Wednesday, April 29, 2015

கிருஷ்ண காந்தம்



(முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் கண்ணனைப் பற்றி எழுதிக் கொண்டே வந்த வரிகள் கைகோர்த்து கவிதையாயின)

 வெண்ணெய் கனவில் கண்ணன் புரள
கண்ணன் நினைவில் குழலும் உருள
எழுந்த சங்கீதம் எவர்செய் ததுவோ

கண்ணன் செவ்வாய் உண்ட பின்னை
மண்ணும் வெண்ணெய்; அறியாள் அன்னை

உரலில் கட்டிய யசோதையை விடவும்
குரலில் கட்டிய மீரா பெரியவள்

கண்ணனை ஒருத்தி கள்வன் என்கிறாள்
கள்வனை ஒருத்தி கண்ணன் என்கிறாள்

ஆலிங்கனத்தில் அகப்பட மாட்டான்
காளிங்கனுக்கு பயப்பட மாட்டான்

கோபியர் மடிமேல் கொஞ்சும் அழகன்
பாக வதத்தின் பிரம்மச் சர்யன்

அணுஅணு வாக அழகலங்காரம்
யவனப் பெருக்கில் யமுனா தீரம்

பூணும் சலங்கைகள் பாடிடும் பாதம்
வேணு வனமெங்கும் விளைந்திடும் கீதம்

சூதும் தூதும் சுந்தரன் தொல்லை
கீதைக்கு மட்டும் குறைச்சல் இல்லை



தனித்தனி இல்லை



பெரிதாய் எதையும் சொல்வதற்கில்லை
பெரிதென எதையும் சொல்வதுமில்லை
சிறிதாய் எதுவும் தோன்றவுமில்லை
சிறுமையும் பெருமையும் அவரவர் எல்லை

பொதுவாய் எதையும் சொல்வதற்கில்லை
பொதுவெனசொல்பவை பொதுவும் இல்லை
நதிநிலம் கடலெதும்நமக்கென இல்லை
நாமில்லாமலும் நதிநிலம் இல்லை

விரல்களுக்குள்ளே வித்தைகள் இல்லை
வித்தையில்லாத விரல்களும் இல்லை
நிரல்களை நம்பி நிமிடங்கள் இல்லை
நிகழ்கணம் இருக்கையில் நிமிடங்கள் இல்லை

எவரும் எதையும் மாற்றுவ தில்லை
எவருக்கும் எதுவும் மாறுவ தில்லை
தவறோ சரியோ தொடருவதில்லை
தவறும் சரியும் தனித்தனி இல்லை

Monday, April 27, 2015

காது கொடுத்துக் கேளுங்கள்


"வீணைகள்" என்னும்சொல்லில் தொடங்கும்
 விடுகதைகள் எழுதிக் குவிக்கிறேன்
 ராவண குணத்தின் உருவகமாய்
 ராட்சச அதிர்வின் எதிரொலியாய்
ஆணவத்தால் கயிலாயத்தை
அசைத்தவன் சிக்கிய அழுகையாய்
மாளிகை தன்னில் மண்டோதரியின்
மஞ்சத்தில் எழுகிற விசும்பலாய்

அபசுரம் கூட அழகாய் ஒலிக்கும்
அசுர சாதக அதிர்ச்சியாய்
தபத்தில் கிடைத்த தனிப்பெரும் வரத்தால்
தருக்கித் திரியும் தலைக்கனமாய்
விபத்துப் போல வீசிய காற்றில்
விதிர்க்கும் நரம்பில் வரும் இசையாய்
கனத்த மகுடத்தைகழற்ற மறுத்து
சயனத்தில் தவிக்கும் சங்கடமாய்

மாயமான்களின் உற்பத்திச் சாலையில்
மாரீசன்களின் அலறல்களாய்
பாயப்போவதாய் பலமுறை சீறி
பதுங்கி ஒதுங்கும் புலிப்பொம்மையாய்
தேய்மானத்தின் தனி ஒலியாய்
தேதிகள் கிழிபடும் தாளமாய்
பாயும் அகந்தையின் பேரொலியாய்
பாடி முடிந்த பரணியாய்
  
ஆழ்ந்த தூக்கம் அடிக்கடி கலையும்
அதிர்ச்சியின் மெல்லிய அலறலாய்
சேர்ந்த இடத்தின் சிறுமைகளாலே
சிதைந்த மனதின் சிணுங்கலாய்
வீழ்ந்த அதிர்ச்சியை மறைத்திட எண்ணி
வீறிடும் வெறியின் மனநோயாய்
தேர்ந்த நடிகனின் ஒப்பனை கலைகையில்
தேம்பி அழுகிற மனக்குரலாய்... 

