Thursday, June 30, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 9

ஒருநாள் காலை அனுமதி பெற்று கணேஷ் பாலிகாவின் அறைக்குள் நுழைந்த நான், மெல்லச் சொன்னேன், "Sir, i am resigning". அவர் அதிர்ச்சியடையவில்லை. இந்த மனநிலைக்கு நான் வந்து கொண்டிருந்ததை அவர் ஏற்கெனவே உணர்ந்திருந்தார். ஒரேயொரு காரணம்தான். சென்னை வாழ்க்கை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. பருவநிலை, தண்ணீர் என்று பல விஷயங்கள் சரிப்படவில்லை.

சசி விளம்பர நிறுவனம், பிஃப்த் எஸ்டேட் இரண்டு நிறுவனங்களுமே எனக்கொரு பாடத்தைக் கற்றுத் தந்தன. எந்த விளம்பர நிறுவனத்திலும் தமிழ் விளம்பர எழுத்தாளருக்கு முழுநேர வேலை இருக்காது என்பதுதான் அது. ஒரு மாதத்தின் சில நாட்களில் முக்கிய பங்களிப்பு இருக்கும். அதுவும் அதிவிரைவாக வேலை செய்து  பழகுபவர்களுக்கு நிறைய நேரம் இருக்கும். ஒரே நிறுவனத்துக்குள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாது. பிஃப்த் எஸ்டேட் நிறுவனத்தில் ஃப்ரீலான்ஸ் செய்யத் தடையெதுவும் இல்லை. என்றாலும் சென்னை வாழ்க்கை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

எனவே வேலையை விட்டு விலகுவதென்றும், கோவையில் இருந்தபடி ஃப்ரீலான்ஸ் முறையில் பல நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் எழுதித் தருவதென்றும் முடிவெடுத்தேன். விலகுவதாக சொல்லிவிட்டு கணேஷ் பாலிகாவிடம் கேட்டேன்,"சார்! எங்கேயோ இருந்த என்னை அழைத்து வேலை கொடுத்தீர்கள். இப்போது ஊர் ஒத்துக் கொள்ளவில்லை என்று
விலகுகிறேன். ஆனால் ஊரில் இருந்து கொண்டே இதே வேலையைத்தான் செய்யப்போகிறேன். எனக்கு பிஸினஸ் கொடுப்பீர்களா?"

என்னை கூர்ந்து பார்த்து கணேஷ் கேட்டார், "நேரடி பதில் வேண்டுமா?" ஆமாம் என்றேன்."நிச்சயம் தருவேன்" என்று சொல்லிவிட்டு கணேஷ் தொடர்ந்தார். "எங்களை தொழில் நிபுணர்கள் என்ற முறையிலும் தனிமனிதர்கள் என்ற நிலையிலும் நீ புரிந்து கொள்ள வேண்டும். (you should understand us as individuals and professionals)". அந்த ஒற்றை வரியிலேயே சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டார்.

அதாவது, சென்னையில் என்னால் தொடர்ந்து வசிக்க முடியாது என்பதை மனிதாபிமான அடிப்படையில் அவர் புரிந்து கொண்டார். அதேநேரம் தொழில்ரீதியில் என் வேலை  பிடித்திருப்பதால், கோவையில் நான் இருந்தாலும் தொடர்ந்து வேலை கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்.

அந்த நேரத்தில்தான் எனக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. திருமணத் தேதி வைத்த பிறகும் துணிச்சலாக வேலையை விட்டிருந்தேன். இப்போது யோசித்தால், அது அசட்டுத்துணிச்சலா, அசாத்திய நம்பிக்கையா என்று என்னை நானே கேட்கிறேன். இரண்டும்தான் என்பது எனக்குக் கிடைக்கிற பதில்.

செய்கிற வேலை மனதுக்குப் பிடித்ததாகவே இருந்தாலும், வேலை செய்கிற ஊரும் சூழலும்கூட பிடித்தமானதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமாகக் கூட இருக்கலாம். இன்னொரு பக்கம், எழுத்தில் ஆர்வம் இருக்கும் யாருக்கும், சென்னையில் வேலைவாய்ப்பு என்பது ஒரு வரப்பிரசாதம்தான். அடுத்த கட்டமாக கலையுலக முயற்சிகளுக்கு அது பெரிய படியாக அமையும். எனக்கோ சென்னையில் தங்க இடமும் இருந்தது. வருமானத்துக்கு வழியும் இருந்தது. வீட்டுக்குப் பணம் அனுப்ப வேண்டிய அவசியமும் இல்லை. ஆனாலும் சென்னையிலிருந்து கிளம்ப முடிவெடுத்தேன் என்பது வியப்பை ஏற்படுத்தலாம். கலையுலகக் கனவுகள் என் இமைகளில் கூடுகட்டவில்லை என்பது எனக்கே ஆச்சரியமான உண்மை. நான் எடுத்த முடிவு சரியானதென்றே அப்போதும் இப்போதும் தோன்றுகிறது.

கோவை திரும்பியதும் என்னுடைய ஃப்ரீலான்ஸ் நிறுவனத்துக்கு ஒரு பெயர் வைக்கத் தோன்றியது. அப்போது வைத்த பெயர்தான்,Copy Cats Creative Consultancy. விளம்பர எழுத்தாளர்கள் காப்பிரைட்டர்கள் என்று அழைக்கப்படுவதால், அந்தப் பெயரும், பொதுத்தன்மையில் அந்தப் பெயரில் இருக்கிற முரணும் எனக்குப் பிடித்திருந்தன.


சிகப்புப் பூனையொன்று நிறுவனத்தின் சின்னமாக வடிவமைக்கப்பட்டது. அதன் வால் பேனாவாக அமைக்கப்பட்டிருந்தது. தொலைபேசி எண் அருகே மியாவ் என்று அச்சிட்டிருந்தேன். இந்த வடிவமைப்பை, சசியில் வேலை பார்த்த பிரகாஷ் செய்து கொடுத்திருந்ததாக ஞாபகம்.

அடுத்து அலுவலகம் பார்க்க வேண்டும். எந்த வணிக உத்திரவாதமும் இல்லாமல் அலுவலகம் பார்ப்பது வெறுங்கையில் முழம் போடுவதுதான். அப்போது கோவைஅரசு மருத்துவமனை அருகே ஆண்டாள் கம்ப்யூட்டர்ஸ் என்கிற நிறுவனம், அலுவலக சேவைகளை வாடகைக்குத் தந்து கொண்டிருந்தது. 1500 ரூபாய் ஆண்டுக்கட்டணம். தொலைபேசி, ஃபேக்ஸ், கூரியர் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரக்கூடிய தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க உதவியாளர்களும் இருப்பார்கள். கூடுதலாகப் பணம் கட்டினால் அங்கேயே ஒரு கேபின் வாடகைக்குக் கிடைக்கும்.

1994ஆம் ஆண்டு அது. செல்ஃபோன் போன்ற வசதிகள் கிடையாது.வீட்டுக்கு அருகிலேயே ஆண்டாள் கம்ப்யூட்டர்ஸ் இருந்ததால் நான் கேபின் எடுத்துக் கொள்ளவில்லை.சென்னையில் மாபோஸல், பிஃப்த் எஸ்டேட், கவுண்ட்டர் பாய்ண்ட் போன்ற நிறுவனங்களுக்கு ஃப்ரீலான்ஸ் முறையில் எழுதிக் கொண்டிருந்தேன். கோவையில், மா போஸல், ப்ரோஃப் அட்ஸ், ஏ டூ இஸட் ஆகிய நிறுவனங்களுக்கு ரீடெய்னர் முறையில் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நிறுவனமும் சொற்ப தொகைதான் தரும்.ரீடெய்னர் வருமானம் நீங்கலாகப் பார்த்தால், ஃப்ரீலான்ஸ் வேலைகள் தொடர்ச்சியாக வருமென்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு கேம்பெய்ன் வந்தாலும் கணிசமான தொகை கிடைக்கும். முதல் மாதம் காப்பி கேட்ஸ் செய்த ஃப்ரீலான்ஸ் பில்லிங், 700 ரூபாய்கள்!!

விளம்பர உலகில் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டுமென்றால், ஹிட் விளம்பரங்களைத் தொடர்ந்து தந்துகொண்டிருக்க வேண்டும். தொண்ணூறுகளில்தான், கொங்கு மாவட்டங்களில் ஜவுளிக்கடைகள், ஆடித்தள்ளுபடி விற்பனையைப் பெரிய அளவில் செய்து கொண்டிருந்தன. பின்னர் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் அது பரவியது. ஆடி மாதங்களில் ஷோபிகா, பட்டுப்புடவைகளுக்கென்றே பிரத்யேகமாய் பட்டுத் திருவிழா நடத்தும். மாபோஸல் நிறுவனத்தின் கோவைக்கிளை அதற்கான விளம்பரங்களை செய்து வந்தது. பட்டுத் திருவிழாவுக்கு எழுதித்தந்த விளம்பர வரிசைகள் என் மார்க்கெட்டை "மளமள"வென உயர்த்தப்போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.


(தொடரும்)


 

Monday, June 27, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 8


உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை இருந்தால் போதாது என்பார் கணேஷ் பாலிகா. உருவானதை முன்வைப்பதிலும் அதே புதுமை அவசியம் என்று நினைப்பார். படைப்பாக்க முன்வைப்பு  Presentation என்பது, விளம்பர நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒரு பெரிய வைபவம். எனக்குத் தெரிந்து க்ளையண்ட்டின் இடத்திற்குப் போவதை விட தங்கள் இடத்திற்கு அவர்களை அழைத்து புதுமையான ஏற்பாடுகள் செய்வதில் கணேஷ் பாலிகா கைதேர்ந்தவர்.

ஒருமுறை உணவகம் ஒன்றின் விளம்பரங்களுக்கான முன்வைப்பு சந்திப்பை அவர் மிகப் புதுமையாகத் திட்டமிட்டார். அலுவலக மொட்டை மாடியிலேயே உணவகச் சூழலை உருவமைத்தார். விளம்பர முன்வைப்பு என்றால் அதில் எத்தனையோ அம்சங்கள் உண்டு. எந்தெந்த ஊடகங்களுக்கு எவ்வளவு சதவிகிதம் ஒதுக்கலாம் என்பது தொடங்கி பல அம்சங்கள் காரணகாரியங்களுடன் விளக்கப்படும்.

மேசைகளில் க்ளையண்ட்டுகளை அமரவைத்து விளம்பர நிறுவனத்தின் பல்வேறு துறையினரும் தங்கள் துறைசார்ந்த முன்வைப்புகளைக் கொணர்வார்கள். அதன்பிறகு ஹோர்டிங் எனப்படும் பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகளுக்கான டிசைன் காட்ட வேண்டும். பொதுவாக வடிவமைக்கப்பட்ட டிசைன் பிரிந்த் அவுட் தான் காட்டுவார்கள். ஆனால் கணேஷ் பாலிகா,"அங்கே பாருங்கள்" என்று சாலையின் எதிர்புறத்தைக்  காட்ட,அங்கே திரை போட்டு மூடப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஹோர்டிங் திறந்து காட்டப்பட்டது.


பாய்ன்டர் விளம்பரங்களுடன் கூடிய "எனக்கென்ன கவலை"  விளம்பரத்தை உரிய அளவுகளில் பிரின்ட் அவுட் எடுத்து தினத்தந்தி நாளிதழில் 1-3-5-7 பக்கங்களில் ஒட்டி கடைசிப் பக்கத்தில் மைய விளம்பரத்தை ஒட்டி அந்த தேக்கு முதலீட்டு நிறுவன இயக்குநர்களுக்கு ஒரு பேப்பர் பையனைக் கொண்டு விநியோகித்தார்.

