"அந்தப் பையனையே வரச்சொல்லீடுங்களேன்". இப்படித்தான் எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் சொல்லியிருக்க வேண்டும்.எனக்கு அழைப்பு வந்தது.உடனே நீங்கள் நான் பள்ளி மாணவனாக வகுப்பில் இருந்தபோது பள்ளி உதவியாளர் வந்து "தலைமையாசிரியர் அழைக்கிறார்"என்று சொன்னதாய் எண்ணினால் அது தவறு. நான் அப்போது பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன்.
ஏழாம் வகுப்புவரை ஏ.எல்.ஜி.மெட்ரிகுலேஷன் பள்ளியிலும்,அதன்பின் மணி மேல்நிலைப் பள்ளியிலும்படித்தேன்.ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படிக்கும்போது, கவிதை என்று கருதி நான் எழுதிய சில வரிகளை வகுப்பில் உரக்க வாசித்து, "நல்லா எழுதியிருக்கான்.பெரிய கவிஞனா வருவான்" என்று முதல் அட்சதை போட்ட தமிழாசிரியை லலிதா ஆண்ட்டி. அந்தப் பள்ளியில் ஆசிரியைகளை ஆண்ட்டி என்றுதான் கூப்பிடுவோம். வீட்டுக்கு வரும் உறவினர்களையும் குடும்ப நண்பர்கள் வீட்டுப் பெண்மணிகளையும் "அத்தை" என்றே அழைத்ததால், ஆண்ட்டி என்ற சொல் ஆசிரியைகளையே குறிக்கும் என்று வெகுகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த வயதில் "நந்தவனத்திலோர் ஆண்டி" பாடலைக் கேட்டிருந்தால் கூடஎங்கள் பள்ளி ஆசிரியை யாரோ ஒருவரைப் பற்றி அவருடைய காதலர் எழுதிய பாட்டு என்று கூட நினைத்திருப்பேன்.
லலிதா ஆண்ட்டி கொடுத்த உற்சாகத்தில் கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் "கவிதைகளாக" எழுதித்தள்ளிக் கொண்டிருந்தேன். ஏதோ ஓர் இதழில் பாரதி வெள்ளையர்களுக்கு பயந்துதான் புதுவைக்குப் போனார் என்றொரு விவாதம் வந்திருந்தது. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தது ஏழாம் வகுப்பு. இந்த விஷயத்தில் தீர்ப்புச் சொல்ல வேண்டுமென்று விரும்பினேன். "பாரதி பயந்து ஓடினாரா? புதுவைக்குப் பறந்து ஒடினாரா?" என்று இரண்டு வரிகள் வேகமாக வந்தன.அதன்பிறகு நீண்ட நேரம் யோசித்து,"பயக்கவில்லை-பாரதி பயக்கவில்லை" என்று தீர்ப்பை எழுதிவிட்டேன்.
"ஆடல் காணீரோ" என்ற பாடலை அப்போது எங்கேயோ கேட்டேன். அந்த வாரத்தில் எங்கள் பள்ளியில் இன்ஸ்பெக்ஷனுக்கு வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு, "கல்விச்சாலை காணீரோ-வந்து எங்கள் கல்விச்சாலை காணீரோ" என்றொரு பாடலை எழுதி எங்களுக்கு ஆங்கிலம் எடுத்துக் கொண்டிருந்த எய்த் ஸ்டாண்டர்ட் ஆண்ட்டி (அவர் தன்னை மிஸஸ் வரதராஜன் என்று அறிமுகம் செய்து கொண்டதாய் நினைவு) வசம் ஒப்படைத்தேன். அவர் அதனை ஸ்கெட்ச்சில் எழுதச் செய்து அறிவிப்புப் பலகையில் ஒட்டியிருந்தார்.
