அற்புதர்-16

                                     

சிலரின் பாதையில் அற்புதர் எதிர்ப்படுவதுண்டு. ஒரு வழிப்போக்கராய் அவரை எண்ணுபவர்கள் அவர் அற்புதர் என்பதை அறிந்ததில்லை.இன்னும் சிலர் அற்புதரின் பாதையில் பயணம் செய்வதுண்டு. அவர்களும் அற்புதரை அற்புதர் என்று அடையாளம் கண்டதில்லை. ஆனால் அற்புதர்தான் தன்னுடைய பாதையென்று கண்டுணர்ந்தவர்கள் உண்டு.
அவர்கள்தான்,அற்புதம் என்ற சொல்லைக் கடந்த பேரற்புதம்
அவரென்று உணர்ந்தவர்கள்.

தன்னுடைய பாதையே அற்புதர்தான் என்று தெரிந்த பிறகு தாங்கள் சென்று சேர வேண்டிய இடத்தைக் குறித்த அச்சம் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் சிலருக்கோ செல்லும் பயணம் குறித்த முன்முடிவுகள் இருந்தன.தங்கள் பாதையில் இருந்த கற்களை அகற்றிய பின்னர் அற்புதர் அழைத்துப்போயிருக்கலாம் என்று புலம்பினார் ஒருவர்.பாதையின் கற்களை அகற்றுவதைவிட பாதங்களுக்கு
பலம் தருவதுதான் அற்புதரின் பணி. அற்புதரின் பாணி.

போகும் வழியெங்கும் அற்புதர் சில பூச்செடிகளை நட்டிருக்கலாம் என்று குறைப்பட்டுக் கொண்டார் இன்னொருவர்.உள்ளுக்குள் ஒருவரை மலரச் செய்துவிட்டால் பாதையில் பூக்கள் தாமாகப் புலப்படும் என்பதே அற்புதரின் கோட்பாடு.

செல்லும் வழிகளில் நின்று இளைப்பாறவும் தாகம் தீர்க்கவும் அற்புதர்
தண்ணீர்ப் பந்தல்களை அமைத்திருக்கலாம் என்பதே இன்னொருவரின் ஆதங்கம். தீவிரமான தாகமும் தேடலும்தான் நில்லாப் பயணங்களின் நிகரில்லா ஊக்கம் என்பது,அற்புதரின் தீர்மானம்.

மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுத்த பலரும் தொடங்கிய இடத்திற்கே திரும்பிக் கொண்டிருந்த போது,அற்புதரின் பாதையில் ஆங்காங்கு தென்பட்ட மைல்கற்கள் அவரவரும் தங்கள் இலக்கை நோக்கிச்
சென்று கொண்டிருப்பதை உறுதி செய்தன.

எந்தப் புகாரும் இல்லாமல் அற்புதரே தன்னுடைய பாதையென்ற ஆழமான புரிதலுடன் பாதையையேஉற்றுப் பார்த்த வண்ணம் பயணம் செய்த சிலரின் இதழ்களில் அவ்வப்போது புன்னகைப் பூக்கள்
பூத்துக் கொண்டேயிருந்தன.நெருங்கி விசாரித்த போது சொன்னார்கள்,
                        
"அற்புதர்தான் என்னுடைய பாதையென்று தெரிந்தபின் பயணம் தொடங்கினேன். இந்தப் பதையெங்கும் எனக்கும் முன்னர்
பதிந்திருக்கும் சுவடுகள் அற்புதரின் பாதச் சுவடுகள்.
தானே பாதையானது மட்டுமல்ல. தான் பயணம் செய்து சென்றடைந்த பாதையில் நமக்காக மறுபடியும் நடந்து கொண்டிருக்கிறார் அற்புதர்.
ஆவியாக மாறி ஆகாயம் சேர்ந்த மேகம் மனது கரைந்து மறுபடியும் பெய்வது போலத்தான் அளப்பருங்கருணையால் அற்புதர் மறுபடியும் பாதையானதோடு தானே பயணியாகவும்ஆகியிருக்கிறார். அருளுக்கும் அன்புக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய அற்புதம் இந்த எளிவந்த தன்மை. "

சொல்லிக் கொண்டே சென்றவர்களின் உள்ளிலும் வெளியிலும் பூத்துக் குலுங்கின புனித மலர்கள்