Saturday, February 27, 2010

இப்படித்தான் ஆரம்பம்-8

"ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொரு தருணத்தில் என்னுடைய பாடல் எதிரொலிக்கும்"என்றார்
கவியரசு கண்ணதாசன்.தன் வாழ்வின் எல்லாத்தருணங்களிலும் கண்ணதாசனின் பாடல் ஒலிப்பதாய் உணர்ந்த பலரை நான் பார்த்திருக்கிறேன்.
இலக்கிய அமைப்புகள் சார்பாகக் கண்ணதாசன் விழாக்கள் நடத்துவதில் ஆரம்பித்து,சசி போன்ற நிறுவனங்கள் துணையுடன் நடத்திய கண்ணதாசன் விழாக்கள்,மற்றும் உலகின் பல நாடுகளில் கண்ணதாசனைப் பற்றிப் பேசிய அனுபவங்கள்,அனைத்துமே எனக்கோர் உண்மையை உணர்த்தின.

தமிழ்மக்கள்,தங்கள் அந்தரங்கத்தில் நுழைந்த கவிஞராகக் கண்ணதாசனைக் கான்கிறார்கள்.
தங்கள் தனிவாழ்வின் அனுபவங்களை,வளமான தமிழால் பாடிய கவிஞராக மட்டுமின்றி,வாழ்வு பற்றிய தெளிவைத் தந்த கவிஞராகவும் கண்ணதாசனைக் காண்கிறார்கள்.என்னுடைய கணிப்பில் வெகுமக்கள் அப்படி நெருக்கமாக தங்களுடன் அடையாளப்படுத்திக் கொண்ட இன்னொரு கவிஞர் இல்லை.
ரீ மிக்ஸ் என்ற பெயரில் கண்ணதாசனின் வரிகளைக் கற்பழிக்கும் இன்றைய வன்கொடுமைச் சூழலில்
கூட கண்ணதாசன் வீடுகள் தோறும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கண்ணதாசனின் ஒரு பாடலைக்கூட முழுதாகக் கேட்டிராத இன்றைய சிறுவர்களும் இளைஞர்களும்
கூட "அது கழுத்தில்லை கழுத்தில்லை கண்ணதாசன் எழுத்து"என்று பாடுவதைக் கேட்கும்போது சின்ன சந்தோஷம் பற்றிக் கொள்கிறது.

கண்ணதாசனை நேரடியாக அறிந்து கொள்ளும் இசைச்சூழல் இல்லாமல் போனாலும்கூட,தமிழ் சினிமாவின் கடைசிப் பாடலாசிரியன் இருக்கும்வரை கண்ணதாசனின் பெயர் திரும்பத் திரும்ப
சொல்லப்படும் என்றே தோன்றுகிறது.

"காளிதாசன் கம்பன் நாளை வாழ்த்தும் தலைமுற-நாங்க
கண்ணதாசன் தொடங்கிவச்ச பாட்டுப் பரம்பர"

"காளிதாசன்,கண்ணதாசன்,கவிதைநீ..நெருங்கிவா"

"மீன்செத்தா கருவாடு நீசெத்தா வெறுங்கூடு கண்ணதாசன் சொன்னதுங்க"

"கண்ணதாசன்போல தண்ணியடித்தால் கவிதை வருமா கழுதைக்கு"

"கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு-என்
காதல் கவிதை வரிகளைக் கொஞ்சம் திருத்திக் கொடு"

"சொன்னான் நம்ம கண்ணதாசன் பாட்டுலெ-ஒருசேதி
அது தேவையிப்ப நாட்டுலெ"

போன்ற பாடல்கள் கண்ணதாசனின் இடத்தை உறவுணர்வோடும்,உரிமையோடும் நினைவுகூரும் கவிஞர்களின் பிரியத்தை உணர்த்துபவை.
"கண்ணதாசன் காரக்குடி"போன்றவை விதிவிலக்குகள்.

கண்ணதாசனின் எழுத்துக்களால் தங்கள் வாழ்வில் மலர்ச்சி கண்ட மனிதர்கள்,
அவர்பால் கொண்ட நன்றியுணர்வின் காரணமாக தமிழகமெங்கும் எத்தனையோ
அமைப்புகளை அவர் பெயரால் தொடங்கினர்.கோவை,ஈரோடு,சேலம் போன்ற
பகுதிகளில் இத்தகைய உணர்வும் அமைப்புகளும் அதிகம்.

பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப்பேரவை வலிமையாக வளர்ந்தது.
பக்கத்திலுள்ள சிற்றூர்களில் கிளை அமைப்புகள்,கிளை அமைப்பு தொடங்க முடியாத இடங்களில் கண்ணதாசன் விழாக்கள் என்று பட்டையைக் கிளப்பினார்கள்.
இவர்களைப் பெரிதும் ஊக்குவித்தவர்களில் எல்.சோமு குறிப்பிடத்தக்கவர்.

