உளிகள் நிறைந்த உலகமிது-7

தொழில்நுட்பத் தகவல்கள் சார்ந்த செய்திப்படம் ஒன்றை சுவாரசியம் மிக்கதாக்க வேண்டுமென்றால் அதில் பிரபலங்களை சேர்க்கலாம் என்பது முதல் விதி. பிரபலங்களை சேர்க்கும் அளவு பட்ஜெட் இல்லையென்றால் பிரபலங்களின் சாயலில் உருவாக்கலாம் என்பது இரண்டாவது விதி. இதற்கு காபிரைட் விதிகளும் இடம் கொடுப்பதுதான் முக்கியமான விஷயம்.

கட்டிடத்திற்கு எந்த சிமெண்ட்டை உருவாக்கலாம் என்று தீர்மானிக்கும் சக்திகள் யார் யார் என்ற ஆய்வில் நான்குபேர் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதைச் சுற்றித்தான் செய்திப்படத்தின் கரு இயங்க வேண்டும். அதற்கு ராம்கி ஒரு திட்டம் வகுத்தார் .

ராம்கி
அப்போதுதான் கமல்ஹாசனின் மைகேல் மதனகாமராஜன் படம் வெளிவந்திருந்தது. ஒரே விளம்பர மாடலைக் கொண்டு நான்கு பாத்திரங்களை உருவாக்கினோம். ஆர்க்கிடெக்ட் மதன், என்ஜினியர் ராஜன், மேஸ்திரி மைக்கேல், ஸ்டாக்கிஸ்ட் காமேஸ்வரன். திரைப்படப் பாத்திரங்களின் வசன பாவங்களை இந்த நால்வரின் உரையாடல்களிலும் கொண்டு வந்திருந்தேன்.

எல்லாம் சரிதான், இதில் ரஜினி எங்கிருந்து வந்தார் என்கிறீர்களா? இந்த நால்வரையும் கொண்டு உருவாக்கப்படும் அடுக்குமாடிக் கட்டிடத்தின் உரிமையாளர் தன்னை இவ்வாறு அறிமுகப் படுத்திக் கொள்வார். "வணக்கங்க..நான்தான் மலை...அண்ணாமலை! இந்த அடுக்குமாடிக் கட்டிடத்தோட எஜமான்....எப்டீ...எஜமான்!" இத்தனைக்குப் பிறகும் மைக்கேல் மதனகாமராஜன் படத்துடன் முதல் சில நிமிடங்களிலேயே பார்வையாளர்கள் இந்த செய்திப்படத்தைத் தொடர்புபடுத்திக் கொண்டால்தான் ஈடுபாட்டுடன் பார்ப்பார்கள்.

எனவே, "கதகேளு கதகேளு"என்று தொடங்கும் மைக்கேல் மதனகாமராஜன் படத்தின் டைட்டில் பாடலைப் பயன்படுத்தத் தீர்மானித்தோம். ஒரு பாடலின் இசையை சில விநாடிகள் வரை அப்படியே பயன்படுத்திக் கொண்டால் காபிரைட் சட்டம் பாதிக்காது. எனவே அதே மெட்டுக்கு புதிய வரிகளை எழுதினேன். இப்போது என் பதவியான காபிரைட்டர், ஒருபொருட்பன்மொழி!!

"கதகேளு கதகேளு
டால்மியாவின் கதகேளு
தலைமுறைகள் நிலையாக
தொடர்கின்ற கதகேளு
மைக்கேல் மதன காம ராஜன் சேர்ந்து சொல்லக்கேளு
எக்காலத்தும் எல்லாருக்கும் டால்மியாதான் பாரு
கட்டிடங்கள் கட்டும் முன்னே நாலுபேரக் கேளு
டால்மியாவின் பேரத்தான் சொல்லுவாங்க பாரு!!"
என்ற பாடலுடன் அந்தப் படம் தொடங்கியது.

இதில் "கட்டிடங்கள் கட்டும் முன்னே நாலுபேரக் கேளு" என்ற வரியில் உள்ள பொதுவான தன்மை டால்மியா நிறுவனத்துக்கு மிகவும் பிடித்துப் போனதால்,மைக்கேல் மதனகாமராஜன் என்ற வரியை மட்டும் எடுத்துவிட்டு இந்தப்பாடலை வானொலி விளம்பரமாகவும் பயன்படுத்திக் கொண்டார்கள். வானொலி விளம்பரம் பாடலாக வந்தால் ஜிங்கிள் என்று பெயர். உரையாட்லாகவோ அறிவிப்பாகவோ வந்தால் ரேடியோ ஸ்பாட் என்றும் பெயர்.

