Wednesday, April 30, 2014

நம்நோக்கம் மீறியும் நம்நாக்கு பேசினால்.....



சிற்றெறும்புப் பேரணியைசீர்குலைக்க ஒப்பாது
சற்றுநின்று பார்க்கின்ற செங்கண் களிறேபோல்
சொற்கள் பெருகி சலசலத்தல் பார்த்திருக்கும்...
முற்றி முதிர்ந்தமௌ னம்!!


 நம்நோக்கம் மீறியும் நம்நாக்கு பேசினால்
நம்வாக்கு நம்வசம் இல்லையே-தன்போக்காம்
காட்டுக் குதிரை கடிவாளம் நீங்கினால்
வீட்டுக்கும் உண்டோ வழி.

வழிப்போக்கர் நாமெல்லாம்; வீதி நம தில்லை
குழிமேடு தாண்டுதல் கொள்கை-பழியென்னும்
சேறு படாவண்ணம் செல்லட்டும் நம்பயணம்
மாறுபா டெல்லாம் மறந்து.

மறந்தும் பிறர்முன்னே முள்ளைப்போ டாது
திறந்த திசைகளைத் தேடு-கறந்தபால்
போல மனமிருந்தால் போதும் அதுவேதான்
ஆலமுண்ட கண்டன் அமுது

அமுதென்றும் நஞ்சென்றும் அங்கெதுவும் இல்லை
 நமக்குள்தான் பாற்கடலும் மத்தும்- தமக்குள்ளே
தேவர் அசுரர் திகழுவதைக் கண்டவர்கள்
சீவனிலே தோன்றும் சிவம்.

சிவம்பெருக்க வந்தோம் சிறுமாயை யாலே
அவம்பெருக்கக் கொண்டோமே ஆசை-தவமென்னும்
கட்டிக் கரும்பான கண்ணுதலான் முன்நாமும்
வட்டமிடும் சிற்றெறும் பு.

Tuesday, April 29, 2014

ஆவேனோ ஆளாய் அவர்க்கு


 காரைக்கால் அம்மைகை கொட்டிக் கவிபாட
ஊரைவிட் டோரமாய் ஓமென்று-காரிருளில்
தாண்டவம் ஆடும் திருவாலங் காட்டீசன்
பூண்டகழல் தானே பொறுப்பு.

இமயம் அதிர இமைகள் அசைப்பான்
டமருகங் கொட்டிதிசை யெட்டும்-உமையும்
இசைந்தாட ஆடும் இறைவனென் நெஞ்சம்
அசையச்செய் வானோ அருள்.

தேகத்தில் யானையுரி தன்னிடையி லேபுலித்தோல்
நாகங்கள் பூணும் நகைகளாம்-ஆகட்டும்
மண்டயோ டேந்தும் மகேசனொரு மானிடனை
அண்டவிடு வானோ அருகு.

அந்தரத்தில் வாழும் அமரர் நெருங்குங்கால்
நந்தி பிரம்பு நிறுத்துமாம்-வந்திக்காய்
வாங்கிய ஓரடியை வாரி வழங்கியவர்
ஆங்கும் தொடர்வார் அது.

தக்கனது யாகந் தவிடு பொடியாக
மிக்க சினங்கொண்டாய் மாதேவா-அக்கிரமம்
மாமனுமா காது மயலரும்ப அம்புவிடும்
காமனும் ஆகாதோ கூறு.

காலமெல்லாம் உந்தனிரு காது களில்முனிவர்
சீலமுறப் பாட்டிசைக்கச் செய்தாயே-நீலகண்டா
அய்ப்பாடு மாட்டி அலைகின்றோ மேயிந்த
ஏற்பாடு நீர்செய்த தோ.

எண்தோளாம் முக்கண்ணாம் என்ன இருந்தென்ன
பண்கேட்டால் போதும் பரமனுக்கு-விண்ணவரும்
ஏங்கவே தூதனாய் இங்கிறங்கிப் போனானே
பாங்கனைப் போலே பரிந்து.

மாங்கனிக்கும் பிட்டுக்கும் மண்ணில் இறங்கியவன்
ஆங்கொருநாள் பிள்ளைக் கறி கேட்டான் - தாங்கும்
இளையான் குடிமாறன் இட்டகீ ரைக்கும்
வளைந்தானே என்ன வயிறு


காளையே வாகனமாய்க் கொண்டவராம் சுந்தரனாம்
ஆளையே ஆளாகக் கொண்டவராம்-நாளையே
போவேனோ என்றவர்க்குப் பூங்கழலைத் தந்தவராம்
ஆவேனோ ஆளாய் அவர்க்கு.

