Wednesday, December 31, 2014

பேச்சுப் பேச்சென்ன....பெரும்பூனை வந்தக்கால்....

 
குயிலிசை கேட்கக் கூடிய கூட்டம்
வெய்யிலில் மழையில் வளர்ந்தது கண்டு
கூண்டுக்குள்ளே கிடந்த கிளியோ
குய்யோ முறையோ எனக் கத்திற்று
மனனம் செய்தது மறந்து தொலைக்க
கவனம் சிதறிக் கிளி அலறிற்று;

மனப்பா டக்கிளி மறதி தொடர்ந்தால்
தினப்பா டுக்கே திண்டாட்டம் என்பதால்
தளர்ச்சியை மறைக்கத் திட்டம் பிறந்தது
'புரட்சிக் கிளி'யென பட்டம் கொடுத்தனர்
புரட்டுக் கிளியைப் புலவர் என்றனர்

குயில்போல் சுயமாய் கீதம் வராததால்
குயிலைப் பழிக்க கிளிகிளம்பியது ;
தூக்கி விடச்சில காக்கைகள் கிடைத்தன
கிளிகூடமைத்து கத்திய மரங்களில்
கிளையுதிர் காலம் ;அய்யோ பாவம்;

கச்சை கட்டிக் கிளம்பிய காக்கைகள்
இச்-சகம் முழுக்க கிளியின் இடமென
இச்சகம் பேசியே ஏற்றி விட்டன; 
மெச்சி எல்லோரும் மதித்திடவேண்டி
கட்சி கட்டிக் கிளம்பினர் பலரும்;

பச்சைச் சிறகின் இறகொன்றைப் பிடுங்கி
காது குடைந்தால் வேதஞானம்
வளரும் என்றோர் அண்டங் காக்கை
உளறி வைத்ததில் ஊரே திரண்டது
ஏச்சுப் பேச்சில் எந்நேரமும் முழு
மூச்சாய் இருந்த கிளியின் சிறகை
ஊர்ச்சிறு வர்களும் பிடுங்கத் தொடங்க
கீச்கீச் என்று கதறிற்று கிளியே!

Monday, December 22, 2014

பனிபோல் இறங்கும் கவிதைகள்-கனிமொழி.ஜி.யின் மழை நடந்தோடிய நெகிழ்நிலம்

அகழும் பொழுதும் நெகிழும் இயல்பு கொண்டது நிலம். அதுவும் மழையேந்திய நிலமென்றால் கேட்கவே  வேண்டாம்.
மழைக்கும் நிலத்துக்குமான உறவு நுட்பமானது.மழை வரும் முன்பே மலர்ந்து, வாசனை பரப்பி, விழும் மழைத்துளியில் திடநிலை கரைந்து நிலம் குழைகிறபோது 'சார்ந்ததன் வண்ணமாதல்" நிலத்தின் இயல்பா நீரின் இயல்பா என்கிற கேள்வி எழும்.

வாழ்வின் நுண்கணங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிற மனம்,அத்தகைய நிலம்தான். கனிமொழி.ஜி.யின் கவிதை நூலாகிய "மழை நடந்தோடிய நெகிழ்நிலம்"அத்தகைய நுண்கணங்களில் மலர்ந்து விகசிக்கும் கவிதைகளைக் கொண்டது.

காரைக்கால் அம்மை சிவனைக் கண்டு,'நீ சுடலையிலாடப் போவதெல்லாம் சரி.ஆனால் உமையை உன் இடப்பகுதியில் வைத்தபடி போகாதே.சிறு பெண். பயந்துவிடப் போகிறாள்''என்று தாய்மை ததும்பப் பாடியதை தமிழ் தன் பெட்டகத்தில் வைத்திருக்க, கனிமொழி ஜி,காட்டுகிற சிவன்
ஒரு புதிய பரிமாணத்தில் அசைகிறான்.

"எரிந்தடங்கி சற்றும் கணப்பற்ற சாம்பலின் மீது
மெல்ல நளிநடம் ஆடுகிறான் எம் சிவன்"

இது களிநடம் அல்ல. ஊர்த்துவ நடமும் அல்ல.நளி நடம்.அதுவும் எரிந்தடங்கி சற்றும் கணப்பற்ற சாம்பலின் மீது தொடங்குகிற நடனத்தின் தொடக்க நிலை.

ஆன்மீக அடிப்படையில் சொல்வதென்றால் ஊழி முடிந்து மற்றொரு பிரபஞ்சம் தொடங்கும் நிலையிலான நடம். கனிமொழி.ஜி. இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய மனிதர்களை குடியமர்த்த விரும்புகிறார் என்பது நான் மேற்கோள் காட்டிய வரிகளுக்கு முந்தைய வரிகளில் பதிவாகியிருக்கிறது.


'' நகங்களும் சுரண்டலும் தமக்கில்லாதவரை
  கீழ்த்தாடை தட்டி விரல்களை முத்தமிட்டுக் கொள்கிறேன்".


அதற்கு முந்தைய வரிகளில் காட்டப்படுகிற மனிதர்கள் அழிந்து போன பிரபஞ்சத்தின் சுரண்டல் மனிதர்கள். பிறர் பொருள் பறித்து கடவுளுடன் பங்கிடுபவர்கள்.பூக்களின் சூலில் வாள் பாய்ச்சுபவர்கள்.போதைக்குத் 
துணையாய் பிறர் உழைப்பின் உதிரத்தைத் தொட்டு விரல் சூப்புபவர்கள்.

இவர்கள் எரிந்தடங்கியபிரபஞ்சத்தின் கணப்பற்ற சாம்பலில் உயிர்த்தெழும் மனிதர்களுக்கு நகங்களில்லை.அவர்கள் மனங்களில் சுரண்டலில்லை. அங்கிருந்து தன் புதிய சிருஷ்டி நடனத்தைத் தொடங்குகிறான் சிவன் என்பதாக இந்தத் தொகுப்பின் முதல் கவிதையிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

மழையோடிய நெகிழ்நிலம் போன்ற மனம் வாய்க்கப் பெறுமேல் அந்த மனதில் மரண பயம் இருக்காது. பொதுவாக மூத்து முதிர்ந்து வாழ்வின் விளிம்பில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் போதுதான் அந்தப் பக்குவம் இருக்கும் .

கொலை தற்கொலை போன்ற காரணங்களால் நிகழும் மரணத்தில் பதட்டம் இருக்கும் அச்சம் இருக்கும். நோயால்  துன்புற்று நேரும் மரணத்திற்கும் அதே நிலைதான்."அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி" என்கிறான் மகாகவி பாரதி.


ஆனால் கனிமொழி காட்டும் ஒரு மரணம் ,கொலை. ஒரே உயிரைக் கொல்வதற்கான இரண்டு எத்தனங்கள் வழி நிகழும்  கொலை. சாக்ரடீசுக்கு தந்தது போல் கையில் குவளை நிறைய நஞ்சைத் தந்து அதை கைகளில் வைத்திருக்கும் போதே முதுகில் குறுவாள் பாய்ச்சுகிற கொலை.

ஆனால் ஆன்மீகம் தொடர்ந்து வலியுறுத்தும் ''ஏற்கும் நிலை''
கனிந்ததால் இங்கே இந்த உயிர் உடனே புறப்படத் தயாராகிறது.அந்த தயார்நிலையை எழுதுகிறார் கனிமொழி.

"வஞ்சம் பின் முதுகில்வாளைச் செலுத்திய போது
கைகளில் வருடிக் கொண்டிருந்த வெண்புறாவை
பறக்க விடுகிறேன்
இருகைகளாலும் நஞ்சுக் கோப்பையை
முதல்நிமிட சிசுவென கவனமாய் ஏந்துகிறேன்"


இது பெயக்கண்டும் நஞ்சுண்ணும்  நாகரீகம். நஞ்சுண்டு அமைய முடியாதென அறிந்தும் அருந்தும் அதிநாகரீகம்.அதன்பின் ஏற்படுவது மரணமல்ல.சமாதி. முழு விழிப்புடன் தன்னையே மரணத்திற்கு ஒப்புத் தந்து,அதன் வழியே தீர்ந்து போதல். ஆங்கிலத்தில்  No more என்று சொல்வதன் உண்மையான பொருளில் இல்லாது போதல்.

"மெல்லக் கண்களை மூடிக் கொண்ட போது
கொஞ்சமிருந்த வெளிச்சமும் போய்
வழுவழுப்பான இருள் விழிகளுக்குள் உருளுகிறது...
புருவமத்தி சுடர் அகன்று முன் நகர்கிறது...
எழுந்து தொடரும் நான்..."


