கிருஷ்ண காந்தம்(முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் கண்ணனைப் பற்றி எழுதிக் கொண்டே வந்த வரிகள் கைகோர்த்து கவிதையாயின)

 வெண்ணெய் கனவில் கண்ணன் புரள
கண்ணன் நினைவில் குழலும் உருள
எழுந்த சங்கீதம் எவர்செய் ததுவோ

கண்ணன் செவ்வாய் உண்ட பின்னை
மண்ணும் வெண்ணெய்; அறியாள் அன்னை

உரலில் கட்டிய யசோதையை விடவும்
குரலில் கட்டிய மீரா பெரியவள்

கண்ணனை ஒருத்தி கள்வன் என்கிறாள்
கள்வனை ஒருத்தி கண்ணன் என்கிறாள்

ஆலிங்கனத்தில் அகப்பட மாட்டான்
காளிங்கனுக்கு பயப்பட மாட்டான்

கோபியர் மடிமேல் கொஞ்சும் அழகன்
பாக வதத்தின் பிரம்மச் சர்யன்

அணுஅணு வாக அழகலங்காரம்
யவனப் பெருக்கில் யமுனா தீரம்

பூணும் சலங்கைகள் பாடிடும் பாதம்
வேணு வனமெங்கும் விளைந்திடும் கீதம்

சூதும் தூதும் சுந்தரன் தொல்லை
கீதைக்கு மட்டும் குறைச்சல் இல்லை