வானொலியில் பண்பலை பல விதிமுறைகளைத் தளர்த்தித் தந்தபோது இதுபோல் நிறைய சினிமா பாடல்களை சுவீகாரம் செய்து பல விளம்பரங்களை உருவாக்கினோம். வீனஸ் மார்க்கெட்டிங் என்ற விளம்பர நிறுவனம் என்னை இதற்காகவே ரீடெய்னர் முறையில் ஒப்பந்தம் செய்து கொண்டது. "சின்ன ராசாவே சரல்விக் ஸ்டவ் வாங்கிக் கொடுக்கணும்"என்று குடும்பத் தலைவிகள் பாடினார்கள்.

இதன்விளைவாக கேட்கும் பாடல்களையெல்லாம்  யாருக்கான விளம்பரப்பாடலாக மாற்றலாம் என்று மனதுக்குள்ளேயே பாடிப்பார்த்துக் கொண்டிருந்தேன். முக்காபுலா பாடல்,,
"முக்காகிலோ கால்கிலோ அல்வா
எல்லாவகை ஸ்வீட்டுக்கும் லாலா
வாங்கீட்டு போங்கய்யா வீட்டில தாங்கய்யா
காரமும் தேவையா
பொட்டலங்கள் கட்டித் தரவா" என்று உருமாற்றம் பெற்றது.

லாலா ஸ்வீட்ஸ்காரர் மிகவும் நாகரீகமானவர். எனவே இதனை அங்கீகரிக்கவில்லை. கோவையில் புகழ்பெற்ற சிபிஎச் பிரியாணி உணவகம் இருந்தது. அதன் உரிமையாளர் வெங்கடேஷ் என் நண்பர். அவருக்குத் தெரிந்த அய்யர் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு வீட்டுக்கும் பார்சல் வாங்கிப் போவார். இதை மனதில் கொண்டு,"மடிசாரு கட்டிண்டு வந்தாளே மகராணி! அவகூடத் திம்பாளே சிபிஎச் பிரியாணி"என்ற பல்லவியைச் சொன்னதும் வெங்கடேஷ் என்னையே வில்லாதி வில்லனாகப் பார்க்கத் தொடங்கினார்.

பிஃப்த் எஸ்டேட் போன்ற நிறுவனங்கள் திரைப்பட இசையைப் பின்பற்றி வெகுமக்கள் ஊடகங்களுக்கான விளம்பரங்கள் உருவாக்குவதை ஊக்குவிப்பதில்லை. சில நிறுவனங்கள் இதற்கு மிகுந்த ஊக்கம் தந்தன. இதற்கு அவர்கள் சொல்கிற காரணம், வாடிக்கையாளர்கள் மனதில் விளம்பரம் இடம்பெறும் என்பதுதான். ரீ கால் வேல்யூ என்று சொல்லி கிளையண்ட்டின் ஒப்புதலைப் பெற்று விடுவார்கள்.  கணேஷ் பாலிகா
ஒரு விளம்பரத்தை செழுமைப்படுத்துவதில் ராம்கி நிபுணரென்றால்,  விளம்பரம் உருவாகும்போதே அதன் போக்கு எப்படியிருக்குமென்று கணிப்பதில் கணேஷ் பாலிகா ஒரு மேதை. அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது.விளம்பரங்களை எழுதி அவருடைய ஒப்புதலுக்காகக் கொண்டு போனால், கண்களை மூடிக்கொண்டு "ஷூட்"என்பார். வாசிக்க வாசிக்க அவர் இதழ்களில் புன்னகை அரும்பினால், வாசிப்பின் முடிவில் பெரும்பாராட்டு காத்திருப்பதாக அர்த்தம். இல்லையென்றால்,this copy has done nothing to me ya என்பார்.

ஒருமுறை க்ளையண்ட்டை சந்திக்கப் போகும் வழியில்தான் விளம்பர வாசகங்களை அவருக்கு வாசித்துக்காட்ட முடிந்தது. அப்போது அவர் காரோட்டிக் கொண்டிருந்தார். வாசகங்கள் மிகவும் பிடித்துப்போக, தன்னை மறந்து அவர் துள்ளிக் குதித்ததில் கார் நிலைதடுமாறியது. ஒரு படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வும் நிர்வாகிக்குரிய விழிப்புணர்வும் வாய்க்கப்பெற்ற கணேஷ் பாலிகா என் ஆளுமையின் உருவாக்க நிலையில் கணிசமான தாக்கம் செலுத்தியவர்.

அப்போதைய என் வயது (24), அனுபவம் அறிதல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒரு பொறியைப் பெருநெருப்பாக்கும் உத்தி நேரடி வழிகாட்டுதல் இல்லாமல் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. மிகச்சிறந்த நிபுணர்களின் நிழலில் இருந்த நாட்கள் அவை. நான் கொண்டு சென்ற ஒரு சிறுபொறியை கணேஷும் ராம்கியும் பெருநெருப்பாக்கிய சம்பவம் இது.