கனிமொழி.ஜி.அவர்களை நான் ஒருமுறை  மட்டுமே சந்தித்திருக்கிறேன்.அவருடைய ஆன்மீகப் பின்புலத்தை நான் அறியேன்.ஆனால் இது ஆக்ஞை வழியே உடலை விட்டு உயிர் புறப்படும் தன்மையைச் சொல்கிறது. இது ஆன்மீகத்தில் மிகவும் உயர்ந்த நிலை.
அடுத்த வரியில்தான் இல்லாது போதலை மிகவும் கவித்துவமாக வெளிப்படுத்துகிறார் கனிமொழி.ஜி


"எழுந்து தொடரும் நான்....
புயற்காற்றை எதிர்கொள்ளும் மணற்சிற்பமென
வழியெங்கும் கரைந்து கொண்டே போகிறேன்...
மரணத்தின் பாதை அதற்குள் முடிவுற்றிருந்தது...
இப்பெருவெளி குறித்து
என்னிடம் திகைப்பேதுமில்லை...
இப்போது ஏதுமற்ற வெற்றிடத்தில்
ஏதுமற்று கலக்கிறேன்.
ஏதுமற்ற நான்." (ப;4-5)


கீழைத்தேய ஞானமரபின் கீற்றாக இக்கவிதையை காண்கிறேன். மறு பிறப்பற்ற நிலையிலேயே மரணத்தின் பாதை முடிவுறும்.பிறவிப் பெருங்கடல் கடக்கும் அனுபவம் கவிதையாய் மலர்ந்திருப்பது அவ்வளவு ஆசுவாசமாய் இருக்கிறது.

மனநலம் பிறழ்ந்தவன் பற்றி எத்தனையோ உவமைகளும் உருவகங்களும் தமிழிலக்கியப் பரப்பில் கவிதைகளிலும் பிற புனைவுகளும் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வரிசையில் புதிதாய் ஒன்றை சேர்க்கிறார் கனிமொழி.ஜி.

" சாயலில் நம் ஆதிமனிதனைக் கொண்ட அவன்
   சாமான்ய வாழ்விலிருந்து வழிதவறிய நீரோடை"

சொல்லிச் சொல்லிப் பார்க்கிறேன்.வியப்பு தீரவில்லை.
நல்ல கவிதைகளின் உச்ச வரிகளை கவிதைக்குத் தலைப்பாக்கிவிடும் விபத்து கனிமொழி.ஜி.க்கும் நேர்ந்திருக்கிறது.

''காய்ந்த சருகை சுமந்து செல்கிறது காலநதி"," உதிரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிலுவைகள்'' போன்றவை அதற்கான உதாரணங்கள்.

கூடிப் பிரியும் அகவாழ்வின் அற்புதச் சித்திரம்,"நெய்தல் மெல்ல பாலையாகிறது". கூடலின் நுட்பமான அம்சங்கள் மென்மையாகவும் மேன்மையாகவும் இந்தக் கவிதையில் பேசப்பட்டுள்ளன.

"அந்தியின் மீது இறங்கிக் கவிந்த இரவைப்போல்
அவளறியாது கலந்திருந்தான்.
சுவைத்தும் தீராத இனிப்பை ஊட்டி
உறைவாளென உறுதியானான்"

"வயிறுணர்ந்து மனமுணர்ந்து புலனுணர்ந்த நிறைவில்
சூடிக் கொண்டிருந்த மலர்ச்சரம் போலன்றி
மெல்லக் கசங்கல் நீங்கி இயல்பானாள்"

ஆகிய இடங்கள் குறிப்பிடத் தக்கவை.(ப-10)
தூங்கிக் கொண் டிருக்கும் ஓவியனை "கசங்கிய படுக்கை மேல் சரிந்த வானவில் "என்கிறார்.     

காலம் மனிதர்களை பிரித்துப் போட்டாலும் மனம் பிடித்து இருத்திக் கொள்ள எத்தனிக்கிறது. ஓவியனின் அறையை விட்டு வெளியேற நினைக்கையில் என்ன நடக்கிறது?

"தாழ்பெயர்ந்த கதவுக்கு உட்புறம் குறுக்கே
  சட்டமிட்ட தாழுடன் பூட்டும் வரைந்திருக்கிறான்
........................................................................................
........................................................................................
 இருட்டில் கைதுழாவி தூரிகையைத் தேடியவள்
சாவி வரையப் பழகுகிறாள்''
என்கிறார் கனிமொழி.ஜி.


இத்தொகுப்பில் அர்த்த அடர்த்தி மிக்க ஏராளமான 
 குறுங்கவிதைகளும் உள்ளன.மார்கழிப் பனிபோல் மெல்லென இறங்கும் இந்தக் கவிதைகளைத் தந்திருக்கும் 
கனிமொழி.ஜி. பாராட்டப்பட வேண்டியவர்


மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கும் "மழை நடந்தோடிய நெகிழ்நிலம்" கனிமொழி.ஜி.யின் முதல் தொகுப்பு என்பதும் வியப்புக்குரிய விஷயம்தான்.

ஏற்கெனவே கவியுலகில் ஒரு கனிமொழி இருப்பதால் முன்னெழுத்தைப் பின்னெழுத்தாக்கி கனிமொழி.ஜி. என அறியப்படுகிறார் போலும்!!
ஆனால் அந்த கனிமொழியையும் டெல்லி வட்டாரங்களில் கனிமொழிஜி என்றுதான் அழைப்பார்களாம்!! 





























Tuesday, November 25, 2014

வந்தாள் ஒருநாள் தானாக




இந்தச் சிறுமியை துணைக்கழைத்தால்-வினை
ஏதும் செய்திட முடிவதில்லை
சொந்தப் புத்தியும் இயங்கவில்லை-இவள்
செய்கைகள் எதுவும் விளங்கவில்லை
வந்தாள் ஒருநாள் தானாக -என்னை
வாட்டி வதைக்கிற தேனாக
அந்த நாள்முதல் நானுமில்லை-அட
அதன்பின் எனதென ஏதுமில்லை

ஒப்பிட  முடியாக் குறும்பியென-மெல்ல
உள்ளே தள்ளிக் கதவடைத்தேன்
அப்பொழுதும் அவள் அயரவில்லை-தனியே
ஆடிக் களிக்கும் குரல் கேட்டேன் 
எப்படி சாத்தியம் என்றறிய -நான்
எட்டிப் பார்த்தேன் மனமழிந்தேன்
சொப்புச் சாமான் வரிசையிலே -அவள்
சுற்றும் கோள்களை வைத்திருந்தாள்


நட்சத்திரங்களை சோழியென்றாள்-அவள்
நாளையும் நேற்றும் தோழியென்றாள்
உச்சிப் பொழுதினில் நள்ளிரவில்-அவள்
ஊரினைச் சுற்றி ஓடுகிறாள்
பச்சை நிறமா புதுசிகப்பா-அவள்
பேரெழில் நிறமும் புரியவில்லை
பிச்சியைப் போல்சில பொழுதுகளில்-இந்தப்
பேரெழில் கண்மணி ஆட்டுவிப்பாள்

ஏற்றிய தீபம் போலிருப்பாள்-அவள்
எரிமலை போலவும் சீறிடுவாள்
காற்றினில் தென்றல் இவளென்பேன் -ஒரு
கணத்தினில் புயலென்று காட்டிடுவாள்
ஈற்றோ முதலோ இல்லாமல் -அந்த
ஈசனின் இதயத்தில் வாழ்பவள் முன்
தோற்றே ஜெயித்தேன் நானவளை-அவள்
தோல்விகள் வெற்றிகள் தாண்டி நிற்பாள்


ஆயுள் பிச்சை அவள்கொடுப்பாள் -பல
ஆயிரம் இச்சைகள் வளர்த்திடுவாள்
தாயென்றும் சேயென்றும் உருமாறி-பல
தகிடு தத்தங்கள் செய்திடுவாள்
கோயில்கள் தோறும் சிலையாவாள் -அந்தக்
கோலங்கள் கடந்த நிலையாவாள்
மாயைக்கும் மாயை ஆனவளை- பாழ்
மனதினில் வைத்தே ஒளியடைந்தேன்
 

Saturday, November 22, 2014

ஏதும் குறையில்லை யே


சூல்கொண்டு நீலம் சுடரும் முகிலதுவும்
பால்கொண்ட பிச்சி பெருமுலையோ-மால்கொண்ட
நெஞ்சின் கனமோ நகருகிற வானமோ
நஞ்சுண்ட கண்டம்தா னோ


சாவா திருக்க சுடுங்கவலை யாலிங்கு
மூவா  திருக்க மருந்துண்டு-ஏவாத
அம்பால் புரமெரித்து ஆனை உரிபோர்த்த
நம்பன் தருகின்ற நீறு


பூதங்கள் ஐந்தின் பொறியகற்றும் போர்க்களத்தே
நாதன்தாள் தானே நமதரணாம்-சீதங்கொள்
வேலையெழும் நஞ்சை விருந்தாகக் கொண்டவனின்
சூலமே நீயே சுடு.