கையில் அனலிருக்க கங்கை தலையிருக்க
மெய்யில் பொடியிருக்க மான்மழுவும்-ஐயன்
கரத்திருக்க ஆடுங் கழலிரண்டும் எந்தன்
சிரத்திருக்க மாட்டாதோ சொல்

(2009 ல் எழுதிய வெண்பாக்கள்..மின் பரணில் கிடந்தன) 

Monday, April 28, 2014

இது வேறு மழை





உடல்சூட்டில் புயலடித்து மழைபொழிந்து போகும்
கடல்சூட்டில் கதகதப்பாய் கட்டுமரம் வேகும்
மடல்சூட்டில் ரோஜாவின் முன்னிதழ்கள் வாடும்
தொடும்சூட்டில் தீப்பிடிக்கும் தண்ணிலவுக் காலம் 


யாரிட்ட விறகினிலோ யாகத்தின் நெருப்பு
வேர்விட்ட மௌனங்கள் விளைகின்ற தகிப்பு
போரிட்ட காயத்தில் பூப்பூத்த சிலிர்ப்பு
கார்தொட்ட பெருமழையில் கொடிமின்னல் சிரிப்பு

பேச்சுரைத்த அமளியிலே பித்துச்சொல் முளைக்கும்
மூச்சிரைத்த உச்சத்தில் முக்திகொண்டு களைக்கும்
வீழ்ச்சியெது?வெற்றியெது?விளங்காமல் தவிக்கும்
காட்சியெலாம் தொலைந்துவிட  காலமங்கே உயிர்க்கும்

நான்தீண்டும் இடமெல்லாம் நதிநெளிந்த குளுமை
வான்தீண்டும் முகில்முதுகாய் வாஞ்சைகொண்ட புதுமை
கான்தீண்டும் நிலவொளியாய் குறுகுறுத்த  இளமை
நீதீண்டும் நொடியில்தான் நிகழுமந்த முழுமை

Thursday, April 24, 2014

சகலமும் தருவாள் அபிராமி





இன்று (25.04.2014) இரவு 7.30 மணியளவில் கோவை அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் "சகலமும் தருவாள் அபிராமி"என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன்.இரவு 9 மணிக்குள் நிகழ்ச்சி நிறைவு பெறும்...வாய்ப்பிருப்போர் வருகைதர வேண்டுகிறேன்..

Tuesday, April 22, 2014

குயிலின் கூட்டில் கொஞ்ச நேரம்

"அண்ணா! உங்களை வாணிம்மா கூப்பிடறாங்க"! பல்லாண்டுகளுகளுக்கு முன்னர் ஒரு செப்டம்பர் 23ல் ஈஷா திருநாள் விழாப்பந்தலருகே ஈஷா பிரம்மச்சாரி ஒருவர் அழைத்தார்.
  ஈஷா திருநாளில் "ஷாந்தி உத்ஸவ்"என்ற பெயரில் திருமதி வாணி ஜெயராம் அவர்களின் இசைநிகழ்ச்சி. அதில் என் இரண்டு பாடல்களுக்கு அவரே இசையமைத்துப் பாடுவதாக ஏற்பாடு.
பாட்ல்களை எழுதி அனுப்பியிருந்தேனே தவிர   அவர்களை நேரில் சந்தித்ததில்லை. மேடைக்குப் பின்னால் இருந்தார்.பரஸ்பர அறிமுகத்திற்குப்பின் என் பாடலின் ஒரு சொல்லில் ஒரேயோர் எழுத்தை மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டுத்தான் அழைத்திருந்தார் என்று தெரிந்து நெகிழ்ந்து போனேன்.


