Tuesday, November 6, 2012

விஸ்வரூபம்




"எப்போ வருவாரோ"நிகழ்ச்சியில் மகாகவி பாரதி பற்றிப் பேச வந்திருந்தார்
ஜெயகாந்தன். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்  ஒவ்வொரு ஜனவரியும்
கோவையில் நிகழ்த்தும் உன்னதமான தொடர் நிகழ்ச்சி அது.விழாவில்
முகவுரை நிகழ்த்திய கவிஞர் பெ.சிதம்பரநாதன், "இன்று ஜெயகாந்தன்
தன் விஸ்வரூபத்தைக் காட்டுவாரா என்று வந்திருக்கும் நண்பர்களெல்லாம்
எதிர்பார்த்திருக்கிறார்கள்" என்றார்.
வழக்கம் போல,'நண்பர்களே!" என்று தொடங்கிய ஜெயகாந்தன், மடை திறந்தார்.மகாகவியின் அரிய பாடல்கள், பலரும் தாண்டிச் சென்ற பாடல்கள்,நின்றுகாணாத நுட்பங்கள் எல்லாம் மழைபோல் வந்து விழுந்தன. நாற்பது நிமிடங்கள்கடந்திருக்கும். இடையில் சற்றே நிறுத்தி ஒரு போடு போட்டார். "விஸ்வரூபம்என்பது, நான் காட்டுவதல்ல.நீங்கள் காணுவது'.அவை அந்த வீச்சின் நுட்பத்தைஉள்வாங்கும் முன்னரேவெகுவேகமாய் அடுத்த கட்டத்துக்குப் போனார்.
தோற்றத்தில் வாமனராகிய ஜெயகாந்தன் எப்போதும் விஸ்வரூபத்திலேயே
இருக்கிறார் என்பது விளங்கிய தருணமது.அன்று காலைதான் அவரை ,
கோவையில் அவர் வழக்கமாகத் தங்கும் ஏ.பி.லாட்ஜ் அறையில் சந்தித்து
பேசிக் கொண்டிருந்தேன்.முரசொலி விருதை அவர் வாங்கியிருந்த நேரம் அது.
தி.மு.க. வின் எதிர்ப்பாளராக தொடக்கநாள் தொட்டே விளங்கி வருபவர் அவர்.
ஜே.கே. அந்த விருதை வாங்கியிருக்கக் கூடாதோ என்ற எண்ணம் பரவலாக
இருந்த நாட்கள் அவை. இட்டிலியை விண்டு சட்டினியில் தோய்த்தபடியே
அவராக ஆரம்பித்தார்."முரசொலி விருது வாங்கியது தவறன்று பலரும்
சொல்கிறார்கள். அவர்களுடன் நமக்கு தீராத பகை ஏதும் உண்டா?"
அடுத்து சில விநாடிகள் மௌனம். விண்ட இட்டிலியை விழுங்கிவிட்டுக்
கேட்டார், 'அப்படி யாருடனாவது நமக்குப் பகை உண்டா?" அந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மையின் வீரியத்தை வியந்து கொண்டேயிருந்தேன். ஜெயகாந்தனின் யுத்தங்கள் தனிமனிதர்களுடனானது போலத் தோன்றும்.