நீறோடு நீறாய் நெடுமேனி ஆகும்முன்
ஆறோடே ஆறாய் அழியும்முன் -ஏறேறும்
நாதன் கழலே நினையாயென் நெஞ்சமே
ஏதும் குறையில்லை யே



தந்தோன் அவனே தருதல் மறுப்பானோ
செந்தமிழ் வல்லநம் சொக்கேசன் -சிந்தையில்
சொல்லாய் பொருளாய் சுடர்விடும் கற்பனையாய்
எல்லாமாய் உள்ள அவன்


எல்லையொன் றில்லாத ஏகன் அநேகனவன்
வில்லை வளைக்கையில் ஏன்சிரித்தான் இல்லையென
சொல்வார் வினைகளையும் சேர்த்தே எரிக்கின்ற
நல்லான் நகைபூத்தான் நன்று

Thursday, November 13, 2014

சிங்கப்பூர் வருகிறேன்

வாய்ப்புள்ள நண்பர்கள் வருகைதர அழைக்கிறேன்

Saturday, November 1, 2014

கிழக்கு பார்த்த வீடு


கிழக்குப் பார்த்த வீட்டில் நுழைந்தால்
கீற்று வெளிச்சம் முதலில் தெரியும்.
அரக்குப் பட்டின் அதீத வாசனை;
அதன்மேல் பிச்சி செண்பக நறுமணம்;

கனக்கும் வெளிச்சம் கனலும் சுடர்கள்;
'கலகல' வென்று வெண்கலச் சிரிப்பு;
ஒளிக்கும் ஒளிதரும் ஒய்யாரக் கருமை;
ஒவ்வோர் உயிரையும் உலுக்கும் தாய்மை;

துளித் துளியாக துலங்கும் அழகு;
தொடர்ந்தும் தொட்டிட முடியாக் கனவு;
பளிங்குக் கண்களில் படரும் குறும்பு;
பக்கத் தொலிக்கும் பண்தமிழ்,பழமறை;


மேலைத் திசையில் மணிவிழி பதித்து
 வாலையைப் பார்ப்பான் அமுத கடேசன்;
கோலத் திருவிழி கிழக்கே பதிய
நாதனைக் காண்பாள் நம் அபிராமி;


நுதல்விழி கொண்ட நூதன இணைகள்
முதல்விழி மூடி மோனத்திருக்க
இதம்தரும் நான்கு இணைவிழி கலந்து
விதம்விதமான சரசத்தில் லயிக்க
நிரந்தரமான நிலைபேறழகி
அருள்தரும் கடவூர் அணுகுக மனமே !


Monday, October 27, 2014

மாநகர் வாழ்க்கை


   சொந்தம் கொள்ள ஒருநதி இல்லை
    சொல்லிக் கொள்ள ஒருமலை இல்லை
    பந்தம் கொள்ள ஒரு வனமில்லை
    பாதுகாப்பாய் மாநகர் வாழ்க்கை..

     பார்த்துச் சிரிக்க உறவுகள் இல்லை
     பார்க்கத் தோன்றி வருபவர் இல்லை
     வேர்த்து நடக்க வயல்வெளி இல்லை
     வேக வேகமாய் மாநகர் வாழ்க்கை

    வழியில் பார்த்து வினவுதல் இல்லை
    வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை
    பழமொழி தெறிக்கும் பேச்சுகள் இல்லை
   பரபரப்பாக மாநகர் வாழ்க்கை 

அந்நியர் பார்த்தால் புன்னகை இல்லை
அச்சம் தொலைத்த கண்களும் இல்லை
முன்னோர் கதைகள்  மொழிவதுமில்லை
மூச்சு முட்டிட மாநகர் வாழ்க்கை

 

Friday, October 24, 2014

எஸ்.எஸ்.ஆருடன் இரண்டுமணி நேரங்கள்


பாரதியார் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக இருந்த நேரம்.பல்கலைக்கழகம் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவிற்கான பதிப்புக் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருந்தேன்.

அண்ணாவுடன் பழகியவர்கள்  சிலரை நேரில் சந்தித்து அவர்கள் நினைவலைகளைப் பகிரச் செய்யும் நோக்கில் நான் சந்தித்த சிலரில் முக்கியமானவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.

தொலைபேசியில் இரண்டுமுறை தொடர்பு கொண்டபோது "எழுதியனுப்புகிறேன் தம்பி"என்றார்.நினைவூட்டலுக்காக மீண்டும் அழைத்த போது அவர் துணைவியார்,"அவரு எங்கேங்க எழுதி அனுப்பப் போறாரு?நீங்க நேரில வந்து வாங்கீட்டுப் போயிடுங்க" என்றார்..

வீட்டின் பெயரே அண்ணா இல்லம் .மாடியில் எஸ்.எஸ்.ஆர். பட்டுச் சட்டையும் லுங்கியுமாக இருந்தார். லுங்கி தெரியாமல் சட்டை மட்டும் தெரியும் விதமாய் அவரை  ஏதோ தொலைக்காட்சியினர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.
கே.பி.எஸ். பற்றிய பேட்டி."நான் சின்னப்பையனா இருந்தப்ப நாடகத்தில நடிப்பேன்.பக்கத்துல அம்மா வீடு இருக்கும். என்னை மாதிரி பொடியனை எல்லாம் கூப்பிட்டு, "நாடகக் கொட்டகை சூடு அதிகம்" னு சொல்லி எண்ணெய் தேய்ச்சு விடுவாங்க" என்று தொடங்கி அம்மையார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.


பேட்டியை முடித்தவர்கள் புறப்பட்டுப் போக,அவருடைய துணைவியார் என்னை அறிமுகம் செய்தார். நீண்ட நேரம் என்னை படப்பிடிப்புக் குழுவில் ஒருவனாகவே கருதி பேசிக் கொண்டிருந்தவர் ,பல்கலைக்கழகம்.அண்ணா நூற்றாண்டு என்று துண்டு துண்டாய் நினைவுபடுத்த, "இப்போ டயர்டா இருக்கேனே தம்பி! எழுதி அனுப்பீடவா?"என்று கேட்க அவர் துணைவியார் "இப்ப விட்டால் எப்பவுமில்லை" என்பது போல் சைகை செய்தார்.

நான் கிளம்புவதாகச் சொல்லி எழுந்து கொண்டே,"அய்யா! ஒரே ஒரு கேள்வி " என்றேன்."என்ன" என்பதுபோல் தலையசைத்தார்.
"கலையுலகத்தில் எவ்வளவோ பேர் திராவிட இயக்கத்துல இருந்தாலும் ஒங்க அளவுக்கு அண்ணாவை நேசிச்சவங்க யாருமில்லைன்னு சொல்றாங்க! அது எதனால?" என்றேன்.

சில விநாடிகள் உற்றுப் பார்த்தவர்,"ஒக்காருங்க" என்றார். அவ்வளவுதான் .அந்த சின்னத் தூண்டிலில் திமிங்கிலம் மாட்டிக் கொண்டது.அந்த உணர்ச்சியமயமான,உண்மையான தொண்டன் தன்  தலைவன் பற்றிப் பேசத் தொடங்கிய அற்புதமான தருணம் அது.

"அண்ணாவை என் காரிலே கூட்டிகிட்டு வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் போவேன். நள்ளிரவில எங்காவது நாடகம் நடக்கும்.என்னை காரிலேயே இருக்க சொல்லீட்டு அண்ணா முண்டாசு கட்டிகிட்டு நாடகம் பார்க்கப் போயிடுவார். சில இடங்களிலே அடையாளம் கண்டு பிடிச்சு மேடையேத்திடுவாங்க"என்று தொடங்கி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.


அண்ணாவின் 50 ஆவது  பிறந்த நாளுக்கு எஸ்.எஸ்.ஆர். 50 பவுன் தங்கம் தந்தது பற்றி பேச்சு திரும்பியது. கவியரசு கண்ணதாசன் அப்போது திமுகவில் இருந்தார்.

