ஆதலால் அருமை நெஞ்சே


முழக்கங்கள் முனகலாகும்
முனகலும் ஓய்ந்து போகும்
விளக்கங்கள் விவாதமாகும்
விவாதமும் மறந்து போகும்
கலக்கங்கள் தெளியலாகும்
கேள்விகள் தோன்றும் போகும்
நிலைக்கொள விரும்பும் நெஞ்சே
நித்தியன் பெயரைப் பாடு


மகுடங்கள் களவு போகும்
மகிமைகள் மறந்து போகும்
தகுதிகள் பழையதாகும்
தலைமுறைத் தேவை மாறும்
யுகங்களும் உருண்டு போகும்
 யுக்திகள் ஒருநாள் வீழும்
புகையெனப் பிறவி தீரும்
புண்ணியன் பாதம் தேடு  


சாதனை செய்தி யாகும்
செய்தியின் வியப்பும் ஓயும்
வேதனை சேரும் மாறும்
வந்தவை விலகிப் போகும்
போதனை பழையதாகும்
பொக்கிஷம் புழுதியாகும்
ஆதலால் அருமை நெஞ்சே
அத்தனின் பாதை நாடு


தேடல்கள்  முடியும் போது
தேவைகள் தீர்ந்து போகும்
ஓடியே களைக்கும் போது
ஒருவகை சலிப்பே வாழும்
நாடிய வளங்கள் சேர்த்தும்
நாளையின் கேள்வி மிஞ்சும்
பாடியே சிலிர்க்கும் நெஞ்சே
பரமனின் அடிகள் சூடு