இப்படித்தான் ஆரம்பம்-5

எத்தனையோ குளறுபடிகளுக்கு நடுவிலும் கவியரசு கண்ணதாசன் நினைவு மன்றம் முறையாகவே
கட்டமைக்கப்பட்டிருந்தது.கவியரங்கிற்குக் கோமகனை அழைத்து வந்தவரும், கண்ணதாசன் விழாக்களுக்கு தாராளமாக செலவுசெய்தவரும்/செய்பவருமான அந்த குறுந்தாடிக்காரர் கிருஷ்ணகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வலம்புரி ஜான் அவர்களை மன்றத்தின் சிறப்புத் தலைவராக விளங்கக் கோரி ஒப்புதலும் பெற்றிருந்தார்.

நான் ஒரு பிரபலத்தை சிறப்பாலோசகராகத் திகழ ஒப்புதல் பெற்றுத் தருவதாக சொன்னதோடு
ஒப்புதலும் வாங்கிவிட்டேன்.அந்தப் பிரபலம்தான் சுகிசிவம் அவர்கள். கோவையில் இராமநாதபுரம் என்றொரு பகுதி.அங்குள்ள வேல்முருகன் கோவிலில் கந்தர் சஷ்டி விழாவில் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்த வருவார்.தொடர்ந்து போய்க் கேட்பேன்.குறிப்புகள் எடுப்பேன்.
இதுமாதிரியான கூட்டங்களுக்குப் போகும்போதெல்லாம்,"நாமொரு பள்ளி மாணவன்.பெரியவர்கள்
சொற்பொழிவைக் கேட்க வந்திருக்கிறோம்"என்று எனக்குள் இருக்கும் அம்பி முனகுவான்."அதெல்லாம் இல்லை!நம் சக பேச்சாளர் வந்திருக்கிறார்.இவரை இங்கிருக்கும் யாருக்கும் தெரியாது.நாம்தான் கவனித்துக் கொள்ள வேண்டும்"என்று எனக்குள் இருக்கும் அந்நியன் முழக்கமிடுவான்.அப்போது என்னிடம் இரண்டு செட் பட்டு ஜிப்பாக்கள் இருந்தன.பட்டு ஜிப்பா குர்தாவில் கிளம்புகிறேன் என்றால் கூட்டம் கேட்கப் போவதாகப் பொருள்.எட்டு முழம் வேஷ்டி,மடித்துவிடப்பட்ட முழுக்கை சட்டையோடு கிளம்பினேன் என்றால் கூட்டம் பேசப்போவதாகப் பொருள்.

