இருபது வருடங்களுக்கு முன்னால் கோவையில் ஓர் இலக்கியக் கூட்டம். உளறுவதே உரைப்பொழிவு என்று திட்டவட்டமாக நம்பிய ஒரு பெண்மணி மேடையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார். அவையினருக்கு, அது உளறல் என உரைக்கத் தொடங்குவதற்கு முன்னரே முன்வரிசையிலிருந்து பெரியவர் ஒருவர் எழுந்து "பிடி பிடி"என்று பிடிக்கத் தொடங்கிவிட்டார். உள்ளூர்க்காரர்களில் பலருக்கும் அவரைத் தெரிந்திருந்தது.பேசிய பெண்மணி வெளியூர்க்காரர்.வெலவெலத்துப் போய்விட்டார்.
அந்தப் பெரியவரின் பெயர் அம்மையப்பா.அவருக்குத் தரப்பட்டிருந்த பட்டம், "ஆண்மையரசு". ஆண்மையரசு என்றால் ஏதோ சித்த வைத்திய சமாச்சாரம் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. எதையும் ஆண்மையுடன் தட்டிக் கேட்பதும்,உடற்பயிற்சி, யோகா போன்றவற்றால்,மிகு முதுமையிலும் ஆரோக்கியமாக கோவை வீதிகளில் சைக்கிளில் வலம் வந்து கொண்டிருந்ததும் அந்தப் பட்டப்பெயருக்கான காரணங்கள்.
முதல் நான்கு வரிசைகளுக்குள் இருந்தவர்களுக்கு மட்டும் அவருடைய குரல் நன்கு கேட்டது. நான்காவது வரிசையில் வெளிநாட்டவர் ஒருவர் ஏதோவொரு நிர்ப்பந்தத்தால் அமர்ந்திருந்தார். மேடையில் யார் பேசியதும் அவருக்குப் புரியவில்லை. "வணக்கம்"என்ற சொல் பரிமாறப்பட்ட போதெல்லாம் உற்சாகமாகக்கை தட்டினார். தன்னை விசித்திரமாகப் பார்த்தவர்களுக்கு பூனைக்கண் சிமிட்டலையும் புன்னகையையும் பரிசளித்துக் கொண்டிருந்தவருக்கு அம்மையப்பா எழுந்ததும் ஆர்வமாகிவிட்டது. ஏதோ சண்டை என்று புரிந்து கொண்டவர், "ஹூ இஸ் தட் ஜெண்டில்மேன்"என்று வினவினார்.
பக்கத்து இருக்கையில் ஒரு தமிழாசிரியர். வாழ்வில் முதன்முதலாய் வெள்ளைக்காரர் ஒருவரிடம் உரையாடக் கிடைத்த அரிய வாய்ப்பினுக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் பெருமை பொங்கப் புன்னகைத்துவிட்டு கனத்த குரலில் சொன்னார், "ஹிஸ் நேம்...அம்மையப்பா! ஹிஸ் டிகிரி... ஆண்மையரசு! " பட்டம் என்றால் டிகிரி என்று பொருள் சொல்ல அகராதிகள் அவசியமா என்ன? "டிகிரி?வாட் டிகிரி?" இம்முறை வெள்ளைக்காரரின் உச்சரிப்பு ஆசிரியருக்குப் புரியவில்லை. அவரினும் அரையே அரைக்கால் வீசம் ஆங்கிலம் நன்கறிந்த பின்னிருக்கைக்காரர் ஒருவர் "ஆண்மையரசு"வுக்கு வெள்ளைக்காரர் அர்த்தம் கேட்பதாய் நினைத்துக் கொண்டு முன்னால் சாய்ந்து சத்தமாகவே சொன்னார், "ஆண்மையரசு மீன்ஸ்... மேஸ்குலின் கிங்!!"
கோவையில் பேச்சாளர் வட்டத்தில் அப்போது நாங்கள் நான்கைந்து பேர் கல்லூரி மாணவர்கள். ஆண்மையரசு அம்மையப்பா என்ற பெயரை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டோம். பெரியவர் வந்தால், "மேஸ்குலின் கிங் மதர் ஃபாதர்" என்று எங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்வோம். (இப்படி முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்தது.கல்மண்டபம் நாவல் வெளியீட்டு விழாவில் என் பெயரைப் பார்த்துவிட்டு சோ ராமசாமி, "சன் ஆஃப் டிரடிஷன்"என்று கிண்டலடித்ததாக வழக்கறிஞர் சுமதி என்னைக் கலாய்ப்பது வழக்கம்).