அந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவர், ஒரு யோசனை சொன்னார். "கடைசிப்பக்க விளம்பரத்தில்-நான்தான் கவலையில்லாத மனிதன் என்று அந்த விளம்பர மாடல் சொல்வதாகப் போட்டால் என்ன?" இப்படிச் சொன்னவர்,"கவலையில்லாத மனிதன்" படத்தைத் தயாரித்த கவியரசு கண்ணதாசனின் அண்ணன் மகன் ஏ.எல்.எஸ். கண்ணப்பன்!! 

ஏ.எல்.எஸ்.கண்ணப்பன் தன்னை ஒரு நிர்வாகியாக அந்த நிறுவனத்தில் அறியச்செய்தாரே தவிர கலைப்பின்புலம் வெளிப்படும் விதமாக நடந்து கொண்டதில்லை.ஒரேயொரு தடவை, தன் மாமனாரின் நினைவு நாளுக்கு தான் வெளியிட்ட விளம்பரம் ஒன்றை சக இயக்குநர்களிடம் காண்பித்துக் கொண்டிருந்தார்.அந்தப்படத்தில் அவருடைய மாமனார், எதையோ எழுதிக்கொண்டிருப்பது போன்ற படம் வெளியாகியிருந்தது. அதன்கீழ் "வாழ்வின் கணக்குக்கு வரவெழுத வந்தவரே"என்று தொடங்கி சில வாசகங்களை எழுதியிருந்தார் ஏ.எல்.எஸ்.கண்ணப்பன்.

ஊடகங்கள் ஒத்துழைப்பில் பல புதுமைகளை விளம்பர நிறுவனங்கள் இன்றும் மேற்கொள்வதுண்டு. அத்தகைய முயற்சிகளில் ஒன்றுதான் அட்வர்டோரியல். ஒரு பத்திரிகையில் வருகிற படைப்புகள் மற்றும் செய்திகள் எடிடோரியல் துறையைச் சார்ந்தது. ஒரு விளம்பரத்தையே சிறுகதை போலவோ செய்தி போலவோ எழுதுவதுதான் அட்வர்டோரியல். இந்த விஷயம் தெரிவதற்கு சில வருடங்கள் முன்பே கல்லூரியில் இளங்கலை மாணவனாக இருந்த போது என் மூத்த சகோதரரின் நண்பர் திருமணத்திற்கு பத்திரிகைச்செய்தி போல் ஒரு வாழ்த்துமடல் எழுதிக் கொடுத்த அனுபவம் உண்டு. அவருக்கு புளியங்குடி கோயிலில் திருமணம்.

"கோவை கடத்தல் மன்னன் கைது! புளியங்குடி கோயிலில் பிடிபட்டார்!" என்று தலைப்பிட்டு மணப்பெண் உள்ளத்தை அவர் கடத்தியதாகவும் தி.பி.கோ(திருமணத்தில் பிடித்துப்போடும் கோஷ்டி) நடவடிக்கையில் கைதானார் எனவும் வாழ்த்துமடல்கள் அச்சிடப்பட்டு அந்தத்  திருமணத்தில் என் சகோதரர்களும் நண்பர்களும் விநியோகித்தனர்.  திருமணம் கோயிலில் நடந்ததால் வந்திருந்தவர்கள் கோயில் பிரசாதம் மடிக்க அந்தக் காகிதங்கள் பெரிதும் பயன்பட்டதாக அறிந்தேன்.

அதேபோல தேக்கு முதலீட்டுத் திட்டத்திற்கு ஒரு சிறுகதை எழுதினேன். "நடவுவேலை முடிந்து ஆட்கள் மேடேறத் தொடங்கிய போது பொழுது சாய்ந்திருந்தது" என்பது அதன் ஆரம்ப வரிகள். கிராமத்தில் இருக்கிற தந்தையிடம் தன் முதலீட்டுத் திட்டம் குறித்து யோசனை கேட்க மகன் வருவதாகவும், விவசாயியான அப்பா தேக்கு முதலீட்டுத் திட்டத்தில் பணம்போட ஊக்கம் கொடுப்பது போலவும் அந்தக் கதை எழுதப்பட்டிருக்கும். கதையின் கடைசி வரிக்குக் கீழ், "முற்றும்" போடும் இடத்தில் "விளம்பரம்" என்று போட்டால் போதும். இந்த விளம்பரத்தையும் இதழ்களில் வரும் சிறுகதை போலவே வடிவமைத்து, நியூஸ்பிரிண்ட் தாளில் பிரிண்ட் அவுட் எடுத்து, கல்கி இதழில் ஒட்டி வெளிவந்த சிறுகதையைக் காட்டுவது போலவே க்ளையண்ட்டிடம் காட்டினார் கணேஷ் பாலிகா.

அவருக்கு என்னிடம் பிடித்த இன்னொரு விஷயம்,அவரைப்போலவே நானும் போஜனப் பிரியன் என்பது. க்ளையண்ட்டைப் பார்க்கப் போகும் முன்பும் பார்த்த பின்பும் எந்தெந்த உணவகங்களில் சாப்பிடலாம் என்ற விவாதத்தையும்  முடித்துக்கொண்டுதான் கிளம்புவோம். முதல்தடவை உணவகத்திற்கு அழைத்துப் போனபோதே, "you know Muthaiah?i am one of those eternally hungry fellows"  என்றார் கணேஷ் பாலிகா."me too sir" என்றேன்.

சென்னையில் சரவணபவன் போன்ற உணவகங்கள் சுய சேவைப்பிரிவைத் தொடங்கியிருந்த காலம் அது. நின்று கொண்டே சாப்பிடுவதும் காபி குடிப்பதும் எனக்குப் பிடிக்காது. ஒருதடவை அவருடன் போய்விட்டு வேண்டா வெறுப்பாக நின்றுகொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சக அலுவலர்கள் எனக்கு அப்படி சாப்பிடப் பிடிக்காது என்பதை அவரிடம் சொல்லிவிட்டார்கள். "Why man"என்று கேட்ட அவரிடம் நான் சொன்ன பதில் ,"எங்க ஊரிலே எல்லாம் நின்னுகிட்டு ஒண்ணுக்குதான் போவாங்க சார்!".காபியை அப்படியே வைத்துவிட்டு "கிளம்புங்கப்பா"என்றுவிட்டார் அவர்.

அதன்பிறகு அத்தகைய உணவகங்களுக்குப் போகும் போதெல்லாம், "Tell that guy where we are going..ok?" என்று மற்றவர்களிடம் சொல்வார் அவர். சிறந்த நிர்வாகிகளின் குணங்க்ளில் முக்கியமானது பொறுமையின்மை.Constructive restlessness என்று சொல்வார்கள்.அவருக்கு அந்தத் தன்மை உண்டு. பொறுத்தார் பூமியாள்வார் என்பது எப்படியோ தெரியாது.ஆனால் பொறுத்தார் வேலைவாங்க முடியாது. வேலையில் இன்று என்னிடமும் இருக்கும் அந்தப் பொறுமையின்மையும் அவருடைய தாக்கமாக இருக்கலாம்.

மாலை வேளையில் ஏதேனும் விளம்பரம் குறித்து விளக்கிவிட்டு, அரை மணிநேரத்தில் அழைத்து "what happened" என்பார்    "i will give tomorrow  Sir" என்றால் கோபம் வந்துவிடும்."tomorrow i might die ya என்பார். சில நிமிடங்களிலேயே அதனை மறந்துவிட்டு கலகலப்பாகப் பேசத் தொடங்கிவிடுவார்.

அதேநேரம் சில தவறுகள் நடக்கும்போது, "நன்றாக வேலை  செய்பவர்களுக்கு சின்னச் சின்னத் தவறுகள் செய்ய உரிமை இருக்கிறது" என்பார். பிடிக்கவே பிடிக்காத வேலைகளை செய்ய
நேரும்போதெல்லாம் அவர் சொல்லும் வாசகத்தை நான் பலருக்கும் சொல்வதுண்டு. "When rape is inevitable...lie back and enjoy!!!!"

(தொடரும்)

Sunday, June 19, 2011

உளிகள் நிறைந்த உலகமிது-7

தொழில்நுட்பத் தகவல்கள் சார்ந்த செய்திப்படம் ஒன்றை சுவாரசியம் மிக்கதாக்க வேண்டுமென்றால் அதில் பிரபலங்களை சேர்க்கலாம் என்பது முதல் விதி. பிரபலங்களை சேர்க்கும் அளவு பட்ஜெட் இல்லையென்றால் பிரபலங்களின் சாயலில் உருவாக்கலாம் என்பது இரண்டாவது விதி. இதற்கு காபிரைட் விதிகளும் இடம் கொடுப்பதுதான் முக்கியமான விஷயம்.

கட்டிடத்திற்கு எந்த சிமெண்ட்டை உருவாக்கலாம் என்று தீர்மானிக்கும் சக்திகள் யார் யார் என்ற ஆய்வில் நான்குபேர் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதைச் சுற்றித்தான் செய்திப்படத்தின் கரு இயங்க வேண்டும். அதற்கு ராம்கி ஒரு திட்டம் வகுத்தார் .

ராம்கி
அப்போதுதான் கமல்ஹாசனின் மைகேல் மதனகாமராஜன் படம் வெளிவந்திருந்தது. ஒரே விளம்பர மாடலைக் கொண்டு நான்கு பாத்திரங்களை உருவாக்கினோம். ஆர்க்கிடெக்ட் மதன், என்ஜினியர் ராஜன், மேஸ்திரி மைக்கேல், ஸ்டாக்கிஸ்ட் காமேஸ்வரன். திரைப்படப் பாத்திரங்களின் வசன பாவங்களை இந்த நால்வரின் உரையாடல்களிலும் கொண்டு வந்திருந்தேன்.

எல்லாம் சரிதான், இதில் ரஜினி எங்கிருந்து வந்தார் என்கிறீர்களா? இந்த நால்வரையும் கொண்டு உருவாக்கப்படும் அடுக்குமாடிக் கட்டிடத்தின் உரிமையாளர் தன்னை இவ்வாறு அறிமுகப் படுத்திக் கொள்வார். "வணக்கங்க..நான்தான் மலை...அண்ணாமலை! இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தோட எஜமான்....எப்டீ...எஜமான்!" இத்தனைக்குப் பிறகும் மைக்கேல் மதனகாமராஜன் படத்துடன் முதல் சில நிமிடங்களிலேயே பார்வையாளர்கள் இந்த செய்திப்படத்தைத் தொடர்புபடுத்திக் கொண்டால்தான் ஈடுபாட்டுடன் பார்ப்பார்கள்.

எனவே, "கதகேளு கதகேளு"என்று தொடங்கும் மைக்கேல் மதனகாமராஜன் படத்தின் டைட்டில் பாடலைப் பயன்படுத்தத் தீர்மானித்தோம். ஒரு பாடலின் இசையை சில விநாடிகள் வரை அப்படியே பயன்படுத்திக் கொண்டால் காபிரைட் சட்டம் பாதிக்காது. எனவே அதே மெட்டுக்கு புதிய வரிகளை எழுதினேன். இப்போது என் பதவியான காபிரைட்டர், ஒருபொருட்பன்மொழி!!

"கதகேளு கதகேளு
டால்மியாவின் கதகேளு
தலைமுறைகள் நிலையாக
தொடர்கின்ற கதகேளு
மைக்கேல் மதன காம ராஜன் சேர்ந்து சொல்லக்கேளு
எக்காலத்தும் எல்லாருக்கும் டால்மியாதான் பாரு
கட்டிடங்கள் கட்டும் முன்னே நாலுபேரக் கேளு
டால்மியாவின் பேரத்தான் சொல்லுவாங்க பாரு!!"
என்ற பாடலுடன் அந்தப் படம் தொடங்கியது.