கூட்டம் கேட்கப் போகும் இடங்களில் எனக்குள் இருக்கும் அந்நியன் செய்யும் அலம்பல்களைப் பார்த்து,பேச்சாளர்கள்,
என்னை அமைப்பாளர்கள் வீட்டுப் பிள்ளை என்று எண்ணிக் கொள்வார்கள்.அமைப்பாளர்களோ பேச்சாளருக்கு ரொம்ப வேண்டியவர் போலிருக்கிறது என்று நினைத்துக் கொள்வார்கள்.இந்த பில்ட் அப்புக்கு தன்னையும் அறியாமல் பெரிதும் துணை போனவர் சுகிசிவம்தான்.
அவர் பேச்சை ஆர்வமாக ரசித்துக் கேட்பதைத் தொடர்ந்து கவனித்து வந்தவர், தன் வழக்கத்திற்கு மாறாக என்னைப் பார்த்து புன்னகைக்கவெல்லாம் ஆரம்பித்தார்.
அமைப்பாளர்களுக்கே அதெல்லாம் அப்போது கிடைக்காது. எனவே நான் அவருக்கு ரொம்ப வேண்டியவன் என்று எல்லோரும் நினைக்கத் தொடங்கினார்கள்.இரண்டு மூன்று நாட்களிலேயே
மேடையில் அவர் அமர்ந்தவுடன்,கூப்பிடு தூரத்தில் நிற்கும் என்னையழைத்து காதில் ஏதோ சொல்வார்.நான் கம்பீரமாகத் தலையசைத்து விட்டு அவர் காதுகளில் எதையோ சொல்லிவிட்டு மேடைக்குப் பின்னால் போய்விடுவேன்.
உண்மையில்,தனக்கு சோடா வேண்டும் என்றுதான் கேட்டிருப்பார்.ஆனால் நான் செய்யும் தோரணையோ,அவர் ஏதோ கந்தபுராணத்தில் சந்தேகம் கேட்ட மாதிரியும் நான் விளக்கம் தந்த மாதிரியும் இருக்கும்.
இந்தப் பழக்கத்தை வைத்துக் கொண்டு அவரிடம் பேசி சிறப்பாலோசகராக விளங்க ஒப்புதல் வாங்கி விட்டேன்.வலம்புரி ஜானின் ஒப்புதல் கடிதம் வரும்முன்னே இவர் ஒப்புதல் வந்துவிட்டதால் லெட்டர் பேடில் சிறப்பாலோசகர்; சொல்லின் செல்வர் சுகிசிவம் என்று அச்சிட்டிருந்தோம்.வலம்புரி ஜானின் பதில் கடிதத்தில்."நண்பர் சுகிசிவத்தை நலம்கேட்டதாகச் சொல்லுங்கள்"என்றொரு வரியும் இருந்தது.அதைக்காட்டியதும் சுகிசிவம் முகத்தில் ஆச்சரியம்.அதற்கான காரணத்தை அவரே சொன்னார்.
அதற்கு சில ஆண்டுகள் முன்பாகத்தான் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடந்திருந்தது.அதில்
நடைபெற்ற வழக்காடு மன்றத்தில் இருவரும் நேருக்கு நேராக மோதிக் கொண்டிருந்தார்கள்.அபோதுதான் வழக்காடுமன்றங்களில் அணிக்கு ஒருவர் என்ற நிலை மாறி,
ஒரு வழக்கறிஞர் ,துணையாய் ஒர் இளம் வழக்கறிஞர் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.ஓரணியில் சுகிசிவம்,பேராசிரியை இளம்பிறை மணிமாறன்.எதிரணியில் வலம்புரிஜான்,புலவர் இந்திரகுமாரி.நடுவர்,பேரறிஞர்.எஸ்.இராமகிருஷ்ணன்.

"கம்பராமாயணத்தில் தமிழுணர்வு இருக்கிறது.மறுப்பவர்கள் குற்றவாளி" என்பது தலைப்பு.வலம்புரிஜான்,தமிழுணர்வு இருப்பதாய் சொல்கிறது.சுகிசிவம் அணி மறுத்துப் பேச வேண்டும்.எனவே
நிகழ்ச்சி அமைப்பின் படியும் வலம்புரி அணியே ஆளுங்கட்சி.அரசியலிலும் அவர் அப்போதுதான் அதிமுக வந்திருந்தார்.
வலம்புரி ஜான் பேசத் தொடங்கினார்.சீதை அன்னம்போல் அசைந்து வருகிறக் ஆட்சியைக் கம்பன் வருணிக்கும் பாட்டை வைத்துக் கொண்டு,அவருடைய பாணியில் "அன்னம் அசைகிறது!
அழகாக அசைகிறது' என்றெல்லாம் வர்ணிக்க அரம்பித்ததும்,சுகிசிவம் எழுந்து,'அது மிதிலாபுரியைச் சேர்ந்த வடநாட்டு அன்னம்!இதிலே தமிழுணர்வு எங்கே இருக்கிறது " என்றதும் ஒரே ஆரவாரம்.உடனே புலவர் இந்திரகுமாரி எழுந்து "சுகிசிவம் நாகாக்க வேண்டும் ! நாங்கள் ஆளுங்கட்சி" என்று இரண்டு அர்த்தங்களில் சொல்ல,அதற்கு சுகிசிவம் ஒரே அர்த்தத்தில்"நீங்கள் இப்போதுதான் அந்தக்கட்சிக்கு வந்திருக்கிறீர்கள்.அங்கே நிலையாக இருப்பீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் ' என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார்.

போதாக்குறைக்கு சுகிசிவம் அணிக்கு சாதகமாகத் தீர்ப்பளித்த பேராசிரியர் இராமக்கிருஷ்ணன்,
"ஜெயித்திருக்க வேண்டிய தனது கட்சியைத் தோற்கடித்த பெருமை வலம்புரி ஜானையே சாரும்"
என்று வெளிப்படையாகச் சொல,வலம்புரியார் தன்மீது பகை பாராட்டியிருக்கக் கூடும் என்பது சுகிசிவம் அவர்களின் கணிப்பு.ஆனால் வலம்புரியர்,'அரசியலிலே இதெல்லாம் சகஜமப்பா"என்று அந்த சம்பவத்தை அங்கேயே மறந்திருந்தார்.

