Thursday, November 15, 2012

முடிவில்லாத கணங்கள்




எழுதித் தீராக் கணங்களை எல்லாம்
எப்படித் தாண்டுவது
எழுத்தில் சேராக் கணங்களை எல்லாம்
எங்கே தொடங்குவது
பழுதாய்ப் போன பழைய கணங்களை
எங்கே வீசுவது
முழுதாய் வாழ மறந்த கணங்களை
எங்கே தேடுவது

கணையொன்று வில்லைக் கடக்கும் கணத்தின்
கணக்கெங்கு காணுவதோ
இணைப்பறவைகளில் ஒன்றை வீழ்த்தும்
நொடியெங்கு தோன்றியதோ



அணையினைக் கண்ணீர் தாண்டி நடக்கும்
அபூர்வ கணமெதுவோ
கணங்களில் நடக்கும் காலத்தின் கால்களில்
துணைமுள் குத்தியதோ


ஒவ்வொரு நொடியையும் உள்ளே வாங்கி
உயிரில் சேமித்தேன்
கவ்வி இழுக்கும் கவலையை மகிழ்வை
கணக்கில் காண்பித்தேன்
 எவ்விதம் வாழ்க்கை இருந்த போதிலும்
இருப்பை நேசித்தேன்
இவ்விதம் வாழ்ந்திட என்னைப் பணித்த
இறைவனை நேசித்தேன்


நடக்கும் கணம்மேல் நிலைகொண்டு நின்றால்
நகர்வதும் ஒருயுகமே
கடக்கும் முகிலாய் காணத் தெரிந்தால்
கவலையும் ஒருசுகமே
தொடக்கமும் முடிவும் தெரியா நதியெனத்
தொடர்வது காலமன்றோ
முடிக்க முடியாக் கோலம் வரைபவை
மாயையின் விரல்களன்றோ