Thursday, October 2, 2014

கலங்கரை விளக்கம் எங்கே?




கலங்கரை விளக்கம் எங்கே?
      கல்வியின் கனிவு எங்கே?
உலகுக்குத் தமிழர் மேன்மை
     உயர்த்திய செம்மல் எங்கே?
குலவிடும் காந்தீயத்தின்
      குன்றத்து தீபம் எங்கே?
மலையென நிமிர்ந்த எங்கள்
     மகாலிங்க வள்ளல் எங்கே?

என்னென்ன தொழிற்கூடங்கள்
       எத்தனை கல்விச் சாலை
பொன்பொருள் வாரித் தந்த
       பெற்றிக்கோ எல்லை இல்லை
மன்னர்க்கும் மன்ன ராக
     மண்மிசை ஒருவர் வாழ்ந்தார்
அன்னவர் அருட்செல் வர்தான்
     அவருக்கு நிகரே இல்லை


வித்தகத் தலைவர் போனார்
      வள்ளலே போனார் -அந்தோ
புத்தகப் பிரியர் போனார்
      புண்ணியத் தொண்டர் போனார்
சித்திவளாகத் துக்கோ
      செம்மாந்த பிள்ளை போனார்
எத்தனை சொன்னால் என்ன?
'இனிவாரோம்" என்று போனார்

கண்ணெதிர் துன்பம் கண்டால்
     கடுகியே துடைக்கும் பாங்கு
எண்ணரும் தொழில்கள் செய்தும்
    எளிமையாய் பழகும் பண்பு
பண்ணிசை கலைகள் காத்து
    பதிப்புகள் பலவும் சேர்த்த
கண்ணிய சீலர் போனார்
   குளிர்நிழல் இழந்தோம் நாங்கள்

இணையிலாத் தலைவர் எங்கே?
      இயக்கங்கள் ஏங்கித் தேடும்
கணையிலா வில்லைப் போலே
     காந்தீயம் வருந்தி வாடும்
துணைபுரி வள்ளல் இன்றி
     தொண்டர்கள் திரளும் தேம்பும்
அணைந்திடா தீபம் போலே
    அருட்செல்வர் பெருமை வாழும்

ஆதிநாள் மனிதர் தொட்டு
    ஆனநல் பரிணாமங்கள்
ஓதியும் உணர்ந்தும் சொல்லும்
      உயர்பெரும் அறிஞர் -தெய்வ
சோதியில் ஒளித்தார் தூய
    செயல்களால் நிலைத்தார்-இந்த
மேதினி உளநாள் மட்டும்
   மகாலிங்கர் நாமம் வாழ்க