Monday, July 26, 2010
மரங்கள் - சில குறிப்புகள்
எழுதப் படாத என் கவிதையை ரசித்து
தூரத்து மரங்கள் தலையசைத்தன.
தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக்
கட்டுப்படுகிற குழந்தைகள் போல
ஒரே சீராகக் கிளைகள அசைந்தன.
பசிய மரங்களின் பேச்சுக் குரலாய்
சலசலத்தன தளிர்களும் இலைகளும்.
நொடிக்கொரு தடவை நிமிர்வதும் வளைவதும்
அடிமண்ணுக்குள்ஆழப்பதிவதும்
செடியாய் இருக்கும் வரைக்கும்மட்டுமே.
வேர்கள் பரப்பிய மரங்களுக்கிங்கே
வேலைகள் பெரிதாய் எதுவுமில்லை.
நிழலுக்கொதுங்கி நிற்பவர் மீது
அக்கறை அலட்சியம் இரண்டுமில்லை.
போதி மரங்களை, புளிய மரங்களை,
வேப்ப மரங்களை, அரச மரங்களை,
மனிதர்களெல்லாம் வணங்க வந்தாலும்
வரந்தரும் கர்வம் மரங்களுக்கில்லை.
கோபமும் காமமும் மரங்களுக்குண்டு.
வெய்யிற் சூட்டின் வேதனைத் தகிப்பைப்
பிடிவாதத்துடன் பொறுத்து நிற்கும்.
முகில்கள் பதறி மழையாய் வருகையில்
மரங்களின் அழுகை மெளனமாய் நிகழும்.
கையறு நிலையின் கவிதையைப் போல
இலையுதிர் காலத்தில் இருக்கிற மரங்கள்
வயசுப்பெண்ணின் வசீகரக் கனவாய்
தளதளவென்று தளும்பி நிற்கும்.
மரங்களின் மெளனம் மகத்துவம் வாய்ந்தது.
கெளதம புத்தரும், நம்மாழ்வாரும்
மெளனம் வாங்கவே மரத்தடி வந்தனர்.
மரநிழலில் அமர்ந்து ஊர்க்கதை பேசும்
மனிதர்கள் பெறுவது, பறவையின் எச்சம்.
அடர்ந்த மரங்கள் பறவைக் கூட்டத்தின்
அடுக்கு மாடிக் குடியிருப்புகள்.
பறவைகள் வசிக்கக் கிளை தரும் மரங்கள்
வாடகை யாகப் பாடல்கள் வாங்கும்.
தூங்கு மூஞ்சி மரங்களை எழுப்பினால் - அதன்
கனவுகள் பற்றியும் கவிதைகள் கிடைக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
கச்சிதமான கவியழகுக்கு நிச்சயம் தரலாம் நுற்றுக்கு நுறு...
மிக்க நன்றி நிலாமகள்
தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக்
கட்டுப்படுகிற குழந்தைகள் போல
அழகான மரங்கள்....
Post a Comment