இதில் "கட்டிடங்கள் கட்டும் முன்னே நாலுபேரக் கேளு" என்ற வரியில் உள்ள பொதுவான தன்மை டால்மியா நிறுவனத்துக்கு மிகவும் பிடித்துப் போனதால்,மைக்கேல் மதனகாமராஜன் என்ற வரியை மட்டும் எடுத்துவிட்டு இந்தப்பாடலை வானொலி விளம்பரமாகவும் பயன்படுத்திக் கொண்டார்கள். வானொலி விளம்பரம் பாடலாக வந்தால் ஜிங்கிள் என்று பெயர். உரையாட்லாகவோ அறிவிப்பாகவோ வந்தால் ரேடியோ ஸ்பாட் என்றும் பெயர்.

வானொலியில் பண்பலை பல விதிமுறைகளைத் தளர்த்தித் தந்தபோது இதுபோல் நிறைய சினிமா பாடல்களை சுவீகாரம் செய்து பல விளம்பரங்களை உருவாக்கினோம். வீனஸ் மார்க்கெட்டிங் என்ற விளம்பர நிறுவனம் என்னை இதற்காகவே ரீடெய்னர் முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டது. "சின்ன ராசாவே சரல்விக் ஸ்டவ் வாங்கிக் கொடுக்கணும்"என்று குடும்பத் தலைவிகள் பாடினார்கள்.

இதன்விளைவாக கேட்கும் பாடல்களையெல்லாம்  யாருக்கான விளம்பரப்பாடலாக மாற்றலாம் என்று மனதுக்குள்ளேயே பாடிப்பார்த்துக் கொண்டிருந்தேன். முக்காபுலா பாடல்,,
"முக்காகிலோ கால்கிலோ அல்வா
எல்லாவகை ஸ்வீட்டுக்கும் லாலா
வாங்கீட்டு போங்கய்யா வீட்டில தாங்கய்யா
காரமும் தேவையா
பொட்டலங்கள் கட்டித் தரவா" என்று உருமாற்றம் பெற்றது.

லாலா ஸ்வீட்ஸ்காரர் மிகவும் நாகரீகமானவர். எனவே இதனை அங்கீகரிக்கவில்லை. கோவையில் புகழ்பெற்ற சிபிஎச் பிரியாணி உணவகம் இருந்தது. அதன் உரிமையாளர் வெங்கடேஷ் என் நண்பர். அவருக்குத் தெரிந்த அய்யர் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு வீட்டுக்கும் பார்சல் வாங்கிப் போவார். இதை மனதில் கொண்டு,"மடிசாரு கட்டிண்டு வந்தாளே மகராணி! அவகூடத் திம்பாளே சிபிஎச் பிரியாணி"என்ற பல்லவியைச் சொன்னதும் வெங்கடேஷ் என்னையே வில்லாதி வில்லனாகப் பார்க்கத் தொடங்கினார்.

பிஃப்த் எஸ்டேட் போன்ற நிறுவனங்கள் திரைப்பட இசையைப் பின்பற்றி வெகுமக்கள் ஊடகங்களுக்கான விளம்பரங்கள் உருவாக்குவதை ஊக்குவிப்பதில்லை. சில நிறுவனங்கள் இதற்கு மிகுந்த ஊக்கம் தந்தன. இதற்கு அவர்கள் சொல்கிற காரணம், வாடிக்கையாளர்கள் மனதில் விளம்பரம் இடம்பெறும் என்பதுதான். ரீ கால் வேல்யூ என்று சொல்லி கிளையண்ட்டின் ஒப்புதலைப் பெற்று விடுவார்கள்.  



கணேஷ் பாலிகா
ஒரு விளம்பரத்தை செழுமைப்படுத்துவதில் ராம்கி நிபுணரென்றால்,  விளம்பரம் உருவாகும்போதே அதன் போக்கு எப்படியிருக்குமென்று கணிப்பதில் கணேஷ் பாலிகா ஒரு மேதை. அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது.விளம்பரங்களை எழுதி அவருடைய ஒப்புதலுக்காகக் கொண்டு போனால், கண்களை மூடிக்கொண்டு "ஷூட்"என்பார். வாசிக்க வாசிக்க அவர் இதழ்களில் புன்னகை அரும்பினால், வாசிப்பின் முடிவில் பெரும்பாராட்டு காத்திருப்பதாக அர்த்தம். இல்லையென்றால்,this copy has done nothing to me ya என்பார்.

ஒருமுறை க்ளையண்ட்டை சந்திக்கப் போகும் வழியில்தான் விளம்பர வாசகங்களை அவருக்கு வாசித்துக்காட்ட முடிந்தது. அப்போது அவர் காரோட்டிக் கொண்டிருந்தார். வாசகங்கள் மிகவும் பிடித்துப்போக, தன்னை மறந்து அவர் துள்ளிக் குதித்ததில் கார் நிலைதடுமாறியது. ஒரு படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வும் நிர்வாகிக்குரிய விழிப்புணர்வும் வாய்க்கப்பெற்ற கணேஷ் பாலிகா என் ஆளுமையின் உருவாக்க நிலையில் கணிசமான தாக்கம் செலுத்தியவர்.

அப்போதைய என் வயது (24), அனுபவம் அறிதல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒரு பொறியைப் பெருநெருப்பாக்கும் உத்தி நேரடி வழிகாட்டுதல் இல்லாமல் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. மிகச்சிறந்த நிபுணர்களின் நிழலில் இருந்த நாட்கள் அவை. நான் கொண்டு சென்ற ஒரு சிறுபொறியை கணேஷும் ராம்கியும் பெருநெருப்பாக்கிய சம்பவம் இது.

வேளாண் முதலீட்டுத்திட்டங்கள் தனியார்  நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்ட காலம்.. அவற்றுக்கு ரிசர்வ் வங்கி தடைவிதிக்கும் காலம்வரை அவற்றின் ஆபத்தை பொதுமக்கள் போலவே விளம்பர நிறுவனங்களும் அறிந்திருக்கவில்லை.

அந்த வகையில் தேக்கு முதலீட்டு நிறுவனம் ஒன்றின் விளம்பரங்களை உருவாக்கிய "அனுபவம்" விலைமதிப்பில்லாதது. இருபது வருடங்களுக்குப் பிறகு அந்த முதலீடு பணமாகும் என்பதால் பின்னால் வரும் பெரும் செலவுகள் பற்றிய கவலை வேண்டாம் என்பதுதான் அந்த விளம்பரத்தின் கருத்துரு.

எனவே "எனக்கென்ன கவலை" என்பதையே தலைப்பு வாசகமாக்கி ஒரு விளம்பரத்தை எழுதினேன். அந்தத் திட்டத்தில் முதலீடு செய்த ஒருவர், தனக்கு இனி கவலைகள் இல்லை என்று சொல்வதாக அதன் வாசகங்கள் இருந்தன.

இந்த விளம்பரத்தை வாசித்துக் காட்டியவுடன் ராம்கி ஒரு யோசனை சொன்னார்." இதை ஒற்றை விளம்பரம் ஆக்காதீர்கள். ஒரு கேம்பெய்ன் ஆக மாற்றுங்கள்" என்றார். அதாவது, பலருடைய வாழ்வில் பலப்பல கேள்விகள் கேட்கப்படும். அந்தப் பலரும், பலப்பல கேள்விகளுக்கு சொல்லும் பதில்,"எனக்கென்ன கவலை"என்பதுதான்.

"ஏங்க! பொண்ணு பொறந்திருக்கா! இன்னும் பொறுப்பில்லாம இருக்காதீங்க! "இதற்கு அந்த இளைஞர் சொல்லும் பதில்,"எனக்கென்ன கவலை". "யோவ்! இருபது வருஷத்துல ரிட்டையர் ஆயிடுவே! ஏதாவது சேர்த்து வைச்சிருக்கியா?" அதற்கு அந்த மனிதர் சொல்லும் பதில் "எனக்கென்ன கவலை". இப்படி கேள்வி-பதில்-கார்ட்டூன் ஆகியவை மட்டும் கொண்ட சின்னச் சின்ன விளம்பரங்கள் சதுரம் சதுரமாய் மூன்றோ நான்கோ உருவாக்கப்படும்.

இதில் நிறுவனத்தின் பெயரோ திட்டங்கள் குறித்த விளக்கங்களோ எதுவுமிராது. இந்த விளம்பரம் நாளுக்கொன்றாக வெளிவரும். இதற்கு டீஸர் விளம்பரங்கள் என்று பெயர். பிற்காலத்தில் புகழ்பெற்ற விளம்பரங்கள் "புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?:."தில்லுதுர" போன்றவை.

இந்த சதுர விளம்பரங்கள் வெளிவந்த பிறகு, ஒருநாள்,திட்டத்தை விலக்கும் விளம்பரம் வெளிவரும். இந்த தொடர் விளம்பரங்கள் ஒரேநாளில் வெளிவந்தால் அவற்றுக்கு பாய்ன்ட்டர் விளம்பரங்கள் என்று பெயர்.3-5-7 பக்கங்களில் சதுர விளம்பரங்களும் ஒன்பதாம் பக்கத்திலோ கடைசிப் பக்கத்திலோ முக்கிய விளம்பரம் வெளிவரும்.

இந்த முக்கிய விளம்பரத்தை வடிவமைக்கும் நேரம் வந்தது. பிஃப்த் எஸ்டேட்டில் வரைகலைப்பிரிவில் நீலம் என்ற  வடநாட்டுப்பெண் சேர்ந்திருந்தார். அவரிடம் "எனக்கென்ன கவலை" என்றால் புரியுமா என்னும் தயக்கத்துடன் அந்த  வாசகத்தைச்  சொன்ன போது, "yeah!yeah! what me worry!"என்றதோடு அதற்கான விஷுவல் ட்ரீட்மென்ட்டையும் வரைந்து காட்டினார். இரண்டு மரங்களுக்கு நடுவே ஒரு ஹாமக் கட்டி அதில் ஹாய்யாக ஒரு மனிதன் படுத்திருக்க, அவன் தலைக்குமேல் "எனக்கென்ன கவலை" என்று கொட்டை எழுத்தில் வாசகன்ம்.கீழே திட்ட விபரங்கள்.

இந்த விளம்பரத்தை க்ளையண்ட்டிடம் புதுமையான முறையில் காட்ட விரும்பினார் கணேஷ் பாலிகா.அதற்கு அவர் மேற்கொண்ட உத்தி சுவாரசியமானது.

(தொடரும்)

Thursday, June 16, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 6

தொண்ணூறுகளின் தொடக்கம், காட்சி ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய காலம். தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுக்கத் தொடங்கிய நேரம். தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பணிகளிலும் பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டது.

சசியில் இருந்தபோது, காட்சி ஊடகங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் விளம்பரங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவரான சந்திரசேகர் துடிப்பும் துள்ளலுமாக பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். நடிகை ஹீராவைக் கொன்டு தயாரிக்கப்பட்ட ஏவிடி பிரீமியம் டீக்கான "பார்த்தீங்களா! பார்த்தீங்களா!, கேட்டீங்களா! கேட்டீங்களா! சாப்டீங்களா? சாப்டீங்களா?"என்ற விளம்பரம் பெரும்புகழ் பெற்றது. அப்போது சசியில் சந்திரசேகருக்குத் .துணையாய் பணிபுரிந்த அனுபவம் இருந்தது.
.
காட்சி விளம்பரங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஒப்புதல் பெற ஸ்டோரி போர்ட் தயார் செய்ய வேண்டும். ஒரு காகிதத்தை மேலிருந்து கீழாய் நேர்க்கோட்டில் இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். இடதுபுறம் விஷுவல் என்றும் வலது புறம் ஆடியோ என்றும் தலைப்பிட்டுக் கொள்வோம். இடதுபுறம் ஒன்றின்கீழ் ஒன்றாக காட்சி விவரங்களும் எதிர்புறம் அவற்றுக்கான விளம்பரப் பாடல்வரியோ, உரையாடலோ, அறிவிப்பு வாசகங்களோ இடம்பெற்றிருக்கும்.