இத்தகைய பின்புலங்களுடன் உருவான கண்ணதாசன் மன்றம்,தன் வளர்ச்சி நிதிக்காக மை டியர் மாமா நாடகம் நடத்தியது.நாடகம் நடைபெறும் முன்பே,கடும் கருத்து வேறுபாடு காரணமாக ரவி மன்றத்திலிருந்து விலகினார்.அவருடைய அலுவலகத்தில் இயங்கிய மன்றம்,பழையூரில் கல்விச்சங்கம் அருகே பாழடைந்த மாடிக் கட்டிடம் ஒன்றில் புதிதாக வந்த அந்த இரட்டைப்பட்டம் வாங்கியவர் அறையில் இயங்க ஆரம்பித்தது.

சிவகங்கைச்சீமையில் கவியரசு கண்ணதாசன்,"விடியும் விடியும் என்றிருந்தோம்! அது முடியும் பொழுதாய் விடிந்ததடா!"என்றொரு பாடல் எழுதியிருப்பார்.கண்ணதாசன் மன்றத்தைப் பொறுத்தவரை,அந்த நாடகம் நடந்த நாள் அப்படித்தான் விடிந்தது.பெருமளவில் பணக்கையாடல் நடந்தது.லூஸ்மோகன் முழுப்பணம் தந்தாலொழிய மேடையேற மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.நகைச்சுவை நாடகம் தொடங்கும் முன்னால் திரைக்குப் பின்னே ஒரு சோக நாடகமும் கண்ணீர்க் காட்சிகளும் நடந்து கொண்டிருந்தன.என் வகுப்புத்தோழன் விஜயானந்துக்கும்
எனக்கும் இதில் நடந்த ஊழல்கள் பற்றி ஒன்றும் தெரியாது.விஜயானந்தின் அப்பா சில ஆயிரங்களைக் கொடுத்து நாடகத்தை நடத்தச் சொல்லிவிட்டு,தன் மகனையும் என்னையும் அழைத்துக் கொண்டு அரங்கை விட்டு வெளியேறினார். மாலை போட்டு விரதமிருந்த கதாசிரியர் அள்ளித் தெளித்திருந்த ஆபாச வசனங்கள் பார்வையாளர்களை நெளியச்செய்தன.இடைவேளையில் சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு வந்தனர்.விஜய திருவேங்கடம்,தன் உரையில்,நாடகத்தின் ஆபாசத்தை நாசூக்காகக் கண்டித்த போது அரங்கம் கரவொலி செய்து ஆமோதித்தது.
புத்திசாலித்தனமாக திட்டமிட்டு இரட்டைப்பட்டக்காரர் எல்லோருக்கும் பட்டை நாமம் சார்த்தியிருந்தார்.ஆளுக்கொரு திசையாகச் சிதறினோம்.அந்த அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகளும் வீணில் முடிந்தன. அதே நேரம் வழக்கறிஞர் மனோகரன் போன்றவர்கள் ஆர்வமாக நடத்திவந்த கண்ணதாசன் இலக்கியக் கழகம் என்கிற அமைப்பும் வேகம் குறைந்து வந்தது.ஓரிரு வருடங்கள் முடிந்தன.
இதற்குள் நான் கல்லூரியில் சேர்ந்திருந்தேன்.வாசிப்பு,கூட்டங்கள் கேட்பது,கூட்டங்களில் பேசுவது எல்லாம் தொடர்ந்தது.அப்படி நாளிதழில் செய்தி பார்த்துவிட்டு ஓர் அமைப்பின் தொடக்கவிழாவில் கலந்து கொள்ள பீளமேடு ஹோப்காலேஜ் என்ற பகுதிக்கு ஒரு மாலை வேளையில் போனேன்.தேநீரகம் ஒன்று விடுமுறை விடப்பட்டு அங்கே கூட்டம் நடந்து கொண்டிருந்தது.உள்ளே நுழைந்த என்னை அங்கிருந்த அமைப்பாளர்கள் பிரியமுடன் வரவேற்று மேடைக்கு அழைத்துப் போயினர். பேசுமாறும் கேட்டுக் கொண்டனர். அந்த அமைப்பின் பெயர்,"பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை".

தொடரும்