"அஷ்டாங்க யோகம் " என்ற தொகையறாவில் தொடங்கி "மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம்" என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல். "வைபவ் ஷிவா வைபவ் ஷிவா" என்று இன்னொரு பாடல்.இரண்டு பாடல்களையும் அற்புதமாக இசையமைத்துப் பாடினார்."வைபவ் ஷிவா" என்ற பாடலின் முடிவில் "ஆ.."என்றொரு நெடிய ஆலாபனை.அந்தப் பாடல் என் அலுவலகத்தில் நெடுநாள் ஒலித்துக் கொண்டிருக்கும்.எழுத்தாளரும் கணினி வரைகலை வல்லுனருமான சுதேசமித்திரன்,"கடைசியிலே ஆ...ன்னு எழுதி கலக்கீட்டீங்க"என்று என்னைக் கலாய்த்துக் கொண்டிருப்பார்.
கவியரசு கண்ணதாசன் பாடி வாணிம்மா பாடிய "எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது!அது எந்த தேவதையின் குரலோ!" என்ற பாடலுக்கு நான் பாண்டிய நாட்டையே எழுதிக் கொடுத்திருப்பேன்.தமிழின் மிக அபூர்வமான பாடல்கள்
அவருடையவை.


கவியரசு கண்ணதாசன் பால் பெரும் ஈடுபாடு கொண்ட திரு.கோவை கிருஷ்ணகுமார் கோவை கண்ணதாசன் கழகம் சார்பில்கடந்தஆறாண்டுகளாய் "கண்ணதாசன் விருது"நிறுவி வழங்கி வருகிறார். ஒவ்வோர் ஆண்டும் படைப்பிலக்கிய ஆளுமை ஒருவருக்கும் கலையுலக ஆளுமை ஒருவருக்கும் வழங்கப்படும் இந்த விருது தலா ரூ.50,000/ மற்றும் பாராட்டுப் பட்டயம் கொண்டது.

இந்த ஆண்டு அந்த விருதினை திருமதி வாணி ஜெயராமுக்கு சமர்ப்பிக்க கண்ணதாசன் கழகம் முடிவெடுத்தது.இதனை வாணிஜெயராம் அவர்களிடம் தெரிவிக்க கொஞ்சம் தயங்கினேன். முந்தைய சந்திப்பு அவருக்கு நினைவிருக்குமோ இல்லையோ! திடீரென்று யாரோ அழைத்து "கோவைக்கு வாருங்கள்,விருது தருகிறோம் "என்றால் மிரட்சிதான் வரும்.எனவே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உதவியை நாடினேன்.அவர் வாணி ஜெயராம் அவர்களை உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்ணதாசன் கழகம் குறித்தும் திரு.கிருஷ்ணகுமார் குறித்தும் என்னைக்குறித்தும் விரிவாக அறிமுகம் செய்தார். ஏப்ரல் 19ம் நாள் அவர்களை நேரில் சந்திப்பதாக ஏற்பாடு.

வாணி-ஜெயராம் தம்பதியுடன் திரு.கிருஷ்ணகுமார்,நின்ற கோலத்தில் திரு.வி.பி.குமார்
நுங்கம்பாக்கம் ஹடாவ்ஸ் முதல்தெருவில் கான்க்ரீட் மரம் ஒன்றின் மூன்றாம் அடுக்கில் அந்தக் குயிலின் கூடு. அழைப்புமணியை இசைத்ததும் திரு.ஜெயராம் கதவைத் திறந்தார். கண்ணதாசன் கழக நிறுவனர் திரு.கோவை கிருஷ்னகுமார், இலக்கிய நேசர் திரு.வி.பி.குமார் ஆகியோரின் அறிமுகப் படலம் முடிந்தது.
அப்போதுதான் வாணிம்மா அந்த செய்தியைச் சொன்னார். "சமீபத்தில காந்தி கண்ணதாசன் கூப்பிட்டிருந்தார். கவிஞரோட கிருஷ்ண கவசம் பாடிக் கொடுக்கணும்னு கேட்டார். நான் சொன்னேன்,"உங்கப்பா என்னை மூத்த மகள்னு சொல்வார். நான் பாடறேன்.ஆனா எனக்கு காலணா தரக்கூடாதுன்னு நிபந்தனை போட்டு போன சனிக்கிழமைதான் பாடிக் கொடுத்தேன். நாலே நாள்..நீங்க கண்ணதாசன் கழகத்திலிருந்து 50,000/விருதுன்னு சொல்லி கூப்பிடறீங்க. அவர் பெயரும் முத்தையா,உங்க பெயரும் முத்தையா..இது அவரோட ஆசீர்வாதம்தானே"!