நல்ல உயரம். சிவந்த நிறம் சொற்ப சிகை கொண்ட வழுக்கைத்தலை. திருநீறு பூசிய நெற்றி. சிரித்தறியா செவ்விதழ்கள்.முகத்தில் எப்போதும் ஒரு கடுமை. கதர்ஜிப்பா, கதர் வேஷ்டி.கூட்டங்களுக்கு அழைப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் முன்வரிசையில் வந்து முதல்ஆளாக அமர்ந்து விடுவார் அம்மையப்பா. மேடையிலிருந்து அவரைப்பார்த்தால் பேசுபவர் மீது அவர் கண்கள் நிலைகுத்தியிருப்பதைக் காணலாம்.ஒரு சின்ன சந்தேகம் என்றாலும் "சட்"டென்று எழுந்து விடுவார் அவர்.
எப்போதும் சைக்கிளில் சுற்றிக் கொண்டிருப்பார். மிக அபூர்வமாக நகரப் பேருந்துகளிலும் தட்டுப்படுவார். ஒருமுறை அப்படித்தான். பேருந்தில் ஏறி பயணச்சீட்டு எடுத்த கையோடு, முன்பின் தெரியாத பக்கத்து இருக்கைக் காரரிடம் ஒரு கோப்பைக் காட்டினார். அதில் பல செய்தித்தாள்களின் பக்கங்கள். மனுக்களின் நகல்கள்.அதில் அம்மையப்பாவைப் பற்றி முதல்நாள் வந்த செய்திகள். விஷயம் இதுதான். அரசு மருத்துவமனை ஊழியர் ஒருவர் நோயாளியிடம் லஞ்சம் கேட்டபோது அம்மையப்பா கையும் களவுமாகப் பிடித்திருந்தார். அந்த சம்பவத்தை விவரித்ததோடு, செய்தி போட்ட பத்திரிகையையும் ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தார்.
"பொறுப்பில்லாம செய்தி போட்டிருக்காங்க! நான் சிகிச்சைக்குப் போனதாவும் எங்கிட்டே லஞ்சம் கேட்டதாவும் போட்டிருக்காங்க. இத்தனை வயசில நான் ஒரு ஊசி கூட போட்டுகிட்டது கிடையாது. "அதற்குள் பக்கத்து இருக்கைக்காரர் அந்த செய்தித்தாளை ஆர்வமாக வாங்கி,அதிலிருந்த அந்த வார ராசிபலனில் தன் ராசியை தேடிப் படிக்கஅதை கவனிக்காமல் பொருமிக் கொண்டிருந்தார் அம்மையப்பா. "ஒரு சளி காச்சலுன்னு படுத்தது கிடையாது. நோயாளியாம். கேசு போடப் போறேன் இவனுங்க மேல!"
அந்த வயதிலும் அசாத்தியமான ஆரோக்கியம் கொண்டவர் அம்மையப்பா. யோகா ஆசிரியராக இருந்தார்.கடும் உழைப்பாளி. எளிய உணவுப்பழக்கங்கள். எப்போதும் எதையாவது செய்து கொண்டேயிருப்பார். எதிர்ப்படுபவர்களுக்குத்தர, அவரிடம் எப்போதும் சில துண்டுப் பிரசுரங்கள் இருக்கும். இரத்தினகிரி முருகன் கோயிலில் காந்தி ஜெயந்தி அன்று அன்னதானம், வள்ளலார் சங்கக் கூட்டம் ,ஜப்பானிய தண்ணீர் வைத்திய என்று ஏதேனும் ஒன்று . சில நாட்களுக்குப் பிறகு கையில் ஒரு சிறிய கம்புடன் வரத் தொடங்கினார்.. அதற்கு அவர் சொன்ன காரணம் விசித்திரமானது. ஜீவகாருண்யக் கொள்கை மீதுள்ள பற்றால் கையில் கம்பை எடுத்திருந்தார்.