"செம்பொன் மணியாரத்தொடு
          செல்வம் பல தரலாம்
  தம்பிப் படை யாவும் பல
          தங்கத் திரள் தரலாம்
 நம்பித் தமிழ் முறைபாடிடும்
         நலமே நிறை அண்ணன்
தெம்புக்கது குறைவே-அவர்
         திறனுக்கது சிறிதே"

என்று அந்த சம்பவத்தைப் பாடியிருந்தார் கவிஞர்.அதைப் பற்றிக் கேட்டேன். ''அதைவிட எனக்கு மறக்க முடியாதது அண்ணாவோட 51ஆவது பிறந்த நாள்தான்.

விழாவில அண்ணாவுக்கு 51 பொருட்கள் வழங்கறதா அறிவிச்சிருந்தேன்.பேராசிரியர்தான் தலைமை தாங்கினார்.
வேட்டி சட்டை துண்டு மேசை நாற்காலி கண்ணாடி, வெள்ளியில மூக்குப்பொடி டப்பான்னு ஒவ்வொரு பொருளா மேடைக்குக் கொண்டு வரச் செய்தேன். பேராசிரியர் எண்ணிப் பார்த்துட்டு"என்ன இராஜேந்திரன்! 50 பொருட்கள் தான் இருக்கு,51 இல்லையே"ன்னு கேட்டார். உடனே என் சட்டைப்பையில் இருந்து ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தேன்.

அதில 51ன்னு நம்பர் போட்டு "என் உயிர்" னு எழுதியிருந்தேன்.அண்ணா "ஓ"ன்னு அழுதுட்டார். ஏற்புரை கூட பேச முடியாம தழுதழுத்தார்."என்றார்.

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு,"அண்ணா மரணம் என்னை ரொம்ப பாதிச்சுடுச்சு.இறுதி ஊர்வலத்தில மயங்கி விழுந்துட்டேன். அதுக்கப்புறமும் தினம் அந்த வருத்தத்துல குடிச்சுட்டு அண்ணா சமாதியில போய் விழுந்து கிடப்பேன். உடம்பு சரியில்லாமல் போய் மருத்துவமனையில சேர்த்துட்டாங்க. வயசான ஒருத்தர் என்னைப் பார்க்க வந்தார்.

வந்தவர்,'ராஜேந்திரன்! ஒங்க வயசென்ன என் வயசென்ன? நான் மருத்துவமனையில இருக்கறப்ப நீங்க வந்து பார்க்கணும்.இப்போ நான் வந்து ஒங்களைப் பார்க்கிறேன்.இது சரியா"ன்னு கேட்டார். அவர்தான் தந்தை பெரியார் " என்றார் எஸ்.எஸ்.ஆர்.

கனத்தஃபிரேமுக்குள் கனிந்திருந்த அந்தக் கண்களில் ஓராயிரம் உணர்ச்சி மின்னல்கள்.தேநீர் பருகிக் கொண்டே எம்.ஜி.ஆர்.,சிவாஜி பற்றி பேசிக் கொண்டிருந்தோம்


"நான் 62 லே தேர்தலில நிக்கறதா அறிவிப்பு வந்தபோது பல நடிகர்கள் பாராட்ட வீட்டுக்கு வந்தாங்க. சிவாஜியும் வந்தார் . எல்லாரும் போனதுக்கப்புறம் தனியா அறைக்குள்ளே கூட்டீட்டு போய் "ஏன்யா! ஒனக்கு அறிவிருக்கா'ன்னு கேட்டார். ஏன் அண்ணே" னு கேட்டேன். "இப்போதான் ஒனக்கு நிறைய படம் வருது.நம்ம காம்பினேஷனும் ரொம்ப நல்லா இருக்கு.இப்போ நீ எம் எல் ஏ ஆகலைன்னு யார் அழுதா? தொழிலைப் பார்ப்பியா..அத வுட்டுட்டு"ன்னு சத்தம் போட்டார்.

எம்.ஜி.ஆருக்கு என் மேல ரொம்ப பிரியம்"ராஜு!ராஜு!"ன்னு உரிமையாப் பழகுவார்.ஒருமுறை அவர் முதலமைச்சரா இருக்கறப்போ ஒரு கூட்டத்துல அமைச்சர் ராஜாராம், "இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் எப்பவும் இளமையா இருக்காரே!அந்த ரகசியம் என்ன"ன்னு கேட்டார்.எம்.ஜி.ஆர். "அதை நான் பேசறப்ப சொல்றேன்.நீங்க உட்காருங்க"ன்னு சொல்லீட்டார்.


அப்புறம் பேசும்போது சொன்னார்."தம்பி ராஜுக்கு ரொம்ப திறந்த மனசு.எதையும் மனசுல வைச்சுக்கத் தெரியாது. நீங்க ராத்திரி ஒரு மணிக்கு அவரை ஃபோன்லே கூப்பிட்டு ஒரு தகவலை சொல்லி,"தம்பீ! இது ரொம்ப ரகசியம்"னு சொல்லுங்க..அந்த நேரத்திலேயும் நாலு பேரையாவது எழுப்பி  சொல்லீட்டுதான் தூங்குவார்னாரு பாருங்க!ஒரே அப்ளாஸ்" என்று குழந்தை போல் எஸ்.எஸ்.ஆர் குதூகலித்தது நேற்று நிகழ்ந்ததுபோல் நெஞ்சில் நிற்கிறது.

அந்த நேர்காணல்,பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட "அறிஞர் அண்ணா நினைவலைகள் நூலில் உள்ளது.

சென்னை செல்லும்போதெல்லாம் அவரை மீண்டும் பார்த்து வரத் தோன்றும்.ஏதேதோ காரணங்களால் தட்டிப் போய் விட்டது.இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.அவர்களுக்கு என் இதயம் நெகிழ்ந்த அஞ்சலி  
  

Thursday, October 23, 2014

யாரோ தேய்த்த எடைக்கல்




சின்னச் சின்ன தோல்விகளை
சொல்லித் திரிவேன் நானாக
"என்ன?எப்போ?"என்றபடி
 எதிரிகள் எல்லாம் கதை கேட்பார்
இன்னும் கொஞ்சம் சுவைசேர்த்து
இட்டுக் கட்டிப் பரப்பிடுவேன்
தன்னை மறந்த மகிழ்ச்சியிலே
தாமும் கதைசொல்லப் புறப்படுவார்

"சேதி தெரியுமா" என்றவரும்
சேர்த்துப் பரப்பிய கதையெல்லாம்
காதில் வந்து விழும்முன்னே
களத்தில் இறங்கி நடந்திருப்பேன்
மீதி வெற்றிகள் எதையும்நான்
மறந்தும் வெளியே சொல்வதில்லை
நீதி இதிலே உண்டென நான்
நீட்டி முழக்கவும் போவதில்லை

நம்மைப் பற்றிப் பேசுபவர்
நாக்குச் சுகத்தில் நின்றிடுவார்
இம்மி அளவும் அடுத்த அடி
எடுத்து வைக்கவும் போவதில்லை
கும்மி அடிப்பவர் அடிக்கட்டுமே
குறிக்கோள் நோக்கி நாம் நடப்போம்
சும்மா அவலைக் கொடுத்துவிட்டு
சுவைமிகும் வெற்றியில்நாம்திளைப்போம்  

மற்றவர் முதுகை முகர்பவர்கள்
மலரா மனதுடன் உழல்பவர்கள்
வெற்றுப் பேச்சில் லயிப்பவர்கள்
வளரப் போவதும் கிடையாது
குற்றம் சொல்லி அவர்களைநாம்
குத்திக் காட்டி என்னபயன்?
வெற்றியை நோக்கி நம்பயணம்;
வேடிக்கை மனிதர்கள் எதிர்ப்படலாம்

யாரோ தேய்த்த எடைக்கல்லா
இமய மலையை எடைபோடும்?
யாரோ சொல்லும் பழிச்சொல்லா
இங்குன் பாதையில் தடைபோடும்?
ஊரோடு ஒத்துப் போகாதார்
உலகே தனதென சொல்லட்டுமே
வீரா துணிந்து நடைபோடு
வரலாறு உன்பேர் எழுதட்டுமே  

Tuesday, October 21, 2014

ஒரு சொல்


 

ஒருசொல் சொன்னது வானம்- அதன்
ஒவ்வோர் எழுத்திலும் ஒவ்வொரு விடுகதை
ஒருசொல் இசைத்தது கானம்- அதன்
ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஒவ்வொரு பழங்கதை
ஒருசொல் உரைத்தது ஞானம்-அதன்
ஒவ்வோர் இடுக்கிலும் மௌனத்தின் வினாவிடை
ஒருசொல் உரைத்தது காலம்-அதன்
ஒவ்வோர் அதிர்விலும் ஒவ்வொரு சிறுகதை
 