நான் அவரிடம் மிகவும் தர்மசங்கடமான கேள்வியைக் கேட்டேன். "நீங்க பாடின கவிஞர் பாடல்களிலே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு எது?"தீவிரமான சிந்தனைக்குப் பிறகு,"எல்லாமேதான் சார்!எத்தனையோ பாட்டு! ஓடம் கடலோடும், அப்புறம் "கண்ணனை நினைக்காத நாளில்லையே" சொல்லிக் கொண்டே போகிறார்.
அரசியல் ரீதியாய் கவிஞருக்குஏற்பட்ட அலைக்கழிப்புகள் பற்றி பேச்சு திரும்புகிறது."பா ஆஆவம்.... பச்சைக் குழந்தை"என்று அங்கலாய்த்த அவருக்கு கண்கள் கலங்குகின்றன . தான் எழுதிய நூலை ஏற்கெனவே கையொப்பமிட்டு தயார் நிலையில் வைத்திருந்தார். அவர் தந்த பழரசத்தைப் பருகி முடிக்கும் முன்  எத்தனையோ பாடகர்கள் பாடியகவிஞரின் பாடல் வரிகளை சொல்லிச் சொல்லி பரவசமடைந்தார்.


தன் மூத்த மகள் விருது பெறுவதைக் காணவாவது கவியரசர் ஜுன்22 கோவை வருவார்தானே!!

Monday, April 21, 2014

ஏகாம்பரனுக்கு ஏதாடை?



பேயைத்தா யென்பாய் பிடிசாம்பல் பூசுவாய்
சேயைப்போய் உண்பாய் சிவக்கொழுந்தே-தீயைப்போய்
ஏந்திக் களிப்பாய் எழிலார் அமுதிருக்க
மாந்துவாய் நஞ்சை மகிழ்ந்து


முப்புரங்கள் உன்சிரிப்பில் முற்றும் எரிந்ததாம்
அப்புறமேன் மேரு வளைத்தாய்நீ-இப்படித்தான்
பாசக் கயிறுபடப் பாய்ந்துதைத்தாய் இங்கெமது
பாசம் அறுபடவே பார்


பெண்கொடுத்தான் பர்வதன் கண்கொடுத்தான் வேடனும்
பண்கொடுத்தார் நால்வர்! பயனென்ன?-மண்ணெடுத்து
தின்ற திருமால் திரைகடலில் போய்த்தூங்க
நின்றாய் சுடலையிலே நீ.

பீதாம் பரம்பட்டு போர்த்தத் திருமாலாம்
ஏகாம்பரனுக்கு ஏதாடை? வாகாக
கொஞ்சிவெண்ணய் ஊட்டினார் கோபியர் மைத்துனர்க்கு-
நஞ்சருந்த மட்டுமோ நீ

யாகத்தில் பங்கில்லை என்றாராம் மாமனார்
தேகத்தில் பங்கெடுத்தாள் தேவியும்-யோகத்தை
ஏழு ரிஷிகளுக்கும்   எப்படியோ பங்கிட்டாய்
வாழும் வழியிது வோ?

Sunday, April 20, 2014

மெய்யிருப்பு...


அவர்களிடமிருக்கிறது அக்கினிப்பரிட்சையின் கேள்வித்தாள்
அவனிடமிருப்பதோ அலைமேல் மிதப்பதற்கான சூத்திரம்....
அவர்களிடமிருக்கிறது ஆயிரம் இரைப்பைகளின் அசுரப்பசி
அவனிடமிருப்பதோ ஆதிரை உடைத்த அட்சய பாத்திரம்.....
அவர்களிடமிருக்கிறது தேய்த்துத்  தேய்ந்த அற்புத விளக்கு
அவனிடமிருப்பதோ அந்த பூதத்தின் விருப்ப ஓய்வுக் கடிதம்....
அவர்களிடமிருக்கிறது கிழக்கை மேற்கென கதைகட்டும் சாத்திரம்
அவனிடமிருப்பதோ விடியலின் கிழிந்த வரைபடம்.....
அவர்களிடமிருக்கிறது ஆடம்பரக் கூச்சலின் அடாவடி ஓசை
அவனிடமிருப்பதோ கலைமகளின் கருணையில் கனிந்த இசை....
அவர்களிடமிருக்கிறது ஒருபோதும் உறங்கவிடாத மனச்சலனம்
அவனிடமிருப்பதோ வற்றாத அமைதியின் ஆழ்ந்த மௌனம்....