செட்டிநாட்டுக்காரரான இவர் அசப்பில் கண்ணதாசனைப் போலவே இருப்பார்.இதை யாராவது சொன்னால் உடனே முகம்மலர்ந்து கண்ணதாசன் போலவே சிரிப்பார்.
கண்ணதாசன் கலை இலக்கியப்பேரவை சார்பில் மகளிர் அணி தொடங்கப்பட்டது.விஜயசாந்தி,ஜெயந்தி என்று பலரும் மகளிர் அமைப்பை வலிமையாக இயங்க வைத்தர்கள்.
இந்தக் காலகட்டத்தில்தான் கவிஞர் வைரமுத்து அவர்களுடனான என் அறிமுகமும் அரும்பியது.கோவையில் அவருடைய 'சிகரங்களை நோக்கி' நூல் வெளியீட்டு விழாவை நடத்தினோம். அதற்கடுத்த நாள் கண்ணதாசன் விழாவில் அவர் சிறப்புரை நிகழ்த்துவதாக அமைத்திருந்தோம்.

பட்டுக்கோட்டையா கண்ணதாசனா?,கண்ணதாசனா வைரமுத்துவா என்பது போன்ற
கோழிச்சண்டைகள் தமிழக மேடைகளில் பட்டிமன்றம் என்ற பெயரில் அதிகமாக அரங்கேறிக் கொண்டிருந்த காலம் அது.பட்டுக்கோட்டைக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த சகோதர பாசத்தை,கண்ணதாசன் வைரமுத்து இடையிலான குருசிஷ்ய பாவத்தை இத்தகைய மேடைகள் கொச்சைப்படுத்துகின்றன என்பது என் அபிப்பிராயம்.

கண்ணதாசனைப்பற்றி தரக்குறைவாய் எழுதிய பத்திரிகையாளர் ஒருவரை பட்டுக்கோட்டை அடிக்கப் போனார்.பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் முதல் ஃபோன் கண்ணதாசனுக்குத்தான்.அங்கே முதலில் வந்தவரும் அவரே.பட்டுக்கோட்டை இறந்ததும்,"தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானா?என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்"என்று எழுதியவர் கண்ணதாசன்.

அதேபோல் கண்ணதாசன் மீது வைரமுத்து கொண்டிருக்கும் அளப்பரிய பக்தி பற்றி
"ஒரு தோப்புக் குயிலாக'புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன்.தமிழ் மக்களுக்கு,கவிஞர்கள் மத்தியிலான இந்தப் பாசம்தான் சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

கண்ணதாசன் விழாவில் வைரமுத்து கலந்து கொள்கிறார் என்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.மேளதாளம் முழங்க வரவேற்பு தரப்பட்டது.
"வானத்தின் நீலத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.அருவியின் ஆலோலத்தை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
கேட்டுக் கொண்டிருக்கலாம்.கண்ணதாசனின் பெருமையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கலாம்" என்று அவர் தொடங்கிய போது
அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டதால் இரண்டு நன்மைகள் நிகழ்ந்தன.கவிஞர் வைரமுத்து சமூக இலக்கியப்பேரவை கோவயில் கிளைபரப்பிய போது கண்ணதாசன் இயக்கம் அதனைத் தோழமையுடன் அரவணைத்தது.அதேபோல அடுத்தடுத்த ஆண்டுகளில் கோவையில் கண்ணதாசன் விழா நடந்தபோதெல்லாம்,கவிஞர் வைரமுத்துவின் கட் அவுட்டும் விழா அரங்கில் பிரதானமாக வைக்கப்பட்டிருந்தது.

கவிஞர் வைரமுத்துவை குறை கூறுவதன் மூலமே கண்ணதாசன் விழாவில் கைத்தட்டல் பெறலாம் என்ற உத்தியை ஊரெங்கும் கடைப்பிடித்து வந்த ஒருசில பேச்சாளர்கள்,இந்த அரங்கத்தில் தடுமாறினார்கள். கண்ணதாசனை உணர்வுபூர்வமாகப் பேசுகிற பேச்சாளர்கள் அந்த அரங்கினை ஆட்சி செய்தார்கள்.
கண்ணதாசனைக் கேட்டும் கற்றும் தேறிய பார்வையாளர்கள் ஆளுகையில் அந்த
அரங்கம் இருந்தது. ஊடகங்களின் துணையால் விளம்பரம் பெற்ற பல பட்டிமண்டபப் புலிகள்,இந்த அரங்கை வெற்றி கொள்ள முடியாமல் மண்ணைக் கவ்வியதும் நிகழ்ந்தது."என்னடா இது! மதுரைக்கு வந்த சோதனை!"என்று அவர்கள் வருத்தத்துடன் விடைபெற்றனர்.

பேச்சுக்கலைக்கு ஆதாரம்,பாரதி சொன்ன அடிப்படை வரையறைதான்:
"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்" என்பது,
கண்ணதாசன் மேடைகளில் மீண்டும் நிரூபணமானது.

(தொடரும்)

2 comments:

Balaji said...

அருமையான பதிவுகள் ,
அடுத்த பகுதியை படிக்க மிக ஆர்வமாக உள்ளேன்

marabin maindan said...

நன்றி பாலாஜி..
பயணங்களால் தாமதம்.
விரைவில் எழுதுவேன்