வீணைகள் வழங்கிய உருவகங்களை
வகைபிரித்து வரிசையில் அடுக்கினேன்
கானல் நதியின் சலசலப்பொன்று
காதில் விழுந்ததே ...கேட்டதா உமக்கும்?

Sunday, April 26, 2015

அந்தப் புதிர்





திரளும் முகில்கள் தயங்கி நடக்கும்
உருளும் தேர்களாய் உயரே அசையும்.
எந்தப் பரப்பில் எந்த நொடியில்
விழுவதென்றே வியூகம் அமைக்கும்.
சொந்த முடிவா?சந்தர்ப்ப வசமா?
எந்த வகையிலோ இறங்கத் தவிக்கும்.
எம்மழை எவ்விடம்...என்பது எவர்வசம்
அந்தப் புதிர்தான் ஆதிப் பரவசம்.



Friday, April 24, 2015

ஜெயகாந்தன் - வைரமுத்து சர்ச்சை!-என் யூகம் சரிதான்


குமுதம் வார இதழில் 'வைரமுத்து சிறுகதைகள்' எனும் நெடுந்தொடரைப் பாராட்டி ஜெயகாந்தன் அவர்களின் பெயரிலான கடிதம் வெளிவந்தது தொடர்பான சர்ச்சையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன்.

நான் ஜெ.கே. மீது வழிபாட்டுணர்வு கொண்ட அபிமானி என்பதும் கவிஞர் வைரமுத்துவுக்கு வேண்டியவன் என்பதும் என் இலக்கிய முன்னோடிகளும் நண்பர்களும் நன்கறிந்த விஷயம்.

ஜேகே யின் ஓரிரு நூல்களைப் படித்தவர்களுக்குக் கூட அந்தக் கடிதம் அவரின் எழுத்துப் பாணியில் இல்லை என்பது நன்றாகத் தெரியும் .எனவே செய்தி வெளிவந்த போதே கவிஞர் வைரமுத்துவிடம் தொடர்பு கொண்டு பேசினேன். "ஜே.கே. தரப்பிலிருந்து உங்களிடம் யார் பேசினார்கள், கடிதம் அனுப்பும் வேலையை யார் ஒருங்கிணைத்தார்கள் என்பதையெல்லாம் நீங்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்குமே' என்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். 'கொஞ்சம் பொறுமையாக இருங்கள்' என்று சொன்னார்.இதில் திரு யு.எஸ்.எஸ்.ஆர்.நடராஜன் முக்கியப் பங்கு வகித்திருப்பார்  யூகித்தேன்.

இன்று வெளிவந்துள்ள நக்கீரன் இதழில் இது தொடர்பான கட்டுரை வெளிவந்துள்ளது. இதில் திரு.நடராஜன்,தான் ஜேகே யிடம் கவிஞர் வைரமுத்துவின் சிறுகதையை வாசித்துக் காட்டியதாகவும்,ஜே.கே மெல்லிய குரலில் 'நல்லாயிருக்கே'என பாராட்டியதாகவும் இதைக் கேள்விப்பட்டு ஆனந்தப்பட்ட கவிஞர் வைரமுத்து சிறுகதைகள் தொகுக்கப்படும் போது பயன்படுத்த ஜேகே ஒரு வாழ்த்துமடல் தருவாரா என்று கேட்டதாகவும் சொல்லியுள்ளார்.


ஜேகே ஒப்புதலின் பேரில் தானும் ஜேகே அவர்களின் இரண்டாவது மனைவி திருமதி கௌசல்யா அவர்களும் அந்தக் கடிதத்தின் வரைவைத் தயாரித்து ஜேகேயிடம் படித்துக் காட்டி அவர் கையெழுத்து போட முடியாத நிலையில் பழைய கையெழுத்தை ஜேகே ஒப்புதலுடன் பயன்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மாடியில் இருந்த ஜேகே மகள் தீபா அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்காது என்னும் திரு.நடராஜன்,திருமதி கௌசல்யாதான் ஜே.கேவின் இலக்கிய உதவியாளர் என்றும் தெரிவிக்கிறார்.


//அவர் அந்தக் கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும், அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும் உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.// என்று ஜேகே அவர்கள் மகள் தீபாசொன்னதை நக்கீரன் சுட்டிக் காட்டியுள்ளது.


ஜேகேஒப்புதலுடன் அனுப்பப்பட்ட கடிதம் என்பதை இவர்கள் முன்னரே தெளிவுபடுத்தி, இது ஜேகே யின் கடைசி எழுத்து என்ற வரியையும் நடராஜன் தவிர்த்திருந்தால் விஷயம் இவ்வளவு பெரிய சிக்கலாகியிருக்காதோ என்னவோ.