Tuesday, April 15, 2014

வயதுக்கேற்ற வாழ்க்கை




 பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது
இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது
முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது
 நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது
ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது
அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது
எழுபதில் ஆனந்தம் எதிரியின்றி வாழ்வது
எண்பதில் ஆனந்தம் எண்ணங்கள் ஓய்வது
தொண்ணூறில் ஆனந்தம் தெய்வம்போல் ஆவது
நூறில் ஆனந்தம் நன்றிசொல்லிப் போவது...

( "ஆனந்தம் ஆரம்பம்" கவியரங்கில் வாசித்தது)

Sunday, April 13, 2014

கோவையில் சித்திரை....

 (சற்று முன்னர் கோவை பாலிமர் சேனலில் வாசித்த கவிதை)
புத்தம் புதிதாய் இன்னோர் ஆண்டு
புறப்படத் தொடங்கும் வேளையிலே
சித்திரைத் திங்கள் முதல்நாள் எனது
வாழ்த்துகள் ஏற்பீர் நேயர்களே

காலையில் எழுந்து கண்கள் திறந்ததும்
கண்ணாடி யோடு கனிகண்டு
நாளெல்லாம் நல் வாழ்த்துகள் சொல்கையில்
நெஞ்சில் இனிக்கும் கல்கண்டு

சித்திரை வெய்யில் சூடு குறைந்து
"சில்"லென்று காற்று வருகிறது
கத்திரி வெய்யில் நாடு முழுவதும்...
கோவையில் சூடு குறைகிறது

நல்ல வெய்யில் கோவையில்-ஆனால்
கொல்லும் வெய்யில் கிடையாது
மெல்ல மெல்ல குளுமை சேரும்
கோவையின் கோடைக்கு நிகரேது

கோடை அடங்கிப் போவது போலக்
கோபம் அடங்கப் பழகிடுவோம்
ஓடைநீரின் குளுமையை சொல்லில்
ஒவ்வொரு நாளும் நிரப்பிடுவோம்

நுங்கின் இதமாய் கொங்குத் தமிழென
நாடே நம்மைப் புகழ்கிறது
பொங்கும் சுவையில் சிறுவாணிக்கென
பெயரோ உலகெங்கும் இருக்கிறது

மக்கள் மனங்கள் குளிரும் வேளையில்
மண்ணும் குளிரும் ..அறிந்திடுவோம்
சிக்கல் வளர்க்கும் சினத்தை விட்டு
சிரித்த முகமாய் இருந்திடுவோம்


தொற்று நோய்கள் பற்றி விடாமல்
 தூய பழக்கங்கள் வரவேண்டும்
சுற்றம் நட்பு சூழ்ந்திட அனைவரும்
சுற்றுலா போய் வர வேண்டும்

பாரத நாட்டின் பழைய பெருமைகள்
பிள்ளைகள் பார்க்கச் செய்திடுங்கள்
வேர்விடும் பண்பின் வரலாறுகளை
வளரும் வயதில் சொல்லிடுங்கள்

தேர்வு முடிவுகள் தேர்தல் முடிவுகள்
தேடி வருகிற காலமிது
தீர்வுகள் கிடைக்கும் எனும் நம்பிக்கை
துளிர்விடுகின்ற நேரமிது

மதிப்பெண் கிடைத்தால் மாணவ மணிகள்
மேல்படிப்புக்கு சென்றிடுவார்
மதிப்பாய் நல்ல வாக்குகள் கிடைத்தால்
மேல்சபைக்குச் சிலர் சென்றிடுவார்

மார்க்குகள் வாங்க மாணவர் எல்லாம்
முனைப்பாய் உழைத்தது போலத்தான்
வாக்குகள் வாங்கத் தலைவர்கள் எல்லாம்
வீதி வீதியாய் வருகின்றார்

தலைவர்கள் போலத் திருடர்கள் வரலாம்
தெளிவாய் தெரிந்து வாக்களிப்போம்
நிலைமை உயர நல்லவை மலர
நாட்டு நலனுக்குத் துணையிருப்போம்


பயங்கள் நீங்கிச் சுயங்கள் உணர
ஜய ஆண்டினிலே முடிவெடுங்கள்
தயக்கம் தொலைத்து தெளிவாய் உழைத்து
முயற்சி செய்து ஜெயித்திடுங்கள்

