Friday, October 3, 2014

தமிழாக மலர்வாள்


வெற்றிக்குத் திருவடிவம் சக்தி-அவள்
வீறுகொண்டு வருகின்ற கோலம்
முற்றிநிற்கும் அசுரகுணம் வீழும்-ஓம்
முந்திவரும் தந்ததிமி தாளம்
பற்றுகளை வெட்டிவிடும் சூலம்-அவள்
பொறுப்பதில்லை பக்தரது ஓலம்
நெற்றிக்கு நடுவிலொளிர் நீலம்-அவள்
நிறம்தானே அனைத்துக்கும் மூலம்


தாமதங்கள்  செய்வதில்லை சக்தி-அவள்
தருகின்ற தருணத்தை உணர்வாள்
நாமங்கள் ஆயிரமும் சொன்னால்-அந்த
நாவினிலே தமிழாக மலர்வாள்
காமங்கள் மாற்றுகிற அன்னை-ஈசன்
காதலிலே கன்னங்கள் கனிவாள்
ஆமவளின் ஆசையிந்தப் பிரபஞ்சம்-எல்லாம்
ஆக்கிவிட்டும் கன்னியாக ஒளிர்வாள்


நில்லாத அருவியவள் கருணை -அதில்
நனைந்தவர்க்கு வினையழுக்கு போகும்
சொல்லாத வேதமவள் மௌனம்-அதனை
சிந்தாமல் விழுங்குவதே ஞானம்
இல்லாத ஒன்றவள்பால் இல்லை- எங்கும்
இருக்கின்ற நிழலவளின் பாதம்
கல்லாத மனதினிலும் கனிவாள்-அவள்
காலசைவில் பிறந்ததுவே கானம்

தூண்டில்முனை கூர்மையிலும் அவளே-நல்ல
துலாக்கோலின் நேர்மையிலும் அவளே
கூண்டினிலே சிறகடிக்கும் பறவை -தனைக்
கோதிவிடும் பூந்தென்றல் அவளே
மாண்டுவிட்ட ஆணவத்தை எரிக்க-தழல்
மூளும்விழி கொண்டவளும் அவளே
நீண்டுவரும் வினைத்தொடர்கள் நீக்கி-உயிர்
நீதியினைத் தருபவளும் அவளே