அடுத்தடுத்து வந்த கிருத்திகைகளில், என்னையே செஞ்சேரிமலைக்கு செல்லப் பணித்தார் புலவர் ஜானகி அம்மையார். ஒவ்வொரு கிருத்திகைக்கும் ஒவ்வொரு தலைப்பில் பேசத் தொடங்கினேன். கந்தரலங்காரம், கந்தரனுபூதி என்று தொடங்கி பின்னர் பெரிய புராணத்தில் ஒவ்வொரு தலைப்பாக அங்கே அரங்கேறின. சேர்மன் வெங்கிடாஜலக் கவுண்டர் இருந்தால், அவர்தான் வரவேற்புரை நிகழ்த்துவார். அவர் கோவையிலுள்ள நன்னெறிக் கழகத்தில் உறுப்பினர். சமய இலக்கியங்கள் ஓரளவு தெரிந்தவர். வெளிப்படையான தலைப்பைத் தந்தால், வரவேற்புரையிலேயே பேசுபொருளின் முக்கிய சம்பவத்தைப் போட்டு உடைத்து விடுவார். கிராமப்புற மக்களுக்கு கதையும் பக்தியும் பிரதானம். பாடல்கள்-அதன் நயங்கள் எல்லாம், பெரியவர் தேவசேனாபதி போன்ற சிலருக்கு மட்டும்தான்.
எனவே, வெங்கிடாஜலக் கவுண்டரிடமிருந்து தப்பிக்க ஓர் உபாயம் செய்தேன்.அதை எந்த நாளும் காத்தேன். யாருக்கும் புரியாத விதத்தில் தலைப்பைக் கொடுத்து விடுவேன். "எது குறித்துப் பேசப்போகிறீர்கள்?" என்று கவுண்டர் கேட்டால் சிரித்து மழுப்பி விடுவேன். தன் வரவேற்புரையிலேயே அதற்கான கண்டனங்களையும் கவுண்டர் பதிவு செய்வார். நான் அசந்தால் தானே!!

முருகப்பெருமானின் ஆறுமுகங்களைச் சொல்லும் ஏறுமயில் ஏறிவிளையாடும்முகம் ஒன்றே என்ற பாடலை முன்னுதாரணமாகக் கொண்டு குகைப்பெருமானுக்கு நான் எழுதிய துதி மலர்களில் முதல் பாடல் இது:
பால்காட்டி மிளிர்கின்ற புன்னகை மலர்முகம்
பொலிவாடும் ஞானநிலையம்
பயம்நீக்கி ஜெயமெலாம் வழங்கிடும் ஒளிமுகம் பொலிவாடும் ஞானநிலையம்
பகைவீழ்த்தும் பாலவுருவம்
வேல்காட்டி சமரிடை வந்திடும் திருமுகம்வீரத்தின் மூலவடிவம்
வள்ளிதெய்வானையர் வழிபடும் அருள்முகம்
வினைதீர்க்க நின்ற சொரூபம்
கால்காட்டி ஆட்கொள்ளும கருணையின் மதிமுகம்
குன்றேறி நின்ற திலகம்
கனிவான முத்தமிழ் காத்திடும் கலைமுகம்
புலமையின் ஞான உதயம்
சேல்காட்டும் சுனைவளர் தென்சேரி அடிவாரம்
உறைகின்ற அருட்தெய்வமே
சிந்தைதனில் குடியேற வந்தருள்க
குகைபால தண்டாயுதபாணியே
(தொடரும்)
No comments:
Post a Comment