வீடுகள் தோறும் வசந்தம் நிறைக
வளரட்டும் நம்பிக்கை நாற்றுகள்
பாடும் தமிழால் பரிவுடன் சொன்னேன்...
சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்

Thursday, April 10, 2014

ஒழுங்கின்மை தானே ஒழுங்கு

கடந்த சில மாதங்களாகவே கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாக்களில் பங்கேற்று வருகிறேன். மாணவர்களுக்குப் பேசுவது என்பதும் ஆண்டு விழாக்களில் பேசுவதும் வெவ்வேறு தன்மைகள் வாய்ந்தவை.மாணவர்கள் மட்டுமே நிறைந்த அவையில் அவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லலாம். பெற்றோர் மட்டுமே இருக்கும் அவையில் பெற்றோர்களுக்கானதை பேசலாம்.இருவரும் கலந்திருக்கும் அவையில் பொதுவாகப் பேச வேண்டும்.குறிப்பாக மாணவர்களை வைத்துக் கொண்டு பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பின் அம்சங்களைப் பேசலாகாது.

 சில மாதங்களுக்கு முன் பவானியில் ஆப்டிமஸ் பள்ளியின் மாண்டிஸோரி பிரிவு ஆண்டுவிழா.தை அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் கூடியிருந்தது மக்கள் வெள்ளம்.பவானியிலிருந்து சிறிது தூரத்தில்கவுந்தப்பாடி சாலையில் அமைந்துள்ளது ஆப்டிமஸ் பள்ளி.

பேச்சுக்குப் பிறகு குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள்.மழலையர் பள்ளி என்பதால் ஆசிரியைகள் கூடுதல் சிரத்தை எடுத்து குழந்தைகளைப் பழக்கியிருந்தார்கள். நடன நிகழ்ச்சி தொடங்கியது. பிள்ளைகளுக்கு மறந்துவிடும் என்பதால் ஆசிரியை மேடையின் பக்கவாட்டில் ஓதுங்கி நின்றுகொண்டு குழந்தைகளுக்கு மட்டும் தெரியும் விதமாக ஆடிக்கொண்டிருந்தார். முதல் வரிசையில் இருந்ததால்  அவர் ஆடுவதை என்னால் பார்க்க முடிந்தது. உடனே மேடையிலிருந்த சில குழந்தைகல் மேடைக்குப் பக்கவாட்டாக திரும்பி நின்று கொண்டு தங்கள் டீச்சர் ஆடுவதை சந்தோஷமாக வேடிக்கை பார்க்கத் தொடங்கின.


                                 இதை கவனித்த பள்ளியின் பொருளாளர் திரு.தனபாலன்,அடுத்த நடனத்திற்கு மேடையின் முன்புறம் நின்று குழந்தைகளை நெறிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த நடனத்தில் பிள்ளைகள் கரடி வேடமணிந்து மேடையில் தோன்றின. பாடல் ஒலிக்கத் தொடங்கிய விநாடியில் ஒரு கரடிக் குட்டிக்கு இடது காது கையோடு வந்துவிட்டது. அது மிகவும் சமர்த்தான கரடிக்குட்டி என்பதால், அந்தக் காதை மேடையிலிருந்தபடியே டீச்சரிடம் நீட்டியது.

மேடையின் முன்புறமிருந்த டீச்சர் ஆடிக்காட்டியபடியே
அந்தக் காதை கீழே போட்டுவிடுமாறு சைகை காட்டிக் கொண்டேயிருந்தார்.இப்போது மற்ற கரடிக்குட்டிகளுக்கு குழப்பம்.தங்களுக்கு சொல்லித்தந்த நடனத்தில் இல்லாத ஓர் அபிநயத்தை  டீச்சர் செய்கிறாரே என்று அவை குழம்பி நின்றன.

இப்போது ஒரு காதை இழந்த கரடிக்குட்டிக்கு இன்னொரு கவலை. ஒரேயொரு காதுடன் ஆடினால் நன்றாகவா இருக்கும்? கர்ம சிரத்தையாக இன்னொரு காதையும் பிய்த்து கீழே வீசிவிட்டு இனி நிம்மதியாக ஆடலாம் என்று முடிவு செய்த போது பாடல் முடிந்து விட்டது.குழந்தைகளின் உலகத்தில் ஒழுங்கின்மைதானே ஒழுங்கு!!