ஆடலில் பேசிடுவான்

கீற்று நிலாவினில் பாலினை ஊற்றிக்
கிறுக்கன் தலைசுமந்தான்
ஊற்றி விடுமென்ற அக்கறை இன்றி
ஊர்த்துவம் ஆடுகிறான்
ஈற்றினை அறியா வான்வெளியெங்கும்
ஈசன் ஆடுகிறான்
போற்றி யிசைக்கிற விண்மீன் திரள்களின்
பாட்டினுக் காடுகிறான்

நாதம் இவனது நாபியில் பிறந்தது
நாளும் புதிய ஸ்வரம்
பாதம் அசைந்திட பூமி சுழலுது
பொழுதுகள் இவனின் வரம்
வேதம் இவனது வார்த்தையில் மலர்ந்தது
வானம் இவனின் தவம்
மோதி அலைகிற பேரலை யோசிவன்
மூச்சினில் உருண்டு வரும்சாத்திரம் கிரியைகள் சார்புகள் அனைத்தையும்
சாய்ப்பது இவனின் வெறி
தோத்திரம் உகக்கிற தோடுடை செவிகளில்
தோய்வது கவிதை வரி
ஆத்திரம் ஆனந்தம் அத்தனை யும்இவன்
ஆடலில் பேசிடுவான்
மாத்திரைப் போதினில் கோள்களை விழுங்கி
மீண்டும் படைத்திடுவான்

ஊன்றிய திருவடி ஒருமுறை சுழல்கையில்
ஊழ்வினை முடிந்துவிடும்
தோன்றிய பால்வெளி துலங்கிடும் படியவன்
தாண்டவம் நிகழ்ந்துவிடும்
ஈன்றவர் என்றிங்கு யாருமில் லாதவன்
ஈசனின் பிள்ளைகள் நாம்
மான்திகழ் கையினன் மழுவுடை நாயகன்
மலரடி சலங்கைகள் நாம்