காட்சிப் படிமம் காணப்படுகிறது என்கிற விழிப்புணர்வு, விளம்பர எழுத்தாளர்களுக்கு மிகவும் அவசியம். காட்சிகளுக்கான நேர்முக வர்ணனையாக விளம்பரங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. பழைய காலத் திரைப்படங்களில் நியூஸ் ரீல் காட்டுவார்கள். ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும்."இதுதான் ஆறு" என்பார் வர்ணனையாளர். பிறகு ஒரு பாலத்தைக் காட்டுவார்கள்

அலுப்பூட்டும் இந்த வகைமைக்கொரு மாற்றாக வந்தவையே விளம்பரங்கள். இருபதே விநாடிகளில் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். அந்தக் கதை யாருக்கு சொல்லப்பட வேண்டுமோ, அவர்களை ஈர்க்கவும் வேண்டும். இருபது விநாடிகளின் எல்லையில் பார்ப்பவ்ர்களை அது செயல்படவும் தூண்ட வேண்டும்.

பிஃப்த் எஸ்டேட் நிறுவனத்தில் எனக்குத் தரப்பட்ட முதல் காட்சி விளம்பர வாய்ப்பு, டால்மியா சிமெண்ட்டுக்கானது. "தலைமுறைகள் எங்களுடன் நிலைத்து நிற்கும்" என்ற வாசகத்தில் மையங்கொண்டு, அதன் விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு விளம்பரத்துக்குமான தேவை என்ன, அந்த விளம்பரம் நிகழ்த்திக் காட்ட வேண்டியதென்ன என்றெல்லாம் அதற்குரிய அலுவலர் தருகிற விவரணைகளுக்கு ப்ரீஃப் என்று பெயர். (ஒருமுறை உள்ளாடை நிறுவனம் ஒன்றுக்கு விவரணைகள் வழங்கிய இளம் அலுவலர் ஒருவர்,"ப்ரீஃப் விக்கணும்! அதுதான் ப்ரீஃப்!" என்றார்).



டால்மியா சிமெண்ட் அப்போது 53 கிரேட் சிமெண்ட்டை அறிமுகம் செய்திருந்தது. 53 கிரேட் வகை சிமெண்ட் தமிழ்நாட்டில் எல்லா சிமெண்ட்டிலும் உண்டு. கேரளாவில் இல்லை. அந்தவகையில் கேரளாவை மையப்படுத்தும் விதத்தில் விளம்பரம் இருக்க வேண்டும். ஆனால் கேரளாவில் முதல்முறையாக என்பது போன்ற வாசகங்கள் கூடாது.

இதற்காக நான் ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்கினேன். இருபது விநாடிகளில் பதினைந்து விநாடிகள் வெறும் இசை மட்டும்தான். காட்சியிலோ, கேரளக் கோயில்களின் மரபில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், செண்டை, பம்பை போன்ற வாத்தியங்கள் முழங்க வந்து ஒரு கட்டிடத்துக்குள் கலந்து காணாமல் போகும். கடைசி யானை கட்டிடத்துக்குள் சங்கமிக்கும்போது ஒரு குரல், "உங்கள் கட்டிடங்களுக்குக் கொடுங்கள் யானை பலம். டால்மியா சிமெண்ட்" என்னும்.

வெளிப்படையாகக் கேரளாவை பற்றிப் பேசாமல் அதேநேரம் கேரளாவை நினைவூட்டுவதோடு, யானைபலம் என்னும் பொதுத்தன்மை வாய்ந்த கருத்துருவாக்கத்தால் அந்த விளம்பரத்துக்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் ஒப்புதல் தந்தது .

இதன்பிறகு , தமிழகமெங்கும் உள்ள டால்மியா சிமெண்ட் டீலர்களைக் கூட்டி ஒரு பயிலரங்கை நிகழ்த்த டால்மியா சிமெண்ட் நிர்வாகத்தினர்கள் விரும்பினார்கள். ஒரு கட்டிடத்துக்கு எந்த சிமெண்ட் வாங்குவதென்று, யாரெல்லாம் முடிவு செய்யும் நிலையில் இருப்பார்கள், அவர்களை எவ்விதங்களில் எல்லாம் அணுகலாம் என்றெல்லாம் டீலர்களுக்கு விளக்க விரும்பினார்கள். ஒரு கட்டிடத்தின் ஆர்கிடெக்ட், என்ஜினியர், மேஸ்திரி, ஸ்டாக்கிஸ்ட்-இவர்கள் நால்வரும் தருகிற ஆலோசனையில்தான் சிமெண்ட் வாங்குவதில் முடிவு செய்கிறார்கள் என்று கள ஆய்வில் கண்டறிந்தார்கள்.

பெரிய நிறுவனங்களுக்கான விளம்பரங்களை உருவாக்குவதன் முன்னால் இத்தகைய கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்தைய விளம்பர உலகில் மிக முக்கிய ஆளுமையாக அறியப்பட்டவர் அலிக் பதம்ஸீ. புகழ்பெற்ற பல விளம்பரங்களை உருவாக்கியவர். லிரில் சோப் விளம்பரம் அவரால் உருவாக்கப்பட்டது.ஒரு பெண், மலையருவியில் குறைந்தபட்ச
ஆடைகளுடன் குளிக்கும் அந்த விளம்பரம் அதிகபட்ச விமர்சனங்களுக்கு ஆளானது. ஆனால் லிரில் சந்தையில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.


இதற்குக் காரணம்,கள ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரசியமான உளவியல் அம்சம் ஒன்று, அந்த விளம்பரத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதுதான். அதிகாலை தொடங்கி பம்பரம் போல் பரபரப்பாக சுற்றுகிற பெண்கள், வீட்டுக் கடமைகள், அலுவலகக் கடமைகளுக்கு நடுவே தனக்கே தனக்கான பிரத்யேக நிமிடங்களாக உணர்வது, குளியலறையில் செலவிடும் அந்த சில நிமிஷங்களைத்தான் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

அதுபோல, சிமெண்ட் வாங்கும்போது அதைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கும் ஆர்கிடெக்ட், என்ஜினியர், மேஸ்திரி ஸ்டாக்கிஸ்ட் ஆகியோரை எந்த எந்த அம்சங்கள் கவரும் என்றும், அந்த அம்சங்கள் டால்மியா சிமெண்ட்டில் இடம்பெற்றிருக்கும் விதம் குறித்தும் விளக்குகிற செய்திப்படம் ஒன்றை சுவாரசியம் குறையாமல் உருவாக்க வேண்டும்.

அதற்கான மூலக்கருவை ராம்கி உருவாக்கினார். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிற ஸ்டாக்கிஸ்டுகள் டால்மியாவின் வெற்றியில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். எனவே அந்தப் படத்தை சுவாரசியம் மிக்கதாக்குவதற்காக அந்த பட்ஜெட் படத்தில் கமலும் ரஜினியும் சம்பந்தப்பட்டார்கள்!!

(தொடரும்)

Wednesday, June 15, 2011

உளிகள் நிறைந்த உலகமிது-5



கடிதம் எழுதியவர் கணேஷ் பாலிகா என்றாலும், சென்னை மாபோஸேல் நிறுவனத்திலிருந்து அவர் எனக்கு எழுதவில்லை. அவர் கையொப்பத்திற்குக் கீழே மேனேஜிங் டைரக்டர்-பிஃப்த் எஸ்டேட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று இருந்தது. நேரில் வரசொல்லி எழுதியிருந்தார்.

மா போஸேல் சென்னையில் சந்திக்க முடியாததில் வியப்பில்லை. முன்னனுமதி பெறாமல் போயிருந்தேன். இப்போது வேறொரு முகவரியில் இருந்து வரச்சொல்லி கடிதம் போட்டிருக்கும் மர்மமென்ன? நேரில் போனபோதுதான் விஷயம் விளங்கியது. என்னுடன் நேர்காணல் மேற்கொண்ட பிரசாத் பரவசமாய் என்னைப்பற்றிச் சொல்லி, "உங்களை
சந்திக்க அழைக்கட்டுமா?" என்று கேட்ட போது, சில விநாடிகள் யோசித்து விட்டு, வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் கணேஷ் பாலிகா.

பிரசாத்துக்கு அதிர்ச்சி. புதிய திறமைகளை அடையாளம் காண்பதிலும் ஊக்குவிப்பதிலும் கணேஷ் பாலிகா முதலிடம் வகிப்பவர். ஆனால்,அப்போதே அவர் மனதில் வேறொரு திட்டம் இருந்திருக்கிறது. மா போஸேல் நிறுவனத்திலிருந்து விலகி, பிஃப்த் எஸ்டேட் என்ற பெயரில் விளம்பர நிறுவனம் தொடங்கும் முகாந்திரப் பணிகளை அப்போதே மேற்கொண்டிருந்திருக்கிறார். பிரசாத்தின் எடைபோடும் திறமையில் அவருக்கு அபார நம்பிக்கை. தன்னுடைய புதிய நிறுவனத்துக்கு நான்தான் தமிழ் விளம்பர எழுத்தாளர் என்று என்னைப் பாராமலேயே முடிவெடுத்திருக்கிறார். என் விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொண்டாரே தவிர என்னை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். புதிய நிறுவனம் தொடங்கியதும் அழைத்துக் கொண்டார்.

சென்னை, திறமைகளுக்கான ஆடுகளம். அங்கே எனக்கு ஒருவாசல் மூடி மறுவாசல் திறந்தவர் கணேஷ் பாலிகா. விளம்பர உலகின் மூன்று நிபுணர்கள் சேர்ந்து பிஃப்த் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்கள். நிர்வாக இயக்குநர்,கணேஷ் பாலிகா. ராமகிருஷ்ணா,விவேகானந்தன் ஆகியோர் இயக்குநர்கள். படைப்பாக்கப் பிரிவுக்கு ராமகிருஷ்ணா (ராம்கி) தலைவர். மீடியா எனப்படும் ஊடகப் பிரிவுக்கு விவேகானந்தன் தலைவர்.

படைப்புத்திறன் கொண்ட விளம்பர நிபுணர்களில், ராம்கி போல் மென்மையும் மேன்மையும் கொண்ட ஒருவரை நான் இதுவரை சந்திக்கவில்லை . நல்ல உயரம். ஒற்றைநாடி உடம்பு. சிவந்த நிறம். குறுந்தாடி. சிரிப்பும் தீட்சண்யமும் மின்னும் கண்கள். விவேக் அடிக்கடி பதட்டமாகக் கூடியவர். கணேஷ் பாலிகா இருவரின் குணங்களையும் கலந்த கலவை. பனிமலையும் எரிமலையும் பாதிப்பாதி.

பிஃப்த் எஸ்டேட் நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி,"எப்போது வேலைக்குச் சேருகிறாய்"என்பதுதான். கணேஷ் பாலிகாவும் ராம்கியும் எவ்வளவு பெரிய விளம்பர மேதைகள் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. சென்னையில் வேலைவாய்ப்பு என்ற பெருங்கனவின் நிறைவேற்றமே போதுமானதாக இருந்தது.அது 1993. நாலாயிரத்து சொச்சம் ரூபாய் சம்பளத்தில் சென்னையில் பணி. விளம்பர நிறுவனங்களுக்கே உரிய சுதந்திரமான சூழல்.

விளம்பரங்கள் உருவாக்கத்தின் நுட்பங்களை நான் கற்றுக் கொண்டது அங்கேதான். பணியில் இறங்கும் முன், ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருந்த வேலைகளைப் பார்த்தபோது மிரண்டு போனேன்.

