காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன
கற்பகமாய் மலர்வதுபோல் நினைவுகொண்டன
நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன
நனவாகும் நமதுகனா என்றிருந்தன
சாமமாகும் போதுகூட விழித்திருந்தன
சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன
தாமதமேன் என்றுசொல்லித் தவித்திருந்தன
தூயமகன் வரவையெண்ணி சிலிர்த்திருந்தன
உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான்
ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான்
பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான்
புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான்
தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன
தெய்வங்களும் இறங்கிவந்து தமிழ்படித்தன
கானம்பாடும் பறவைகளும் குரல்கொடுத்தன
கம்பநாடன் என்றுசொல்லி சிறகசைத்தன
ஓலைகளில் அமுதவாரி ஊற்றெழுந்தது
உலகமெங்கும் கவிதையின்பக் காற்றெழுந்தது
காலம்நின்று பார்த்துவிட்டுக் கால்நடந்தது
தேரெழுந்தூர்த் தச்சன்செய்த தேரசைந்தது
பனைமரங்கள் அவனிடத்தில் பக்தி கொண்டன
பாட்டரசன் தொட்டவையோ முக்தி கொண்டன
கனவு நனவானதெனக் கண்டு கொண்டன
கவியமுதை ஓலைகளில் மொண்டுதந்தன
கம்பநாடன் விழிமலர்கள் கருணைநல்கின
கவிதைகள்தான் பனையின்நுங்கில் சுவையும்நல்கின
அன்றுமுதல் பனைமரங்கள் உயரமாயின
விண்ணிலுள்ள கம்பனுக்கு விசிறியாயின
1 comment:
அருமை. பகிர்வுக்கு நன்றி.
Post a Comment