ஆனால் அவருடைய ரௌத்திரம் சமூகத் தீமைகளுக்கெதிரானவை.
எழுத்தால் ,பேச்சால், பார்வையால்,உரையாடலால் மனசாட்சியின் குரலாய்
ஒலித்துக் கொண்டேயிருக்கும் ஜெயகாந்தன் தன் அமைதியான இருப்பால்
அதனை இன்றும் .நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார்.
மகாகவி பாரதி விழா.மேடையில் கவியரங்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
"கட்ஷூ" ஒலிக்க கம்பீரமாக நடைநடந்து மேடை நோக்கி வந்து கொண்டிருந்தார் ஜெயகாந்தன். அடுத்து அவருடைய சிறப்புரை.
மேடையில் அமர்ந்திருந்த எனக்கு சிலிர்த்தது. கைகளில் இருந்த
கவியரங்கக் கவிதைத் தாள்களில் அவசரம் அவசரமாய் எழுதினேன்.
"பாரதியைக் கண்கொண்டு பாராத தலைமுறைக்கு
 நீயேதான் பாரதியாய் நிதர்சனத்தில் திகழுகிறாய்;-நீ
 தரை நடக்கும் இடிமுழக்கம்;திசைகளுக்குப் புதுவெளிச்சம்;
 உரைநடையின் சூரியனே! உந்தனுக்கு என்வணக்கம்!"
அன்று மேடையில் சிலர் வாசித்த கவிதைகளில் அவநம்பிக்கையும்
சமூகம் பற்றிய சலிப்பும் மேலோங்கியிருந்தது. தன் உரையினூடே
ஜெயகாந்தன் சொன்னார், "இங்கே நிறைய கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள்.
சில கவிதைகளில் அவநம்பிக்கை தொனித்தது." அவர் உரையின் மிக அபாயமான பகுதியாகிய ஒரு விநாடிநேர இடைவெளி....பிறகு சொன்னார்,
"நம்பிக்கை இல்லாதவர்கள் பேசாமல் இருப்பது நல்லது!!"
இன்று பல எழுத்தாளர்கள் "நாங்கள் ஜெயகாந்தனை என்றோ தாண்டிவிட்டோம்' என்கிறார்கள். ஜெயகாந்தனின் சிறுகதைகளில் சிலவற்றை
வாசித்ததும் ஒரு வாசகனுக்கு வருகிற மன எழுச்சியை ஒருபோதும் அவர்கள்
தாண்ட முடியாது. கதையின் கருவாய் மேற்கொண்ட விஷயத்திலிருந்து
உந்தி மேலெழுந்து ஜெயகாந்தன் காட்டுகிற காட்சியும் அதில் மலர்கிற
உள்ளொளியும் அவரின் தனித்துவங்கள்.
கவிஞர் வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் வெளியீட்டுவிழா. மேடையில்
கலைஞர் கருணாநிதி, நடிகர் கமல்ஹாசன் ஜெயகாந்தன்.கலைஞருக்கு
மஞ்சள் ரோஜா பூத்துச் சிரிக்கும் பூந்தொட்டி வழங்கப்பட்டது. "எல்லோரோடும்
சண்டையிட்டு இன்று சமாதானமாகியிருக்கும் ஜெயகாந்தனுக்கு வெள்ளைரோஜா"என்ற அறிவிப்புடன் பூந்தொட்டி வழங்கப்பட்டது.
கமல்ஹாசனுக்கு சிகப்பு ரோஜா.
ஜெயகாந்தன் பேச அழைக்கப்பட்டார். ."நண்பர்களே! வைரமுத்து இந்த நூலை என்னிடம்கொடுத்து நேரம் கிடைக்கையில் புரட்டிப் பாருங்கள் என்றார்.
நானும் நேரம் கிடைக்கையில் புரட்டிப் பார்த்தேன்" என்று தொடங்கினார்.
அந்த இரண்டு நிமிடப் பேச்சே புயல் கிளப்பியது.
பலராலும் புரிந்துகொள்ளப்படாத முரட்டு மேதைமை ஜெயகாந்தனுடையது.
அதுபற்றி அவர் வருந்தியதுமில்லை.அதில் அவருக்கு நட்டமுமில்லை. அவரேதிரைப்படப் படல் ஒன்றில் இதை எழுதினார்.
"கும்பிடச் சொல்லுகிறேன் - உங்களை
  கும்பிட்டுச் சொல்லுகிறேன் -என்னை
  நம்பவும் நம்பிஎன் அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
  எனக்கொரு தம்பிடி நஷ்டமுண்டோ?"
விஸ்வரூபத்தை விளங்கிக் கொள்ளாவிட்டால் நஷ்டம் நமக்குத்தானே!
இன்று தொலைக்காட்சிகளிலும் பண்பலை வானொலிகளிலும் யாரோ
முதலீடு செய்து யாரோ தயாரித்த படப்பாடல்களை தங்கள் நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் அர்ப்பணிக்கிறார்கள். செம்மொழியில் சொல்வதென்றால்
"டெடிகேட்" செய்கிறார்கள்.இன்று விஸ்வரூபம் படப்பாடல்கள் வெளியாகின்றன.நான் "விஸ்வரூபம்" என்னும் அந்தப் படத்தின் பெயரை ஜெயகாந்தனுக்கு"டெடிகேட்" செய்கிறேன்.