"தெருநாய்ங்க மேல கல்லை வீசுறாங்க.கம்ப ஓங்கினாலே அது ஓடீடும். அடுத்தவங்க அடிக்கிறதுக்குள்ள நாமளே விரட்டி விட்டுடலாம் பாருங்க" என்பார். எனக்கென்னவோ, கல்வீசுபவர்களை விரட்டத்தான் கம்பு வைத்திருக்கிறார் என்று தோன்றும். நான் முதுகலை மாணவனாயிருந்த போது, கவிஞர். சே.சேவற்கொடியோன் தலைமையில் வ.உ.சி. பற்றிய ஒரு பட்டிமண்டபம். வ.உ.சிக்கு பெரிதும் பெருமை சேர்ப்பது தேசத் தொண்டா, தமிழ்த்தொண்டா என்று தலைப்பு. நான் தமிழ்த்தொண்டு என்ற அணியில் வாதிட்டுக் கொண்டிருந்தேன். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்கள் திருவள்ளுவரால் எழுதப்பட்டதல்ல என்ற வ.உ.சி.யின் ஆய்வை ஒரு தகவலாகச் சொன்னதும் சரேலென எழுந்தார் அம்மையப்பா. "அதுக்கு என்ன காரணம் சொல்றாருங்க?" என்று மடக்கினார். நல்லவேளையாக அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்திருந்தேன். வ.உ.சி.யின் கட்சியை விளக்கியதும் சமாதானமாகி அமர்ந்துவிட்டார்.
நாஞ்சில்நாடனாலும், என்னாலும், இன்னும் பலராலும் மாணிக்கண்ணன் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் கோவை ஏஜென்சீஸ் திரு.மு.மாணிக்கம். சாலமன் பாப்பையா அவர்களை நடுவராக்கி கோவை பகுதிகளில் முதன்முதலாக பட்டிமண்டபங்கள் நடத்தியவர். மிகவும் சுவாரசியமான பிரியமான மனிதர். அவர் மகன் திருமண வரவேற்பில் வந்த பெருங்கூட்டம் உணவுக்கூடம் நோக்கி நகர்ந்திருந்த பொழுதில் வேகவேகமாய் மணமக்களை நோக்கி வந்தார் அம்மையப்பா. தன் மடியிலிருந்து திருநீற்றுப்பையை எடுத்து இருவருக்கும் பூசினார். இயல்பாக நின்றிருந்த இளம் தம்பதிகளுக்கு என்ன நடக்கிறதென்று புரியும் முன்னே,தன் பாதங்களைக் காட்டி விழுந்து வணங்குமாறு சைகை செய்தார். அவர்கள் விழுந்து எழும்முன்னே விலகி வந்துவிட்டார்.
சிறிது காலத்திற்குப் பிறகு, ராம்நகர் பகுதிகளில் ஒட்டியிருந்த கறுப்புச் சுவரொட்டிகளில் அதே நிலைகுத்திய பார்வையுடன் இருந்த ஆண்மையரசு அம்மையப்பாவிற்கு அஞ்சலி வாசகங்கள் காணப்பட்டன. விபத்தொன்றில் இடுப்பெலும்பு முறிந்து அதே அரசு மருத்துவமனையில் கிடந்து மறைந்தார் என்று பின்னர் கேள்விப்பட்டேன். முன்வரிசை பற்றிய அச்சங்கள் பல பேச்சாளர்களுக்கு எழுவதில்லை இப்போதெல்லாம்!!
6 comments:
anna very nice lucid narration
இவர் போன்றவர்களை இனி எப்போது சந்திக்கப்போகிறோம்,..
நன்றி பகிர்வுக்கு
makes me pruod to be an coimbatorian sir....because of u too....
இதை நீங்கள்தான் எழுதினீரா அல்லது உங்கள் பேனாவின் அராஜகமா? அந்த பேனாவுக்கு நகைச்சுவை தெரியும் என்பதற்காக இப்படி போய் சேர்ந்த முதியவரை தரம் தாழ்த்துவது போல் சித்தரிப்பது வேதனை தருகிறது. ரசிகர்கள் ரசிப்பத்தோடு நில்லாமல் தேவைப்படும் போது இடித்துறைக்கவும் தயங்கக்கூடாது.
நன்றி r1351
அவருடைய ஆளுமைகளே சித்தரிக்கப்பட்டுள்ளன.அவர் தரம் தாழும் விதமாய் சித்தரிக்கப்பட்டதாய் எனக்குத் தோன்றவில்லை.இருப்பினும் உரிமையுடன் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..
சார்!நீங்க சொன்ன மாதிரி,அந்த பெரியவரோட பெருமைகள்தான் தெரிய வருது.அவமதிப்பா எதுவுமில்லை.ரசித்தேன் சார்..
Post a Comment