Thursday, April 23, 2015

ஆதலால் அருமை நெஞ்சே


முழக்கங்கள் முனகலாகும்
முனகலும் ஓய்ந்து போகும்
விளக்கங்கள் விவாதமாகும்
விவாதமும் மறந்து போகும்
கலக்கங்கள் தெளியலாகும்
கேள்விகள் தோன்றும் போகும்
நிலைக்கொள விரும்பும் நெஞ்சே
நித்தியன் பெயரைப் பாடு


மகுடங்கள் களவு போகும்
மகிமைகள் மறந்து போகும்
தகுதிகள் பழையதாகும்
தலைமுறைத் தேவை மாறும்
யுகங்களும் உருண்டு போகும்
 யுக்திகள் ஒருநாள் வீழும்
புகையெனப் பிறவி தீரும்
புண்ணியன் பாதம் தேடு  


சாதனை செய்தி யாகும்
செய்தியின் வியப்பும் ஓயும்
வேதனை சேரும் மாறும்
வந்தவை விலகிப் போகும்
போதனை பழையதாகும்
பொக்கிஷம் புழுதியாகும்
ஆதலால் அருமை நெஞ்சே
அத்தனின் பாதை நாடு


தேடல்கள்  முடியும் போது
தேவைகள் தீர்ந்து போகும்
ஓடியே களைக்கும் போது
ஒருவகை சலிப்பே வாழும்
நாடிய வளங்கள் சேர்த்தும்
நாளையின் கேள்வி மிஞ்சும்
பாடியே சிலிர்க்கும் நெஞ்சே
பரமனின் அடிகள் சூடு

Tuesday, April 14, 2015

கடப்பாள் என் கடல்


புவனம் ஆள்பவள் ஈஸ்வரியாம்-அடப்
போடா அதனால் எனக்கென்ன
குவளைத் தண்ணீர் நான்கேட்டால்-அவள்
குடுகுடு எனவந்து நீட்டுகிறாள்
கவலை கொஞ்சம் படிந்தாலும்-அவள்
கைகளில் அள்ளித் தேற்றுகிறாள்
"துவள வேண்டாம் எப்போதும்-நல்ல
துணை நான்" என்று காட்டுகிறாள்


சாக்த நெறியாம் வழிபாடாம்-அந்த
சாத்திரமேதும் நானறியேன்
வேர்த்த நொடியினில் விசிறுகிறாள்- எந்த
விரதம் இருந்தினி நான்துதிப்பேன்?
"காத்திடல் என்பணி" என்றுரைக்கும்-அவள்
காருண்யம் நிறைந்தது; போதாதா?
பூத்திடும் புன்னகை ஒளிதந்தாள்- இனி
பொல்லா வினைகள் ஓடாதா


மேரு சக்கரம் தனிலெல்லாம் -பல
மேலோர் அவளை தருவிப்பார்
யாரும் அறியாக் கணங்களிலே -அவள்
என்மனக் குப்பையில் ஒளிந்திருப்பாள்
வேரும் நீரும் தானானாள்-இனி
விளைச்சலுக் கிங்கே என்ன குறை
பாரும் வானும் பதைபதைக்க -இங்கே
பகடை என்னுடன் உருட்டுகிறாள்

அடுப்பில் சமையல் பார்த்தபடி-பிள்ளை
அழுகையைஅமர்த்தும் கைகாரி
இடுப்பில் என்னைச் சுமந்தபடி -அட
எத்தனை லோகங்கள் ஆளுகிறாள்
முடிப்பாள் வினைகளை முற்றாக -அதை
முடிக்கும் வேலையும் எனக்கில்லை
கடப்பாள் என்கடல் படகாக-இனி
கடந்திட மற்றொரு கடலுமில்லை 

Thursday, April 9, 2015

மும்மத வேழமாய் இங்கிருந்தான்



மூடிக் கிடந்த குளிர்பெட்டி-அதில்
மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே
பாடி முடிந்த கீர்த்தனையாய்- எங்கள்
பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே
மேடுகள் ஏறிய ஜீவநதி -நெடும்
 மௌனத்தில் தூங்கிய தருணமிது
கூடு கிடத்தி சிறகடித்தான் -ஒரு
கனல்பறவை கொண்ட மரணமிது