 ஒருசொல் எறிந்தது வானம்-அதில்
ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு சேதி
ஒருசொல் அடைந்தது வேதம்-அதில்
ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு நீதி
ஒரு சொல் சொன்னது காலம்-அதில்
ஒவ்வோர் ஆணிலும் பெண்ணொரு பாதி
ஒருசொல் வளர்த்தது யாகம்-அதில்
ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு ஜோதி

ஒருகல் எறிந்தது யாரோ-அதில்
ஒவ்வொரு குளத்திலும் ஒவ்வொரு வட்டம்
ஒருவில் வளைத்தது யாரோ-அதில்
ஒவ்வொரு கணையிலும் ஒவ்வொரு திட்டம்
ஒருசொல் விதித்தது யாரோ-அதன்
ஒவ்வொரு பொருளிலும் யுகங்களின் சட்டம்
ஒரு நெல் விதைத்தது யாரோ -புவி
உண்டால் அம்ம-அது விளைந்திடும் மட்டும் 

படகாட்டம்



பால்வெளி விரித்த படுக்கையின் விரிப்பில்
நூறு சுருக்கங்கள் நீவி நிமிர்கையில்
காலப் போர்வையைக் கைகளில் மடிக்கும்
காதல் பெருக நின்றிருந்தாய் நீ...

நிகழ்கணம் மீது நித்திரை கொண்ட என்
இதழ்களில் ஏதோ எழுத வந்தவள்
கீற்று வெளிச்சம் வீசிய வெய்யில்
திகைக்கும் படியாய்திரைச்சீலை இழுத்தாய்.
அந்தக் கணமே அடர்ந்த இருளின்
நதியில் இறங்கி நீந்திய உன்னைப்
படகென உணர்ந்து பாய்ந்தேறியதும்
துடுப்புகள் கைக்குத் தட்டுப்பட்டன..

அந்தகார இருள்மிசை துலங்கிய
நட்சத்திரங்கள்  இரண்டின் வெளிச்சம்
இன்னும் உந்த என்னைத் தூண்ட
இன்னும் இன்னும் என்று சீண்ட

ஈரப் படகின்  இயங்கு கதியில்
மிதப்பின் சுகத்தில் மயங்கியும் பதறியும்
துடுப்பின் பிடிகள் விலக்கியும் இறுக்கியும்
போகப் போக போதை சூழ்ந்தது..
யாரைக் கேட்டு கரைவந்து சேர்ந்தது??

Saturday, October 4, 2014

என்ன நாடகம் இது



வெள்ளிச் செதில்கள் மின்னும் ஒருகயல்
வெள்ளப் பெருக்கில் திரிகிறது
துள்ளும் நதியின் அலைகள் நடுவே
தூண்டில் எங்கோ தெரிகிறது

கொள்ளை அழகில் மின்னும் பனியில்
கொஞ்சும் ஈரம் உலர்கிறது
வெள்ளைப் பனியை விசாரிக்கத்தான்
வெய்யில் மெல்ல வருகிறது

பொற்குடம் தன்னில் நிறையத் தானே
பசும்பால் அன்று பெருகியது
கள்குடம் நிறைத்து தீஞ்சுவை திரித்து
கடவுளின் நாடகம் தொடங்கியது

வேலன் திருவடி சேரத்தானே
வண்ணச் சிறுமலர் அரும்பியது
காலம் அதனைக் குரங்கின் கைகளில்
கொடுத்துப் பார்க்க விரும்பியது

அழகாய் வளர்ந்த சிறுகொடி முற்றி
 அடடா விறகாய் மாறுவதோ
எழுதா விதியை எழுதிய பின்னே
எவர்தான் அதனை மீறுவதோ


ஏற்றிய சுடரில் கூட்டிய திரியில்
என்றோ இருட்டு தொடங்கிடலாம்
காற்றின் கைகள் தீண்டும் வரையில்
காக்கும் கைகள் காத்திடலாம்

 


 
 

Friday, October 3, 2014

தமிழாக மலர்வாள்


வெற்றிக்குத் திருவடிவம் சக்தி-அவள்
வீறுகொண்டு வருகின்ற கோலம்
முற்றிநிற்கும் அசுரகுணம் வீழும்-ஓம்
முந்திவரும் தந்ததிமி தாளம்
பற்றுகளை வெட்டிவிடும் சூலம்-அவள்
பொறுப்பதில்லை பக்தரது ஓலம்
நெற்றிக்கு நடுவிலொளிர் நீலம்-அவள்
நிறம்தானே அனைத்துக்கும் மூலம்


தாமதங்கள்  செய்வதில்லை சக்தி-அவள்
தருகின்ற தருணத்தை உணர்வாள்
நாமங்கள் ஆயிரமும் சொன்னால்-அந்த
நாவினிலே தமிழாக மலர்வாள்
காமங்கள் மாற்றுகிற அன்னை-ஈசன்
காதலிலே கன்னங்கள் கனிவாள்
ஆமவளின் ஆசையிந்தப் பிரபஞ்சம்-எல்லாம்
ஆக்கிவிட்டும் கன்னியாக ஒளிர்வாள்


நில்லாத அருவியவள் கருணை -அதில்
நனைந்தவர்க்கு வினையழுக்கு போகும்
சொல்லாத வேதமவள் மௌனம்-அதனை
சிந்தாமல் விழுங்குவதே ஞானம்
இல்லாத ஒன்றவள்பால் இல்லை- எங்கும்
இருக்கின்ற நிழலவளின் பாதம்
கல்லாத மனதினிலும் கனிவாள்-அவள்
காலசைவில் பிறந்ததுவே கானம்

தூண்டில்முனை கூர்மையிலும் அவளே-நல்ல
துலாக்கோலின் நேர்மையிலும் அவளே
கூண்டினிலே சிறகடிக்கும் பறவை -தனைக்
கோதிவிடும் பூந்தென்றல் அவளே
மாண்டுவிட்ட ஆணவத்தை எரிக்க-தழல்
மூளும்விழி கொண்டவளும் அவளே
நீண்டுவரும் வினைத்தொடர்கள் நீக்கி-உயிர்
நீதியினைத் தருபவளும் அவளே 

வியாச மனம்-10 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)


வியாச மனம் முதல் அத்தியாயத்தில் கைகேயி பற்றிய குறிப்பொன்று தந்திருப்பேன்.முற்றாக முழுதாக விதியின் கருவியாக மட்டுமே இருந்து தன்னிலையில் இருந்து தாழ்ந்து போகும் பாத்திரங்கள் வாசகனின் புரிதலுக்குள் சில சலுகைகளைப் பெறுகின்றன.இராமன் மீது அளவிடற்கரிய பாசம் கொண்ட கைகேயி மனம் மாறியது ஏன் என்ற கேள்விக்கு வெளிப்படையான காரணம் மந்தரையின் போதனை,

'தீய மந்தரை இவ்வுரை செப்பலும் தேவி
தூய சிந்தையும் திரிந்தது'

என்கிற கம்பன் அத்துடன் நிறுத்தாமல்,அரக்கர்களின் தீமையும் முனிவர்கள் செய்த அறமும் இராமனை கானகத்திற்கனுப்ப கைகேயியை கருவியாக்கியதைக் குறிப்பிடுகிறான்.

ஆனால் சுக்ரீவனுக்கு இராமன் உபதேசம் செய்யுமிடத்தில்  ஒரு பாடல் கூர்ந்து சிந்திக்கத்தக்கது.


"மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம் என்றல்
  சங்கையின்றுணர்தி வாலி செய்கையால் சாலும்-இன்னும்
 அங்கவர் திறத்தினானே அல்லலும் அழிவும் ஆதல்
 எங்களில் காண்டியன்றே,இதனின் வேறுறுதி உண்டோ"

என்கிறான்.இதில், எங்களுக்கேற்பட்ட அழிவுக்கும் பெண்களே காரணம் என இராமன் எவரை,ஏன் சொல்கிறான் என்பது தீராத கேள்வி. மந்தரையா கைகேயியா சீதையா சூர்ப்பநகையா ,அல்லது இவர்கள் எல்லோருமா?

மனைவியை மீட்பதற்காக வாலியை மறைந்திருந்து கொல்ல வேண்டி வந்ததே என்னும் வருத்தமா?இத்தனை கேள்விகளும் அந்தப் பாத்திரத்தின் உளவியல் பாங்கை விரிவு செய்து கொண்டே போகின்றன.

ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் உளவியல் கூறுகளை உள்வாங்கி ஆராய்ந்து அந்தப் பாத்திரத்தைப் பற்றிய அபிப்பிராயங்களைக் கட்டமைத்துக் கொள்கிறோம்.

இதில் பாத்திரங்கள் என்னதான் தன்னைப் பற்றிப் பேசினாலும் வாசகனின் மதிப்பீட்டில்தான் எல்லாம் இருக்கிறது. தன்னகங்காரத்தில் முதிர்ந்த பாத்திரங்கள் பல,தங்கள் தவறுகள் பற்றிப் பேசாமல் விடுவதே நல்லதென்று  காவிய கர்த்தாக்கள்  முடிவு செய்வார்கள்.

இராமனைப் பார்த்து, 'இவனோ வேதமுதற் காரணன்" என வியக்கும் இராவணன்,'ஆரே ஆயினும் ஆகுக' என்று தன் தீர்மானத்தில் தொடர்கிறான்.

முதற்கனலில் சற்றும் இரக்கமற்ற பாத்திரமாய் நாம் காணுவது சத்தியவதியைத் தான்.தன் எல்லாப் பிழைகளையும் நியாயப்படுத்தி அவள் பீஷ்மனிடம் பேசுகிற பேச்சு அவள் மீதான நம் எரிச்சலை அதிகப்படுத்துகிறது.

நோயுற்றிருக்கும் தன் மகனுக்கு மூன்று பெண்களையும் சிறைப்பிடித்து வரச்சொல்வது அவள் செய்த முதல் அநியாயம். அஸ்தினபுரத்திற்கு சுயம்வர ஓலை வராததற்காக ஒரு பெண்ணாகஇருந்தும் மூன்று பெண்கள் வாழ்வில் விளையாடத் துணியும் சத்தியவதி..( அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஐம்பத்தாறு அரிவாள் என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது)
 
இவளுடன் கலந்தால் இறப்பேன் என விசித்திரவீரியன் சொன்ன பின்னும் அரச தர்மத்தை மேற்கோள் காட்டி சொந்த மகனை சாகடிக்கும் சத்தியவதி...   

தன் வாரிசுகளே நாடாள வேண்டுமென சந்தனுவிடம் வரம் கேட்டதற்குப் பிறகு தன்னால் பிரமசரியம் ஏற்கும் பீஷ்மனிடம் வேறு வழியின்றி பிள்ளை பெற்றுத் தரச் சொல்லும் சத்தியவதி.....

வேதங்களை வகுத்த வியாசனுக்கே குற்றவுணர்வு வரும் விதமாய் அவனை வற்புறுத்தி பிள்ளை பெற்றுத் தரச் சொல்லும் சத்தியவதி.... 

இத்தனை அட்டூழியங்களையும் கூடப் பொறுத்துக் கொள்ளலாம்.தன் செயல்களை நியாயப்படுத்தி அவள் பீஷ்மனிடம் பேசுகிற வார்த்தைகள் பீஷ்மனை பால்மணம் மாறாக் குழந்தையாய் கற்பனை செய்து கொண்டு பிதற்றுவதாக இருக்கிறது.

குறிப்பாக விசித்திரவீரியனை மனம் நோகப் பலமுறை பேசி அவன் மீதுள்ள அளவுகடந்த பாசத்தால்தான் அவன் மீது பாசம் காட்டவில்லை என்றெல்லாம் பேசும் சத்தியவதியை நம்மால் விசித்திரமாகத்தான் பார்க்க முடிகிறது.

மூன்று பெண்களையும் தூக்கி வரச் சொன்னது விதியாக இருக்கலாம்.ஆனால் தானே எல்லாவற்றையும் இயக்கி நடத்துவதாய் அலட்டிக் கொள்ளும் சத்தியவதி தன் அகங்காரம் காரணமாக அவளே அனைத்திற்கும் காரணம் என்னும் குற்றச்சாட்டை வலிய தன் மேல் ஏற்றிக் கொள்கிறாள்.

'என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம்.ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே'என்று சத்தியவதி பேசுவதும்,

"அன்னையே தாயாக நீங்கள் கொள்ளும் உணர்வுகளை நானறியேன்.ஆனால் சக்கரவர்த்தினியாக நீங்கள் எண்ணுவதை ஒவ்வொரு சொல்லாகப் புரிந்து கொள்கிறேன்.நீங்கள் சுயநலம் கொண்ட எளிய பெண்ணல்ல.இந்தபாரதவர்ஷத்தின்விதியை சமைக்கப் போகும் பேரரசி"
என்று தொடங்கி பீஷ்மன் பொழியும் ஆதரவுச் சொற்களும் அவர்களை விட்டு
மேலும் மேலும் விலகி நிற்கவே செய்கிறது,(ப-289)

அம்பிகை அம்பாலிகைக்கு பிள்ளைவரம் தந்த பின்பு வியாசர் ஒருவிதமான குற்றவுணர்வுக்கு ஆளாகி,தன் மகன் சுகப்பிரம்ம ரிஷியிடம் தான் செய்தது சரியா என்று கேட்க "கருணையின் பாற்பட்டு செய்யும் எதுவும் ஒழுக்கமே' என சுகப்பிரம்மர் சொல்வது மிகவும் அருமையான இடம்.(ப-354)

அதேபோல அம்பையை வராஹி அம்சமேறிய தெய்வப்பித்தியாக்கி அவள்
தன்னிடம் விதிவசத்தால் வளரும் சிகண்டினி என்னும் குழந்தையை சிகண்டியாக்குவதாய் ஜெயமோகன் சொல்கிறார்.சாக்த வழிபாட்டில் பகையை அழிக்கும் பெருந்தெய்வமாய் வராஹி வணங்கப்படுகிறார். மறு பிறவியில் அம்பை சிகண்டியாகப் பிறந்ததாய் மூலப்பிரதி சொல்ல, அம்பையின் ஆவேசத்தையும் வன்மத்தையும் உள்வாங்கி வளர்பவன் சிகண்டி என்று சொல்வது   காவியத்தின் போக்கை மேலும் செழுமை செய்கிறது.

இன்னொரு பிறவிவரை கூடப் பொத்தி வைக்க முடியாத வன்மமும் கோபமும் அம்பை மனதில் தீக்கனலாய் கொழுந்துவிட அதே சூட்டுடன்
சிகண்டிக்கு அதைக் கடத்திவிட்டு நிருதனையும் சிகண்டியையும் சாட்சியாக்கி
கனலில் கலக்கிறாள் அம்பை(அ-369-370).

  சத்குரு ஶ்ரீ பிரம்மா

தன் குருநாதர் ஆணைப்படி தியானலிங்கம் அமைக்க இரு பிறவிகளாய் முயற்சித்த சத்குரு  ஶ்ரீ பிரம்மா என்னும் திகம்பர சந்நியாசி,அந்தப் பிறவியும் முடிகிற சூழலில் அடுத்த பிறவிவரை பொறுமையின்றி மகாராஷ்டிராவில் உயிர் நீத்த பாலயோகி ஒருவரின் உடலில் புகுந்து முயற்சி மேற்கொண்டார் என்பது,நான் பின்பற்றும் குருமரபில் சொல்லப்படுகிற செய்தி.இந்தக் கோணத்தில் அம்பை எடுக்கும் முடிவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 


காவியத்தில் எப்போதும் கவிக்கூற்றுக்கு மதிப்பு அதிகம்.சூதகர் குரலாகவும் நிமித்திகர் குரலாகவும் ஜெயமோகனின் கவித்துவமிக்க அவதானிப்புகள் மணிகளாய் மின்னுகின்றன.

இருள் நிலையானது.ஒளி வந்து வந்து போவது என்பது ஞான மரபில் நீளப் பேசுப்படும் விஷயம்.இறைவனை  "சோதியனே" என்றதுமே 'துன்னிருளே" என மாணிக்கவாசகர் பாடுவதும் 'நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே'
என்பதும் இதனால்தான்.(நள்ளிரவில் அல்ல)

முதற் கனலை ஜெயமோகன் இப்படி நிறைவு செய்கிறார்.

