Thursday, November 29, 2012

அதிகாலையில் ஓர் அர்த்தஜாமம்



29.11.2012.காலையில் ஆறரை மணியிருக்கும். பள்ளியறையில் செல்லக் கொட்டாவியுடன்காத்திருந்தசிவகாமசுந்தரிக்கு,பம்பை,உடுக்கை,தாளவாத்தியங்களின் ஓசைகள் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது.தீட்சிதர்கள் உள்ளே நுழைந்து நடராஜப் பெருமானைப் பள்ளி சேர்த்துத் திரும்பும்வரை சிலைபோல்
பாவனை செய்தவள், அவர்கள் வெளியேறித் திருக்கதவம் காப்பிட்டதும் குறுநகை தவழ பெருமானின்பக்கம் திரும்பினாள்."என்ன சுவாமி!அதிகாலையில் ஓர் அர்த்தஜாமமா?"


நமட்டுச் சிரிப்போடு நாயகி கேட்டதும் நடராஜப்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பு."நேற்று உன் மகன் கந்தனின் கார்த்திகைத் திருநாள்ஆயிற்றே!பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதியுலா வரச்சொல்லி அடம்பிடித்து அழைத்துச் சென்றுவிட்டான்ஆறுமுகன்.நான்கு வீதிகளிலும் சொக்கப்பனை கொளுத்தி கோலாகலமாகக் கொண்டாடி விட்டார்கள்.
அனைத்தும் முடிந்து ஆலயம் திரும்பும் முன் நள்ளிரவாகிவிட்டது. பன்னிரண்டுமணி கடந்தால் பள்ளியறைக்கு அனுப்ப மாட்டார்களே!கனகசபையிலேயே காத்திருந்து உன் கனிந்த முகத்தைக்கனவில் கண்டு விடிந்தவுடனே விரைந்தோடி வந்துவிட்டேன்".விநயமாய்ப் பேசிய வண்ணம்நெருங்கிய வித்தகனின் திருத்தோள்களை வளைக்கரங்களால் வளைத்த வண்ணம் சிணுங்கினாள் அம்பிகை.


"சரிசரி! போதும் உங்கள் சிருங்காரம்.சாஸ்திரத்துக்காகத்தான் உங்களைப் பள்ளி சேர்த்திருக்கிறார்கள்.புறப்படுங்கள். பள்ளி நீங்கச்செய்ய பிள்ளைகள் வந்துவிடுவார்கள்". தேவியின் திருவாக்கு கேட்டு சபாபதி சொன்னார்,"ஆமாம்!ஆமாம்!ஒவ்வொரு வைகறையிலும் தில்லையே திரண்டு வந்துவிடுகிறது. நம் மகள்கள் பிரகாரம் முழுவதும் அமர்ந்து மலர்ச்சரங்கள் தொடுப்பதென்ன! நம் மகன்கள் பல்லக்கை சரிசெய்து,பஞ்சணைகள் தட்டிப் போட்டு சீர்செய்யும் நேர்த்தியென்ன. பம்பை,உடுக்கை,எக்காளம் தாளம் என்று போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கொன்றை கைகளில் வைத்துக் காத்திருக்கும்
கோலமென்ன! பள்ளி சேர்ப்பதிலும் பள்ளி நீக்குவதிலும் பிள்ளைகள் தினமும் காட்டும் பரவசம் தினசரித்திருவிழா ஆயிற்றே"! தில்லை நாயகனின் திருவிழிகளில் வாஞ்சையும் நிறைவும் மின்னின.


"அதுசரி!நம்மைப் பள்ளி சேர்ப்பதும் பள்ளி நீக்குவதும் சடங்குபோல் இல்லாமல் உயிர்ப்போடும் உணர்வோடும் நிகழ்கிறதே,அத்தருணங்களில் என்ன நிகழ்கிறதென்று அவர்கள் அறிவார்களா?"அர்த்தபுஷ்டியுடன் அம்பிகை கேட்டதன் ஆழம் ஆளுடைநாயகனுக்குப் புலப்பட்டது.

"புவனேஷ்வரி!மூலத்தானத்தில் இருக்கும் என்னுடைய அம்சம், திருப்பள்ளிக்குப் புறப்படும்வேளையில்,உற்சவத் திருமூர்த்தத்தில் செலுத்தப்படுகிறது. அந்தத் திருவுரு பிரகாரத்தைச் சுற்றி
பள்ளியறை சேருகையில் அதனிருந்து வெளிப்படும் அருளதிர்வுகள் ஒளிச்சிதறல்களாய்,அதிர்வுகளாய் திசைகளெங்கும் பரவிவழிபட்டு நிற்பவர்களின் உடலிலும் மனதிலும் உயிரிலும்தெய்வாம்சத்தைத் தருகிறது. பள்ளி நீங்கும்போதும் திருவீதியுலா செல்லும்போதும் இதுவே
நிகழ்கிறது.இல்லறமும் தெய்வீகமே என்பதை எல்லோரும் உணரும்
தருணமது.
அவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமென்ற அசியமில்லை.அவர்களுக்கு பக்தி பாவமே பிரதானம். திருப்பல்லக்கில் நான் ஆரோகணித்ததும்,"அய்யா புறப்பட்டு விட்டார்" என்கிறார்கள்.
எதிர்ப்படும் மற்றவர்களிடம் "அய்யாவைப் பார்த்துவிட்டீர்களா"என்கிறார்கள். கூடும் அன்பால் கும்பிட மட்டுமே செய்பவர்கள் நம் அருளதிர்வுகளைப் பெற்றுக் கொண்டிருப்பதை
அறிந்தாலும் சரி, அறியாவிட்டாலும்சரி,அவர்களுக்கு நடக்க வேண்டிய நன்மைகள் நடந்தேதீரும்".நாதன் சொல்லி முடிக்கும் முன் வாத்தியங்களின் முழக்கம் மீண்டும் கேட்கத் தொடங்கியது.

திருத்தோள் தழுவிய தளிர்க்கரங்களை நெகிழ்த்தி,மெல்ல நகர்ந்த மாதரசி, திருக்கதவம் காப்புநீங்கும் ஒலிகேட்டு மறுபடியும் சிலைபாவம் காட்டினாள். மகாதேவன் மவுன விடைபெற்றுப் புறப்பட,
வடமேற்கெல்லையில் இருக்கும் தன் ஆலயம் சேர ஆயத்தமானாள் சிவகாமசுந்தரி.