இத்தனை தூரம் ஆண்ட்டிக்கள் என்னைக் கெடுத்து வைத்திருந்தார்கள். மணிமேல்நிலைப்பள்ளியில் சேர்ந்த பிறகு என் இலக்கிய அர்வம் அவ்வப்போது வெளிப்பட்டாலும் பள்ளித் தாளாளர் திரு.சின்னசாமி நாயுடு மறைவுக்கு எழுதிய அஞ்சலிக் கவிதை என்னை பள்ளியில் பிரபலமாக்கியது. செத்தும் கொடுத்தார் சின்னச்சாமி!!
பள்ளி தலைமையாசிரியர் திரு.பி.வி,பத்மநாபனுக்கு நான் நெருக்கமானது இப்படித்தான். படிப்பில் நான் படுசுமார் என்பதை அவர் பொருட்படுத்தவேயில்லை. பள்ளிப் படிப்பை முடித்த பிறகும் பள்ளியுடன் எனக்கு தொடர்புகள் வலுவாகவே இருந்தன.
பி.வி.பத்மநாபன் அவர்கள் ஓய்வு பெறுவதையொட்டி முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த வழியனுப்பு விழாவில்,விழா தொகுப்புரைக்கு யாரை அழைக்கலாம் என்று விழாக்குழுவினர் விவாதித்துக் கொண்டிருந்த போது,தலைமையாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய வாசகம்தான், "அந்தப் பையனையே வர சொல்லீடுங்களேன்".
முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்தவர்,சசி அட்வர்டைசிங் உரிமையாளர் திரு.சசி சுவாமிநாதன். அப்போதெல்லாம் அவரை ஊர்வசி சுவாமிநாதன் என்றால்தான் தெரியும், ஊர்வசி என்ற பெயரில்; சபா ஒன்றையும் நிகழ்த்தி வந்தார் அவர்.கோவையில் நாடகங்கள் நடத்துவதில் முன்னணியில் இருந்த சபா அதுதான்.
வழியனுப்பு விழா முடிந்ததும் என்னை அழைத்தார் திரு.சுவாமிநாதன். வீட்டுத் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டவர், தன் முகவரி அட்டையைக் கொடுத்தார்."நம்ம கம்பெனி பேரு சசி அட்வர்டைசிங்! தமிழ்லே விளம்பரங்கள் எழுதற போஸ்ட்டுக்கு வேகன்ஸி இருக்குங்க! நாளைக்கு வந்து ஜாய்ன் பண்ணிக்குங்க!" சொல்லிவிட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கியவரிடம்,"சார்! நான் காலேஜில படிச்சுகிட்டிருக்கேன் சார்!"என்று குய்யோ முறையோ என கூச்சல் போட்டேன்."தெரியுங்க! தெனம் சாயங்காலம் நாலில் இருந்து ஆறு மணிவரை வந்தா போதும்" என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார்.
நாலு டூ ஆறா? நண்பர்களுடன் செலவிடும் பொன்மாலைப் பொழுதல்லவா?"அந்த நேரத்தில் போய் வேலை பார்ப்பார்களாக்கும்!! அப்போதிருந்த விளையாட்டுப் புத்தியில் அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.இரண்டு நாட்கள் பொறுத்து சசி அட்வர்டைசிங்கில் இருந்து தொலைபேசி அழைப்பு. சில நிமிடங்கள் காத்திருப்புக்குப் பிறகு சுவாமிநாதன் பேசினார். "என்னங்க ஆளையே காணோம்! மொதல்ல எங்க ஆபீசுக்கு ஒருதடவை வாங்க! அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்".
அன்று மாலையே சசி விளம்பர நிறுவனத்துக்குள் காலெடுத்து வைத்தேன். அந்த விநாடியே நான் விளம்பர உலகத்துக்குள் காலெடுத்து வைத்துவிட்டேன் என்கிற விபரம் எனக்கு அப்போது தெரியாது
(தொடரும்)
1 comment:
தங்களைச் செதுக்கிய உளிகளின் அழுத்தமும் கூர்மையும் தங்களின் நகைநிறை நளின நடையும் 'தொடரும்' என்ற சொல்லில் தொங்கி நிற்கச் செய்கிறது எங்களை!
Post a Comment