"பாதாளத்தில் இருந்து இருள் பெருநதிகளாகக் கிளம்பியது.விண்ணின் ஒளியுடன் கலந்து பின்னிப் பெருவெளியை நெய்தது.நிழல்களாக உயிர்களைத் தொடர்ந்தது.கனவுகளாக உயிரில் கனத்தது.இச்சையாக
எண்ணங்களில் நிறைந்தது.செயல்களாக உடலில் ததும்பியது.சிருஷ்டியாக எங்கும் பரவியது.ஒளியைச் சிறுமகவாகத் தன் மடியில் அள்ளிவைத்து கூந்தல் சரியக் குனிந்து முத்தமிட்டுப் புன்னகை செய்தது.(ப-503)

தன்னுள் நிகழ்ந்திருக்கும் வியாச வியாபகத்திற்கு முழு முக்கியத்துவம் தரும் விதமாய் தன்னையே அதற்குத் தந்திருக்கும் சகோதரர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கமும் அன்பும்..


(நிறைந்தது)

Thursday, October 2, 2014

திருவடி சரணம் அம்மா






ஒருபெண்ணைச் சொல்லும் போதோ
 உன்னைத்தான் உவமை சொல்வார் 
வரும்பொருள் எல்லாம் உந்தன்    
 விழிபடும்    மகிமை என்பார் 
கருநிறம் கொண்ட மாலின் 
    கமலத்து மார்பில் நின்றாய் 
 திருவெனும் தேவி உந்தன்
    திருவடி சரணம் அம்மா

கடைந்தபாற் கடலை விட்டுக்
 கிளம்பிய அமுதம் நீதான்
 நடந்த காகுத்தன்  பின்னே
 நடைபயில் சீதை நீதான்
 உடைந்துபோய் அழுவோரெல்லாம் 
ஒருவாறு தேருமாறு 
அடைந்திடும்  ஊக்கம் நீதான் 
அடையாத கதவம் நீதான்

பொன்னிற மாதே நீயும் 
புயல்வண்ணன் தோள்கள் சேர்ந்தாய்
 செந்நிறக் கமலம் நின்றாய்
 சேவடி தொழுவோர்க்கெல்லாம் 
எண்வகைக் காட்சி தந்தாய் 
எண்ணிய எல்லாம் நல்கும் 
புண்ணியத் திருவே உன்னைப்
பணிந்தவர் பணியார் மண்ணில்

மைவிழி கமலமாகும் 
மாதவன் ஏங்கிப் பற்றும் 
கைகளும் கமலமாகும்
கால்களைக் கமலம் தாங்கும்
 நெய்விளக் கொளியில் வந்து 
நேர்பட நிற்கும் தாயே 
நைந்திடும் நிலையைமாற்றி 
நல்வழி சேர்ப்பாய் நீயே



கலங்கரை விளக்கம் எங்கே?




கலங்கரை விளக்கம் எங்கே?
      கல்வியின் கனிவு எங்கே?
உலகுக்குத் தமிழர் மேன்மை
     உயர்த்திய செம்மல் எங்கே?
குலவிடும் காந்தீயத்தின்
      குன்றத்து தீபம் எங்கே?
மலையென நிமிர்ந்த எங்கள்
     மகாலிங்க வள்ளல் எங்கே?

என்னென்ன தொழிற்கூடங்கள்
       எத்தனை கல்விச் சாலை
பொன்பொருள் வாரித் தந்த
       பெற்றிக்கோ எல்லை இல்லை
மன்னர்க்கும் மன்ன ராக
     மண்மிசை ஒருவர் வாழ்ந்தார்
அன்னவர் அருட்செல் வர்தான்
     அவருக்கு நிகரே இல்லை


வித்தகத் தலைவர் போனார்
      வள்ளலே போனார் -அந்தோ
புத்தகப் பிரியர் போனார்
      புண்ணியத் தொண்டர் போனார்
சித்திவளாகத் துக்கோ
      செம்மாந்த பிள்ளை போனார்
எத்தனை சொன்னால் என்ன?
'இனிவாரோம்" என்று போனார்

கண்ணெதிர் துன்பம் கண்டால்
     கடுகியே துடைக்கும் பாங்கு
எண்ணரும் தொழில்கள் செய்தும்
    எளிமையாய் பழகும் பண்பு
பண்ணிசை கலைகள் காத்து
    பதிப்புகள் பலவும் சேர்த்த
கண்ணிய சீலர் போனார்
   குளிர்நிழல் இழந்தோம் நாங்கள்

இணையிலாத் தலைவர் எங்கே?
      இயக்கங்கள் ஏங்கித் தேடும்
கணையிலா வில்லைப் போலே
     காந்தீயம் வருந்தி வாடும்
துணைபுரி வள்ளல் இன்றி
     தொண்டர்கள் திரளும் தேம்பும்
அணைந்திடா தீபம் போலே
    அருட்செல்வர் பெருமை வாழும்

ஆதிநாள் மனிதர் தொட்டு
    ஆனநல் பரிணாமங்கள்
ஓதியும் உணர்ந்தும் சொல்லும்
      உயர்பெரும் அறிஞர் -தெய்வ
சோதியில் ஒளித்தார் தூய
    செயல்களால் நிலைத்தார்-இந்த
மேதினி உளநாள் மட்டும்
   மகாலிங்கர் நாமம் வாழ்க

Wednesday, October 1, 2014

வியாச மனம்-9 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)



விசித்திர வீரியனை உற்சாகம் மிக்கவனாய் நோயின் தீவிரம் தொட முடியாத தொலைவில் நிற்பவனாய் முதற்கனல் சித்தரித்தாலும் அவன் உண்மையின் தீவிரமும் உணர்ச்சியின் தீவிரமும் ஆட்கொள்ளப்பட்டவன் என்று இரண்டு முக்கிய இடங்கள் நிறுவுகின்றன.

அம்பைக்கு இழக்கப்பட்ட அநீதியறிந்து கொதித்துப் போகிற விசித்திர வீரியன்,அவள் தெய்வத்தன்மை எய்திய அதிமனுஷியாய்,தவம் செய்து சிவவரம் பெற்றவளாய் வீறுகொண்டலைவது கேட்டு அவளைத் தேடிப் போகிறான்.ஒரு பிடாரி சிம்மம் ஒன்றைக் கொன்றுண்ணும் காட்சிகண்டு அவளே அம்பையென்றறிந்து தன்னை பலி கொள்ளுமாறு மன்றாடுகிறான்.

அவளுடைய காலடியில் உறைவாளை உருவிவைத்து தலைதாழ்த்த உதிரம் பெருகும் வாயுடைய அம்பை அவன் தலைமீது தன் பாதம் பதித்து ஆசிர்வதிக்கும் விந்தை நடக்கிறது. (ப-172)

மனம் பொறாத விசித்திர வீரியன் உருவிய வாளுடன் பீஷ்மரைத் தேடிப் போகிற இடம் நவரசம் ததும்பும் நாடகப் பாங்குடன் பொலிகிறது.தன்னை வெட்ட வரும் விசித்திர வீரியனுக்கு வாளை எப்படிப் பிடிப்பது என்று கற்றுத் தருகிறார்.


இவர்கள் இருவரிடையேயான உரையாடலில் பீஷ்மர் பற்றிய முதற்கனலின் சித்திரம்,பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் ஒரு செய்தியை உறுதி செய்து கொள்ள உதவுகிறது.

" நீங்கள் அறியாத அறமா,நீங்கள் கற்காத நெறிநூலா" என்று கேட்கும் விசித்திர வீரியனுக்கு பீஷ்மர் பதில் சொல்கிறார்.

"நூல்கள் நெறிகளைச் சொல்கின்றன என்பது பெரும் மாயை.நெறிகளை வளைக்கும் முறைகளையே நூல்கள் கற்பிக்கின்றன.இளையோனே! நீ எதையுமே கற்கவில்லை என்பதனால்தான் இந்தத் தெளிவு உன்னிடம் இருக்கிறது".

பாஞ்சாலி சபதத்தில் துகிலுரிய ஆணை பிறப்பிக்கப்படுகையில் சாத்திரங்களும் நீதிகளும் இதைத்தான் சொல்கின்றனவா என்று பாஞ்சாலி கதறுகையில் பீஷ்மர், "இந்த செயல் தவறுதான்.ஆனால் இது தவறு என நீதி
நூல்களிலோ சாத்திரங்களிலோ சொல்லப்படவில்லை"என்கிறார்

"செய்கை அநீதியென்றுதேர்ந்தாலும் சாத்திரம்தான்
வைகும் நெறியும் வழக்கமும்நீ கேட்பதனால்
ஆங்கவை நின் சார்பில் ஆகா வகையுரைத்தேன்
தீங்கு தடுக்கும் திறமிலேன் என்று சொல்லி
மேலோன் தலை கவிழ்ந்தான்"

என்கிறான் பாரதி.

