சுருட்டபள்ளி சிவன்


உண்ட மயக்கம்


மாலவனின் பாற்கடலில் மிக்க வருமலைகள்
ஓலமிட்டால் கண்ணுறங்க ஒண்ணாதே-கோலமிக்க
தேவியவள் பூமடியில் தேவதேவன் கண்ணுறங்க
மேவிவரும் மௌன மயக்கு.

நால்வர் தமிழ்கொடுத்த ஞானக் கிறக்கமோ
மாங்கனி தந்த மயக்கமோ-ஆலத்தை
உண்ட மயக்கமோ உத்தமியாள் பேரழகைக்
கண்ட மயக்கமோ கூறு

நாயன்மார் வீடுகளை நாடி நடந்தவரின்
தூய உபசரிப்பில் தான்திளைத்தும்-நேயரை
ஆட்டிப் படைத்தும் அருள்கொடுத்தசோர்வினிலே
நீட்டிப் படுத்தாயோ நீ.

பெண்டு தனைக்கேட்டு பிள்ளைக் கறிகேட்டு
திண்ணனவன் கண்களையுந் தான்கேட்டு-மண்மிசையே
சுந்தரர்க்காய் வீதிகளில் சுற்றித் திரிந்துவிட்டு
நொந்துபடுத் தாயோ நவில்.

தாழ்சடைகள் அம்மை திருமடியி லேபுரள
ஆழ்துயிலில் உள்ளதோர் ஆபத்து-ஆழிசேர்
கங்கை மறைந்திருக்கக் கண்டால் விடுவாளோ
எங்குறங்கு வாய்நீ இனி