மின்சார வயர்களை இணைக்கும் அதெஸிவ் டேப் ஒன்றிற்கான விளம்பரங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. அந்த டேப்பின் பெயர் மேஜிக். எனவே மேஜிக் சம்பந்தப்பட்ட எல்லா கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு ராம்கி, விளம்பரங்களை உருவாக்கினார். அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்த்ரெல்லா என்று விதம்விதமான தளங்களை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்கள் உருவாயின.



அப்போதுதான் மேஜிக் நிறுவனம் கார்பெரேட் அட்வர்டைஸ்மென்ட் ஒன்றை வெளியிட விரும்பியது. கார்பரேட் அட்வர்டைஸ்மென்ட் என்பது, ஒரு நிறுவனம், தன்னுடைய நிறுவனப் பெருமைகளைப் பேசுவது. உருவான ஆண்டு, ஏற்படுத்திய சாதனைகள், பெற்ற விருதுகள் நிறுவனத்தின் கொள்கைகள் போன்றவற்றைப் பேசுவது, கார்பரேட் அட்வர்டைஸ்மென்ட்.

சமூக நலனுக்காக தாங்கள் செய்த பணிகளையெல்லாம் பட்டியலிட்டு டாடா நிறுவனம், "வீ ஆல்ஸோ மேக் ஸ்டீல்"என்று செய்திருந்த விளம்பரம், கார்பரேட் அட்வர்டைஸ்மென்ட்டுக்கு மிகச்சிறந்த உதாரணம். தயரிப்பின் தன்மைகள், அதன் சிறப்பம்சங்கள் குறித்த விளம்பரங்களை, புரோடக்ட் அட்வர்டைஸ்மென்ட் என்பார்கள். மேஜிக் டேப்பின் புரோடக்ட் அட்வர்டைஸ்மென்ட்டுகளுக்கு, மாயாஜாலக் கதைகளை மையமாகக் கொண்டு பல விளம்பரங்கள் செய்யப்பட்டு விட்டன.

கார்பரேட் விளம்பரமோ ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களில் வெளிவர வேண்டும். தீவிரமாக சிந்திக்கும் போது கூட ராம்கியின் முகத்தில் புன்னகை நிரம்பிக் கிடக்கும். அப்படி தீவிரமாக சிந்தித்து, அந்த விளம்பரத்தின் உயிர்நாடியாகிய வரியை ஹெட்லைனாக ஆங்கிலத்தில் எழுதினார் ராம்கி. கொட்டை எழுத்துக்களில்,  When Electricity was introduced for the first time,people thought it was a magic என்று எழுதிவிட்டு, சற்றே சின்ன எழுத்துக்களில் சப் ஹெட்லைனாக, They were right in a way  என்று எழுதினார்.

"முதன்முதலில் மின்சாரம் அறிமுகமான போது மக்கள் அதனை மேஜிக் என்று கருதினார்கள்.சொல்லப்போனால் அதுவும் சரிதான் " என்றெழுதிவிட்டு", மேஜிக் டேப் இல்லாத மின்சார இணைப்பு சாத்தியமா என்ன" என்று விளம்பரம் தொடரும். ஒரு விளம்பரத்துக்கான கருத்துருவாக்கம்(கான்செப்ட்) உருவாக்கப்பட்டால் அதை எப்படியெல்லாம் செழுமைப்படுத்த வேண்டுமென்று நான் கற்றுக் கொண்டது அப்போதுதான்.

மேஜிக் அதெஸிவ் டேப் என்கிற தயாரிப்பு பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அதையே காரணமாக்கி மக்களை அச்சுறுத்தாமல், மாயாஜாலம் என்ற கருத்துருவாக்கத்தை கையிலெடுத்து ராம்கி நடத்திய சித்து விளையாட்டு எனக்குள் பல ஜன்னல்களைத் திறந்தது.

கொடியசைந்ததும் காற்று வந்ததா காற்றடித்ததும் கொடியசைந்ததா என்ற கேள்வி போலவே, விளம்பரத்தில் காணப்படும் ஓவியம் அல்லது புகைப்படத்துக்கு வாசகமா அல்லது வாசகத்திற்கேற்ப காட்சியா என்ற கேள்விக்கும் பிஃப்த் எஸ்டேட்டில் ஒரு புதிய விடை கிடைத்தது. விளம்பரத்தை எழுதுபவரே கூட காட்சிப்பூர்வமாக எழுத வேண்டும் என்பதுதான் அது.

மேஜிக் விளம்பரம் ஒன்றை எழுத வேண்டிய நேரத்தில் ராம்கி ஏதோ குத்துமதிப்பாய் கிறுக்கிக் கொன்டிருந்தர்ர். தனித்தனியாக இரண்டு வயர்களை  வரைந்து கொன்டிருந்தார்.முதல் பார்வையிலேயே ஒரு வயர் ஆண் என்றும் இன்னொரு வயர் பெண் என்றும் கண்டுபிடிக்க முடிந்தது. பெண்ணுடலின் வளைவுகள் ஒரு வயரில்...அந்த பெண் வயர் சிந்திப்பதாக ஒரு வளையம் போட்டு ராம்கி எழுதினார்..If i could reach him.... it will be Magic!!! "அவரை மட்டும் நான் சென்று சேர்ந்து விட்டால் அது நிச்சயம் மேஜிக்தான்!!"

இரண்டு வயர்களின் இணைப்பு என்னும் அலுப்பூட்டும் விஷயத்தை, இரண்டு இதயங்களின் இணைப்பு என்று உருவகப்படுத்தும்போது ராம்கிக்குள் இருக்கும் பேனா கேமராவாகவும் செயல்பட்டது.

எனக்கு இரண்டு கயிறுகளை கந்தன் என்றும் வள்ளி எனறும் உருவகப்படுத்திய மகாகவி பாரதி நினைவுக்கு வந்தார். ராம்கி அந்தக் கவிதையைப் படித்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் அவருக்கு தமிழ் தெரியாது!!
(தொடரும்)

Monday, June 13, 2011

உளிகள் நிறைந்த உலகமிது-4

ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.எ ழுதிய கையும் அப்படித்தான். விளம்பர எழுத்தாளராய் வாழ்வை நடத்துவது ஒருவகையில் சுகமானது. ஒற்றைப்பொறி தட்டி ஒரு கருத்துரு தோன்றிவிட்டால் நல்ல பணம். சிரமமில்லாத வேலை. பிடி கிடைக்கும் வரை பிடிவாதமாக இருந்துவிட்டால் நிலைகொண்டுவிடலாம். இந்த நம்பிக்கை ஆழமாக இருந்தது. உள்ளூர் விளம்பர நிறுவனங்களில் நல்ல தொடர்பும் இருந்ததால் சமாளித்துவிடலாம் என்று தோன்றியது.

அந்தப் பருவத்தில் சம்பாதித்து வீட்டுக்குப் பணம் தர வேண்டிய அவசியமில்லை.எனவே சுதந்திரமாய் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள முடிந்தது.செய்து கொண்டிருக்கும் ஃப்ரீலான்ஸ் வேலைகளை தீவிரப்படுத்த முடிவெடுத்தேன். இதற்கிடையில் சென்னை சென்றபோது மா போஸேல் நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்த விளம்பரம் அங்கீகரிக்கப்பட்டு பணம் வந்தது. "ஏதேனும் கேம்பெய்ன் ஒப்பந்தங்கள் வந்தால் அழைக்கிறோம். ஃப்ரீலான்ஸ் முறையில் வந்து எழுதிக் கொடுங்கள்" என்றார் பிரசாத். ஆனால் நான் பெரிதும் கேள்விப்பட்டிருந்த விளம்பர நிபுணரான திரு.கணேஷ் பாலிகாவை சந்திக்க முடியாத ஏக்கம் என் மனதில் இருந்தது. சென்னை மா போஸேலின் ஆளுமை மிக்க தலைவராய் அவர் அப்போது இருந்தார்.

கோவையில் மா போஸேல் மேலாளரான ராமகிருஷ்ணன்,ப்ரோஃப் அட்ஸ் மேலாளரான சீனிவாசன் ஆகியோர் தங்கள் ரீடெய்னர் ஒப்பந்தங்களை மீண்டும் உறுதி செய்திருந்தார்கள். எப்போதும் இருந்த வாசிப்பு, இந்தக் கால கட்டத்தில் உறுதிப்பட்டது.


பெரும்பாலான கேம்பெய்ன்கள் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டு தமிழ்ப்படுத்தப்படும். தேசிய அளவிலான கேம்பெய்ன்கள் என்பதால் இந்த அணுகுமுறை.அப்போதுதான் கோவையில் ஷோபிகா என்ற பெயரில் பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம் ஒன்று துவக்கப்பட்டது. ஆடைகள் மட்டுமின்றி, பெண்களின் பயன்பாட்டுக்கான அனைத்துப் பொருட்களும் அங்கே இருந்தன. அதற்கு ஆங்கிலத்தில் Shobika-Exclusive women`s store என்னும் வாக்கியத்தை உறுதி செய்திருந்தார்கள். இதற்கு positioning statement என்று சொல்வார்கள்.அதேபோல, Everything her heart desires என்பது ஆங்கிலத்தில் தரப்பட்டிருந்த பேஸ்லைன். இரண்டுக்கும் தமிழில் நான் தந்த வாசகங்கள் நேரடி மொழிபெயர்ப்பாக இல்லாமல் டிரான்ஸ் கிரியேஷன் ஆக அமைந்தன.

Exclusive women`s store என்ற வாசகத்துக்கு, "இது பெண்களின் தனி உலகம்"என்றும்  Everything her heart desires என்ற வாசகத்துக்கு,"வஞ்சியரின் நெஞ்சம்போல்"என்றும் தந்திருந்தேன். இந்த இரண்டு வாசகங்களுமே ஷோபிகா உரிமையாளர் திரு.சௌகத் அலியின் பெரும் வரவேற்பைப் பெற்றன. பெண்கள்-மகளிர் என்ற வழக்கமான சொற்களுக்கு மாற்றாக வேறு சொற்களை விளம்பரங்களில் பயன்படுத்த நான் கொஞ்சம் யோசிப்பதுண்டு. சசியில் பணிபுரிந்தபோது ஏற்பட்ட அனுபவம் ஒன்றுதான் அதற்குக் காரணம்.



சக்தி குழு நிறுவனங்களின் அங்கமான சக்தி சோயாஸ் லிமிடெட் சார்பாக சக்தி விகர் என்ற சோயா மாவு அறிமுகப்படுத்தப்பட்டது. யார் யாருக்கெல்லாம் அது பயன்படும் என்று தனித்தனி விளம்பரங்களில் விவரிப்பது என்று முடிவானது. கொட்டை எழுத்துக்களில் மேலிருந்து கீழாக ஒரே வரியும் தயாரிப்பின் படமும் இடம்பெறும் விதமாக விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இதற்கு Strip ad என்று பெயர். இதில்,கர்ப்பிணிப்பெண்களுக்கு ஊட்டம் கொடுப்பது சக்தி விகர் என்பதால்,"தாய்மை நிலையிலுள்ள பாவையருக்கு உடல்நலம் தரும் ஓர் உன்னத வரம்" என்றொரு வரி இடம் பெற்றிருந்தது.