பீஷ்மர் சட்டங்களை நீதிகளை சாத்திரங்களை அவற்றின் ஓட்டைகளைக் குறிவைத்து கொண்டு செலுத்துவதில் கைதேர்ந்தவர் போலும்!!

விடைபெறும் போது பொட்டிலடித்தாற்போல் விசித்திர வீரியன் பேசிவிட்டுப் போகிற இடம்,அந்தப் பாத்திரத்தின் மீதான மதிப்பை பலமடங்கு உயர்த்துகிறது.

"மூத்தவரே! பெரும்பாவங்களுக்கு முன்னர் நம் அகம் கூசவில்லையென்றால் நாம் எதற்காக வாழ வேண்டும்?"(-176)

அதேபோல அம்பிகையுடன் இரண்டாம்நாள் சந்திப்பில் அவன் உறவு கொள்ள வேண்டும் என சத்யவதி வற்புறுத்தும் போது தான் ஒருபோதும் மரணத்தை அஞ்சியதில்லை என்று முன்னர் ஸ்தானிகரிடம் கூறிய விசித்திரவீரியன் இப்போது மரணத்துக்கு அஞ்சுகிறான். ஆனால் அவனுக்காக அல்ல...

"அவளுடன் உறவு கொண்டால் நான் இறப்பது உறுதி.அதில் எனக்கு
வருத்தமுமில்லை.வாழ்வை அறிந்தவனாதலால் இறப்பை அறிந்திருக்கிறேன்.



நேற்று முன்தினம் என்றால் இப்படி உங்களிடம் என் உயிருக்காக வாதிட்டிருக்க மாட்டேன்.நேற்று அந்தப் பெண்ணை அறிந்து கொண்டேன்.
விளையாட்டுப் பேழையைத் திறந்து மயிற்பீலியையும் வண்ணக் கூழாங்கற்களையும் எடுத்துக் காட்டுவது போல,அவள் தன் அகம் திறந்து கொண்டிருந்தாள்.அவளுடைய மங்கலமும் அழகும் எல்லாமே என் மெல்லிய உயிரிலுள்ளது  என்றறிந்த போது நேற்றிரவு என் அகம் நடுங்கி விட்டது"
(-252-253) என்கிறான்.

அம்பிகை அம்பாலிகை வாழ்வின் முதல் மலர்ச்சியாய் விளங்க நேர்ந்த பொறுப்புணர்வில் எழுகிற வார்த்தைகள் இவை. பெண்களுக்கு நேரும் துயரங்களுக்கு தான் காரணமில்லாத போதும் தான் பொறுப்பேற்க வேண்டுமென்னும் எண்ணம் எப்படியோ விசித்திர வீரியனுக்கு ஏற்படுவதைக் காண்கிறோம்.

இவனை குருகுலத்தின் குலக்கொழுந்து என்று சொல்லத் தோன்றாமல் போகுமா என்ன/ ஒரு மரத்தின் வேரில் பழுது நேர்ந்தாலும்,அதன் உச்சியில் கோடை வெப்பம் படிந்தாலும் முதலில் வாடுவது கொழுந்துதான்.அதுபோல் பாட்டி சுனந்தையின் துயருக்கும் அம்பையின் துயருக்கும் தன்னையே பொறுப்பாக்க முன்வரும் விசித்திர வீரியன் மிக நிச்சயமாய் குலக்கொழுந்துதான்.

சத்யவதி,கருநிலவு நாளில் அம்பிகையுடன் விசித்திரவீரியன் கூடாமல் போனது பற்றி கடுமையாக சினந்து பேசும்போது உறுதியுடன் பதில் தரும் விசித்திர வீரியன் மழை தீரும் முன் வெய்யில் வருவது போல் அவளிடம் மிகுந்த பாசத்துடன் பேசுகிறான்

பேச்சுக்குப் பேச்சு,ஆணையிடுகிறேன் என்று சொல்வது சத்யவதியின் வழக்கம்.மூன்று இளவரசிகளை சிறையெடுக்க பீஷ்மரிடம் கூட அவள் ஆணைதான் இடுகிறாள்.

அதை ஸ்தானகருடன் பேசி கிண்டல் செய்யும் விசித்திரவீரியனின்  நகைச்சுவையுணர்வு அபாரம்.

''சத்யவதி வெளியேறி ரதமருகே சென்றாள்.அங்கே ஸ்தானகரும் மருத்துவரும் பிற ஆதுரசாலைப் பணியாளர்களும் நின்றனர்.ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்கள் மட்டும் பேசி
ஆணைகளிட்டாள்.அவர்கள் பணிந்து குறுகிய உடலுடன் அவற்றை ஏற்றனர்.

ஸ்தானகர் உள்ளே வந்து ,அரசே பேரரசி கிளம்புகிறார் என்றார்.'ஆம் ஆணையிட்டு விட்டாரல்லவா.அவர் கடலாமை போல.முட்டைகளைப் போட்டுவிட்டுத் திரும்பிப் பார்ப்பதேயில்லை.

 விசித்திரவீரியன் உள்ளிருந்து சத்யவதியின் அருகே வந்து'"அன்னையே! இந்தக் கோடைக் காலத்தில் இன்னும் சற்று காற்றுவீச நீங்கள் ஆணையிடலாமே'' என்றான்.சத்யவதி, '"அதற்கு தவ வல்லமை வேண்டும்.என் அரசை உன் கரத்தில் அளித்துவிட்டு வனம் சென்று அதை அடைகிறேன்'"என்றாள்.(ப-254)

அதற்கடுத்து ஜெயமோகன் சித்தரிக்கும் காட்சி அற்புதமானது.அதை நீங்கள்  
 நூலில் படிக்க வேண்டும்.
 
அவனுக்கு சிகிச்சைதர திருவிடத்திலிருந்து வரும் சித்தர் மிகக் குள்ளமானவர் எனவும் அவர் பெயர் அகத்தியர் எனவும்,அவர் பொதிகைமுனி அகத்தியரின் மாணவர் என்றும் ஜெயமோகன் எழுதுகிறார்.

அகத்தியர் எந்தக் காலத்தவர் என்னும் குழப்பம் தவிர்க்கக் கருதியோ என்னவோ இந்த அணுகுமுறையைக் கையாள்கிறார்.வந்திருக்கும் சித்தர் அகத்தியரின் சீடரே தவிர  சக்தியில்அதே தன்மை கொண்டவர் என்பதையும் ஜெயமோகன் பதிவு செய்கிறார்.

"ஸ்தானகர் ,தாங்கள் தென்திசை ஆசிரியர் அகத்தியரின் குருமரபில் வந்தவரா? என்றார்."நான் அவரேதான் 'என்றார் அகத்தியர்.ஸ்தானகர் திடுக்கிட்டார். 'இந்த தீபச்சுடர்,அந்தத் திரைச்சீலையில் ஏறிக் கொண்டால்
அதை  வேறு நெருப்பு என்றா சொல்வீர்கள்"என்று அகத்தியர்கேட்ட போது நெளிந்தார்."(ப-231)

ஆனால் அகத்தியர் காகபுஜண்டர் போன்றவர்கள் கல்ப காலமும் வாழ்பவர்களாகக் கருதப்படுபவர்கள்.இராமனைப் பார்த்து "நீ நாற்பதாவது இராமன்"என சொன்னார் என்றொரு செய்தி உண்டு.


பெண்சாபம் விழுந்த மண்ணுக்கு வராத சூதர்கள்,அஸ்தினபுரத்திற்கு மட்டும் எப்படி வந்தார்கள் என்று கேட்கும் பீஷ்மனிடம் விசித்திர வீர்யனின் உயர்வு கருதி வந்ததாக சொல்கிறார்கள்.சிலப்பதிகாரத்தில் சதுக்கப்பூதம் ஒருவனைக் கொல்ல முற்படுகிறது.அவனுக்கு பதில் தன் உயிரை எடுத்துக் கொள்ளுமாறு கோவலன் கேட்க, தவறு செய்த ஒருவன் உயிருக்கு பதில் நல்லவன் உயிரை எடுத்துக் கொண்டால் தனக்கு முக்தி கிடைக்காது என்று சொல்கிறது.

"நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி இழக்கும் பண்பெமக்கில்லை''



அம்பை முதற்கொண்டு அனைவராலும் ஆசீர்வதிக்கப்பட்ட நல்லுயிர் அவன் என்று தோன்றுகிறது.விசித்திரவீரியனை இவ்வளவு விரிவான உயிர்ச்சித்திரமாய் தீட்டியுள்ள முதற்கனல்மிக நிச்சயமாய் ஒரு முத்திரைப் படைப்பு 

(தொடரும்)