நிலவும் நானும்...

நீட்டிய விரலுக்கும் நிலவுக்கும் நடுவே
நீண்டது ஆயிரம் தூரம்-என்
நினைவில் ஆயிரம் பாரம்
 
ஒளி
காட்டிய பரிவும் கூட்டிய குளிரும்
காலம் முழுதும் வாழும்-அந்த
போதையில் இதயம் ஆழும்
 
 
எங்கே எப்படி நான்போனாலும்
நிலவின் பார்வையில் இருப்பேன் -அதன்
நிழலாய் பூமியில் நடப்பேன்
 
பொங்கும் வெய்யில் பொழுதிலும் நிலவின்
பொன்முகம் எண்ணிக் கிடப்பேன் -அது
பூக்கும் அந்தியில் உயிர்ப்பேன்
 
 
நட்சத்திரங்களின் நளினக் குலுக்கல்கள்
நெஞ்சில் பதிவதும் இல்லை-அதை
நேர்படப் பார்ப்பதும் இல்லை
 
ஒரு
முட்புதர் பாதையில் முல்லைக்காடு
முளைத்தபின் வலிகளும் இல்லை-என்
மூர்க்க குணங்களும் இல்லை
 
தேய்பிறை இல்லா தேவதை நிலவே
தினமென் கனவில் நீதான் -என்
திசைகள் எல்லாம் நீதான்
 
பாய்கிற நதியில் பொன்னொளி பரப்பிப்
பரவசம் கொடுப்பதும் நீதான் -என்னைப்
பரிவில் நனைப்பதும் நீதான்
 
மூடும் முகில்களைக் கோபமில் லாமல்
மெல்ல ஒதுக்கி விடுவாய்-அந்த
மென்மையில் உயிரைத் தொடுவாய்
 
நான்
பாடும் கவிதை வரிகளினூடே
மிதந்து மிதந்து வருவாய்-என்
மனதில் அமுதம் பொழிவாய்
 
வீணையின் தந்திகள் "விண்"ணென அதிர்கையில்
விம்மி வழிகிற ஸ்வரமே-என்
வழியில் கிடைத்த வரமே
 
காணவும் முடியாக் காருண்ய வனத்தில்
கண்கள் திறந்த இதமே-என்
கவிதையில் மலர்ந்த நிஜமே