வேளாண் முதலீட்டுத்திட்டங்கள் தனியார்  நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்ட காலம்.. அவற்றுக்கு ரிசர்வ் வங்கி தடைவிதிக்கும் காலம்வரை அவற்றின் ஆபத்தை பொதுமக்கள் போலவே விளம்பர நிறுவனங்களும் அறிந்திருக்கவில்லை.

அந்த வகையில் தேக்கு முதலீட்டு நிறுவனம் ஒன்றின் விளம்பரங்களை உருவாக்கிய "அனுபவம்" விலைமதிப்பில்லாதது. இருபது வருடங்களுக்குப் பிறகு அந்த முதலீடு பணமாகும் என்பதால் பின்னால் வரும் பெரும் செலவுகள் பற்றிய கவலை வேண்டாம் என்பதுதான் அந்த விளம்பரத்தின் கருத்துரு.

எனவே "எனக்கென்ன கவலை" என்பதையே தலைப்பு வாசகமாக்கி ஒரு விளம்பரத்தை எழுதினேன். அந்தத் திட்டத்தில் முதலீடு செய்த ஒருவர், தனக்கு இனி கவலைகள் இல்லை என்று சொல்வதாக அதன் வாசகங்கள் இருந்தன.

இந்த விளம்பரத்தை வாசித்துக் காட்டியவுடன் ராம்கி ஒரு யோசனை சொன்னார்." இதை ஒற்றை விளம்பரம் ஆக்காதீர்கள். ஒரு கேம்பெய்ன் ஆக மாற்றுங்கள்" என்றார். அதாவது, பலருடைய வாழ்வில் பலப்பல கேள்விகள் கேட்கப்படும். அந்தப் பலரும், பலப்பல கேள்விகளுக்கு சொல்லும் பதில்,"எனக்கென்ன கவலை"என்பதுதான்.

"ஏங்க! பொண்ணு பொறந்திருக்கா! இன்னும் பொறுப்பில்லாம இருக்காதீங்க! "இதற்கு அந்த இளைஞர் சொல்லும் பதில்,"எனக்கென்ன கவலை". "யோவ்! இருபது வருஷத்துல ரிட்டையர் ஆயிடுவே! ஏதாவது சேர்த்து வைச்சிருக்கியா?" அதற்கு அந்த மனிதர் சொல்லும் பதில் "எனக்கென்ன கவலை". இப்படி கேள்வி-பதில்-கார்ட்டூன் ஆகியவை மட்டும் கொண்ட சின்னச் சின்ன விளம்பரங்கள் சதுரம் சதுரமாய் மூன்றோ நான்கோ உருவாக்கப்படும்.

இதில் நிறுவனத்தின் பெயரோ திட்டங்கள் குறித்த விளக்கங்களோ எதுவுமிராது. இந்த விளம்பரம் நாளுக்கொன்றாக வெளிவரும். இதற்கு டீஸர் விளம்பரங்கள் என்று பெயர். பிற்காலத்தில் புகழ்பெற்ற விளம்பரங்கள் "புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?:."தில்லுதுர" போன்றவை.

இந்த சதுர விளம்பரங்கள் வெளிவந்த பிறகு, ஒருநாள்,திட்டத்தை விலக்கும் விளம்பரம் வெளிவரும். இந்த தொடர் விளம்பரங்கள் ஒரேநாளில் வெளிவந்தால் அவற்றுக்கு பாய்ன்ட்டர் விளம்பரங்கள் என்று பெயர்.3-5-7 பக்கங்களில் சதுர விளம்பரங்களும் ஒன்பதாம் பக்கத்திலோ கடைசிப் பக்கத்திலோ முக்கிய விளம்பரம் வெளிவரும்.

இந்த முக்கிய விளம்பரத்தை வடிவமைக்கும் நேரம் வந்தது. பிஃப்த் எஸ்டேட்டில் வரைகலைப்பிரிவில் நீலம் என்ற  வடநாட்டுப்பெண் சேர்ந்திருந்தார். அவரிடம் "எனக்கென்ன கவலை" என்றால் புரியுமா என்னும் தயக்கத்துடன் அந்த  வாசகத்தைச்  சொன்ன போது, "yeah!yeah! what me worry!"என்றதோடு அதற்கான விஷுவல் ட்ரீட்மென்ட்டையும் வரைந்து காட்டினார். இரண்டு மரங்களுக்கு நடுவே ஒரு ஹாமக் கட்டி அதில் ஹாய்யாக ஒரு மனிதன் படுத்திருக்க, அவன் தலைக்குமேல் "எனக்கென்ன கவலை" என்று கொட்டை எழுத்தில் வாசகன்ம்.கீழே திட்ட விபரங்கள்.

இந்த விளம்பரத்தை க்ளையண்ட்டிடம் புதுமையான முறையில் காட்ட விரும்பினார் கணேஷ் பாலிகா.அதற்கு அவர் மேற்கொண்ட உத்தி சுவாரசியமானது.

(தொடரும்)