Tuesday, November 20, 2012

அற்புதர்-12

                                                        
சின்ன வயதிலிருந்தே சிகரங்கள் என்றால் அற்புதருக்கு மிகவும் பிரியம்.அவரது பாதங்களிலும் பாதுகைகளிலும் வாகனச்சக்கரங்களிலும் மலைவாசனையும் வனவாசனையும்வந்து கொண்டேயிருக்கும்.முன்பொரு காலத்தில் பரமனின் பாதங்கள் பதிந்த மலைத்தடங்களில்
அற்புதர் தன் குருநாதரை தரிசித்தார்.எனவே மலைகளின் தரிசனம், அவருக்கு தாய்முலை கரிசனம்.


அன்று தொடங்கி எல்லாச் சிகரங்களிலும் அவருக்கான பாதைகள் விரியத் தொடங்கின.சமவெளிகளில்அற்புதர் நடந்து வரும்போதெல்லாம் ஒரு சிகரம் நடந்து வருவதைப்போலவே இருக்கும். மலையேறும்
மனிதர்கள் அடிவாரங்களில் இளைப்பாறி அதன்பின் தொடங்குவதுபோல் அவருடைய திருவடிகளில்இளைப்பாறி ஆன்மீகச் சிகரங்கள் நோக்கி ஆயிரமாயிரம்பேர் தங்கள் தேடல்களைத் தொடங்கினர்.

                                                           
ஒரு மலையை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. கரடு முரடான பாதைகள் கொண்டதென்றுமலைகளைப் புரிந்து வைத்திருப்பவர்களுக்கு அங்கே மெல்லிய மலர்கள் கிள்ளல் பயமின்றி கிளுகிளுத்துச் சிரிப்பதை உணரவே முடியாது. பறவைகளும் விலங்குகளும் தங்கள் இயல்புப்படிமலைகளில் வாழ்வது போல், அற்புதரின் அணுக்கத்தில் ஒவ்வொரு மனிதரும் தங்கள்
உயிரியல்பை உணரத் தொடங்கினர்.ஆனால் அற்புதரின் பிரம்மாண்டம் மட்டும் அவர்களுக்குமுற்றாகப் பிடிபடவில்லை.

                                                             
கரிய பாறைகளின்மேல் கண்ணுறங்கும் முகில்களைப்போல் அற்புதரின் தோள்களில் சுமைகளைவைத்து தாள்களில் துயின்றன பல்லாயிரம் உயிர்கள்.மலையெங்கும் ஆங்காங்கே ஊஞ்சல் கட்டும்வெள்ளி அருவிகளாய் கண்கள் ஊற்றெடுக்க மூடிய இமைகள் மூடியவண்ணம் தியானத்தில் இருந்தனர்மனிதர்கள்.காற்றின் அசைவில் சிலிர்த்தசையும் மரங்களாய் அற்புதரின் சுவாசத்தில் சிலிர்த்தன மனங்கள்.

மலையில் ஆங்காங்கே தென்படும் காட்டு நெருப்பாய் தவத்தின் உச்சியில் அவ்வப்போது சிலரின் வினைக்காடுகள்எரியும்போதும் மௌனசாட்சியாய் அசையாதிருந்தார் அற்புதர். பனிபடர்ந்த சிகரமுகடுகளின் சொல்லொணா வசீகரம்அற்புதர் விழிமூடியமரும்தருணங்களில் கவிவதும், அவரின் விழிகள்மலரும்பொழுதில் உயிர்களெங்கும் வெய்யில் படர்வதும்
அவர் அசலர் என்பதை அடிக்கடி உணர்த்தின.



இருளின் விழுதுகள் பிடித்திறங்கி நட்சத்திரங்களும் நிலவும் மலைகளில் உலவ வரும் இரவுகளின்இரகசியக் குறிப்பை சில்வண்டுகள் பரிமாறிக்கொள்வதுபோல், அற்புதருக்கும் ஆகாயத்துக்கும் நடக்கும்
தகவல் பரிமாற்றத்தை இரவு நட்சத்திரக் கண்கள் மினுங்க கேட்டுக் கொண்டிருக்கும்.


அந்த இரவுகளின் சூட்சுமக் குறிப்புகளை மொழிபெயர்த்து அற்புதர் என்னும் கருணைச்சிகரத்தின்அடிவாரத்தில் வந்தமரும் வசந்தகாலப் பறவையொன்று வாய்விட்டுப் பாடியது

                                                

"சிகரத்தில் ஏறும் எந்த மனிதனும்
சிகரம் வென்றவன் இல்லை
உயரத்தைத் தொட்டவன் எல்லா நேரமும்
உயரத்தில் நிற்பதும் இல்லை
சிகரம் தீண்டிய முகிலகளும் பனியும்
சுவடே இன்றிக் கரையும்
சிகரம் என்பதே கரையச் சொல்வது
எத்தனை பேருக்குப் புரியும்?"

அந்தப் பாடலின் வரிகள் தோறும் வெளிச்சம் போட்டது,அற்புதரின் புன்னகை,