நெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை
ஒற்றியெடுக்கிற கைக்குட்டைகளாய்
வேற்று முகமின்றி... எதிர்ப்படும் எவரையும்
பற்றிக்க கொள்கிற பிஞ்சுவிரல்களாய்
உயிரில் உறைந்த உண்மைகளெல்லாம்
உருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய்
பரிவு வறண்ட பாலைவனத்திடைப்
பயணம் மேற்கொள்ளும் பிள்ளையின் தாகமாய்...
எனது கவிதைகள்!
கரைகளைக் கடந்து, கனிவின் பரப்பில்
நடையிடத் துடிக்கும் நதியின் புலம்பலாய்
குமுறும் அன்பை, கமண்டலத்துக்குள்
அடக்க நேர்கிற அகத்திய அவஸ்தையாய்,
அலைகள் தினமும் அறைந்து போனதில்
கரைந்து கிடக்கிற கடற்கரை மணலாய்
கல்லடிபட்ட குளத்திடமிருந்து
கிளம்பிவருகிற கண்ணீர் வளையமாய்...
எனது கவிதைகள்!
அகமனதுக்குள் ஆழப்புதைந்த
விதையிடமிருந்து வெளிவரும் துளிர்களாய்
நடந்து கொண்டிருக்கும் நாடகக் காட்சியில்
புரிந்தும் புரியாதிருக்கும் புதிர்களாய்
திரைகள் விலகிய தரிசனத் தெளிவில்
தெறித்துக் கிளம்பிய ஞானப் பரல்களாய்
பிரஞ்ச ரகசியம் தேடிக் கிளம்பிய
பாதையில் ஒலிக்கும் புதிய குரல்களாய்...
எனது கவிதைகள்!
பசியா? தூக்கமா? சரியாயெதுவும்
புரியாதிருக்கிற குழந்தையின் அழுகையாய்
மற்ற குயில்கலிள் மயங்கித் துயில்கையில்
ஒற்றைக் குயிலின் கீதக் கதறலாய்
சூரியக் கதிர்கள் சுட்டதில் கரைந்து
புல்லின் வேர்வரை போகிற பனியாய்
மழையின் தீண்டலில் மணக்கிற பூமியாய்
தன்னை பிழிகிற பன்னீர் மலர்களாய்
எனது கவிதைகள்!
1 comment:
sir i just love words
Akathiya Avasthai and geethak kadharal....
Amazing
Post a Comment