அந்த விளம்பரம் வெளிவந்து சிலநாட்களில் சக்தி சோயாஸ் அலுவலகத்துக்கு வந்த கடிதம் ஒன்றை சசி விளம்பர நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தார்கள். "தமிழிலக்கியத்தில் பாவை என்பது பொம்மைகளையும் குறிக்கும். பெண்மையை பொம்மைபோல் வைத்திருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை இந்த விளம்பரம் ஏற்படுத்திவிடக்கூடும்.எனவே மகப்பேறு நிலையிலுள்ள மகளிர் என்று விளம்பரம் செய்தால் தங்கள் தயாரிப்பை பெண்டிர் உகப்பர்" என்று  செந்தமிழில் ஒரு பெண்மணி எழுதியிருந்தார்.அந்தக் கடிதத்தில் இருந்த கையொப்பம் கிறுக்கலாக இருந்தது. எனினும் அதைவைத்து இன்னாராகத்தான் இருக்குமென்று யூகித்தேன்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சக்தி சோயாஸில் இருந்து அழைப்பு.மார்க்கெட்டிங் மேலாளர் திரு.கிருஷ்ண மேனன் அழைத்தார். கடிதம் எழுதியஅந்தப் பெண்மணி அலுவலகம் வந்திருப்பதாகவும், மேலும் சில ஆலோசனைகள் சொல்ல விரும்புவதால் சில நிமிடங்கள் வந்து போக முடியுமா என்று கேட்டார்கள். சசியிலிருந்து சில நிமிடங்கள் தொலைவில்தான் பந்தயச் சாலையில் உள்ள சக்தி அலுவலகம்.(அந்த இடத்தை 1972ல் 2 இலட்சம் ரூபாய்களுக்கு இலட்சுமி மில்ஸ் அதிபர் திரு.ஜி.கே.சுந்தரம் அவர்களிடம் வாங்கியதாக சமீபத்தில் அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள் என்னிடம் சொன்னார்)

சென்று பார்த்தபின் என் யூகம் சரிதான் என்று தெரிந்தது. அந்தக் கடிதத்தை எழுதியவர் கவிஞர் ரோகிணி."தேன்முள்ளுகள்" என்னும் தொகுப்பின் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டவர். கவிஞர் சேவற்கொடியோனுடன் இணைந்து ,"பர்ணசாலை மான்கள்"என்ற கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டவர்.முற்போக்குச் சிந்தனையாளராக அறியப்பட்டவர்.ஒரு கவியரங்கிற்கு கவிஞர் ரோகிணி தலைமை தாங்கினார்.காதல் என்ற தலைப்பில் பாடிய அன்பு என்ற கவிஞர்,  அரங்கத் தலைவர் வணக்கம் பாடிய போது "என்னால் உன்னைக் காதலிக்க முடியவில்லை" என்று குறும்பாகக் குறிப்பிட்டார். அதற்கு கவிஞர் ரோகிணி, "நீ என்னைக் காதலிக்க வேண்டாம்-கிழவியைக் காதலி- தமிழ்க் கிழவியைக் காதலி" என்றார்.

கவிஞர் ரோகிணியை சக்தி சோயாஸில் பார்த்தபோது இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் அப்போது அவர் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தார்.ஆன்மீகத் தேடலில் காவியணிந்து கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன் காட்சியளித்தார். என்னை அவருக்கு அடையாளம் தெரிந்தது. "பெண்ணை பாவை என்று சொல்வதில்  பொம்மை என்ற பொருளும் இருப்பது உங்களுக்கு தெரியுமே தம்பி"  என்றார்.

அவருடன் விவாதிக்க விருப்பமில்லாமல் பிரியமாகப் பழைய கதைகளைப் பேசிக்கொண்டு விடைபெற்று வந்தேன். ஷோபிகா விளம்பரத்தில் "வஞ்சியரின் நெஞ்சம்போல் "என்றெழுதியதற்கு யாராவது கண்டனம் தெரிவித்துக் கடிதம் எழுதுவார்களோ என்று எண்ணினேன். நான் எதிர்பார்த்த அந்தக் கடிதத்தை யாருமே எழுதவில்லை. ஆனால்,நான் சற்றும் எதிர்பாராத ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தவர்..... கணேஷ் பாலிகா!!

(தொடரும்)

Friday, June 10, 2011

உளிகள் நிறைந்த உலகமிது-3

கோவையில் நான் எழுதிய தமிழ் விளம்பரங்கள் பரவலான கவனிப்பைப் பெற்றன. பொதுவாகவே,பெரிய நிறுவனங்களின் விளம்பர உருவாக்க வாய்ப்புகளைப் பெற, விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுவதுண்டு. தாமாகவே முன்வந்து விளம்பர டிசைன்களை உருவாக்கி வணிக ஒப்பந்தம் பெற முயல்வதும் உண்டு. அதற்கு ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன்
என்று பெயர்.

சக்தி குழுமங்களின் அங்கமான சக்தி நிதி நிறுவனம்,ஆறு ஆண்டுகளில் நூறுகோடி ரூபாய்களுக்கான வணிகநிலையை எட்டியிருந்தது. இதற்காக சசி விளம்பர நிறுவனம், ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன் ஒன்றை மேற்கொண்டது. அந்தத் தொடர் விளம்பரத் தொகுப்புக்கு நான் உருவாக்கிய தமிழ் விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக "ஆண்டுகள் ஆறு கோடிகள் நூறு!"என்கிற பேஸ்லைன் சக்தி நிறுவனத்தின் அபிமானத்தைப் பெற்றது.சசி நிறுவனத்திற்கு தொடர் விளம்பரங்களும் கிடைத்தன.



 விளம்பரங்கள் எழுதும் கலை குறித்து பல இயல் வரையறைகள் படித்திருக்கிறேன்.அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்தது இது. "ஒரு பேனாவைப்பற்றி விளம்பரம் எழுதுவதென்றால், எடுத்ததும் அந்தப் பேனாவைப் பற்றி சொல்லாதீர்கள். உங்கள் பேனாவைப் பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்.அதன்பிறகு, உங்கள் பேனா அவர் வாழ்க்கைக்குள் எங்கே பொருந்துகிறது என்று தெரிவியுங்கள் ". இந்த உத்தியை நான் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான விளம்பரங்களில் பின்பற்றியிருக்கிறேன்.

அந்த நாட்களில்,அச்சு ஊடகங்களும் வானொலியும் பெரும் வீச்சில் இயங்கிக் கொண்டிருந்தன.தூர்தர்ஷன் மட்டுமே கோலோச்சிய காலமது. 20 விநாடிகள்,முப்பது விநாடிகளுக்குள் ஒரு விஷயத்தை மக்கள் மனதில் சேர்ப்பது பெரிய சவாலான விஷயம்.வானொலி விளம்பரங்கள் எழுதிப் பழக சசி மிகச்சரியான இடமாக இருந்தது.எல்.ஜி.பிவிசி பைப்புகளுக்கு எழுதிய விளம்பரம் ஒன்று அச்சு ஊடகங்களிலும் வானொலியிலும் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டன.   

பணம்போட்டு,நல்ல மோட்டார்களை வாங்கி விடுகிறார்கள். ஆனால் நல்ல பைப்புகளை வாங்காவிட்டால் மோட்டார் வாங்கியதில் எந்தப் பயனும் இல்லை.இதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். "யானை ஒன்று வாங்கும் போது,கயிறு போதுமா?சங்கிலி வேண்டுமா?" என்ற வாசகம் இரு ஊடகங்களிலும் பயன்படுத்தப்பட்டன.வானொலி விளம்பரத்தைப் பொறுத்தவரை இப்படி கவனத்தை ஈர்க்கும் ஒரு கருத்துரு கிடைத்துவிட்டால் மிக எளிதாக அடுத்த விஷயத்தை மக்கள் மனங்களில் பதிய வைத்து விடலாம். "யானை ஒன்று வாங்கும்போது கயிறு போதுமா? சங்கிலி வேண்டுமா? மோட்டார் வாங்கும்போது தரமமன பைப்புகள் வாங்கத் தயங்க வேண்டுமா? வாங்கிடுவீர் எல்.ஜி.பிவிசி பைப்புகள்"
என்று விஷயத்தை முடித்து விடலாம்.
 
"எலி கொழுத்தால் வளையில் தங்காது"என்றொரு முதுமொழி உண்டு. உள்ளே வரும்போதே கொழுத்த எலியாக இருந்த நான் வளைக்கு வெளியில் அவ்வப்போது திரியத் தொடங்கினேன். பெங்களூரைத் தலைமையாகக் கொண்ட மா கம்யூனிகேஷன் நிறுவனம் சென்னையைத் தலைமையாகக் கொண்ட ப்ரோஃப் அட்ஸ் நிறுவனம் ஆகியவை கோவையில் செயல்பட்டு வந்தன

அவற்றின் விளம்பர உருவாக்கங்களுக்குங்களுக்கு அவ்வப்போது என்னைப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கினார்கள்.அதன்பிறகு அந்த நிறுவனங்களுடன் ஓர்ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன்.ரீடெய்னர் என்பது அதற்குப் பெயர். வேலை வருகிறதோ இல்லையோ,மாதா மாதம் ஒரு தொகையைத் தந்து விடுவார்கள்.விளம்பரங்கள் வருகிறபோது எழுதிக் கொடுக்க வேண்டும். இப்படி , ஒரே நேரங்களில் மூன்று நிறுவனங்களிடம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன்.

வளைக்கு வெளியே திரியத் தொடங்கி ருசி கண்ட எலி வெளியூர் போக விரும்பியது.சசி நிறுவனத்திலிருந்து விலக முடிவெடுத்தேன். பொதுவாக மற்ற நிறுவனங்களுக்கு தன் அலுவலர்கள்ஃப்ரீ லான்ஸ் செய்வதை சசி சுவாமிநாதன் விரும்புவதில்லை. சென்னை போன்ற இடங்களில் அத்தகைய பழக்கம் அனுமதிக்கப்பட்டாலும், நிறுவனத்துக்கு நிறுவனம்
விதிமுறைகள் மாறுபடுவது இயற்கை.

சசியில் அதிகபட்ச சுதந்திரத்துடன் இயங்கிக் கொன்டிருந்தேன்.வெளியூர் கூட்டங்களுக்கு அடிக்கடி போக நேர்ந்தபோதெல்லாம், திரு.சுவாமிநாதன் ஊக்கம் கொடுத்ததுடன், விழா அழைப்பிதழில் என் பெயருக்குக்கீழ் "சசி அட்வர்டைசிங்"என்று அச்சிட்டிருந்தால் ஆன் டியூட்டி என்றும் அங்கீகரித்தார்.

சசியில் யாராவது பதவி விலகுவதாக முடிவெடுத்தால் அவர்கள் அந்த விநாடியிலிருந்து அலுவலகத்துக்குள் அனுமதிக்கப் பட மாட்டார்கள். ஆனால் நான் விலகல் கடிதம் கொடுத்த அன்று,முழுநாள் அலுவலகத்தில் இருக்கும்படி திரு.சுவாமிநாதன் கேட்டுக் கொண்டார். அனுபவச்சான்று வேண்டி அவர் மேசையில் ஒரு கடிதம் வைத்தேன்ஆலுவலக மேலாளருக்கு அதனை அனுப்பும் போது,அவர் எழுதிய குறிப்பு என் கண்களில் பட்டது. Yes..Pl issue.i am loosing a very bright boy என்று எழுதியிருந்தார். சம்பிரதாயமாக எழுதப்பட்ட அனுபவச்சான்றிதழின் வாசகங்களை அடித்துவிட்டு சிறப்பான வரிகளையும் சேர்த்திருந்தார் அவர்.

என் எழுத்துக்களில் உருவான விளம்பரங்களைக் கொண்ட ஆல்பம் ஒன்றைத் தயாரிக்க சுந்தரேசன் உதவினார். அதனை ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டு சென்னை சென்று இறங்கினேன்.நெருங்கிய உறவினர்கள் பலரும் சென்னையில் உண்டு.அந்த வகையில் சென்னை எனக்குப் புதிதல்ல.

அவ்வை சண்முகம் சாலையில் இயங்கி வந்த முத்ரா நிறுவனத்துக்குள் நுழைந்தேன். அங்கிருந்த காபி ரைட்டிங் பிரிவின் தலைவர் வேணு நாயர் என்று ஞாபகம்.நான் எழுதியிருந்த விளம்பரங்களைப் பார்த்தார். "நன்றாகா இருக்கிறது. ஆனால் முழுநேர தமிழ் விளம்பர எழுத்தாளருக்கு எங்களிடம் தேவையிருக்காதே"என்றார். அங்கு  மட்டுமல்ல.லின்டாஸ், ஹெச்.டி.ஏ.,
ஓ&எம் என்று எங்கும் இதே கதைதான்.