 மீசை வருடும் இருகரங்கள்-அவன்
 மார்புக் கூட்டினில் கோர்த்திருக்க
வீசும் வெளிச்ச விழியிரண்டும் -ஒரு
விடுகதை போலத் துயின்றிருக்க
பேசி  உலுக்கிய இதழிரண்டும் -ஒரு
பிரளய முடிவென ஓய்ந்திருக்க
ஆசைத் தமிழன் ஜெயகாந்தன்- அங்கே
 அமைதி பருகிப் படுத்திருந்தான்

சந்தடி இல்லா ஆகாயம் -என
சலனமில் லாமல் கிடந்தானே
வந்தவர் போனவர் ஆயிரமாம்-அவன்
வரவேற்காமல் துயின்றானே
வந்தவன் வானத் தமரனல்ல-ஆனால்
வழக்க மாய்வரும் மனிதனல்ல
சொந்தச் சுவடால் பாதைசெய்தான் -அதில்
சூரியப் பயணம் செய்திருந்தான்
 

மேடைகள் அவனது ஆடுகளம்-அதில்
மேன்மைக் குணங்கள் வளர்த்திருந்தான்
ஏடுகள் அவனது தாய்மடியாம்-அதில்
எத்தனை வித்தகம் காட்டிநின்றான்
நாடகத் திரைப்படம் சிவதனுசு-அதை
நாயகன் அவன்தான் வளைத்துநின்றான்
மூடர்கள்  அகந்தை மிதித்தெறியும் -நல்ல
மும்மத வேழமாய் இங்கிருந்தான்


Wednesday, April 8, 2015

எழுத்து மட்டுமா எழுத்தாளன்?



ஜெயகாந்தன் எழுதாத நேரங்களிலும் ஓர் எழுத்தாளராய் ஒளிர்ந்தவர்.தொழில் சார்ந்த முழுநேர எழுத்தாளர்கள் பலருண்டு. ஆனால் அவர் நுண்ணுணர்வின் ஓயாச் சுடரால் ஒளிவீசிக் கொண்டேயிருந்தவர்.

இரவுப் பொழுதுகளில் கதிரவன் நம் கண்ணுக்குத் தெரியாமல் வேறெங்கோ ஒளிவீசியதைப் போல் எழுதாத நேரங்களிலும் உள்ளொளி கனல நின்ற காம்பீர்யன் அவர்.


தன்னைத் தானே சிகரமாய் உயர்த்தி அந்தசி சிகரத்தின் முகட்டில்
தன்னையே ஒளியாய் தகதகக்கச் செய்த ஜோதியாய் சுடராய் சூழொளி விளக்காய் நீடு துலங்கும் நிலை வெளிச்சம் அவர்.

அவருடைய பாத்திரங்களில் அவர் ஊற்றி வைத்த வாழ்க்கை,  உயிர்ப்பு மிக்கது.அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரிலும்
விசுவரூபத்திற்கான வாமனக் காத்திருப்பை தரிசிக்க முடியும்.


அவருடைய "நான்" வெகு பிரசித்தம்.ஆனால் அது அகந்தையின் பாற்பட்ட நானல்ல.பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கும் பேருணர்வின் துளிகளால் தூண்டப்பட்ட அகத்திய வேட்கை அது.

அலைகளுக்கு மத்தியில் கம்பீரமாய் நகர்கிற கப்பல் கரைசேர்ந்த பிறகும்  காணத்தகு பிரம்மாண்டமாய் நிலைகொண்டிருப்பது போல
எழுதாமல் வாளாவிருந்த போதும்,மேடைகளை ஆண்டுநின்ற போதும்,தனி உரையாடல்களின் போதும் சஹிருதயர்களுடனான சபைக்களத்திலும்,நோய்மையால் மௌனித்த போதும் ஆளுமையின் அடர்திடமாய் நங்கூரம் பாய்ச்சி நினறிருந்தார்.


இன்று சில எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகளப் பொருண்மைகளால்  தாங்களோ அல்லது தங்கள் சகாக்களோஜெயகாந்தனைத்  தாண்டி தசமங்களாயிற்று என பெருமையடித்துக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன். எழுத்து மட்டுமல்ல எழுத்தாளன் என்பதை பாரதிக்குப் பின்னர் உணரச் செய்தவர் ஜெயகாந்தனே. அவரின் ஆளுமை முழுமையானது. அதிர்வுகள் மிக்கது. ஒருபோதும் நகல்செய்ய இயலாத நவயுக ஜோதி ஜெயகாந்தன்


 அவர் வெற்றியைத் தேடி நடந்தவரல்ல. ஆனால் "ஜெயகாந்தன்"என்னும் பெயருக்கேற்ப  ஜெயம் இடையறாமல் அவர்பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டேயிருந்தது.ஜெயம் என்பது பொருது வெல்லும் வல்லமை மட்டுமல்ல.போரிடவும் தேவையில்லா பெருநிலை.

