கோலமயில் அபிராமியே

ஊர்கொடுத்த வரிகளை உதடுகளில் தாங்கியே
உலகத்தைச் சுற்றி வந்தேன்
உரங்கொடுத்த உணர்வினை வரங்கொடுத்த பலரையும்
உள்ளத்தில் ஏற்றி நின்றேன்
பேர்கொடுக்கும் பண்புகள் பிறர்தந்த பரிசோநீ
பிறவியில் தந்த கொடையோ
பழக்கத்தில் வந்தவர் நெருக்கத்தில் இணைந்திடும்
பெற்றிமை உந்தனருளோ
நார்தொடுக்கும் பூக்களாய் நான்கற்ற தமிழினை
நல்கினேன் வேறொன்றில்லை
நாவிலும் தாளிலும் நடமாடும் தமிழன்றி
நானொன்றும் செய்ததில்லை
யார்கொடுத்த புண்ணியம் என்பதை அறிகிலேன்
யானென்று ஆடமாட்டேன்
யாதிலும் நிறைகின்ற மாதவச் செல்வியே
எழிலரசி அபிராமியே
 
 
 
 
 
தீண்டாத வீணையில் தீராத ஸ்வரங்களாய்
தொடர்கின்ற வினைகளென்ன
தகிக்கின்ற கோடையில் தவிக்கின்ற வேளையில்
தென்படும் சுனைகளென்ன
கூண்டாக மாறிடும் கூடுகள் என்பதைக்
காட்டிடும் வினயமென்ன
கூடாத நலங்களும் கூடிடும் விதமாய் நீ
கூட்டிடும் கருணையென்ன
ஆண்டாக ஆண்டாக அடிநெஞ்சில் கனிகின்ற
அன்புக்கு மூலமென்ன
அன்னையுன் திருமுகம் எண்ணிடும் பொழுதினில்
ஆக்ஞையில் நீலமென்ன
தூண்டாத விளக்கிலே தூங்காத ஜோதியாய்
திருமுகம் ஒளிர்வதென்ன
துளியின்னல் வந்தாலும் ஒளிமின்னலாய் வந்து
துணைசெய்யும் அபிராமியே
 
 
ஆலத்தை உண்டவன் அம்மையுன் கைபட்டு
அமுதவடி வாகிநின்றான்
ஆகமம் வேதங்கள் அறிந்த மார்க்கண்டனோ
அன்றுபோல் என்றும் நின்றான்
காலத்தைக் கைகளில் கயிறெனக் கொண்டவன்
கால்பட்டு மகிமை கொண்டான்
காரிருளைப் பவுர்ணமி என்றவன்ஒளிகொண்டு
கவிநூறு பாடிநின்றான்
ஞாலத்தை உணர்ந்திடும் ஞானியர் உன்னிடம்
ஞானப்பால் தேடிவந்தார்
ஞாயிறாய் ஒளிவிடும்தாய்முகம் பார்த்ததில்
ஞானத்தின் ஞானம் கண்டார்
மூலத்தின் மூலமே மோனத்தின் சாரமே
மோகவடிவான அழகே
மூளும்வினை சூழாமல் ஆளுமருள் தேவியே
முக்திதரும் அபிராமியே
 
 பேர்வாங்கச் செய்பவை பழிவாங்கி வந்திங்கு
பகைமூளச் செய்வதுண்டு
பயத்தோடு செய்பவை புகழ்வாங்கி வந்திங்கு
பொன்பொருள் சேர்ப்பதுண்டு
தார்வாங்கும் வாழையாய் தலைதாழ்ந்து நிற்பதைத்
தலைக்கனம் என்பதுண்டு
தாளாத அகந்தையில் தலைதூக்கிச் சொல்வதை
ஆளுமை என்பதுண்டு
நீர்வாங்கும் வேரென்று நான்வாங்கும் பெயருக்கு
நதிமூலம் தெரியவில்லையே
நாலுபேர் சொல்வதை நினைப்பிலே கொள்ளாமல்
நடக்கையில் சுமையுமிலையே
கார்வாங்கும் வானமாய் கனக்கின்ற கருணையே
கருத்தினில் தெளிவுதந்தாய்
கடவூரின் மையமாய் களிபொங்க நிற்கின்ற
கோலமயில் அபிராமியே