வேலைக்கு ஆள் எடுப்பதில் இரண்டுவிதமான அணுகுமுறைகள் உண்டு. திறமையாளர் ஒருவர் தென்பட்டால் அவருக்கு இடம்தந்து நமக்கேற்ற முறையில் பயன்படுத்திக் கொள்வது ஒருமுறை.அவரின் இப்போதைய தகுதிகள்/தகுதியின்மைகளை கணக்கில் எடுக்காமல் நம் நிறுவனத்தின் தற்போதைய தேவைகளை மட்டுமே மனதில் கொண்டு முடிவெடுப்பது இரண்டாவது வகை.நான் சந்தித்தவர்கள் எல்லோருமே இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். அதற்குக் காரணம்,அவர்களும் தேசிய அளவிலான நிறுவனம் ஒன்றின் அலுவலர்கள் மட்டுமே.

சென்னையில் ஃப்ரீலான்ஸ் முறையில் தமிழ் விளம்பர எழுத்தாளர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது புரிந்தது.முழுநேர வேலை கொடுக்க நிறுவனங்கள் தயங்குவது தெரிந்தது. ஆனாலும்ஒரு நம்பிக்கை மீதமிருந்தது.  சென்னை மா கம்யூனிகேஷன் நிறுவனத்துக்கு கோவை கிளையின் மேலாளர் திரு.ராமகிருஷ்ணன் வழங்கிய பரிந்துரைக் கடிதம்  என் பையில் இருந்தது. அப்போது,தென்னகத்தின் சில விளம்பர நிறுவனங்கள், அயல்நாட்டு விளம்பர நிறுவனங்களுடன் ஒரு வகையான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு,அந்த நிறுவனத்தின் சார்பு நிறுவனம் போல் இயங்கிக் கொண்டிருந்தன.அதன் விளைவாக இந்த நிறுவனத்தின் பெயருடன் அயல்நாட்டு நிறுவனத்தின் பெயரும் இணைந்து, ஒரு சர்வதேச அந்தஸ்தைத் தந்து கொண்டிருந்தது. மா கம்யூனிகேஷன் நிறுவனம், மா பொஸேல் என்றாகியிருந்தது. ஆர் கே சாமி நிறுவனம்,ஆர் கே சாமி பிபிடிஓ என்றாகியிருந்தது.

மாபொஸேல் நிறுவனத்தின் சென்னை கிளை நிறுவனத்தின் நிர்வாகியாக கணேஷ் பாலிகா இருந்தார்.அவருக்குத்தான் ராமகிருஷ்ணன் கடிதம் கொடுத்திருந்தார். கணேஷ் பாலிகாவின் அறைக்கு அந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன்.அவருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது என்பதால் அவர் சார்பாகபிரசாத் என்றோர் இளைஞர் என்னிடம் வந்து பேசினார். தீட்சண்யமான பூனைக்கண்கள். நான் ஏற்கெனவே எழுதியிருந்த விளம்பரங்களைப் பார்வையிட்டவர்,அப்போது, அவர்கள் நிறுவனத்துக்கு எழுத வேண்டியிருந்த தமிழ் விளம்பரம் ஒன்றுக்கான தகவல்களைத் தந்து எழுதச் சொன்னார்.

பொதுவாகவே விளம்பரங்கள் எழுத ஒரு பொறி தட்டிவிட்டால் உடனே எழுதிவிடலாம்.அந்தப் பொறியும் உடனே தட்டிவிடும். ஏனெனில்அதி அவசரத்தில்எழுத வேண்டிய நிர்ப்பந்தம் எல்லா நிறுவனங்களிலும் உண்டு.சசியில் நான் இருந்த போது,படைப்பாக்கப் பிரிவில் ஒரு போஸ்டர் ஒட்டிவைத்திருந்தோம்.  "In this place, everything is wanted yesterday.So,if you want
anything today,come tomorrow".

அந்தப் பயிற்சி காரணமாக சில நிமிடங்களிலேயே  அவர் கேட்ட விளம்பரங்களை எழுதிக் கொடுத்துவிட்டேன்.அவற்றை வாசித்ததும் பிரசாத்தின் கண்களில் மின்னல்."ஜஸ்ட் ஹோல்ட் ஆன் யார்' என்று சொல்லிவிட்டு,என் விண்ணப்பத்தையும்,அந்த விளம்பரத்தையும் வாரிக் கொண்டு உள்ளே ஓடினார்.பதினைந்து இருபது நிமிடங்களுக்குப் பிறகு வந்தவர் முகம் சற்றே வாடியிருந்தது. "உடனடியாக முழுநேர தமிழ் விளம்பர எழுத்தாளரைப் பயன்படுத்தும் நிலையில் இல்லை. நீங்கள் எழுதிக் கொடுத்த விளம்பரத்தை எங்கள் க்ளையண்ட் அங்கீகரித்தால் அதற்குரிய பணம் அனுப்பப்படும்" என்று கூறி விடைகொடுத்தார்.

அடுத்த அரைமணிநேரத்தில்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கோவைக்கு செல்லும் அடுத்த ரயிலுக்கான முன்பதிவு விண்ணப்பத்தை எழுதிக் கொண்டிருந்தேன்.அது கிடைத்தது.

(தொடரும்...)

Thursday, June 9, 2011

உளிகள் நிறைந்த உலகமிது-2

விளம்பரங்கள் எழுதுகிற வேலைக்கு காப்பி ரைட்டர் என்று பெயர். சினிமாவில் திரைக்கதை/காட்சி அமைப்பு/ வசனம் எழுதுவதை ஸ்க்ரிப்ட் என்று சொல்வதுபோல விளம்பரங்கள் எழுதுவதை காப்பி என்று சொல்கிறார்கள். பார்த்து எழுதுவது என்றும் படியெடுத்து எழுதுவது என்றும் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடியஅத்தனை அபாயங்களும் அந்தப் பெயருக்கு உண்டு. அவ்வளவு பெரிய நிறுவனத்தில் ஜெராக்ஸ் மெஷின் இல்லையா?அதற்கென்று ஆள் வைத்திருக்கிறார்களே என்று கவலையுடன் என்னைக் கேட்டவர்கள் உண்டு.

 தினம் மாலை 4-6 வேலை நேரம்.மாதம் 750/ரூபாய் சம்பளம் என்றதும் எனக்கு அதில் ஆர்வம் வந்தது. சசியில் காப்பி ரைட்டிங் துறையில் என்னையும் சேர்த்து இருவர். இன்னொருவர்,அந்தத் துறையின் தலைவர்.சிராஜ் என்பது அவருடைய பெயர்.ஆங்கிலக் கவிஞர்.Squarring the circles என்ற தலைப்பில்ஒரு தொகுப்பு வெளியிட்டிருந்தார். விளம்பர உலகில் படைப்பாக்கப்பிரிவில் பல சலுகைகள் உண்டு. எந்த விதமாகவும் உடையணிந்து வரலாம் என்பது முதல் சலுகை. யாரையும் பெயர் சொல்லி அழைக்கலாம் என்பது இரண்டாவது சலுகை. படைப்பாக்கப் பிரிவில் வரைகலைக்கென்றொரு பகுதியும் எழுத்தாளர்களுக்கென்றொரு பகுதியும் இணைந்தே இருக்கும். வரைகலையாளர்கள் பிரிவு ஒரே புகை மண்டலமாக இருக்கும். சிராஜ் ஒரு ஜீன்ஸ் சந்நியாசி. எல்லாவற்றுக்கும் சிரித்துக்கொண்டு எதிலும் பட்டுக் கொள்ளாமல் விட்டேற்றியாக இருப்பார். காப்பி ரைட்டிங்கில்  எழுதப்படாத விதிமுறைகள் சில உண்டு. மனிதனின் தலை, உடல், கால் போல ஹெட்லைன், பாடிகாபி, பேஸ்லைன் என்று மூன்று முக்கியமான அங்கங்கள் உண்டு. விளம்பர வடிவமைப்புக்கென்று கணினிகள் பயன்பாட்டுக்கு வராத காலம் அது. விளம்பர வாசகங்கள் எழுதிக் கொடுத்தால், வெளியே கொண்டுபோய் டைப்செட்டிங் செய்து கொண்டு வருவார்கள். சசியிலேயே டார்க் ரூம் ஒன்று உண்டு.  அங்கே வரையப்பட்ட வடிவங்களையோ புகைப்படங்களையோ இணைத்து விளம்பரத்தை உருவாக்குவார்கள்.

அப்போதெல்லாம், வாடிக்கையாளர் பார்வைக்கென்று குத்து மதிப்பாக
உருவாக்கப்படும் வடிவமைப்புக்கு லே அவுட் என்று பெயர். டைப்செட்டிங் இருக்காது. வரைகலைகூட கோட்டோவியமாக இருக்கும். விளம்பர வாசகங்கள் தட்டச்சு செய்து அனுப்பப்படும். வாடிக்கையாளர் ஒப்புக் கொண்டபின் டைப்செட்டிங் செய்யப்படும். அதற்கு ஆர்ட்வொர்க் என்று பெயர் தட்டச்சு செய்யப்பட்ட தாளில் மெய்ப்பு பார்த்து, டைப்செட்டிங் செய்த ஆர்ட் வொர்க்கிலும் மெய்ப்பு பார்த்து அதன் பின்பக்கங்களில் கையொப்பம்இட வேண்டும். கேலியும் சிரிப்பும் கும்மாளமுமாய்  வேலைகள் நடப்பதைமற்ற பிரிவினர் பொறாமையுடன் பார்ப்பார்கள். விளம்பர நிறுவனத்தின்எல்லா அங்கங்களிலும் சுதந்திரம் உண்டென்றாலும் அதிகபட்ச சுதந்திரம்படைப்பாக்கப் பிரிவில்தான்.


லைன் இல்லஸ்ட்ரேஷன் எனப்படும் கோட்டோவியங்களில் ஞானவேலும்சுந்தரேசனும் கெட்டிக்காரர்கள். வாடிக்கையாளர்களை சந்தித்து விளம்பர ஒப்பந்தங்களைப் பெற்று வருபவர்களுக்கு அக்கவுண்ட் எக்ஸிக்யூடிவ்ஸ் என்று பெயர். பெரும்பாலான எக்ஸிக்யூடிவ்களின் கேலிச் சித்திரங்கள் இந்த இரண்டு ஓவியர்களின் கைவண்ணங்களில் உருவாகும். சசியில் நான் சேர்ந்த காலம் மிக அற்புதமான காலம். விளம்பர நிறுவனம் என்பது, தனிமனிதத் தொடர்புகளை அடித்தளமாகக் கொண்டுதான் கோவைபோன்ற நகரங்களில் உருவானது.ஆனால் எண்பதுகளின் இறுதியில் விளம்பரவியல் சிறப்புப் படிப்பு, எம்.பி.ஏ மார்க்கெட்டிங் படிப்பு போன்ற சிறப்பு தகுதி பெற்றவர்கள் விளம்பர உலகத்துக்குள் வந்து கொண்டிருந்தார்கள். இளம் வல்லுநர்கள் படைப்புதுறையிலும் மார்க்கெட்டிங் பிரிவிலும் தீயின் தீவிரத்தோடு செயல்படத் தொடங்கினார்கள்.