எழுத்துக் களத்தின் நீளம் தாண்டும்-உயரம் தாண்டும்சூரர்களால்
நெருங்க முடியாத சீனச்சுவராய் நீண்டு கிடக்கிறது அவரின் நெடும்புகழ்.

தன் பொதுவாழ்வில்  இடைநடந்த மனிதர்களில் உச்சங்களை உச்சங்களாகவும் துச்சங்களை துச்சங்களாகவும்  உணர மட்டுமின்றி சுட்டிக் காட்டவும் கீழ்மைகளை தட்டிக் கேட்கவும் அவரால் முடிந்தது.  அந்த ரௌத்திரம் சிலரால் தலைக்கனமென்றும் சண்டித்தனம் என்றும்
பிழைபெயர்க்கப்பட்டது.ஆனால் அவரை இயக்கியது,
அனலடிக்கும் மனிதநேயம்.

எந்த விதத்திலும் ஈடுரைக்க முடியாத ஆளுமையாய் எல்லா விதங்களிலும் தாக்கங்கள் ஏற்படுத்திய மேதைமையாய் நின்றொளிரும் நந்தா விளக்கு ஜெயகாந்தன். ஒரு கவியரங்கில் ,அடுத்து உரை நிகழ்த்த இருந்த அவர் அவைநுழைந்து அமர்ந்ததும் நான் வாசித்த வரிகள் சிலவற்றை இப்போதும் அவருக்கான அஞ்சலியாய் சமர்ப்பிக்கிறேன்.
"பாரதியை கண்கொண்டு பாராத தலைமுறைக்கு
 நீயேதான் பாரதியாய் நிதர்சனத்தில் திகழுகிறாய்..நீ
தரைநடக்கும்  இடிமுழக்கம்..திசைகளுக்கு புதுவெளிச்சம்
உரைநடையின் சூரியனே! உன்றனுக்கு என் வணக்கம்"

Friday, April 3, 2015

குறும்பாவில் சிலம்பு

 
 
 
மாநாய்கன் பெற்றமகள் மலர்ந்தாள்
மாசாத்து வான்மகனை மணந்தாள்
மானாய் மருண்டாள்
மதுரைநடந்தாள்
கோனவன் பிழைசெய்ய கண்ணகியும் கனலாகி எழுந்தாள்



சுதிசேர்த்தாள் மாதவியும் யாழில்
சுரம்சேர்த்தாள் பூம்புகாராம் ஊரில்
விதிசேர்த்த காரணம்
 வல்வினையின் காரியம்
 பதிநீத்தான் கோவலனும் பேர்படைத்தாள் பாவிமகள் பாவில்


தூங்காத கண்ணகியின் துயரம்
தமிழ்கண்ட கற்புக்கோர் உயரம்
ஏங்காமல்ஏங்கி
இதயவலிதாங்கி
ஓங்கி நின்றாள் ஆனாலும் மாதவியும் வயிரம்


கலைக்காக மாதவியை சேர்ந்தான்
கோவலனும் ஆனந்தமாய் வாழ்ந்தான்
விலையறியா காதலில்
விளைந்தவொரு ஊடலில்
நிலைதவறி தடுமாறி நடந்தவனோ மதுரையிலே வீழ்ந்தான்


ஆடலிலே சேர்ந்ததந்த உறவு
ஆசையுடன் எத்தனையோ இரவு
கூடலில் மகிழ்ந்தானே
பாடலில் பிரிந்தானே
கூடல்நகர் போனவனை கூப்பிட்டு விதிகொல்ல மறைவு

குலமகளாம் கண்ணகியை பிரிந்தான்
கலைமகளாம் மாதவியை அடைந்தான்
புலம்பவில்லை இவளும்
பூண்டிருந்தாள் மவுனம்
சிலம்புவிற்கக் கிளம்பி சதிவலையில் விழுந்தே இறந்தான்


மதுரையையே எரித்தவள்பின் மாறி
மன்னனுக்கு மகளென்று கூறி
முதுதெய்வம் ஆனாள்
மலையாளம் போனாள்
பதித்துவைத்தான் இளங்கோவும் பெரியசுவை காவியம் பாடி

சோழநாட்டுப் பெண்வாழ்ந்த சரிதம்
சேரநாட்டு இளவரசன் லிகிதம்
ஊழ்வினையால் தென்னவன்
உயிர்நீத்த மன்னவன்
வாழ்வாங்கு வாழுமிடம் வாசிக்கும் செந்தமிழர் இதயம்