ் சக்தியர் அனலில்
மூல வினைகளும் கருகும்
முத்தி என்கிற சொத்தினைத் தருவதில்
மூவரின் வாஞ்சையும் பெருகும்

வாழ்க்கைப் பள்ளியில் வாசிக்கும் பிள்ளைகள்
வரும்வரை அன்னையர் தவிப்பார்
ஊழெனும் புத்தக மூட்டையை இறக்க
உறுதுணை புரிந்து அணைப்பார்

அன்னையர் ஊட்டும் அமுதம் மறுத்து
ஐம்புலன் கேட்கும் தீனி
என்னதந் தாலும் அடம்பிடிக்காமல்
ஏற்கும் பிள்ளையே ஞானி

No comments: