Monday, December 31, 2012

இறைவன் விரும்பினால்...



என்முன் வருகிற காலங்களை
இன்னும் திடமாய் எதிர்கொள்வேன்
பொன்னினும் விலைமிகு பொருளென்றே
பொழுதுகள் தம்மை மதித்திருப்பேன்
இன்னமும் செய்ய ஏராளம்
என்பதை உணர்ந்தே உழைத்திருப்பேன்
இன்னொரு மனிதரை எண்ணாமல்
என்னை நானே ஜெயித்திருப்பேன்

எவர்க்கும் தந்தது போலேநான்
எனக்கும் நேரம் ஒதுக்கிடுவேன்
கவிதைக் கணங்களை சேகரித்து
கருவூலத்தில் காத்திடுவேன்
தவங்கள் முயல்கையில் வாழ்விங்கே
தளிர்க்கும் என்பதை உணர்ந்திடுவேன்
தவறுகள் செய்தால் பதறாமல்
தாண்டி வரவே முயன்றிடுவேன்

உள்ளம் பதறும் போதெல்லாம்
உயிர்ப்பூ வாடும் என்றுணர்வேன்
வெள்ளம் போலே உணர்வெழுந்தால்
வேகத் தடுப்புகள் எழுப்பிடுவேன்
கள்ளம் இன்றிப் புன்னகைப்பேன்
கபடுகள் இன்றிப் பேசிடுவேன்
அள்ளிக் கொடுக்கா விட்டாலும்
ஆன வரையில் கொடுத்திடுவேன்

எல்லோரிடத்திலும் குறையுண்டு
என்பதை உணர்ந்தே வாழ்ந்திடுவேன்
சொல்லால் செயலால் முடிந்தவரை
சிரமங்கள் நீக்க முனைந்திடுவேன்
இல்லாத ஒன்றுக் கேங்காமல்
இருப்பவை எதையும் இழக்காமல்
எல்லாம் அறிந்ததாய் எண்ணாமல்
என்னைப் பொறுப்பாய் இயக்கிடுவேன்

ஆற்றல்,திறமை எல்லாமே
ஆண்டவன் தந்தது என்றறிவேன்
காற்று வீசும் பொழுதறிந்து
கைவசம் உள்ளவை விதைத்திருப்பேன்
நேற்றின் தவறுகள் தொடராமல்
நேசத்தின் தீபம் அணையாமல்
மாற்றங்கள் நிகழ்வதை மதித்திருப்பேன்
மகிழ்ச்சிகள் மலர்த்த முனைந்திருப்பேன்





Saturday, December 29, 2012

சூர்ய குண்டம்

          
சூர்ய குண்டம் சூர்ய குண்டம்
சூர்ய குண்டம் சூர்ய குண்டம்


கங்கையுடன் காவிரியும் சங்கமமாய் பொங்கும்

எங்குமுள்ள தீர்த்தங்களும் இங்குவந்து தங்கும்

வானமழை வந்துவந்து தேனமுதம் சிந்தும்

ஞானியெங்கள் சத்குருவும் தந்தருளும் குண்டம்


சூர்ய குண்டம் சூர்ய குண்டம்
சூர்ய குண்டம் சூர்ய குண்டம்



மூழ்கவரும் யாவருக்கும் நன்மைதரும் லிங்கம்

பாதரசம் சக்திதரும் தூயரச லிங்கம்

ஏழுலகும் காணவரும் காட்சியிந்த குண்டம்

தீர்த்தமென்னும் அற்புதத்தின் சாட்சிசூர்ய குண்டம்



சூர்ய குண்டம் சூர்ய குண்டம்

சூர்ய குண்டம் சூர்ய குண்டம்



தத்ததிமி தோம்திதிமி தாளமிடும் வண்ணம்

சக்திமிகும் தாண்டவமாய் சலசலக்கும் குண்டம்

நித்தம்நித்தம் தேடிவந்து நாமிறங்கும் குண்டம்

தேகநலம் ஞானநலம் தந்தருளும் குண்டம்


சூர்ய குண்டம் சூர்ய குண்டம்
சூர்ய குண்டம் சூர்ய குண்டம்



ஞானவாசல் திறந்துவைக்கும் தியானலிங்கம் இங்கே

தியானவிதை முளைக்கவைக்கும் தீர்த்தகுண்டம் இங்கே

ஊனுடம்பின் உள்ளிருக்கும் தேன்துளியைத் தொடலாம்

ஆனவினை தீர்ந்திடவே யாருமிங்கு வரலாம்

Thursday, December 27, 2012

ஆருத்ரா நடனம்


ஆடும் திருவடி தெரிகிறது
ஆனந்தம் அலைபோல் எழுகிறது
பாடும் திருமுறை ஒலிக்கிறது
பரமனின் திருவருள் இனிக்கிறது

ராவணன் தோள்களில் பதிந்தபதம்
ஜாமத்தில் சுடலையில் உலவும் பதம்
ஆரூர் வீதியில் நடந்த பதம்
ஆடிய பாதமே சாசுவதம்

தீயென எழுந்தது திருமேனி
தாமரைப் பதந்தனில் இவன்தேனீ
தாயென்றும் வருவான் சிவஞானி
தாண்டவ ஜதிசொல்லு மனமேநீ

காலனை உதைத்தது சிவபதமே
காசியில் நடந்ததும் சிவபதமே
மூலமும் முடிவும் சிவபதமே
முக்தி தருவதும் சிவபதமே

முனைவர் குடவாயில் பாலசுப்பிர​மணியன் உரை

என்னுடைய 50ஆவது நூலாகிய திருக்கடவூர் பற்றி தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவராகிய முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்அவர்கள் நிகழ்த்திய திறனாய்வுரையினை இக்காணொளியில் காணலாம்.இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர் தஞ்சை செழியன் அவர்களுக்கு நன்றி.

http://www.youtube.com/watch?v=5M1kn-mpTdw

Wednesday, December 26, 2012

சத்குரு கருத்தோட்டத்தில் இந்தத் தமிழோட்டம்

                   

(சத்குரு தந்த கருத்தோட்டத்தின் அடிப்படையில் சூர்ய குண்டம் பிரதிஷ்டைக்காக எழுதிய பாடல் இது)

பல்லவி

தண்ணீரே தண்ணீரே

பூமியின் உயிரே நீதானே

மண்ணோடும் விண்ணோடும்

ஆள்கிற அழகே நீதானே



தாகம்தீர தாகம்தீர உன்னைக் குடித்தேனே

தீர்த்தமென்று தேடிவந்து உன்னில் குளித்தேனே

மூழ்கி மூழ்கி எழுகிறேன்

மீண்டும் உன்னில் விழுகிறேன்

மடியில் என்னை ஏந்திக் கொள்ளுவாயே

அலைகளாக வந்து துள்ளுவாயே



சரணம்-1

மீன்களின் தாயகம் நீயென்று நினைந்தேன்

எனக்கும் தாய்மடி நீயென்று தெளிந்தேன்

உன்னில் தானே உயிர்வரை நனைந்தேன்

மலராய் இலையாய் உன்மேல் மிதந்தேனே

சரணம்-2

நீயில்லாமல் உயிர்களும் இல்லை

நீயில்லாமல் பூமியும் இல்லை

நீதான் நீதான் வாழ்க்கையின் எல்லை

நீதரும் சுகம்போல் வேறெதும் இல்லை


சரணம்-3
உன்னில் நானும் கலக்கிறேன்

என்னில் நீயும் கலக்க வா

இன்பமாகக் கலந்து போகலாம்

இன்னும் இன்னும் கொண்டாடலாம்
















Monday, December 24, 2012

நாகப்பாம்பே- சத்குரு கவிதை-தமிழில்

(நாகப்பாம்பு பற்றிய சத்குருவின் ஆங்கிலக் கவிதையை வாசித்தேன்.
அதைத் தமிழில் எழுத முயன்றேன்)

பூமியிலே தவழ்ந்து போகும் நாகப்பாம்பே- நீ

புற்றுக்குள்ளே ஒளிந்திருப்பாய் நாகப்பாம்பே

மேனியெங்கும் கோடுகொண்டாய் நாகப்பாம்பே-நீ

நீலநஞ்சை சேர்த்துவைத்தாய் நாகப்பாம்பே



சாம்பசிவன்தலையிலேஏறும் மாயமென்னவோ-அட

நாகப்பாம்பே உனக்கிருக்கும் மேன்மை என்னவோ

உன்னிடத்தில் உள்ள்ள ஏதோ தன்மையைக் கண்டே-அட

பொன்னுடலில் ஆடிவர பரமன் அழைத்தான்

ஆபரணம் ஆக உன்னை அய்யன் அணிந்தான் -நீ

ஆசையுடன் அவன்தலைமேல் ஏறியமர்ந்தாய்



ஊர்ந்துபோகும் சின்னஞ்சிறு ஜீவனல்லவா-இந்த

உயர்ந்தநிலை அடைந்ததென்ன? சொல்ல நீயும்வா

சொல்லிவிடு சொல்லிவிடு நாகப்பாம்பே-அந்த

ஒன்றைமட்டும் சொல்லிவிடு நாகப்பாம்பே



ஈசனவன் நேசத்தினை எப்படிப் பெற்றாய்-நீ

என்ன என்ன குணங்களினால் இந்நிலை உற்றாய்

நீயுமந்த ரகசியங்கள் சொல்லிக் கொடுத்தால்

நானும்,அந்த ஈசனவன் அன்பைப் பெறுவேன்



ஆபரணமாய் சிவனும் என்னை அணிய வேண்டாம்-அவன்

பாதத்திலோர் தூசெனவே வாழ்ந்து கிடப்பேன்

மார்க்கமொன்று சொல்லிவிடு நாகப்பாம்பே-நீ

கேட்டதெல்லாம் ஆசையுடன் நானும் கொடுப்பேன்



Friday, December 21, 2012

நாகதோஷம் என்றால் என்ன? சத்குரு புதிய விளக்கம்

             

சூர்ய குண்டம் பிரதிஷ்டையின்போது பாம்பு பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு விளக்கமளித்தார்.அப்போது நாகதோஷம் என்றால் என்ன என்றொரு கேள்வியை தியான அன்பர் ஒருவர் கேட்டார். அதற்கு மிகவும் புதிய பரிமாணம் ஒன்றில் சத்குரு வழங்கிய விளக்கம் அனைவரையும் வியப்பிலாழ்த்தியது.

"நாகதோஷம் என்பதன் வேறொரு பரிமாணத்தைப் பார்த்தால்,அது பாம்போடு தொடர்பு கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை.உங்கள் மூளையின் சிறுபகுதி ஒன்று உங்களை சில எல்லைகளை வகுக்கச் செய்கிறது.அது வாழ்க்கை பற்றிய சில எச்சரிக்கைகளை உங்களுக்கு வழங்குகிறது.சில அச்சங்களை ஏற்படுத்துகிறது.மூளையின் உட்பகுதி ஒன்று இந்தவிதமாக செயல்படுகிறது.பலர் அந்த எல்லைகளுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள்.இந்த உலகில் பெரும்பாலானவர்கள் விடுதலையை நோக்கி நடையிடுவதில்லை. தொடர்ந்து தங்களை எதனோடாவது அல்லது யாருடனாவது பிணைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்.உங்களை ஏதேனும் ஓர் எல்லைக்குள் உங்கள் எண்ணங்கள் தொடர்ந்து
பிணைத்துக் கொண்டேயிருந்தால் அது மிகவும் மோசமான நாகதோஷம்.

நாய் தான் வசிக்கும் பகுதியைச் சுற்றி ஆங்காங்கே சிறுநீர் கழித்துக் கொண்டே போகிறது.அதற்கு சிறுநீர் கழிக்கும் வியாதியில்லை .தன் எல்லையை நிர்ணயிக்கிறது. அதுபோல் எதற்குள்ளாவது யாராவது சிக்கிக்
போவது மிகவும் மோசமான நாகதோஷம்.மூளையின் வெளிப்பகுதி,விடுதலை நோக்கி உங்களை உந்துகிறது.அதுதான் தேடலை பலப்படுத்துகிறது.இயற்கையுடன் உங்களை இயைந்து வாழச் செய்கிறது.
அதை நோக்கிப் போவதே விடுதலை.

உங்களைப் பிணைக்கிற நகதோஷத்திலிருந்து எப்படி விடுபடுவது என்றும் யோகமரபில் சொல்லப்பட்டிருக்கிறது.சுருண்டு படுத்திருக்கும் பாம்பு நகர்ந்து தன் எல்லையை விட்டு எழுவதே விடுபடுகிற வழி.அதுபோல் உங்கள் சக்திநிலை ஓர் எல்லைக்குள் இல்லாமல் எழத்தொடங்குமேயானால்மனிதப்பிறவி என்ற எல்லையையும் தாண்டி உங்களால் நகர முடியும்.இந்த நாகதோஷத்தைத் தாண்ட இதுதான் சரியான பாதை.

மற்றபடி உலகியல் நிலையில் நாகதோஷம் என்றால் அதற்கு வேறு சில அறிகுறிகள் உண்டு.சில நாட்பட்ட நோய்கள் எந்தவிதமான சிகிச்சைக்கும் குணமாகாமல் பலன் தராமல் தொடர்ந்தால் அது நாகதோஷம். எல்லோருக்கும் பொதுமைப்படுத்திச் சொல்ல முடியதென்றாலும் சிறுநீர்த்தடத்தில் ஏற்படக்கூடிய சில தொற்று நோய்கள் நாகதோஷத்தால் வருபவை.சில வகையான சரும நோய்கள் நாகதோஷத்தால் வருபவை.சிலருக்கு தோல் செதில்செதிலாக உரியும். இது நாகதோஷத்தின்
அடையாளம்.சிலருக்கும் எலும்புகள் இறுகி உடம்பே பாறைபோல் ஆகும்.இதற்கு மருத்துவத்தில் எந்த மருந்தும் இல்லை. ஆனால் ஈஷாவுக்கு வந்த ஒருவர் இங்கேயே தங்கி பல ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு முழுமையாக குணமடைந்தார். எலும்பு இப்படி இறுகிப் போவதும் நாகதோஷத்தின் விளைவுதான்.சில நாகதோஷங்கள் உளவியல் சார்ந்த கோளாறுகளாக வெளிப்படும்

நாகதோஷத்தால் ஏற்படக்கூடிய நோய்கள் எவ்வளவுதான் மருத்துவம் செய்தாலும் குணமாகாமலேயேஇருந்து கொண்டிருக்கும்.ஆனால் குறிப்பிட்ட சக்திநிலையில் இருக்கும் சில கோவில்களுக்குப் போனாலே
இது குணமாகும்.சில அர்ப்பணங்களை செய்தாலே சரியாகிவிடும்.அத்தகைய தன்மைகள் கொண்டஆலயங்கள் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியவில் நிறைய உள்ளன" என்றார் சத்குரு.

Wednesday, December 19, 2012

உலகம் அழிகையில் சிவனென்ன செய்வார்?


அழித்தலுக்கான கடவுளென்று சிவனைச் சொல்வார்கள்.அவன் ஆடுமிடம்
சுடுகாடென்பார்கள்.அவனுக்கு தாய்தந்தை இருந்திருந்தால் இப்படி மயானத்தில் ஆட விட்டிருப்பார்களா என்று பாடியவர்கள்சிவனடியார்கள்.

அடியவர்களிலேயே சிவனுக்கு அம்மா முறை கொண்டாடியவர்
காரைக்கால் அம்மையார்.கொண்டாடியவர் அவர் மட்டுமல்ல.
சிவனும்தான். பேய்வடிவெடுத்து காரைக்கால் அம்மையார் கயிலாயம்
செல்லும்போது பார்வதி இவர் யாரென்று கேட்க,"வருமிவள் நம்மைப்பேணும் அம்மை காண்"என்றாராம் சிவபெருமான்.
பார்வதிக்கு மாமியாரைத் தெரியாத போதும் காரைக்காலம்மையாருக்கு
மருமகளைத் தெரிந்தே இருக்கிறது. "நீதான் சுடுகாட்டில் ஆடிப் பழகி விட்டாய்.அவள் சின்னப்பெண்.அவளையும் உன் இடப்பாகத்தில்
வைத்துக் கொண்டு சுடுகாட்டுக்குப் போய்விடாதே.பாவம் பயந்துவிடப்போகிறாள்"என்று பாடியவர் அவர்.

"குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்(து)
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு."

ஆனால் தன் பிள்ளை மயானத்தில் கையில் நெருப்பை ஏந்தியாடும்
அழகை அவர் ரசிக்காமல் இல்லை.கையில் அனலேந்தியதால் சிவனின்
உள்ளங்கை சிவந்ததா,அல்லது சிவனின் உள்ளங்கையைத் தீண்டியதால்
நெருப்பு சிவப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கு.

சிவனிருக்கும் மயானங்கள் என்று ஐந்து மயானங்களைக் குறிப்பாக சொல்வார்கள்.காழி மயானம்,கடவூர் மயானம்,காசி மயானம், கச்சி மயானம்,நாலூர் மயானம் ஆகியவை அவை,மயானம் என்றால் சுடுகாடு என்று மட்டும் பொருளல்ல. மய-அயனம் என்றால் படைப்புத் தொழில் இடையறாமல் நடந்து கொண்டிருக்கும் இடம் என்று பொருள்.குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பிரம்மாவும்இறக்கிறார் என்று சொல்வதன் பொருளே, இறப்பு என்றால் என்ன என்று பிரம்மாவுக்குத் தெரிந்தால்தான் அவரால் படைக்க முடியும் என்பதுதான்.கடவூர் மயானம் பிரம்ம சம்ஹாரத் தலம் என்று சொல்லஇதுதான் காரணம்.


ஞானிகள் ஞானோதயம் அடைந்ததே மரணம் குறித்து தீவிரமாக
சிந்தித்த போதும் அதை தியானமாக மேற்கொண்ட போதும்தான்.
இதெல்லாம் இருக்கட்டும். உலகம் அழிகையில் சிவனென்ன செய்வார்
என்பதல்லவா கேள்வி?இதற்கான விடை தெரிய வேண்டுமென்றால்நாம் மாணிக்கவாசகர் காலத்துக்குப் போக வேண்டும்.


திருவாசக ஏடுகளை மாணிக்கவாசகர் தில்லையில் பொன்னம்பலப்
படிக்கட்டுகளில் வைக்க அதை சிவபெருமான் தன் கைப்பட ஏட்டுச்சுவடிகளில் எழுதிக் கொண்டாராம்.அதை எழுதியது தான்தான் என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக "திருச்சிற்றம்பலமுடையான் கைசார்த்து" என்று கையொப்பமும் இட்டாராம்.முதன்முதலில் தமிழில் கையெழுத்து போட்ட கடவுள் சிவன்தான்.

ஏன் திருவாசகத்தை சிவபெருமான் நகலெடுத்துக் கொண்டார் என்பதற்கு பல நூறாண்டுகள் கழித்து மனோன்மணியம் எழுதிய  சுந்தரம் பிள்ளை ஒரு விளக்கம் கொடுத்தார். பிரளய காலம் முடிந்து பிரபஞ்சம் முற்றாக அழிந்து வேறொரு பிரபஞ்சம் வடிவெடுக்க வேண்டும். அதுவரை சிவனுக்கு வேலையில்லை.தனியாகத்தான் இருப்பார்.அந்தத் தனிமையைப் போக்கிக் கொள்ளதிருவாசகம் படிக்கலாம் என்று முன்னரே ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டாராம்.

"கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்தே
உடையார் உன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே"
என்கிறார் சுந்தரம் பிள்ளை.முன்யோசனைக்காரர்தான் சிவபெருமான்.











































சிpp



சிவன்

Saturday, December 15, 2012

துப்பாக்கி எப்போது பூப்பூப்பது



என் பால்ய நண்பன் அருண் அமெரிக்காவின் காதலன்.அவன் பாஸ்டனில் இருந்த நாட்களில் அவனுடன்காரில் டி.எம்.எஸ் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நயாகரா சென்றபோது அவன் சொன்னது இன்றும்
நினைவிருக்கிறது." America is an Idea".மனித சமூகம் ஒவ்வொன்றுமே தன் இலட்சிய வாழ்முறையை வடித்தளிக்க முற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.அப்போது தனக்கிருக்கும் அமெரிக்கக் காதலையும் மீறி அருண் கவலைப்பட்ட விஷயம் தனிமனிதர்களும் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடிய உரிமை. அநேகமாக அந்த சட்டம் 2005ல்தான் முன்வரைவு கண்டதாக ஞாபகம்.

யாரேனும் அந்நியர் தன் வீட்டுக் கதவைத் தட்டினல்,அது தன் பாதுகாப்புக்கு பாதிப்பென்று வீட்டிலிருப்பவர் கருதினால் கூட சுட்டுவிட முடியுமே என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.அவன் காரில் ஜிபிஎஸ் வழிகாட்டத் தடுமாறிய போது யாரிடமவது வழிகேட்கக் கூட அவன்யோசித்தான். ஒருவரிடம் சென்று வழிகேட்பது கூட அவரின் அந்தரங்கத்துக்குக் குந்தகம் என்பதாக எண்ணுபவர்களின் தேசமது.

துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் உண்டென்னும் விதமாய் அறிவிக்கப்பட்டதில்வந்த ஆபத்துகளில் ஒன்று சாண்டி ஹுக் தொடக்கப்பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கி சூடும் அந்த சம்பவத்தில் இருபது குழந்தைகள் உட்பட இருபத்தேழு பேர்கள் இறந்ததும் ஆகும்.


நம்மூரில் ஒரு தனியார் பள்ளிக்குள் கூட தொடர்பில்லாதவர்கள் நுழைந்துவிட முடியாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாயிருக்க,தன் அன்னையை வீட்டிலேயே கொன்றுவிடு அன்னை பணிசெய்த பள்ளிக்குள் புகுந்து பிஞ்சுகளையும் பெரியவர்களையும் பதம் பார்த்திருக்கிறான் அதானி லான்ஸா. அதே நாளில் சீனவிலும் ஒரு தொடக்கப்பள்ளி அருகே ஒருவன் கத்தியுடன் இருபத்தெட்டு குழந்தைகளைத் தாக்க முற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது,அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.நல்லவேளையாக சீனாவில் நிகழ்ந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஒன்றுமில்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த சம்பவத்துக்கான காரணம் என்று நாம் ஒன்றை யூகிக்க முடியும்.அதானி லான்ஸாவின் அன்னை அந்தப் பள்ளியில் பணிபுரிந்தவர் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடன் நேரம் செலவிடாத அன்னையையும் அதற்குக் காரணமான பள்ளிப் பிள்ளைகளையும் மனநோய் முற்றிக் கொன்றிருக்கக் கூடும் என்பது மேலோட்டமான யூகம் மட்டுமே.
விக்கி ஸாட்டோ


பள்ளிப் பிள்ளைகளைக் காக்க தன்னையே கவசமாக்கி கொடூரனின் துப்பாக்கி முன்னர் பாய்ந்து உயிர்நீத்த விக்கி ஸாட்டோ என்னும் வீராங்கனை நம் வணக்கத்துக்க்குரியவர்."துப்பாக்கி எப்போது
பூப்பூப்பது"என்பது கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்றின் தலைப்பு. எல்லோரும் துப்பாக்கிவைத்திருப்பது மனித உரிமையின் அடையாளமா,உயிர்வாழும் உரிமைக்கான அச்சுறுத்தலா என்பதை
அமெரிக்கா முடிவு செய்ய வேண்டிய நேரமிது.

Wednesday, December 12, 2012

12.12.12.மதியம் 12 மணிக்கு சத்குருவுடன்...!!


ராதே பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு சத்குரு வருவாரா என்கிற கேள்வி எல்லோருக்கும் உண்டு. ஊரிலிருந்தால் வருவார் என்ற பதில் வரும், "ஊரிலிருக்கிறாரா?"என்ற அடுத்த கேள்வி எழும். அவரையே நேரில் பார்த்து அழைப்பிதழ் தந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் சத்குருவை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். தோம் என்றால் திரு.கிருஷ்ணனும் நானும். புதன்கிழமை மதியம் 12.00 மணிக்கு சத்குருவை நீங்கள் சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. புதன்கிழமை 12.12.12 என்பது நினைவுக்கு வந்தபின்தான் மதியம் 12.00 மணி என்பதன் பொருத்தமும் புத்தியைத் தொட்டது.

மதியம் 11.55க்கெல்லாம் அவர்முன் அழைத்துச் செல்லப்பட்டோம். பணிந்தெழுந்ததும் தோள்களைத் தட்டி "என்ன முத்தையா நல்லாருக்கீங்களா" என்ற வாஞ்சையான -வழக்கமான வரவேற்பை வழங்கினார். என்னெதிரே தரையில் அமர எத்தனித்த திரு.கிருஷ்ணனிடம் "கீழே உட்கார முடியுமா? நாற்காலி வேணுமா?" என்று சத்குரு விசாரிக்க பதறிப்போய் என்னைப் பார்த்தார் கிருஷ்ணன். "நான் சொல்லவில்லை" என்பதாகத் தலையசைத்தேன். விஷயம் இதுதான். கடந்த சிவராத்திரிக்கு முன் யக்‌ஷா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வந்திருந்த கிருஷ்ணன் நெடுநேரம் தரையில் அமர்ந்திருந்ததில் முதுகுவலி வந்ததாய் என்னிடம் சொல்லியிருந்தார்.

ராதே ஜக்கி

ராதே நாட்டிய நிகழ்ச்சி அழைப்பிதழைக் கைகளில் வாங்கியவர் கிருஷ்ணனிடம் நலம் விசாரித்தார். ஞாயிறு தோறும் சந்திப்போம் நல்லதையே சிந்திப்போம் என்ற தலைப்பில் வாராவாரம் கோவையில் கிருஷ்ணன் நிகழ்ச்சிகள் நடத்திவருவதைச் சொன்னதும் சத்குருவிடம் ஒரு மலர்ச்சி."சங்கீதம், நாட்டியம் மாதிரியான விஷயங்களை ரசிக்க மக்களை பழக்கியே இருக்கணும். அவங்களுக்கு  பிடிச்சுட்டா விடமாட்டாங்க.இருபது வருஷம் முன்னால மஹாசிவராத்திரிக்கு நான் சாஸ்திரிய சங்கீதம் வைச்சப்போ எல்லாரும் உக்கார முடியலைன்னு சொன்னாங்க. இப்போ யாருக்குமே எழுந்து போக முடியலை.பழகீட்டா விடமாட்டாங்க.இல்லேன்னா ஒரே பொழுதுபோக்கு டீவி தான்னு ஆயிடும்"என்றார் சத்குரு.



"அரசாங்கம் ஒரு சட்டம் பண்ணிக்கணும். காலையில ஒன்பதிலேயிருந்து சாயங்காலம் ஆறு மணிவரைக்கும் எந்த சேனல்லேயும் எதுவும் வரக்கூடாது. அப்போ எல்லாம் போய் வேலை பண்ணிக்கணும்தானே!" என்றவர், "முன்னே எல்லாம் தமிழ்நாட்டில என்ன பிரமாதமான விஷயம்னா காலையில ஆறு மணிக்கே எழுந்து வயலுக்கு உற்சாகமா வேலைக்குப் போனாங்க. இப்போ வேலை பார்க்கணும்ங்கிற எண்ணமே போயிடுச்சு.ஒரு தேசத்தில வேலை பார்க்கிற எண்ணம் குறைஞ்சா ரொம்ப சிக்கலாயிடும். அவங்க பழக்கத்தை மறந்துட்டாங்க. அவங்க சாப்பாட்டை மறந்து ஏதேதோ சாப்பிட்டுக்கறாங்க" என்றார் சத்குரு.

"கிராமிய உணவுகள் பலதும் இப்போ வழக்கிலேயே இல்லை என்ற கிருஷ்ணன்,தங்கள் இனிப்பகத்தில் அதிரசத்திற்காக பாரம்பரிய குடும்பங்கள் சிலவற்றமமர்த்தியிருப்பதாகவும் அவர்கள் பகுதிநேரமாக வேலை பார்க்கிறார்கள். பணத்தைப் பெரிதாக நினைப்பதில்லை.அதனால் அதிரசத்தின் அடிப்படை சுவை மாறுவதில்லை"என்றார். "என்ன பண்ணினாலும் ஈடுபாடா பண்ணினாதான்  நல்லாயிருக்கும்.இன்னைக்கு மனிதர்கள் காலையில எழுந்து வேலைக்கு போய்வர்றதே ஒரு போராட்டமா இருக்கு"என்றார்.

விழா ஏற்பாடுகள் பற்றி பேச்சு திரும்பியது. "குறித்த நேரத்தில் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். மாலை மரியாதை போன்றவற்றில் நேரத்தை வீணடிப்பதில்லை' என்றதும் சத்குரு சொன்னார். "சில இடங்களில பார்க்கிறேன். அவங்க கொண்டுவர்ற மாலைகளோட சைஸ் பார்த்தா யானைக்குப் போடலாம் போல இருக்கு. ஒருதடவை என்கிட்டேஅப்படியொரு பெரிய மாலையை தூக்கிட்டு வந்தாங்க.அப்படியே கொண்டு போயிடுங்க இந்த பெரிய மாலையை வாங்கிக்கறது ரொம்ப ஆபாசமா இருக்கும்னு சொல்லீட்டேன்" என்றார் சத்குரு. கடிகாரத்தைப் பார்த்தேன்  அப்போதுதான் மதியம் 12.12ஐ கடந்தது.

வெவ்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு திரும்பியது. கலாச்சாரத்தை மீட்டெடுப்பது பற்றி சத்குரு கொண்டிருக்கும் கவனமும் அதற்கான திட்டங்களும் பேசப்பட்டன. சத்குருவின் சூன்யா குடிலை ஒட்டிய பாதையில்  வைக்கோல் ஏற்றிய மாட்டுவண்டியொன்று அசைந்தசைந்து சென்றது. பண்டைக்கால முனிவரொருவரின் பர்ணசாலையில் அமர்ந்திருக்கும் உணர்வைப் பெற்றேன். விடைபெறும்போது சத்குரு ஆசீர்வதித்துத் தந்த வெண்ணிற மலரொன்றை கண்களில் ஒற்றிக் கொண்டேன்.சுவாசத்தில் கலந்தது அதன் வாசம்.
        
அதுசரி..ராதே நாட்டிய நிகழ்ச்சிக்கு டிசம்பர் 16ல் சத்குரு வருகிறாரா என்றா கேட்கிறீர்கள்? "நான் சொல்ல மாட்டேன்..அதைமட்டும் நான்சொல்ல மாட்டேன்"

Sunday, December 9, 2012

அற்புதர் - 18

அற்புதரின் பிரதேசம் மௌனத்தால் ஆனது. அங்கெழும் அத்தனை ஓசைகளும் மௌனத்தின் மடியில்.



நிகழ்பவை. மண்ணில் மழைத்துளி விழுகிற ஓசையும், புல்லில் பனித்துளி படிகிற ஓசையும் துல்லியமாகக் கேட்கும் விதமாய் அங்கே நிலைகொண்டிருந்தது மௌனம். அற்புதரின் மௌனமோ  சுழலும் வாளின் கூர்மைகொண்டது. நாலாதிசையிலும் சுழலும் அந்த வாளின் முனைபட்டு விம்மி வெடிக்கும் உயிர்களின் வெற்றுக் கவசங்கள் விழுந்தன.

கெட்டிப்பட்ட அழுக்கையே கவசமென்று கருதிய அறியாமை பொடியாகும் ஆனந்த கணங்களை அற்புதர் நிகழ்த்திக் கொண்டேயிருந்தார்.அவருடைய மௌனத்தின் மேற்பரப்பில் முத்துதிர்த்த சொற்களின் சுட்டுவிரல்மௌனம் நோக்கியே நீண்டன."என் சொற்கள் உங்களை ஈர்க்கின்றன. பின் மௌனத்திடம் சேர்க்கின்றன"என்றார் அற்புதர்.

அகல மறுக்கும் அழுக்குக் கவசத்தையும் சற்றே துளைத்து அற்புதர் விதைக்கும் மௌனவிதை, உயிரின் கூச்சலை உற்றுக் கவனிக்கும் விவேகத்தை விளையச் செய்தது.


 தீபத்தைத் தொட்டு விழுகிற விட்டில் பூச்சிகளாய்அந்த மௌனம் தொட்டு விழுந்தன வெற்றரவங்கள். வானின் மடியில் வெளிச்சமும் இருளும் வந்து போவதைப்போலவே, மௌனத்தின் மடியில் சொற்கள், சொந்தங்கள், உறவுகள், உணர்ச்சிகள் வந்துபோவதை அற்புதர் உணர்த்தினார். வந்துசேர்ந்த மௌனத்தின் வெப்பம் தாங்காமல் வினைகள் கருகத்தொடங்கின. உள்ளே உந்தி எழுந்த நெருப்பும் வழியில் கிடந்த மூட்டைகளை வேகவேகமாய் எரிக்க எஞ்சிய சாம்பலும் கண்ணீரின் நதியில் கழுவப்பட்டது.

சுமைகள் குறைந்ததையும் சிறகுகள் விரிந்ததையும்  உணர்ந்த உயிர்ப்பறவை தன் கூடும் வானமும் ஒன்றே என்று கண்டுகொண்டது.முன்னொரு காலத்தில் தான் முட்டி உடைத்த முட்டையின் ஓடுகள் தூள்தூளாகக் கிடப்பதைக் கண்ட பறவை, இவையே தன்னை முன்னொரு காலத்தில் பிணைத்து வைத்திருந்தவை என்பதை உணர்ந்தது. தன்னுள் குடியிருக்கும் மௌனத்துடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே மௌன சாட்சியாய் மாறிப் போன பிறகு வாழ்க்கைப்பாதையின் எந்தப் புழுதியும் அவர்கள் மீது படியவில்லை.

அற்புதர் சொன்னார், "உங்கள் உயிர்களின் புழுதியை மௌனம் கொண்டு கழுவுகிறேன். இனி நீங்களாகச் சென்று புழுதியில் புரண்டாலொழியாழுக்கு உங்களை அண்டாது. உலகில் நீங்கள் முன்புபோல் இயங்கலாம். உலகம் உங்களில் இயங்காது. மௌனத்தின் சமுத்திரம் நான். உங்கள் ஒவ்வொருவருக்கும் தருகிறேன் ஒருதுளி மௌனம். அந்த ஒருதுளி வளர்ந்து வளர்ந்து உள்ளே சமுத்திரமாகும். அலைகளே அலையாத அந்த சமுத்திரம் அமுதமாகும்"





Friday, December 7, 2012

வைகையைப் பாடிய வைரமுத்து

கோவையில் படைப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களுக்குள் பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் ஊஞ்சல் என்னும் அமர்வு ஒவ்வொரு வாரமும் முதல் செவ்வாயன்று நடைபெறும் 20 முதல் 25 பேர்கள் மட்டும் கலந்துரையாடி விருந்துண்டு விடைபெறுவார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விருந்தோம்பலில் இந்நிகழ்ச்சி சில ஆண்டுகளாய் நடைபெறுகிறது.




இவர்களில் தங்கவேல் சரவணன் என்றோர் இளைஞர். மரபாளர்களுக்கே மறந்து போன பழந்தமிழில் திருமுகம் வரைவது தொடங்கி வெண்பா கட்டளைக் கலித்துறை என்று வெளுத்து வாங்குவார். அம்பாசமுத்திரம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரம் அவருடைய சொந்த ஊர். அங்கு கோவில் கொண்டுள்ள உலகம்மை மீது பிரபந்தங்கள் பாடிய நமச்சிவாயக் கவிராயர்தான் அவருடைய ஆதர்சக் கவிஞர். கவிராயரின் பாடல்கள் இவருக்குக் கரதலப் பாடம். தங்கவேல் சரவணன் எழுதும் காதல் கவிதைகள் பெரும்பாலும் வெண்பாக்கள். சொல்விளையாட்டு,  மடக்கு, திரிபு அந்தாதி என்று எழுதித் தள்ளுவார். அவற்றைப் படித்துப் புரிந்து கொண்டு ஒரு பெண்ணுக்கு காதல் தோன்றுவதொன்றும் அத்தனை எளிய காரியமில்லை.

இளஞ்சேரல் ஜான்சுந்தர் ஆகியோர் பொறுப்பில் இப்போது ஊஞ்சல் அசைந்து கொண்டிருக்கிறது. கடந்தவாரம் நிகழ்ந்த அமர்வில் தங்கவேல் சரவணன், தாமிரபரணியை எப்படியெல்லாம் நமச்சிவாயக் கவிராயர் பாடியிருக்கிறார் என்றோர் உரை நிகழ்த்தினார்."அடுத்த பிறவியிலும் நின் நன்னதியையும் சன்னதியையும் சேர வேண்டும்" என்பது போன்ற பிரார்த்தனைகள். "முத்தலை ஆடும் பொருநை" என்று கவிராயர் பாடியதன் அழகை நிறுவ, முத்துப்போன்ற நீர்த்துளிகள் தெறிக்கும் அலை என்பதையும் தாமிரபரணி சங்கமிக்கும் கொற்கையில் கொழிக்கும் முத்துக்களையும் சொல்லி, "முழங்குதிரைப் புனலருவி கழங்கென முத்தாடும்" என்ற குற்றாலக் குறவஞ்சி வரியினையும் ஒப்பிட்டுக் காட்டினார்.

தாமிரபரணி என்பதை அவர் "செம்பாறு" என்னும் நேர்த்தியையும் வியந்து விளக்கிய தங்கவேல் சரவணன் அடுக்கிக் கொண்டே போன வரிகளில் அபரிமிதமான ஆச்சரியங்கள் கொட்டிக் கிடந்தன. உரை முடிந்ததும் தமிழிலக்கியங்களில் ஆறுகள் நதிகள் பற்றிய வர்ணனைகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ந்தது. சங்க இலக்கியங்களில் காணப்படும் "நீர்வழிப் படூஉம் புணை" தொடங்கி சமயத்தமிழ், கம்பன் என்று வளர்ந்து கவிஞர் வைரமுத்துவின் "மதுரை" கவிதைக்கு வந்தது விவாதம்.

வைகை நதி
"மல்லிகை மௌவ்வல் அரவிந்தம்-வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி-இவை
கொள்ளையடித்த வையை நதி
நாளும் ஓடிய நதிமதுரை-நீர்
நாட்டியமாடிய பதிமதுரை"




 என்ற பத்தியை நான் சொன்னதுமே, "ஒரு சந்தேகம்" என்று இடைமறித்தார் அவைநாயகன். சுற்றுச்சூழல் பற்றிய அபாரமான கவிதைகள் எழுதி வருபவர். நீர்நிலைகள், வனங்கள், விலங்குகள், பறவைகள் குறித்தெல்லாம் மிகத்துல்லியமான விபரங்களை விரல்நுனிகளில் வைத்திருப்பவர்.

"சுரபுன்னை" என்பது, பாலைவனத்தில் வளர்கிற தாவரம். "சுரம்" என்ற சொல்லே பாலைவனத்தைக் குறிக்கும். அப்படியிருக்கும்போது வைகையீல் அது எப்படி வந்தது?"என்பது அவைநாயகனின் கேள்வி. புன்னை என்பது வேறு. சுரபுன்னை என்பது வேறு. சுரபுன்னை மாங்க்ரோஸ் வகையைச் சார்ந்தது என்றார் அவைநாயகன்.

பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் கந்த சுப்பிரமணியம், "கடலில் கலக்காத வைகை இராமநாதபுரம் கண்மாய் வரை ஓடுகிறது. அங்கே சுரபுன்னை இருந்திருக்கலாம்" என்றார். தங்கவேல் சரவணன் இன்னொரு விளக்கம் சொன்னார். "சுரர்' என்பது தேவர்களைக் குறிக்கும். தேவ லோகத்தவர்களும் பயன்படுத்தும் புன்னை என்ற பொருளில் புன்னைக்குத் தரப்பட்ட அடைமொழி சுரபுன்னை என்றும் கொள்ளலாம்" என்றார்.

கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டேன். கந்தசுப்பிரமணியத்தின் கருத்தை ஒப்புக் கொண்டவர் தங்கவேல் சரவணனின் விளக்கத்தை ரசித்தார். இதுபோன்ற விவாதங்கள் இலக்கியத்தை உயிர்ப்பாக வைத்திருப்பவையல்லவா!

சித்தர்கள் அருளும் சிவானந்தம்


மிகச்சமீபத்தில்,முகநூலில் ஒருவரி வாசித்தேன்."மறைவாகக்
கடவுள் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?"
இந்தக் கேள்வி ஏறக்குறைய எல்லோருக்குமே உண்டு.
கடவுள் நமக்கு என்ன செய்வார் என்ற சுயநலக் கேள்வியில்
தொடங்குகிற இந்தத் தேடல், கடவுள் என்ன செய்கிறார் என்ற
சுயத்தேடலாக வளர்வதே பெரிய வரம். இதற்கு விடைகாணும்
வழியே தவம்.
சில நாட்களுக்கு முன் பாலரிஷி அவர்களிடம் "நீங்கள் சித்தர்கள்
பற்றியொரு புத்தகம் எழுதலாமே" என்று கேட்டேன். கேள்வியின்
கடைசிச்சொல்லை பதிலாக்கினார்.."எழுதலாமே!நான் சொல்கிறேன்.
நீங்கள் எழுதுங்கள்".
                                   
அதற்குப்பின் நடந்ததுதான்  சுவாரசியம். அந்த விநாடியிலேயே அவர்சொல்லத் தொடங்கியிருந்தார்.நல்லவேளையாய் காகிதமும் எழுதுகோலும் கையருகே இருந்தன.முன்னொரு முறை பாலரிஷி
குறித்து,மந்திரமழை என்றொரு புத்தகம் எழுதியிருந்தேன்.சித்தர் நெறி குறித்து மறைபொருளாய் உள்ள பல மகத்துவங்களின்விளக்கங்களை மழைபோல் பொழிந்துகொண்டிருந்தார் பாலரிஷி.
சித்தர்கள் கண்டுணர்ந்து தரும் மூலிகைகள் பற்றி அறிந்திருக்கிறோம்.அவற்றில் "செத்த மூலிகை உயிருள்ளமூலிகை"பற்றிக் கேட்டிருக்கிறோமா? பாலரிஷி சொல்லித்தான்முதலில் கேட்டேன்.பூசையில் ஒரு மலரை எடுத்து இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் மூல தாத்பர்யத்தில் எத்தனை நுட்பங்கள் என்றும் இவர் சொல்லித்தான் கேட்டேன்.
கோள்களின் கோலாட்டம் காரணமாய் வாழ்வில் ஏற்படும்போராட்டம் என்பது உண்மையா என்கிற கேள்வி நம்மில்எத்தனையோ பேர்களுக்கு உண்டு. ஆன்மீகப் பாதையில்இருப்பவர்கள் அத்தகைய நேரங்களை எளிதில் கடக்கஎன்னவழி என்பதையும் விரிவாக விளக்கியிருக்கிறார்பாலரிஷி.

ஞானியரிடம் உரையாடத் தொடங்கும்போதெல்லாம்,நம்கேள்விகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஸ்தீரணத்தில்வந்து விழுகிற பதில்கள் நம்மை வாயடைத்துப் போகச்செய்யும். என் குருநாதரிடம் இதைப் பலமுறை உணர்ந்ததுண்டு.பாலரிஷி அவர்களுடனான உரையாடலிலும் இதே அனுபவம்.              
மூலவிதையாகிய ஓங்காரம், பிரபஞ்சத்தின் கருப்பையாகியநாதம், சித்தர்மரபில் ஹோமங்களின் தாத்பர்யம் என்று எத்தனையோ விஷயங்களை பாலரிஷி விளக்கும்போதுசில கேள்விகளை இடைமறித்துக் கேட்பேன். சிலசமயங்களில்நம் கேள்விகள் நமக்கே வியப்பாக இருக்கும்.ஆனால் அடுத்தவிநாடியே வந்து விழுகிற விடையின் வீச்சு, நம் கேள்வி பற்றிநமக்கே எழும் பாராட்டுணர்வு அகங்காரமாய் வளர்ந்துவிடாமல் ஆட்கொள்ளும்.


இந்த நூலின் உருவாக்கத்தில் அத்தகைய அனுபவத்துக்குப் பலமுறை ஆளாகியிருக்கிறேன். உதாரணமாய் ஒரு சம்பவம்.நாதம் குறித்த நுட்பங்களை பாலரிஷி விளக்கிக் கொண்டிருந்தார்."நாதமே பிரபஞ்சத்தின் மூலம் என்றால் நாதத்துக்கு முந்தையமௌனம்,நிர்ச்சலனம் என்னநிலை?" இப்படியொரு கேள்வியைநான்தான் கேட்டேன் என்பது எனக்கே விளங்கும்முன் விடை சொல்லத் தொடங்கிவிட்டார் பாலரிஷி.  
"நாதம் என்பது பிரபஞ்சம் உருவான மூலம் என்றால் அதற்குமுந்தைய மௌனம்,நிசப்தம்,நிர்ச்சலனம் என்று நீங்கள் எதைச் சொன்னாலும் அது பரம்பொருள் உருவான மூலம்.பரம்பொருள்உருவான பின்னர் நாதத்தில் இந்தப் பிரபஞ்சம் உருவானது, இதைத்தான் பிரணவ மூலம் என்றும் பிரபஞ்ச மூலம் என்றும்சொல்கிறோம்.ஓர் உயிராக நீங்கள் உருவானது பிரபஞ்சத்தில்தான்என்கிறபோது அதன்வழியாகவே நீங்கள் பரம்பொருளுடன்தொடர்புக்கு வருகிறீர்கள்.
அதற்கும் முந்தையதான மௌனம் உங்கள் நேரடி அனுபவத்தில்இல்லை.ஆனால் உங்கள் உபாசனையாலோ தவவலிமையாலோபரம்பொருளை உங்கள் உள்நிலை அனுபவத்தில் நீங்கள் பெற்றால்அந்த மௌனம் குறித்தும் நீங்கள் உணரக்கூடும். இதை நீங்கள்தவவலிமையில்தான் உணர வேண்டுமே தவிர, ஒரு தகவலாகக்கேட்டுப் பெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை".
ஆன்மீகத்தின் ஆழம்காணுதல் அனுபவத்தில் நிகழ வேண்டுமேதவிர தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் வராது என்று பாலரிஷி உணர்த்திய நிமிஷங்கள் அவை.

அப்படியானால் இந்தப் புத்தகம்?அவரே சொல்வதுபோல் சித்தர்நெறி குறித்த தகவல்களின் திரட்டல்ல.சித்தர்நெறி குறித்து பாலரிஷி அவர்களின் உள்நிலை அனுபவங்களின்  வெளிப்பாடு.அத்தகைய அனுபவங்களைத் தேடிப்போவதற்கான பாதைக்கு வெளிச்சம்காட்டும் ஞானச்சுடரே இந்தத்தொகுப்பு.       
இந்தப் புத்தகம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே "இதற்குஎன்ன தலைப்பு வைக்கலாம்"என்று பாலரிஷி கேட்டார்கள்.உடனே எனக்குள் இருக்கும் வணிக மூளை விழித்துக் கொண்டது.வாசகரை ஈர்க்கும் விதமாக, "சித்தர்நெறி ரகசியம்", என்றோ"உங்கள் வாழ்வில் சித்தர்கள்" என்றோ வைக்கலாம் என்றேன்.ஒரு புன்னகைமூலம் மறுத்துவிட்டு பாலரிஷி அவர்களே தந்ததலைப்புதான் 'சித்தர்கள் அருளும் சிவானந்தம்". 
இந்த நூல் நிறைவுபெறும் நிலையில் நானாகக் கேட்காத ஒருகேள்வியைத்தானாக எழுப்பிக் கொண்டு பாலரிஷியே பதிலும் தந்தார்.

 "சமூகத்தில் எத்தனையோபேர் சிரமத்திலிருக்கிறார்கள்.வன்முறையால் வீழ்கிறார்கள்.நான் சிவானந்தத்தைத் தேடுகிறேன்என்றோ சிவானந்தத்தில் லயிக்க்கிறேன் என்றோ சொல்லிக் கொண்டு இவற்றையெல்லாம் பாராமல் இருப்பது ஆன்மீகமாகாது.அவர்களுக்கு அன்பு,பரிவு,கருணை,உதவி ஆகியன வழங்குவதுதான் ஆன்மீகப் பண்பின் அடையாளம்".
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமானின் உள்ளுருக்கம் எப்படி இருந்திருக்கும்என்று உணரக்கிடைத்த உன்னத தருணம் அது.

Tuesday, December 4, 2012

அற்புதர்-17

                                           

அற்புதரின் வீட்டு முற்றத்தில் அதிர்ந்து கொண்டிருந்தன கால்சதங்கைகள்.பதங்களுக்கேற்ற அபிநயத்தில் அசைந்தாடிக்
கொண்டிருந்தன பிஞ்சுப் பாதங்கள். அற்புதரின் பாகம்பிரியாள் விதைத்த விதைகளில் இதுவும் ஒன்று. வான்முகிலாய் மாறி அவர் வார்த்த அமுதத்தில் மலர்ந்திருந்தது அந்த ஆனந்த மலர்.

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்த காலங்களில்
மேற்கொண்ட சங்கல்பங்களில் ஒன்று இன்று கண்ணெதிரே
களிநடம் புரிந்ததில் அற்புதருக்கு மகிழ்ச்சி.

தன்னுள் ஒலிக்கும் தாண்டவ அதிர்வுகளையே வருபவர் மூச்சில்
வைத்து அவரவர் உயிரையே பொன்னம்பலமாக்கித் தந்து கொண்டிருக்கும் அற்புதரின் முற்றத்தில் அருள்மணம் பரப்பியது ஆனந்த நடனம்.

இசையில் கசியும் இதயம் அற்புதருக்கு. அமர ஸ்வரங்களில் சஞ்சரிக்கும் அசுணமாவைப் போன்றதே அவரின் ரசனை.ஒவ்வொரு தாயின் கருவிலும் ஒலிக்கும் ஓங்காரத்தின் பாலை குழந்தைகள் அருந்திப் பிறக்கின்றனர். அவர்களில் ஒருசிலரே கலைகளில் சிறக்கின்றனர்.

கருவில் அருந்திய கலைமுலைப்பாலின் சுவையை நினைவின் நாவுகளில் மீட்டுக் கொள்பவர்கள் தங்களையே மீட்டி உயிரின்
பாடலைக் கண்டெடுக்கிறார்கள்.

தெய்வீகத்தின் கசிவுகளே இசை,தெய்வீகத்தின் அசைவுகளே நடனம் என்பதை நன்குணர்ந்த அற்புதர் வைபவங்கள் ஒவ்வொன்றிலும் கலைகளையே கொலுவில் இருத்துவார்.

கடவுளிடம் மனிதன் பேசுவது பிரார்த்தனை.கடவுள் மனிதனுடன்
பேசுவது தியானம். கடவுளும் மனிதனும் கலந்து பேசுவதே கலை.
அற்புதருக்கு கானமும் தாளமும் வானுக்குப் போடும் பாலம்தான்.
வெற்று மூங்கிலில் இருக்கும் வெளி காற்றிலிருக்கும் கடவுளின்
குரலை ஒலிபரப்புவதுபோல், தேகமே மூங்கிலாய் அசைந்தசைந்து
தேவ முத்திரைகளை வெளிப்படுத்துகிறது.


கீர்த்தனையின் கீற்றிலிருக்கும் ஸ்வரங்கள் தேகமெனும் விருட்சத்தைத் தென்றலாய் உலுக்க,,அதிலிருந்து ""பொலபொல"வென உதிரும் அபிநய மலர்களே அர்ச்சனை மலர்கள்.

நாத ஆராதனையும் நாட்டிய ஆராதனையும் உள்ளிருக்கும் தெய்வத்திற்கு உகப்பானவை என்பதை உணர்ந்த அற்புதரின் வீட்டு முற்றத்தில் அசைந்து கொண்டிருக்கிறது நாட்டியக் கொடிமுல்லை.





Sunday, December 2, 2012

தொழில்நுட்ப சாமிக்கொரு நாமாவளி

                                

 இது நடந்து நான்காண்டுகள் இருக்கும். கல்லூரி ஒன்றின் தமிழ் மன்றத் தொடக்கவிழாவிற்குக் கூப்பிட்டிருந்தார்கள். மேடையேறுவதற்கு முன்பே பேராசிரியர் ஒருவர் தன் படைப்பாக்கம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார்.
தலைப்பைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது."சிஎன்சி 108 போற்றி" என்பது அந்தத் தலைப்பு.

எந்திர உற்பத்தித் துறையில் பயன்படும் கம்ப்யூட்டர் நியூமெரிகல் கண்ட்ரோல் பயன்படும் விதங்களை,போற்றி எழுதப்பட்டிருக்கும் துதி நூல் இது.அறிவியல் அறிவும் ஆங்கில அறிவும் இதைப் பாராயணம் செய்வோருக்கு உடனே சித்திக்கும் விதமாக ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இந்நூல் உருவாகியுள்ளது.
   உயர்வற உயர்நலம் உடைய சிஎன்சியின் கல்யாண குணங்களை இதில் அணுவைத் துளைத்து அதில் அணுசக்தி ஒப்பந்தத்தைப் புகுத்தினாற்போலப் படைத்திருக்கிறார் ஆ சிரியர்.

    Good structural rigidity என்பது உறுதியான கட்டமைப்பு உள்ளாய் போற்றி என்றும்,    Ball screw application என்பது குண்டு மரைத் தண்டின் குணமே போற்றி   என்றும்  CNC Lathe என்பது கடைசல் எந்திரமாய் ஆனாய் போற்றி      என்றும் நீள்கிறது.

ஆசிரியரின்படைப்பாற்றல் இயங்குகதி,பக்திப்பரவசத்தின் சுழல் கதி ஆகியன உச்சம் கொண்ட நிலையில்    Vertical machining center         என்பது, குத்து வசத்தில் குடைவாய் போற்றி என்றும்       Horizontal machining center      என்பது படுக்கை வசத்தில் பன்முகம் போற்றி  என்றும் பிரவாகம் எடுக்கையில் வாசகர் அறிவியல் தரிசனம் பெற்று மெய்தானரும்பி விதிர்விதிர்ப்பதும் .கண்மலர்களில் ஆனந்த பாஷ்பம் அரும்புவதும் நிச்சயம்.

இனி,இந்த எந்திரத்தின் அனைத்துமறி அற்புதத்தை விளக்கப் போந்த ஆசிரியர்,  Master datum seting,Offset datum setting        ஆகியவற்றை "ஆதிப் புள்ளியை அறிவாய் போற்றி,அருகாமை புள்ளிகளும் அறிந்தாய் போற்றி" என்னுமிடம் வருங்காலத்தே இந்த திவ்யசுலோகங்களுக்கு பாஷ்யம் எழுதப் போகிறவர்களுக்கு மிகவும் வாய்ப்பான பகுதி.அறிவாய் அறிந்தாய் ஆகிய பிரயோகங்கள் காட்டும் கால வேற்றுமை,இக்கணினி எந்திரமானது,காலமும் கணக்கும் நீத்த காரணீயாய்த் திகழ்வதைச் சுட்டுகிறது.

ஆக்கல் அளித்தல் காத்தல் அருளல் மறைத்தல் ஆகிய ஐந்தொழில் வல்ல சி என்சியை பலவாறாய்ப் புகழ்ந்தேத்தி பனுவல் பாடி, Emergency stop-அபாய நிறுத்த அமைப்பே போற்றி என்றரற்றிச்சரண்புகும் போது அதன் அரும்பேராற்றல் ]தெள்ளிதின் விளங்குகிறது.

இனி இதனை ஒரு துதிநூலாக மட்டுமின்றி,காவியமாகவும் கண்டுணரும் விதமாக ஆக்கப்பட்டிருக்கிறது.
பாவிகம் என்பது காவியப் பண்பே என்பதற்கேற்ப சிஎன்சி,பலதேசத்துப் பெண்களாகவும் உருவகிக்கப்பட்டிருப்பது சக்தி வழிபாட்டின் புத்தம் புதிய பரிமாணமாகவும்-இலக்கிய மதிப்பீட்டில் இந்நூலுக்குக் காவிய வகைமையில் இடம்பெற்றுத் தரத் தக்கதாகவும் திகழ்கிறது.

    High cost investment  அதிகச் செலவு வைக்கும் அமெரிக்கப் பெண்ணே போற்றி
   Can be operated for 3 shifts  சலியாது உழைக்கும் சீனப்பெண்ணே போற்றி
   Smooth table movements நளினமாய் நகரும் கெய்சா பெண்ணே போற்றி(ஜல்சா அல்ல)   Strong construction   கட்டான உடல்கொண்ட கருப்பு பெண்ணே போற்றி
   Command obidiant operation           விதிமுறையில் இயங்கும் ஆங்கில பெண்ணே போற்றி  Touch sensitive features  தொட்டாலுணரும் பிரெஞ்சு பெண்ணே போற்றி
  All good quality/features   நற்பண்பு யாவும் கொண்ட இந்திய பெண்ணே போற்றி
என்றெழுதியிருப்பதைக் காணும் போது சிஎன் சி,சப்த கன்னியர் வடிவில் உபாசிக்கப்படுவதாக நாம் உய்த்துணர முடிகிறது.பிரதி செவ்வாய் வெள்ளிகளில்  திருவிளக்கு வழிபாட்டிற்குப் பயன்படும் விதமாக"உற்பத்தி கூடத்தின் ஒளிவிளக்கே போற்றி போற்றி" என்றிவ்வருட் பனுவல் நிறைவு பெறுகிறது

தனியாய் நூற்பலன் எழுதப்படாவிடினும் இதன் பராயணத்தால் விளையும் இக பர சௌபாக்கியங்கள் வெள்ளிடை மலையன்றோ!!

இதனை அருளிச் செய்தவர் பேராசிரியர் வி.இராமச்சந்திரன் என்று தெரிகிறது.32 ஆண்டுகள் தொழில்நுட்பப்
பேராசிரியராய்ப் பணிபுரிந்த இவர் தன்னை ஒரு தமிழ் அடிப்பொடி என்று தெரிவிக்கிறார்.


நெ 6 முதல் மெயின்ரோடு அண்ணாநகர் பீளமேடு கோயமுத்தூர் 641004 என்னும் சந்நிதானத்திற்கு விண்ணப்பிப்போர் இதன் பிரதி ஒன்றினைப் பெறும் பாக்கியசாலிகள் ஆவார்கள் .இதன் விலை மதிப்பிலாத்தன்மையினை உணர்த்தும் முகத்தான் விலை ஏதும் குறிப்பிடப்படவில்லை

Saturday, December 1, 2012

அற்புதர்-16

                                     

சிலரின் பாதையில் அற்புதர் எதிர்ப்படுவதுண்டு. ஒரு வழிப்போக்கராய் அவரை எண்ணுபவர்கள் அவர் அற்புதர் என்பதை அறிந்ததில்லை.இன்னும் சிலர் அற்புதரின் பாதையில் பயணம் செய்வதுண்டு. அவர்களும் அற்புதரை அற்புதர் என்று அடையாளம் கண்டதில்லை. ஆனால் அற்புதர்தான் தன்னுடைய பாதையென்று கண்டுணர்ந்தவர்கள் உண்டு.
அவர்கள்தான்,அற்புதம் என்ற சொல்லைக் கடந்த பேரற்புதம்
அவரென்று உணர்ந்தவர்கள்.

தன்னுடைய பாதையே அற்புதர்தான் என்று தெரிந்த பிறகு தாங்கள் சென்று சேர வேண்டிய இடத்தைக் குறித்த அச்சம் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் சிலருக்கோ செல்லும் பயணம் குறித்த முன்முடிவுகள் இருந்தன.தங்கள் பாதையில் இருந்த கற்களை அகற்றிய பின்னர் அற்புதர் அழைத்துப்போயிருக்கலாம் என்று புலம்பினார் ஒருவர்.பாதையின் கற்களை அகற்றுவதைவிட பாதங்களுக்கு
பலம் தருவதுதான் அற்புதரின் பணி. அற்புதரின் பாணி.

போகும் வழியெங்கும் அற்புதர் சில பூச்செடிகளை நட்டிருக்கலாம் என்று குறைப்பட்டுக் கொண்டார் இன்னொருவர்.உள்ளுக்குள் ஒருவரை மலரச் செய்துவிட்டால் பாதையில் பூக்கள் தாமாகப் புலப்படும் என்பதே அற்புதரின் கோட்பாடு.

செல்லும் வழிகளில் நின்று இளைப்பாறவும் தாகம் தீர்க்கவும் அற்புதர்
தண்ணீர்ப் பந்தல்களை அமைத்திருக்கலாம் என்பதே இன்னொருவரின் ஆதங்கம். தீவிரமான தாகமும் தேடலும்தான் நில்லாப் பயணங்களின் நிகரில்லா ஊக்கம் என்பது,அற்புதரின் தீர்மானம்.

மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுத்த பலரும் தொடங்கிய இடத்திற்கே திரும்பிக் கொண்டிருந்த போது,அற்புதரின் பாதையில் ஆங்காங்கு தென்பட்ட மைல்கற்கள் அவரவரும் தங்கள் இலக்கை நோக்கிச்
சென்று கொண்டிருப்பதை உறுதி செய்தன.

எந்தப் புகாரும் இல்லாமல் அற்புதரே தன்னுடைய பாதையென்ற ஆழமான புரிதலுடன் பாதையையேஉற்றுப் பார்த்த வண்ணம் பயணம் செய்த சிலரின் இதழ்களில் அவ்வப்போது புன்னகைப் பூக்கள்
பூத்துக் கொண்டேயிருந்தன.நெருங்கி விசாரித்த போது சொன்னார்கள்,
                        
"அற்புதர்தான் என்னுடைய பாதையென்று தெரிந்தபின் பயணம் தொடங்கினேன். இந்தப் பதையெங்கும் எனக்கும் முன்னர்
பதிந்திருக்கும் சுவடுகள் அற்புதரின் பாதச் சுவடுகள்.
தானே பாதையானது மட்டுமல்ல. தான் பயணம் செய்து சென்றடைந்த பாதையில் நமக்காக மறுபடியும் நடந்து கொண்டிருக்கிறார் அற்புதர்.
ஆவியாக மாறி ஆகாயம் சேர்ந்த மேகம் மனது கரைந்து மறுபடியும் பெய்வது போலத்தான் அளப்பருங்கருணையால் அற்புதர் மறுபடியும் பாதையானதோடு தானே பயணியாகவும்ஆகியிருக்கிறார். அருளுக்கும் அன்புக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய அற்புதம் இந்த எளிவந்த தன்மை. "

சொல்லிக் கொண்டே சென்றவர்களின் உள்ளிலும் வெளியிலும் பூத்துக் குலுங்கின புனித மலர்கள்