புதிய தலைமுறையின் கண்ணோட்டத்தை புன்னகையுடன் வரவேற்றதோடுஅவர்கள் வேகத்துக்கும் ஈடு கொடுத்த சசி அட்வர்டைசிங் திரு,சுவாமிநாதன் குறித்து இங்கே சொல்ல வேண்டும். பள்ளிப் படிப்பைத்தாண்டாதவர் அவர். சிந்தாமணி கூடுறவு அங்காடியில் எளிய ஊழியராகவாழ்வைத் தொடங்கியவர். அங்காடிக்கு வரும் பத்திரிகைக்காரர்களுடன் பழக்கத்தில்,விளம்பரம் சேகரித்துத் தருவதில் கிடைக்கக் கூடியவருமானம் பற்றி அறிந்து, தொடர்புகளை பலப்படுத்தி, பகுதிநேரமாய் அந்தப் பணியில் இறங்கி இந்தியாவின் பல பகுதிகள் கொண்டநிறுவனமாய் சசி அட்வர்டைசிங்கை உருவாக்கியவர்வர் அவர்.

திறமையாளர்களை அடையாளம் காண்பதுடன் அவர்களைத் திறம்பட வேலை வாங்குவதில் கைதேர்ந்தவர். சசி அட்வர்டைசிங்கில் பணிபுரிந்தபோது விளம்பரத் துறையின் நுணுக்கங்களை, அதன் தொழில்நுட்பம் ,மற்றும் தொழில்தர்மம் சார்ந்து முறையாகக் கற்றுக் கொண்டேனா என்ற கேள்வி யோசிக்கத் தூண்டுகிற ஒன்று. ஆனால்,விளம்பர உலகின் நடைமுறை யதார்த்தங்களை விளங்கிக் கொள்ளும் இடமாக சசி இருந்தது.

சர்வதேசப் புகழ்பெற்ற விளம்பர நிறுவனங்களாகிய லின்டாஸ்,ஹெச்.டி.ஏ. ஒகில்வி&மேதர்(ஓ&எம்) போன்றவை குறித்த சுவாரசியமான தகவல்களும் துணுக்குகளும் சசியில் அன்றாட உரையாடல்களில் இடம்பெற்றன. இன்னொருபுறம், உள்ளூர் யதார்த்தங்கள் செயல்முறைகளில் சமரசத்துக்குத் தூண்டின. ஸ்ட்ராடர்ஜி போன்ற மந்திரச்சொற்கள் புழங்கினவே தவிர மிகச்சில நிறுவனங்களே அத்தகைய அணுகுமுறையில் வடிவமைக்கப்பட்ட விளம்பரங்களுக்கு இடம்கொடுத்தன.

ஆனால் ஒரு நிறுவனம் வளர்வதற்கு வருமானம் அவசியம் என்கிற கணக்குக்கு முதலிடம் தரும்போது பல வித்தியாசமான/விசித்திரமான உத்திகள் கடைப்பிடிக்கப்பட்டன. கோவையில் முக்கியத் தொழிலதிபர்கள் மரணம்அடையும் போது பல நிறுவனங்களின் இரங்கல் விளம்பரங்கள் மூலம்லட்சக்கணக்கான ரூபாய்கள் மதிப்பில் வணிகம் நடக்கும். கால்பக்கம், அரைப்பக்கம், முழுப்பக்கம் என்று,தயார்நிலையில் இருக்கும் லே அவுட்டுகளை அஞ்சலி செலுத்திவிட்டு வருபவர்களிடம் காட்டி மரணவீட்டு வாசலிலேயே ஒப்புதல் பெற்று வெளியிடும் அளவு துரிதமாக செயல்பட்டார்கள்.

வேறொரு நிறுவன அதிபருக்கு அவர் நிறுவனத் திட்டங்கள் சார்ந்த விளம்பரங்களைக் கொண்டு போயிருந்தோம். அவருக்கு அதிலிருந்த புதுமையான அணுகுமுறை புரியவில்லை. சூழ்நிலையை சமாளிக்க சுந்தரேசன் விளம்பர டிசைன்களை மூடிவைத்துவிட்டு அவருக்குக் கைரேகை பார்க்கத் தொடங்கிவிட்டார்!! கொஞ்சம் நெருங்கி ,ரகசியமாக, "அய்யா! உங்களுக்கு பல அழகான பெண்களோட அன்பும் அபிமானமும் தானாக் கிடைக்குமே" என்று சுந்தரேசன் சொல்ல, நாங்கள் கொண்டு போயிருந்த டிசைன்கள் அப்ரூவ் ஆயின.எனக்குத் தெரிந்து, தான்
கைரேகை பார்க்கும் அத்தனை பேருக்குமே சுந்தரேசன் சொல்லும் பொதுப்பலன் அது.

(தொடரும்)

Sunday, June 5, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 1




"அந்தப் பையனையே வரச்சொல்லீடுங்களேன்". இப்படித்தான் எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் சொல்லியிருக்க வேண்டும்.எனக்கு அழைப்பு வந்தது.உடனே நீங்கள் நான் பள்ளி மாணவனாக வகுப்பில் இருந்தபோது பள்ளி உதவியாளர் வந்து "தலைமையாசிரியர் அழைக்கிறார்"என்று சொன்னதாய் எண்ணினால் அது தவறு. நான் அப்போது பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.

ஏழாம் வகுப்புவரை ஏ.எல்.ஜி.மெட்ரிகுலேஷன் பள்ளியிலும்,அதன்பின் மணி மேல்நிலைப் பள்ளியிலும்படித்தேன்.ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படிக்கும்போது, கவிதை என்று கருதி நான் எழுதிய சில வரிகளை வகுப்பில் உரக்க வாசித்து, "நல்லா எழுதியிருக்கான்.பெரிய கவிஞனா வருவான்" என்று முதல் அட்சதை போட்ட தமிழாசிரியை லலிதா ஆண்ட்டி. அந்தப் பள்ளியில் ஆசிரியைகளை ஆண்ட்டி என்றுதான் கூப்பிடுவோம். வீட்டுக்கு வரும் உறவினர்களையும் குடும்ப நண்பர்கள் வீட்டுப் பெண்மணிகளையும் "அத்தை" என்றே அழைத்ததால், ஆண்ட்டி என்ற சொல் ஆசிரியைகளையே குறிக்கும் என்று வெகுகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த வயதில் "நந்தவனத்திலோர் ஆண்டி" பாடலைக் கேட்டிருந்தால் கூடஎங்கள் பள்ளி ஆசிரியை யாரோ ஒருவரைப் பற்றி அவருடைய காதலர் எழுதிய பாட்டு என்று கூட நினைத்திருப்பேன்.

லலிதா ஆண்ட்டி கொடுத்த உற்சாகத்தில் கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் "கவிதைகளாக" எழுதித்தள்ளிக் கொண்டிருந்தேன். ஏதோ ஓர் இதழில் பாரதி வெள்ளையர்களுக்கு பயந்துதான் புதுவைக்குப் போனார் என்றொரு விவாதம் வந்திருந்தது. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தது ஏழாம் வகுப்பு. இந்த விஷயத்தில் தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்று விரும்பினேன். "பாரதி பயந்து ஓடினாரா? புதுவைக்குப் பறந்து ஒடினாரா?" என்று இரண்டு வரிகள் வேகமாக வந்தன.அதன்பிறகு நீண்ட நேரம் யோசித்து,"பயக்கவில்லை-பாரதி பயக்கவில்லை" என்று தீர்ப்பை எழுதிவிட்டேன்.

 "ஆடல் காணீரோ" என்ற பாடலை அப்போது எங்கேயோ கேட்டேன். அந்த வாரத்தில் எங்கள் பள்ளியில் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு, "கல்விச்சாலை காணீரோ-வந்து எங்கள் கல்விச்சாலை காணீரோ" என்றொரு பாடலை எழுதி எங்களுக்கு ஆங்கிலம் எடுத்துக் கொண்டிருந்த எய்த் ஸ்டாண்டர்ட் ஆண்ட்டி (அவர் தன்னை மிஸஸ் வரதராஜன் என்று அறிமுகம் செய்து கொண்டதாய் நினைவு) வசம் ஒப்படைத்தேன். அவர் அதனை ஸ்கெட்ச்சில் எழுதச் செய்து அறிவிப்புப் பலகையில் ஒட்டியிருந்தார்.

இத்தனை தூரம் ஆண்ட்டிக்கள் என்னைக் கெடுத்து வைத்திருந்தார்கள். மணிமேல்நிலைப்பள்ளியில் சேர்ந்த பிறகு என் இலக்கிய அர்வம் அவ்வப்போது வெளிப்பட்டாலும் பள்ளித் தாளாளர் திரு.சின்னசாமி நாயுடு  மறைவுக்கு எழுதிய அஞ்சலிக் கவிதை என்னை பள்ளியில் பிரபலமாக்கியது. செத்தும் கொடுத்தார் சின்னச்சாமி!!

பள்ளி தலைமையாசிரியர் திரு.பி.வி,பத்மநாபனுக்கு நான் நெருக்கமானது இப்படித்தான். படிப்பில் நான் படுசுமார் என்பதை அவர் பொருட்படுத்தவேயில்லை. பள்ளிப் படிப்பை முடித்த பிறகும் பள்ளியுடன் எனக்கு தொடர்புகள் வலுவாகவே இருந்தன.

பி.வி.பத்மநாபன் அவர்கள் ஓய்வு பெறுவதையொட்டி முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த வழியனுப்பு விழாவில்,விழா தொகுப்புரைக்கு யாரை அழைக்கலாம் என்று விழாக்குழுவினர் விவாதித்துக் கொண்டிருந்த போது,தலைமையாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய வாசகம்தான், "அந்தப் பையனையே வர சொல்லீடுங்களேன்".

முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்தவர்,சசி அட்வர்டைசிங் உரிமையாளர் திரு.சசி சுவாமிநாதன். அப்போதெல்லாம் அவரை ஊர்வசி சுவாமிநாதன் என்றால்தான் தெரியும், ஊர்வசி என்ற பெயரில்; சபா ஒன்றையும் நிகழ்த்தி வந்தார் அவர்.கோவையில் நாடகங்கள் நடத்துவதில் முன்னணியில் இருந்த சபா அதுதான்.

வழியனுப்பு விழா முடிந்ததும் என்னை அழைத்தார் திரு.சுவாமிநாதன். வீட்டுத் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டவர், தன் முகவரி அட்டையைக் கொடுத்தார்."நம்ம கம்பெனி பேரு சசி அட்வர்டைசிங்! தமிழ்லே விளம்பரங்கள் எழுதற போஸ்ட்டுக்கு வேகன்ஸி இருக்குங்க! நாளைக்கு வந்து ஜாய்ன் பண்ணிக்குங்க!" சொல்லிவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கியவரிடம்,"சார்! நான் காலேஜில படிச்சுகிட்டிருக்கேன் சார்!"என்று குய்யோ முறையோ என கூச்சல் போட்டேன்."தெரியுங்க! தெனம் சாயங்காலம் நாலில் இருந்து ஆறு மணிவரை வந்தா போதும்" என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார்.

நாலு டூ ஆறா? நண்பர்களுடன் செலவிடும் பொன்மாலைப் பொழுதல்லவா?"அந்த நேரத்தில் போய் வேலை பார்ப்பார்களாக்கும்!! அப்போதிருந்த விளையாட்டுப் புத்தியில் அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இரண்டு நாட்கள் பொறுத்து சசி அட்வர்டைசிங்கில் இருந்து தொலைபேசி அழைப்பு. சில நிமிடங்கள் காத்திருப்புக்குப் பிறகு சுவாமிநாதன் பேசினார். "என்னங்க ஆளையே காணோம்! மொதல்ல எங்க ஆபீசுக்கு ஒருதடவை வாங்க! அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்".

அன்று மாலையே சசி விளம்பர நிறுவனத்துக்குள் காலெடுத்து வைத்தேன். அந்த விநாடியே நான் விளம்பர உலகத்துக்குள் காலெடுத்து வைத்துவிட்டேன் என்கிற விபரம் எனக்கு அப்போது தெரியாது

(தொடரும்)