Wednesday, November 14, 2012

அற்புதர்-7



தன் கனவில் அற்புதர்வந்ததாய் பரவசமாகச் சொன்னார் ஒரு சீடர். அற்புதர் தங்கள் கனவுகளிலும் வந்ததுண்டென்று ஏனைய சீடர்களும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். அற்புதரைக் கனவில் காண்பது நனவில் கண்டது போலவே இருந்ததென்று சொன்னார் ஒருவர். நனவில் அற்புதரைக் காண்கிறபோதே அது கனவு போலத்தான் இருக்கிறது என்றார் இன்னொருவர்.

எது கனவு எது நனவு என்ற குழப்பம் பற்றி ஒரு ஜென்கதை உண்டு தெரியுமா என்று தொடங்கினார் இன்னொருவர்.சங்-சூ என்ற ஜென்குரு ஒருநாள் காலையில் குழப்பத்துடன் குடிலின் வாயிலில் அமர்ந்திருந்தாராம்.முந்தைய இரவில் அவர் கண்டவொரு கனவுதான் குழப்பத்துக்குக் காரணம்.


 தான் ஒரு வண்ணத்துப் பூச்சியாய் மாறி மலரில் தேனருந்துவதாய் கனவுகண்டார். அவருடைய குழப்பம் இதுதான். "சங்-சூவாகிய நான் வண்ணத்துப்பூச்சியாக மாறுவதாக நேற்று கனவு கண்டேனா? ஒரு வண்ணத்துப்பூச்சி சங்-சூவாக இருப்பதாய் இப்போது கனவு காண்கிறதா?"

வெளியே போயிருந்த தலைமைச்சீடர் திரும்பினார்.அவருக்கு விஷயம் சொல்லப்பட்டது.ஒரு வாளி நிறைய குளிர்ந்த நீரை குருவின் தலையில் ஊற்றினார்."இப்போது புரிகிறதா? கனவு கண்டது சங்-சூதான்.வண்ணத்துப்புச்சி கனவு கண்டிருந்தால் அது வண்ணத்துப்பூச்சியின் கவலை".

கடைசியில் விவகாரம் அற்புதரின் கவனத்துக்கே போனது. அப்போது அற்புதர் வாழைப்பழ தேசத்தில் இருந்துவந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கனவு சார்ந்த உளவியல் பயிற்சியில் இருப்பவர்களென்றும்  கனவு வழியாகவே அவர்கள் அற்புதர் அனுப்பும் தகவல்களைப் பெறுகிறார்களென்றும் அவர்கள் உரையாடலின்வழி யூகிக்க முடிந்தது.

அற்புதருக்கு வந்தவர்கள் கேட்க விரும்பியது என்னவென்று புரிந்தது. மெல்லச் சொன்னார்."தூங்கும்போது தூங்குவதால் கனவு வருகிறது. தூங்கும்போது தியானம் செய்யுங்களேன்" வந்தவர்கள் மேலும் குழம்பினார்கள். அதில் ஒருவருக்கு தியானம் செய்யும்போதே தூக்கம்வரும்பாவம்..தூக்கத்தில் அவருக்கெப்படி தியானம் வரும்?



அற்புதர் சொன்னார். "நீங்கள் எட்டுமணிநேரங்கள் தூங்குவதாக வைத்துக் கொள்ளுங்கள்.விழிப்பு நிலையிலிருந்து நீங்கள் துயிலுக்குள் நுழையும் விநாடிக்கு முந்தையவிநாடி தூங்கப் போகிறோம் என்பதை உங்கள் விழிப்புணர்வில் பதித்துக் கொள்ளுங்கள். அதேபோல் விழிப்பு வரும் விநாடிக்கு முந்தைய விநாடி, விழிக்கப் போகிறோம் என்று உங்கள் விழிப்புணர்வில் பதித்துக் கொள்ளுங்கள். உறக்கத்துக்கு முந்தைய விநாடியும் விழிப்புக்கு முந்தைய விநாடியும் உங்கள் விழிப்புணர்வுக்குள் வந்தால், எட்டுமணிநேரத் தூக்கம் எட்டுமணிநேரத் தியானமாக மாறும். விழித்தெழும்போது உங்களில் சக்தி நுரைத்துத் ததும்பும்"

அற்புதரை வணங்கி  விடைபெற்றுத் திரும்பும் வழியில் முந்தைய நாள் கனவில் அற்புதரை தரிசித்த சீடர் சொன்னார்,"நேற்றும்  கனவில் அவர் இப்படித்தான் ஏதோ சொன்னதாய் ஞாபகம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது."

அற்புதரின் குரல் அவருக்குள் ஒலித்தது. "நனவுநிலையில் நீங்கள் விழிப்புணர்வின்றி இருந்தால் கனவில் நினைவூட்டல் வரும். கனவில் கண்டதை மறந்திருந்தால் நனவுநிலையில் நினைவூட்டல் வரும். இரண்டு நிலைகளிலும் மறந்தால் அடுத்த பிறவியில் நினைவூட்டல் வரும். விழிப்புடன் இருங்கள். இந்தப் பிறவியிலேயே  கனவு நிலைக்கும் நனவுநிலைக்குமான வரவு செலவுக் கணக்கை முடித்துக் கொள்ளுங்கள்"